NewsBlog

Wednesday, January 22, 2014

விருந்தினர் பக்கம்: 'ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோல்கூத்துப் பாவை!'


இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை என்னும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டடது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டின் மகத்தான மரபுகளில் ஒன்று அது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சங்கப் புலவன் 'கணியன் பூங்குன்றனாரின்' வரிகள் அன்றைய வாழ்க்கை முறையின் சாரமே ஆகும்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க நாடகக் கலைஞராக விளங்கியவர் நவாப் ராஜமாணிக்கம். சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒத்தவாடை தியேட்டரில் ஏராளமான நாடகங்கள் நடக்கும். என்னுடைய சிறுவயதில் நவாப் ராஜமாணிக்கம் அவர்களால் நடத்தப்படட 'பக்த ராமதாஸ்' என்னும் நாடகத்தை அந்த அரங்கில் பார்த்தது இன்னமும் என்னுடைய நினைவில் பசுமையாக பதிந்துள்ளது. 

இந்த நாடகத்தில் நவாப்பாக ராஜமாணிக்கம் நடித்திருப்பார். அந்த பாத்திரமாகவே அவர் மாறி நடித்ததால்தான் அதற்குப் பிறகு அவர் 'நவாப்' ராஜமாணிக்கம் என்றே அழைக்கப்பட்டார்.

இந்த கதை இன்னமும் கோதாவரி பகுதியில் கர்ண பரம்பரை கதையாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த கோவிலும் உள்ளது. மதங்களை கடந்த அன்பையும், ஒற்றுமையையும் இந்த கதை பேசுகிறது. 

இந்த கதையில் ராமபிரான் மதங்களை கடந்தவராக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்துபவராக காட்டப்படுகிறார். இதுதான் மக்களிடம் உள்ள இயல்பான நம்பிக்கை. எளி மக்கள் கடவுள்களிடையே பேதம் பார்ப்பதில்லை. இந்த கர்ண பரம்பரை கதை இதைத்தான் உணர்த்துகின்றது.

வடமொழியில் வால்மீகியும், தமிழில் கம்பனும் படைத்துள்ள ராமகாதைகளிலும் கூட ராமன் அன்புவயப்பட்டவனாகவே படைக்கப்பட்டுள்ளார். அரசகுலத்தில் பிறந்த ராமன் வேடவனாகிய குகனையும், வானரக் கூட்டத்தின் தலைவனாகிய சுக்கீரவனையும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனையும் தன்னுடைய தம்பிகளாக ஏற்றுக் கொண்டான்.


தன்னுடைய தம்பி பரதனுக்கு அரசாட்சி என்றும், தனக்கு கானகம் என்றும் தந்தை தசரதன் கூறியபோது, "பின்னவன் பெற்ற செல்வமெல்லாம் நான் பெற்றதே!"- என்று அன்றைக்கு பூத்த செந்தாமரை போன்ற முகத்துடன் கானகம் சென்றார் ராமன் என்று கம்பர் எழுதுகிறார்.

ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக வகையறா முன்னிறுத்தும் ராமன், மக்கள் மன்றத்தில் படிந்துள்ள ராமருடைய சித்திரத்தை ஒத்ததாக இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று கூறி பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தினார். இந்த கலக யாத்திரையின் முடிவாக பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையொட்டி நடந்த கலவரங்களில் ஏராளமான மக்கள்  கொல்லப்பட்டனர். அந்த ரணம் ஒரு வடுவாக இந்தய வரலாற்றில் பதிந்துவிட்டது.

அனைத்து மக்களையும், அரவணைத்து செல்வதே மக்கள் மனதில் பதிந்துள்ள ராமநெறி. அதைத்தான் அண்ணல் காந்தியும் முன்னிறுத்தினார். ஆனால், இந்துத்துவாவை முன்னிறுத்தும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் குருமார்கள் துவங்கி, இன்றைய தலைவர்கள் வரை இத்தகைய கண்ணோட்டத்தான் முன் வைக்கின்றனர்.

இன்றைக்கு பிரதமர் வேட்பாளராக பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி சிறுபான்மை மக்கள் மீது எந்தளவுக்கு வன்மம் கொண்டுள்ளார் என்பதை 2002ஆம், ஆண்டு குஜராத்தில் நடந்த வன்செயல்கள் காட்டின.

நம்முடைய நாட்டின் பன்முகப் பண்பாட்டிற்கு மாறாக ஒற்றை பண்பாட்டை இந்து தேசியம் என்ற பெயரில் திணிக்க முயல்கிறது ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பின் விரல் அசைவிற்கு ஏற்ப ஆட்டம் போடும் தோலகூத்துப் பாவையாகவே பாஜக விளங்குகிறது.

இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பன்முக பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

- டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
23.01.2014 அன்று தினமணி தலையங்கம் பக்கத்தில்
எழுதிய கட்டுரையின் முக்கியப் பகுதிகள்.

0 comments:

Post a Comment