அநீதியான அந்தக் காட்சியைக் கண்டதும், கண்கள் கோபத்தால் ‘ஜிவ்’ வென்று சிவந்துவிடுகின்றன. நாசி துவாரங்களிலிருந்து வெளிப்படும் மூச்சுகூட சூடாக வெளிவருகிறது.
“ஆம்..! இதை அனுமதிக்கவே முடியாது!”
இனியும் தாமதிக்க பொறுக்காமால், அதை தடுத்திட திடமாக முன்னேற துடித்து நிற்கிறீர்கள்.
ஆனால், கடைசி நொடியில், “உனக்கு ஏம்பா இந்த வம்பு? எவனாவது எக்கேடாவது கெட்டுப் போறான். ‘அக்காடா’ என்று கண்டும் காணாமலும் உன் வேலையை பார்ப்பியா!”
எங்கிருந்தோ ஒரு குரல் உங்களைத் தடுத்துவிடுகிறது. நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ அந்த குரலுக்கு உடனே பணிந்து விடுகிறீர்கள்.
சுயநல குரல்:
சற்று நேரம் முன்வரை,
உங்கள் முன் நடந்து கொண்டிருந்த ஒரு தீமையை .. அக்கிரமத்தை களைய வீறு கொண்டு எழுந்த நீங்கள்,
- உங்கள் பெற்றோர் மூலமாகவோ,
- உங்கள் உற்றார்-உறவினர் மூலமாகவோ,
- உங்கள் அன்பு மனைவி-மக்கள் மூலமாகவோ அல்லது
- உங்கள் மனத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சுயநலம் மூலமாகவோ எழுப்பப்பட்ட குரலுக்கு அடிபணிந்து நீங்கள் மௌனமாகி விட்டீர்கள்.
பிறகு, அத்தீமை பகிரங்கமாக அரங்கேறிவிடுகிறது. ஜக ஜோதியாக தங்குதடையின்றி சமூகம் முழுவதும் அணிவகுத்து ராஜநடை போட ஆரம்பித்த விடுகிறது.
தனிநபரும்-சமூகமும்:
சமுதாயத்தில் வன்முறைகளும், கொலை – கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், போதை பொருட்களும், குடி, சூதாட்டம் போன்றவைகளும் ஊடுருவி மனித குலத்தின் ஒழுக்கத்தை சிதைத்து சமூக அமைப்பை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. காணும் இடமெல்லாம் தீமைகள் மண்டிக்கிடக்கின்றன.
இந்த அவல நிலை குறித்து,
சமுதாயத்தின் அங்கத்தினர்களான நாம் நிச்சயம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏனென்றால், சமுதாயம் என்பது பல தனி நபர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பில் இணையாமல் தனித்து, மனிதன் இயங்குவதென்பது சாத்தியமற்ற செயலாகும். இப்படிப்பட்ட தனி நபர்களின் கூட்டமைப்பான சமுதாயத்தில் உருவாகும் நன்மைகளும், தீமைகளும் ஒவ்வொருவரையும் பாதிக்கவே செய்யும்.
சமுதாயம் என்பது ஒரு தோணி என்றால்,
நாமனைவரும் அதில் பயணிக்கும் பயணிகளாவோம். இந்த பயணிகளில் யாராவது ஒருவர் தோணியின் அடிப்பாகத்தில் துளையிடுவார்களேயானால்.. நிலைமை என்னவாகும்?
சிறிது நேரத்திலேயே நீர் உள்ளே புகுந்து தோணி நீரில் மூழ்கிவிடும். அதில் பயணம் செய்யும் எல்லோரும் மரணத்தை தழுவ நேரிடும். அதனால், இப்படிப்பட்ட ஒரு செயலை நாம் நிச்சயம் அனுமதிக்கவே மாட்டோம்!. “நமக்கென்ன?” – என்று தோணியை துளையிடும் நபரின் செயலைக் கண்டு நாம் சும்மாயிருக்க மாட்டோம்.
யார் காரணம்?
சமுதாயத்தில் தீமைகளும், ஒழுக்க சீர்கேடுகளும் உண்டாவதற்கு என்ன காரணம்? ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்களேன்!
ஏதோ ஒரு விதத்தில் சம்பாதித்த பணம்தான் உள்ளதே என்று தனியார் கல்விசாலைகளை நிறுவிக் கொள்கிறோம். நன்கொடை வகையறாக்களில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு சீரான பாதையை அமைத்துக் கொடுக்கும் நம்மில் வசதி கொண்டோரின் சுயநலச் செயல்கள்!
தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கே ‘தகிடத்தோம்!’ போடும் அடிமட்டத்தில் உழல்பவர்கள் தம் பிள்ளைகளும் ‘ராஜாக்களாக’ வேண்டும் என்று கனவு காண்பதென்னவோ உண்மைதான்! ஆனால், நடைமுறையில், செயல்படுத்தும் போதுதான் அதன் சுமையை அவர்கள் உணர முடிகிறது. அதையும் மீறி அரசு பள்ளிகளில் படிக்க வைக்கப்படும் பிள்ளைகளின் பள்ளிச் சூழலும், வீட்டுச் சூழலும் அவர்களை கல்வியில் பின்தங்க வைத்துவிடுகிறது; ஆரம்ப பளளியுடனேயே அவர்களின் கல்விக்கு ஓய்வு கொடுத்துவிடுகிறது.
நாளடைவில் இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது,
- சோம்பேறிகளாக,
- பேட்டை பிஸ்தாக்களாக,
- திருடர்களாக,
- ஜேப்படிக்காரர்களாக,
- முரடர்களாக
உருமாறி கடைசியில் சமூக விரோத கும்பலாக உருவெடுத்துவிடுகிறார்கள். இந்த சமூக விரோதிகள் ‘சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுவார்களா?’ என்றால்.. அதுதான் இல்லை! இவர்களின் ஜனனமும், மரணமும் இதே சமூகத்தில்தான் பல தலைமுறை தலைமுறையாக சுழன்று கொண்டிருக்கும்.
