NewsBlog

Saturday, July 25, 2020

என் வள்ளம் கரைக்கு திரும்பாத அந்த நாள்!




உப்புக்கரிக்கும் கடல். திரண்டு உருண்டு வந்து மணல் போர்வை போற்றிய கரையை மெல்ல சீண்டிப்பார்க்கும் அலைகள். ஒட்டுப் போட்டு என் போன்று தள்ளாத வயதில் காலம் கழிக்கும் ஒரு வள்ளம், என் துதிக்கையாய் எப்போதும் என்னுடன் இருக்கும் உக்கிப்போன ஒரு மரத்துடுப்பு,ஆசை தீர கட்டி அணைத்துக் கொள்ளும் அளவுக்கு சின்ன கண்கொண்ட வலைகள். இவைதான் என் பூர்வீக சொத்துக்கள்.

எல்லோரும் காற்றை சுவாசிப்பதாய் சொல்வார்கள். ஆனால் நானோ இந்த மீன் வாடையை சுவாசிப்பதால்தான் இன்னும் உயிர் வாழ்வதாய் உணர்கிறேன்.

மீனவனுக்கு உப்புக்காற்றும் அதில் திரண்டுவரும் புலால் வாசனையையும் ஒரு நாள் நுகர முடியாவிட்டாலும் பித்துப் பிடித்து விடும். அதனை  நாற்றம் என மொழிபெயர்ப்பவர்களை அருவருப்பாய் நான் பார்ப்பதும் உண்டு. என்னைப்  போன்ற மீனவர்களுக்கு பண நோட்டுக்களில் வீசும் வாசனையை விட இந்த மீன்களின் வாடையில்தான் மோகம் அதிகம்.

அனேக பண்டிதர்கள் மீனவனின் ஏழ்மை வாழ்க்கை பற்றி கூடுதலாக கிறங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனால்  ஒருபோதும் என்னை நான் ஏழையாக உணர்ந்து கொண்டது கிடையாது.

பரந்து விரிந்த சமுத்திரம் முழுவதும் எனக்கு சொந்தமாக இருக்கையில் எப்படி என்னை ஏழ்மையானவனாக உணர்ந்து கொள்ள முடியும்?

வா.. வா.. ஓடிவா.. மீனவா ..! என்னுள் இருக்கும் செல்வங்களை எடுத்துக்கொள்!” - என்று அலைகள் மூலம் இந்த பெருங்கடல் எப்போதும் எனக்கு செய்தி அனுப்புகையில் எப்படி என்னை ஏழ்மையானவனாக உணர்ந்து கொள்ள முடியும். பரந்துவிரிந்தகடலின் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் போது வரும் மிடுக்கு மீனவனை தவிர வேறு யாருக்கு வரமுடியும்.

கடலில் துடுப்பு வலிப்பதற்கு  என் கைகள் ஒருபோதும் அலுத்துக் கொண்டது கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒற்றை ஆளாய் துடுப்பு வலித்து கடலினுள் சங்கமிக்கும் போது ஆழி பெருங்கடல் என்னை ஆரத்தழுவுவதாய் உணர்ந்து கொள்கிறேன். அது ஒரு இனம் புரியாத அன்பு. மீனவனின் ஆன்மா மட்டுமே உணரும் பேரன்பு அது

ஆழிப் பெருங்கடலில் என் வலைகளை வீசுகையில் கூடவே என் மனதின் பாரங்கள் அனைத்தையும் இந்தப் பெருங்கடலினுள் வீசி விடுகிறேன். வலையில் சிக்கிய மீன்களை சிக்கெடுக்கும் போது என் வாழ்வில் உள்ள சிக்கல்களும் தீர்ந்து போவதாய் உணர்ந்து கொள்கிறேன். கிடைத்த செல்வங்களை அள்ளிக்கொண்டு கரையை தொடும்போது வெற்றிவாகை சூடிய வீரனாய் களி கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் கடலை தழுவி கரையை திரும்பும்போது கவலைகளின் ரேகைகள் அற்ற மனதில் பாரங்கள் அற்று புத்துணர்ச்சி பெற்ற மனிதனாக  வீடு திரும்புகிறேன்.

