NewsBlog

Saturday, April 20, 2013

உடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்!'

உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது… உழைப்பும்.. உழைப்பைச் சார்ந்த பசி மற்றும் செரிமானமுமாகும். அவ்வகையில் நீங்கள் ‘ஓய்வறைக்கு’ (பன்னாட்டு தொழிலகங்கள் இந்தியாவில் படையெடுத்து வெற்றிவாகைச் சூடியபின் பயன்படுத்தும் மொழி இது) அதாவது ‘கழிவறைக்கு’ நாள்தோறும் இரண்டு முறை சென்று நிம்மதியுடன் திரும்புவரா? அதிஷ்டசாலிதான் போங்கள்! அல்லது ஓய்வறையில் நீண்ட நேரம் காலம் கழிப்பவராக இருந்தால்.. (நாளிதழ் வாசிப்பதற்காக அல்ல) நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இவை:

நாள்தோறும் 8-10 டம்ளர்கள் குடிநீர் அருந்துவது குடல் இயக்கத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தாமிர செம்பில் இரவு முழுவதும் இருத்திய குடிநீரை காலையில் வெறும் வயிற்றுடன் குடிப்பதும் நல்லது.

வெது வெதுப்பான டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து படுக்கைக்குப் போகும் முன்னர் அருந்துவது மலச்சிக்கல்  பிரச்னை தீர உதவும். அதேபோல, காலை நடை பயிற்சிக்கு முன்னர் 2-3 டம்ளர் வெது வெதுப்பான நீரை அருந்துவதும் சிறந்தது.



பழவகைகள் மற்றும் காய்கறிகள் அதிலும் குறிப்பாக பப்பாளி, கொய்யா போன்றவற்றை உணவாக்கிக் கொள்வதும் நல்லது. தக்காளி, பீட்ரூட் துண்டுகள் மலச்சிக்கல் நீக்க பெரிதும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது கொஞ்சம் விலை அதிகமான சமாச்சாரமாக இருந்தாலும், உடல் நலத்தை முன்னிட்டு ஒரு இயற்கை மருத்துவமாக ஏற்கலாம் அதாவது நாள்தோறும் காலையில் இரண்டு ஆப்பிள் பழங்களை நன்றாக கழுவி பல்லால் நேரடியாக கடித்து உண்பது மிகவும் நல்லது.

இதைவிட இன்னும் எளிய ‘கை – வைத்தியம்’, ஒரு டம்ளர் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து குடிப்பது எப்பேர்பட்ட மலச்சிக்கலையும் நீக்கிவிடும் என்கிறார்கள் நம் கிராமத்து அனுபவ மருத்துவர்கள்.

இவை எல்லாமே இயற்கை சார்ந்த எளிய மருத்துவமுறைகள். ஆதலால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இனி நீண்ட நேரம் ‘ஓய்வறையில்’ தாமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை! முகம் சிவக்க … கண் கலங்கி கதவைத் திறந்து வர வேண்டிய சிக்கலும் இல்லை.

இனி எல்லாம் “ப்ரீதான் போங்கள்..!!”

0 comments:

Post a Comment