NewsBlog

Thursday, January 9, 2014

வளைகுடா செய்திகள்: 'மீன் விற்கும் என்ஜீனியர்!'


சைபுல்லாஹ்
வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த மீனின் வாலைப் பிடித்து, மரக்கட்டையில் அதைக் கிடத்தி, பள பளக்கும் கத்தியால் அதன் செதில்களை சீவி ஒரு கைத்தேர்ந்தவர் போல மீனை சுத்தப்படுத்தும் அந்த இளைஞரின் செயல்வேகம் பார்ப்போரை வியப்படையவே செய்யும். அவர் பாரம்பர்யமாக மீன் விற்பவரா என்ன? இல்லை! என்ற ஒற்றை வரியில் பதிலைச் சொல்ல முடிந்த அதேநேரத்தில், அவரை மீன் விற்கும் இன்ஜினியர் என்று வேண்டுமானால் சொல்லலாம்! உண்மைதான்! வியப்பில் புருவங்களை உயர்த்தும் அந்த நிகழ்வுக்கு காரணமான இளைஞர் ஒரு பொறியியல் பட்டதாரி!

பாகிஸ்தானை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளரான சைபுல்லாஹ் (27), பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உள்ள மீன் சந்தையில் மீன்களைச் சுத்தம் செய்யும் பணியில் இருக்கிறார். 

சைபுல்லாஹ், பாகிஸ்தானின் 'ஜின்னா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி', தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பொறியியல் பட்டம் பெற்றவர். 

"கடந்த 2000ம் ஆண்டு, லண்டனில் முதுகலை பட்டப்படிப்பான வணிக மேலாண்மை பயில சென்றிருந்தேன். ஆனால், எதிர்பாராதப விதமாக என் தந்தையார் மரணம் அடைந்ததால், என் சகோதரர்களை காப்பாற்றவும், வீட்டை கவனித்து கொள்ளவும் நான் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. என் படிப்பை பாதியில் துறந்து வீடு திரும்பினேன். 

கடந்த 2009ம் ஆண்டு வேலை தேடி ஷார்ஜாவுக்கு வந்தேன். ஆனால், முன் அனுபவம் இல்லாத காரணத்தால் பல வணிக குழுமங்கள் எனக்கு வேலை அளிக்க மறுப்பு தெரிவித்தன. வாய்ப்புகளே அளிக்காமல் முன் அனுபவம் பற்றி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது.

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை வழிநடத்த இதைத் தவிர வேறு வழி ஏதும் எனக்குப் புலப்படவில்லை. இந்தத் தொழிலை ஒருபோதும் நான் தரக்குறைவாக கருதியதில்லை. இறைவன் நாடினால், ஒரு நாள், நானும் வாழ்வில் நிச்சயம் முன்னேறுவேன், இதையே, என் நண்பர்களும் என்னோடு பணிபுரிபவர்களும் சொல்கிறார்கள்!" - என்கிறார் தன்னம்பிக்கையுடன் சைபுல்லாஹ்.

தனது வாடிக்கையாளர்களிடம் அழகான ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி மீன் விற்பதில் சைபுல்லாஹ் திறமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தகவல்: ஹாரூன் ரஷீத்) 
 

0 comments:

Post a Comment