NewsBlog

Tuesday, January 7, 2014

நடப்புச் செய்தி:'தாங்களே எரித்துக் கொண்டு ... தாங்களே மாண்டுப் போனவர்களின் கதை இது!'


Riot victim Shaukeen Shareef with his four children.
முஜாபர் நகர் வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்று 'பாஸிகலான்'; ஷாபூர் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது. இங்கிருந்து ஆறே கி.மீட்டர் தொலைவில்தான் அவர்களின் சொந்த இரட்டைக் கிராமங்களான 'குத்பா, குத்பி உள்ளன. 250 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களைத் தவிர்த்து, ஜாட், ஜீவாத், பிரஜாபதீஸ் மற்றும் சுனார்ஸ் (பொற்கொல்லர்கள்) ஆகியோரும் இந்த இரட்டைக் கிராமங்களில் வசிக்கிறார்கள். வழக்கம் போலவே சாதாரண அரசியல்வாதிதான் இவர்களது சட்டசபை உறுப்பினரும். 2012 தேர்தல்களில் இவர்களின் நம்பிக்கை நட்சித்திரமாக இருப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றிவாகைச் சூடியவர்தான் புதானாவின் எம்எல்ஏ நவாஜிஷ் கான். 

செப்டம்பர் 8, 2013 வகுப்பு கலவரங்களின் போது, "எங்களை நிச்சயம் காப்பார் என்று முடிவெடுத்து செல்பேசியில் தொடர்பு கொண்ட எங்களுக்கு ஏமாற்றமே மித மிஞ்சியது. அது தொடர்பு எல்லைக்கு அப்பால்.. அதாவது அணைத்து வைக்கப்ட்டிருந்ததை அறிந்து பதறிப் போனோம் நாங்கள்!" - என்கிறார் இன்னும் பயம் கலந்த குரலில் கிராமத்தின் தலைவரான முர்சலீம். 

"நான் வழக்கமாக சோலிகானின் 'கஸ்பாவில்' தங்குவேன். கலவரம் நடந்த அன்று கலவரக்காரர்கள் என்னை பிடித்து வைத்து கடுமையாகத் தாக்கினார்கள். எப்படியோ தப்பி ஓடிய நான் ஜாட் பகுதியில் அமைந்திருந்த காவல் நிலையத்தை அடைந்து காப்பாற்றும்படி சொல்லியும் என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. கலவரக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. கடைசியில் ராணுவப் படையினர் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்!" - என்கிறார் முஹம்மது யாமீன் இன்னும் மிரட்சி கலையாமல்.

File photo of Mursaleem, village chief at Basikalan camp who saved many lives the night violence took place.
"பயங்கரமான துப்பாக்கி வேட்டுகளும், கொலை வெறித்தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்த அந்த இரவு முழுவதும் நாங்கள் தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டவாறே இருந்தோம். நாங்கள் தப்பிச் செல்லாதவாறு எல்லா பாதைகளையும் கலவரக்காரர்கள் அடைத்து விட்டார்கள். இந்நிலையில் எங்கள் கிராமத் தலைவர் முர்சலீம் ராணுவப் படையினரை தொடர்ப்பு கொண்டு அவர்களது பாதுகாப்பு பெற்றிருக்காவிட்டால் எங்களில் ஒருவரையும் நீங்கள் இப்போது உயிருடன் பார்த்திருக்க முடியாது!" - என்கிறார் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ஹஸன்.

நிலைமையின் விபரீதத்தையும், ஜாட் குடியிருப்புகளிலிருந்து வரும் வேட்டுச் சத்தங்களையும் காட்டி ஷாபூர் காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்டப் போது அவர்கள் எக்காளமாக கைக்கொட்டிச் சிரித்தார்கள். "போங்கள்.. போங்கள்.. அவை வெறும் பட்டாசு வெடிச்  சத்தம்தான் போங்கள்!" - என்று விரட்டி அடித்தார்கள்.  கடைசியில் தப்பிப் பிழைக்க வேறு பாதுகாப்பான வழித்தடங்களைத் தேடி உயிர் பிழைத்தோம்!" - என்கிறார் ஹஸன் தொடர்ந்து. 

