NewsBlog

Wednesday, January 22, 2014

அறிவுக்கு வேலை கொடு: ஆதலின், கவனம் கொள்வீர்!


இன்றைய ஊடகங்களுக்கு மாற்றாக ஒரு ஊடகம் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான சில முக்கிய குறிப்புகள் இவை.

  • எல்லா ஊடகங்களிலும் இடதுசாரி மற்றும், சிறுபான்மை ஆதரவு சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை முதலில் ஒன்றுபடுத்தி அவர்களிடமே ஆலோசனையை முன்வையுங்கள். அனுபவ ரீதியான நல்ல பதில் கிடைக்கும்.
  • முஸ்லிம்கள் சிறப்பாக நடத்திவரும் ஊடகங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக கேரளாவில் வெற்றிகரமாக நடக்கும் மாத்யமம், தில்லியில் வெற்றிகரமாக இயங்கிவரும் ரேடியன்ஸ் மற்றும் தாவத் ஏடுகள். அச்சு ஊடகமாக இருப்பினும் அவர்களை நேரில் சந்தித்து பிரச்னைகளை பகிர்ந்த கொள்வது அடுத்த கட்டத்துக்கு வழி வகுக்கும்
  • ஒரு திட்டத்தை வரையறை செய்து கொள்ளுங்கள். இதற்காக, இத்தனை நாட்களில் செயல்வடிவம் தருவேன் போன்ற திட்டங்கள் அவை.
  • உங்கள் கொள்கை, கோட்பாடுகள் என்ன என்பதில் தெளிவாக இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்க்கு பதில் தர என்பதெல்லாம் அனுபவ ரீதியாக எடுபடாது. அதில் நமது கவனமும் சிதறக் கூடாது.
  • வானத்துக்குக் கீழ், பூமிக்கு மேலாக உள்ள அனைத்தையும் எழுதுவேன் என்று சங்கல்பம் கொள்ளுங்கள். மனித இனத்துக்கு நன்மை விளைவிப்பவை அனைத்துமே ஆகுமானவைதான்! ஹலாலின் வரையறை இதுவேயாகும். அதனால், அரைகுறை அறிவுகளுடன் வாத, விவாதங்களில் ஈடுபடும் நபர்களை சற்று விலக்கியே வைப்பதில் தவறில்லை.
  • என்ன செய்வதாக உத்தேசம்? இதில் தெளிவாக இருங்கள்!
  • வணிகமயமாகவே பாருங்கள். தர்மத்துக்காக யாரும் எதையும் செய்ய முடியாது. என்னாலும் ஓரளவு பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்ள முடியும் என்பது இறையருள் முதற்காரணமானாலும், ஒரு நிறுவனத்தில் பத்திரிகைத்துறைக்கு சமமாக ஏறக்குறைய 35 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளேன். அதுதான் என் தேவைகளை நிறைவேற்றியது.
  • .மனித வளம் கண்டிப்பாக தேவை. உங்களிலிருந்தே தொலைநோக்குக் கொண்டவர்களாக, விட்டுக் கொடுப்பவர்களாக, நற்பண்புகள் கொண்டவர்களாக அவர்கள் இருப்பது முக்கியம். திறமைகளைகூட பிறகு அனுபவத்தில் வார்த்தெடுத்துக் கொள்ள முடியும். கோடிக்கணக்கான பணம் உங்களிடம் இருந்தாலும் அந்தக் கட்டுக்கள் காமிராவை தோளில், சுமந்து செல்லாது.செய்திகளைத் தொகுத்துத் தராது. மனிதர்கள் முக்கியம்.
  • அவசரப் பட வேண்டாம். நிதானமாக யோசியுங்கள்.சிறிதே செய்தாலும், நிலையாக செய்ய வேண்டும். கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும்.
  • கடைசியாக இருந்தாலும், இதுதான் முதன்மையானது. தனது மார்க்கத்தை எப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது நம்மைவிட இறைவன் அதிக பொறுப்புள்ளவன். அவன் நாடினால், ஊடகங்களில் கொடிக்கட்டிப் பறக்கும், யூத, கிருத்துவர்களை அப்படியே முஸ்லிம்களாக மாற்றிவிட முடியும். அவர்களின் செயல்களில் ஏதோ ஒன்று அவனுக்குப் பிடித்திருப்பதால் என்னவோ அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், முறையீடுகளை அருளாளனிடம் முன் வையுங்கள். அவன் வழிகாட்டுவான்.
    அதுவரை, இருக்கும் அத்தனை பத்திரிகைகளையுமம் உங்கள் மேடையாக்குங்கள். இருக்கவே இருக்கின்றன ஆசியரியர்க்கான கடிதப் பகுதிகள். அவற்றில் நேர்மையாக இரு வரிகளை, உணர்ச்சி வசப்படாமல் பதிந்து வாருங்கள். பிரசுரமானால் மகிழ்ச்சி. பிரசுரமாகாவிட்டால் இறைவனிடம் இரட்டிப்பு நற்கூலி. ஒவ்வொரு கடிதமும் ஆசிரியர் பார்வைக்கு செல்லும் வலிமையான எழுத்துக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். தினமணியில் எனது ஆரம்ப பயணம், அறிமுகம் வாசகர் கடிதங்கள்தான். அந்த தொகுப்புகள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன. இதனுடைய நீட்சியும், கடின உழைப்பும், இறையருளும்தான் மற்றொரு காலத்தில் தினமணியின் 'ஆஸ்தான எழுத்தாளனாக' என்னை ஆக்கியது.
  • உங்கள் நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் இறைவன் நாடினால் வெற்றிப் பெறும் கவலை வேண்டாம்.

0 comments:

Post a Comment