NewsBlog

Tuesday, November 27, 2012

காஸா 2012

காலச்சக்கரம் மீண்டும் சுழன்றுள்ளது! டிசம்பர் 2008 இதோ.. நேருக்கு நேர் படக்காட்சிகளாய்! சில பாத்திரங்கள் மட்டுமே மாறியுள்ளன.

'எஹீத் ஒல்மார்ட்' இருந்த இடத்தில் 'பெஞ்சமின் நெதன்யஹீ'.  'ஹோஸ்னி முபாராக்' ஆட்சிகாலத்தில், கெய்ரோவில் இருந்தவாறு காஸாவாசிகளை தனது ஆள்காட்டி விரலைக் காட்டி, கடுமையாக மிரட்டிய  இஸ்ரேலின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் காதிமா கட்சியின் தலைவியுமான 'டிளிபி லைனி' இருந்த இடத்தில் இப்போது, வலதுசாரி இயக்கமான 'இஸ்ராயீல் பைத்துன் கட்சியின்' (இஸ்ரேல் நமது தாய்நாடு) இனவெறி பிடித்த 'அவிக்தர் லைபர்மேன்'.

 காஸாவிலோ, ரத்த சகதியாய் போன 7 வயது ரணன் அரபாத் மற்றும் 11 வயதான உமர் அல் மஷாரவீக்களின் உடல்களை அல்ஷிபா மருத்துவனையின் பிணஅறையிலிருந்து கைகளில் ஏந்திக் கொண்டு வரும் தந்தை! சுற்றிலும் சிதைந்து போன குழந்தைகளின் பூ உடல்கள்.

காஸா 2012 நினைவூட்டுகிறது 2009 ஆம் ஆண்டை!

 'முபாரக்' ஒழிந்தார். பலஸ்தீனத்துக் குழந்தைகளின் கால்களை உடைத்துவிடுவதாக கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்ட அவருடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அ'ஹ்மது அபூஅல் கெய்ட்டும்' தொலைந்தார். அரபு வசந்தம் மலர்ந்தது. 

வலிமையான மக்கள் செல்வாக்குப் பெற்ற... மக்கள் நலன்நாடும்.. லஞ்ச-ஊழலற்ற, சர்வாதிகாரமற்ற, யாருடைய கைப்பாவையாகவும் செயல்படாத ஆட்சி அமைப்பு எகிப்தில் உருவானது. அரபு வசந்தம் மலர்ந்தது.

எகிப்து காஸாவாசிகளுக்கு என்ன செய்திட முடியும்? 

இந்த வினா விண்ணிலிருந்து சராமாரியாக ஏவுகணைகளும், குண்டுகளும் மழையாய் காஸாவை ரத்தக் களறியாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் உலக முஸ்லிம்களின் மனதில் எழுந்த கவலை தோய்ந்த கேள்வி இது.  ஜுன் மாதத்தில்தான் தேர்தல்களில் வெற்றிப் பெற்றிருந்த எகிப்தின்  முஹம்மது முர்ஸியால் என்ன சாதிக்க முடியும்?

 நியாயமான கேள்விதான் இது.

ஒரு கட்டத்தில் வீறுகொண்டு எழுந்து இஸ்ரேலை தவிடு பொடியாக்கிவிடுவார்களோ என்றுகூட பயந்ததுண்டு. ஆம்.. அதற்கான பலமான அடிப்படைகள் ஆள்வளம் கொண்ட அமைப்பு அது. சில மணி நேர வாய்ப்புக்காக அன்றைய எகிப்திய ஆட்சியாளர்களிடம் கெஞ்சி வாய்ப்புகள் கேட்ட அமைப்பு அது. அந்த வாய்ப்பு அன்று கொடுத்திருந்தால் இஸ்ரேல் என்றொரு ஆக்கிரமிப்பு இனவெறியார்கள் உலகில் இருந்திருக்க மாட்டார்கள். 

ஆனால், அன்றைய வஞ்ச எகிப்திய ஆட்சியாளர்கள் இக்வானுல் முஸ்லிமின் கைகளைக் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் அதன் ஊழியர்களையும் அமெரிக்காவின் கட்டளைப்படி சிறைப்படுத்தி கொடுமைப்படுத்திய இறந்தகால துயர வரலாறுகள் அவை.

இக்வானுல் முஸ்லிம்கள் நிதானப்போக்கை மேற்கொண்டிருக்காவிட்டால் அதன் பின்விளைவு மற்றொரு உலகயுத்தமாகிவிடும் விபரீதமும் உண்டு. 

ஆக இக்கட்டான சூழலில் நடப்பு நிலைப்பாட்டை மிகவும் சாதுர்யமாக கையாண்ட பெருமை எகிப்தின் புதிய ஆட்சியாளர்ளையே சேரும்.!

இஸ்ரேலின் தலைநகர் டெல்அவியில் இருந்த தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்ட எகிப்து காஸா-இஸ்ரேல் இருசாரருக்கும் மத்தியஸ்தராய் தலைப்பாய் கட்டிக்கொண்டது.  