மாலை மங்கும் நேரத்தில் பேராழியுடன் சங்கமித்திருக்கும் வேளைகளில் தொடு வானத்தில் நிகழும் வர்ண மாயா ஜாலத்தில் நான் எப்போதும் மூழ்கிப் போவதுண்டு. அச்சமயம் என்னையே மறந்து  தொடுவானத்தை தொட்டுவிடும்  வேட்கையில் துடுப்பை வீரியம் கொண்டு தொடுக்க எண்ணுகையில்  கரையில் நமக்காக காத்துநிற்கும் உறவுகள் இடையில் குறுக்கிட்டு மீண்டும் படகை கரையை நோக்கி திரும்பச் செய்துவிடும்.

நான் எண்ணிக் கொள்வதுண்டு... என்றாவது ஒரு நாள் அந்தி மாலையில், தொடு வானில் வர்ணஜாலங்கள் ஊற்றெடுக்கும் வேளையில் அதனை நோக்கி என் துடுப்புகளை இயலுமான வலிமை கொண்டு  தொடுக்க வேண்டும். அன்றைய நாள் என் வள்ளம் ஒருபோதும் கரையை நோக்கி திரும்பாது. தொடு வானத்தை தொட்டு  முத்தமிட்டு அந்த மாய வர்ணங்கள் அனைத்தையும் என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்!’

கடலில் மடியில் தவழ்ந்து, உப்பு காற்றில் உடலை ஒத்தடம் எடுத்து, தொடரும் இரவின் பவுர்ணமியை ரசித்திட வேண்டும். இந்த உலகம் காணாத அதிசயங்களை காண ஆழியின் அலைகள் விரும்பும் திசையில்  என்னை அழைத்து செல்ல வேண்டும். இங்கு நானும் கடலும்  வானும் அலையும்.... ஈற்றில் அலைகளில் மிதந்தவாறு  இந்த உப்பு காற்றிலேயே  என் இறுதி மூச்சு நிரந்தரமாய் கலந்து விடவேண்டும். இந்த உப்புக் கடலிலேயே உக்கிப்போன  இந்த உடலும் கரைந்துவிட வேண்டும். 

(ஆக்கம்: MKM Rikkaz, இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், வாழைச் சேனையைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்)

படங்கள் - Ikhwan Ameer இந்தியா

2 comments:

  1. அட! ஆழிக்கடல்மன்னவனே! நீ அள்ளி அணைப்பது உன் அருமைத்தாயை அல்லவா! உன் அன்னை அவள் அன்றோ! அவளுடைய தீண்டலில் நீ எப்படி ஏழ்மையை உணர்வாய் கடற்காதலனே! கடல் என்ன சொல்லிற்று தெரியுமா உனக்கு? ஏ அம்மையே! உன் பிள்ளை என் மடியில் நித்தமும் தவழ்கின்றான். நான் அவனை ஆரத்தழுவிடும் போதில் அவனின் சிந்தனை யாவும் என்னுள் புதைந்து விடுகிறது. முத்தைத்தேடுகிறான். மீனைத்தேடிப் பிடிக்கிறான். வலையோடு வலம் வருகிறான். வாசக் கடலைக் கொண்டு நீயா ஆழி! நீயா பரவை, நீயா வாரி,நீயோ நீயோ! என் என் அருகே காதல்மொழி பேசி என்னை உயர, உயர பறக்கவைக்கின்றான். இப்படியா ஒர் ஆண் இருப்பான்? என்னதான் அன்னை எனினும் என்னைத்தொட்டுத்தொட்டுக் கட்டிப்பிடித்து என்னுள் படுத்து, என்னுள் கிரங்கி என்னையும் கிரங்கவைக்கிறான். இவன்கடற்கன்னி நான் என நினைத்தானோ என்னவோ! இவன் உடலில் இருக்கும் உப்பும் என்னுடையது. ஓடும் குருதியும் என்னுடையது. கடலாய் நான் மட்டும் பிறக்க இல்லைஎனில் இவனுக்கு ஏது களம்? ஏது வாழ்வு? ஏது காதல்? ஏது, ஏது என எல்லாவற்றையும் எத்தித்தின்னத்தொடங்கி இருப்பான்.ஆழியாய் இவனுள் பரந்து, விரிந்து நான் கிடக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பு மிக்க தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி Ki.Ilampirai

      Delete