வாலியானின் பிஜேபி பிரமுகரான டாக்டர் சஞ்சீவ், குத்பி கிராமத்தைச் சேர்ந்த பிரதான் தேவேந்தர் மற்றும் உபேந்தர் இவர்களின் முகங்களை இவர்கள் இன்னும் மறக்கவில்லை. இவர்கள்தான் 'சந்த்யா சக்தி சங்' என்னும் பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்கியவர்கள். வாரத்தில் இரண்டு முறை கூட்டங்களை நடத்தியவர்கள். அதில் கலந்து கொண்ட இளைஞர்களிடையே வகுப்பு வெறியை வளர்த்தவர்கள். 

"எங்கள் கிராமத்தில் மட்டும் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். இந்த எட்டு பேரில் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு பேர். நான் அனைத்தையும் இழந்து பரிதவிக்கிறேன். எந்த வகை இழப்பீடும் எனது இழப்புகளை ஈடு செய்ய முடியாது!" -  என்கிறார் கலங்கிய கண்களுடன் குத்பா கிராமத்தைச் சேர்ந்த இம்ரான்.

கிராமத் தலைவரான முர்சலீமின் இடைவிடாத முயற்சியால் தற்போது கலவரத்தால் அனைத்தையும் இழந்த 90 பேருக்கு புதிய வீடுகள் கிடைக்க இருக்கின்றன.

வகுப்பு கலவரங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு உ.பி. அரசின் அலட்சியங்களைத் தாண்டி பெயரளவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் புண்ணியம் கட்டிக் கொண்டது. நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் இதுவும் கிடைத்திருக்கும் வாய்ப்பில்லை.

நிவாரணம் வழங்கும் முறைகளும் ஏக குழப்பத்தில் உள்ளன. ஒரே வீட்டில் தனித்தனியாக வசிங்கும் குடும்பத்தார் ஒரு குடும்பம் என்று தீர்மானிக்கப்படுகிறது. அல்லது தனித்தனி வாசல்களைக் காட்டியாக வேண்டும். 

"கூட்டுக்குடும்ப அமைப்பையே எள்ளி நகையாடுகிறது இந்த நிவாரண முறை!" - என்கிறார் முர்சலீம்.

இன்னும் அனைத்து அடையாளங்களையும் இழந்து தவிப்பவர்கள் இந்த முகாமில் ஏராளமான பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அவர்களது கிராமத் தலைவர் முர்சலீம்தான் ஒரே ஆறுதல்.

File photo of Kandhla based Adv. Asad Hayaat who has taken up victims' cases.
கந்தாலாவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹசத் ஹயாத்தான் இவர்களது தற்போது, வழக்குகளை கையில் எடுத்துள்ளார். இவரும் அரசின் நிவாரண உதவிகளை விமர்சிக்கிறார்: 

"அரசின் நிவாரணக் கொள்கை மிகவும் மோசமாக உள்ளன. 1800 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்கள். அதில் ஏக கெடுபிடிகள் வேறு. 25 லட்சம் இழப்பீடு என்று அரசாங்க பதிவேடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த 5 லட்சம்தான் இழப்பீடாக தரப்படுகிறது. நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொண்டவர்கள் இனி ஒரு போதும் கிராமங்களுக்குத் திரும்ப முடியாதவாறு பிரமாணப் பத்திரங்களை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள் அதாவது அவர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள சொத்துப் பத்துக்களை விற்க முடியாது. இது எந்த வகையிலும் நியாயமானதல்ல!" - என்கிறார் வழக்குரைஞர் ஹசத் ஹயாத்.

வெந்தணலில் இழந்த அனைத்தும் வெறுமையாய் போனது; நீதி தேவதையும் கண் கட்டிக் கொண்டது. சாட்சிகள் இருந்தும் நீதி மன்றங்களில் இவர்களது வழக்குகள் குறைந்தது பத்தாண்டுகளுக்கு பின் தள்ளுப்படி செய்ய இருக்கின்றன; சாட்சிகள் இல்லை என்று. 

தாங்களே எரித்துக் கொண்டு தாங்களே குத்திக் கொண்டு , தாங்களே மாண்டுப் போனவர்கள் இவர்கள் என்று வரலாற்றில் பரிதாபமாக பதியப்பட இருக்கும் அற்ப ஜீவன்கள் இவர்கள்!

(Source: TwoCircles.net)






0 comments:

Post a Comment