காஸா-இஸ்ரேல் இருநாட்டு இறையாண்மைகளை மதிக்கச் சொல்லும் காம்ப் டேவிட் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று இஸ்ரேலை நிர்பந்தித்தது. சர்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்படுமாறு வற்புறுத்தி இனவாத இஸ்ரேலை தனிமைப்படுத்தியது ராஜதந்திரமேயன்றி வேறில்லை. 

2009 ஆம் ஆண்டு 22 நாட்கள் இஸ்ரேல் காஸாவின் மீது குண்டுமழை பொழிந்தது. தனது இலக்கை அடைய முடியாமல் கடைசியில் அது தோல்வியைத் தழுவியது. புதிய காரணங்களைக் கூறிக் கொண்டு மீண்டும் 2012 இல், தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது படையெடுத்த இஸ்ரேல் மீண்டும் தோல்வியைத் தழுவி உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது.

 உறவுகள், சொத்து-பத்துக்கள் என்று அனைத்தையும் இழந்து மாறாத உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தி நின்றார்கள் காஸாவாசிகள். 

2009 இல், எப் 16 ரக போர் விமானங்கள், அப்பாச்சி      ஹேலிகாப்டர்கள், பாதரச ராசாயன குண்டுகள் என்று பயமுறுத்தி காஸாவை தனிமைப்படுத்தப் பார்த்தது இதே இஸ்ரேல்தான்!

ஆனால், இன்றோ நிலைமை தலைக்கீழானது. 

அண்மைக்காலமாக, முஸ்லிம் உலகம் முழுக்க நடந்து வரும் மக்கள் எழுச்சி ஆட்சியாளர்களை பயமறுத்தியுள்ளது. காஸா தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது துனீசியா, கெய்ரோ, ரப்பாத், தோஹா, அம்மான் மற்றும் மஸ்கட் நகரின் தெருக்களில் இறங்கி மக்கள் தங்களின் சகோதர - சகோதரிகள் தாக்கப்பபடுவதற்கு உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

 இந்த கண்டன ஊர்வலங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களைத் தாண்டி ஐரோப்பா கண்டத்தை உலுக்கியதும் விந்தையானது. லண்டன், நியூயார்க், கிளாஸ்கோ நகரங்கள்கூட காஸாவாசிகள் மீது தொடுக்கப்பட்ட இனவெறித் தாக்குதல்களுக்காக ஆர்ப்பரித்து நின்றன.

உலகை ஒரே திசையில் திருப்பி இந்த ஒன்றுப்பட்ட உரத்த குரலோசைக்காக காஸாவாசிகள் செய்த தியாகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்கள் இழந்த இழப்பு சாதாரணமானது அல்ல. விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு வந்த தங்கள் தாரகைகளை பிரியத்துக்குரிய கண்மணிகளை திரும்பவும் விண்ணுலகுக்கு சிதைந்த ஓவியங்களாய் தசைப்பிண்டங்களாய் அனுப்ப வேண்டிய துரதிஷ்டம் அது. 

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மாபெரும் அர்ப்பணம் இது. உமர் மஷ் ஹராவி, ரண்னான் அரபாத், சபா  ஹம்முதாஹ், முஹம்மது தர்தோனா, சமௌனி என்று உயிர்பலி கொடுத்த பிஞ்சுக் குழந்தைகளின் பட்டியல் தொடர்கிறது.

இனவெறிக்கு எதிராக 1960 களில் தென்னாப்பிரிக்க நகரம் ஷார்பெவெள்ளியில் நடந்த போராட்டத்தில் உயிர்தியாகம் செய்தது போலவே, ஸ்பெயினின் கார்னிகாவில்  இனவெறிப்பிடித்த இத்தாலியர்களால் 1937 களில் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதைப் போலவேதான் 2009 இல் காஸா தாக்கப்பட்டது.

 தற்போது 2012-இல், கொடுர முகத்தோடு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் தென்னாப்பிரிக்காவின் ஸ்வீடோ நகரை நினைவுறுத்துகிறது. குழந்தைகளையும் மாணவர்களையும் மையப்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றே காஸாவிலும் தற்போது பச்சிளங் குழந்தைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய எழுச்சி அரபு நாடுகளில் வலுப்பெற்றுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தத்தமது ஆட்சியாளர்களுக்கு நிர்பந்தம் தந்து இனவெறிப்பிடித்த இஸ்ரேலை உலக அரங்கிலிருந்து புறக்கணிக்க வேண்டும்.

இஸ்ரேலின் பிதாமகனான அமெரிக்காவுக்கு எதிராக ஓரணியில் திரளவேண்டும்.

இனவெறிக்கு எதிராக சமத்துவ தீர்வு சொல்லும் கொள்கையுடைய மார்க்கம் இஸ்லாம் என்றால்.. அந்த சமத்துவத்தை நிலைநாட்ட தகுதியுள்ள ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம்தான்!

0 comments:

Post a Comment