இதன் விளைவு?
உல்லாச வாகனங்களில், நெடுஞ்சாலைகளில் வழுக்கிச் செல்லும் செல்வச் சீமான்களின் இளைய தலைமுறையினர் முன், இந்த சமூக விரோத இளந்தலைமுறையினர் அரிவாள்,கத்தியுமாக காரை வழிமறித்து நிற்கும்போதுதான் விபரீதம் தெரிய ஆரம்பிக்கிறது. இத்தகைய வன்முறைகளால் மண்டை உடைந்து குற்றுயிரும்-குலை உயிருமாகும் மகன்களைக் கண்டு கதறி அழும் நிலைக்கு நம்மில் பலர் தள்ளப்பட்டிருக்கிறோமே இந்தச் சூழலுக்கு யார் காரணம்?
பொன்னகை அணிந்த மாளிகைகள்! புன்னகை மறந்த மண் குடிசை!
சலவை கற்களால் மாட மாளிகைகளை அமைத்துக் கொண்டு ஏசி தந்த சுகமான குளுகுளுப்பில் ஃபோம் மெத்தைகளின் மென்மையான அரவணைப்பில் புரளும் உல்லாசவாசிகள்..
விடிந்தபின் தம் வீட்டின் எதிரே, அக்கம் பக்கத்தில்.. சுற்றிலும் குடிசைவாசிகளின் கழிவுகளைக் கண்டு கடிந்து கொண்டால்..
அவர்கள் என்ன செய்வார்கள்?
“அய்யா…! எங்களுக்கு வீடமைத்து கொடுக்க வேண்டாம்! எங்கள் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வம் தர வேண்டாம்! எல்லாம் எங்கள் விதியென்று நொந்து கொள்கிறோம். ஆனால், ‘இது’ எங்களையும் மீறிய இயற்கை உபாதையாயிற்றே! நாங்கள் இதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?
சுகாதார சீர்கேடு என்று நீங்கள் கத்துவதால்.. நாங்கள் என்ன செய்ய முடியும்?, சரி.. எங்களுக்காக வேண்டாம்! உங்களுக்காக.. உங்களுடைய தூய்மைக்காக.. நீங்கள் வீடுகளை அமைத்து கொள்ளும் முன்னரே எங்களைக் குறித்தும் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா? முதலில் எங்களுக்கு கழிவிடங்களைக் கட்டிக் கொடுத்துவிட்டு அதன் பிறகல்லவா நீங்கள் வீடுகளை கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.?” – என்று புலம்பல் – பரிதவிப்புகளுடன் வேகமாக வளர்ந்துவரும் ஏழை சமூக அமைப்பு. இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சமூகத்துக்கு எதிராக திரும்பும்போது இவர்களை யார் தடுத்து நிறுத்துவது?
பலவீனமான அரசு இயந்திரம்
அரசாங்க கடிவாளம் தங்கள் கையில் உள்ளது என்ற மமதையில், ஆட்சி பீடங்களில் அமர்ந்திருப்போர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து, குறுக்கு வழிகளில் லஞ்ச – லாவண்யங்களில் சுகம் தேட ஆரம்பிக்கிறார்கள். தகுதியின் அடிப்படைகள் பின்தங்கி, தகுதியின்மைகள் அரங்கேறும்போது, அரசாங்கம் பலவீனமடைந்துவிடுகிறது. இதன் விளைவு..? வரி சுமை, விலைவாசி உயர்வு இத்யாதிகளில் ஒட்டுமொத்தமான சமுதாயமும் தள்ளாடும்போது, அதை ஸ்திரப்படுத்துவது எப்படி?
“அடிப்பாவி! கேடு கெட்ட சிறுக்கி.. உன் மயக்கும் பார்வைக்கு பலிகிடாவாக என் புருஷன்தானா கிடைத்தான்? என் வாழ்க்கையையே நாசம் செய்து விட்டாயே! என் வாழ்க்கையில் கொள்ளி வைத்துவிட்டாயே! நீ நாசமாகப் போக!”-என்று கதறும் இல்லத்தரசியைப் பார்த்து,
“நான் என்ன செய்வது சகோதரி?
உனக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இருந்ததால்.. மணமகன் வீட்டார் கேட்ட சீர்.. செனத்தி வரதட்சணை என்று எல்லாவற்றையும் கொடுத்து எங்களுக்கு முன்னமே வாழ்க்கையைத் தேடிக் கொண்டாய்!
ஏதுமற்ற ஏழைகளான நாங்களோ, காலம் முழுவதும் கன்னியாகவே மடிந்து விடவேண்டும் என்று எண்ணுவது நியாயமா சகோதரி? நாங்களும் ஏதாவது ஒரு வகையில் வாழ்ந்துதானே ஆக வேண்டும்? உங்களைப் போல சுயநலவாதிகள் இருக்கும்வரை … எங்களைப் போல ‘கேடு கெட்டவர்களும்’ இருக்கத்தான் செய்வார்கள். காலம் முழுக்க உங்களுக்கும் நிம்மதியில்லை! எங்களுக்கும் சாந்தியில்லை!”- என்று ரத்தக் கண்ணீரை வடிக்கும் அபலைப் பெண்கள் உருவாக யார் காரணம்?
எத்தனை, ‘நேருக்கு நேர்..’ ‘சொல்வதெல்லாம் உண்மை!’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதை கண்டிருக்கிறோம்.
வீதிதோறும் ஒட்டப்படும் ஆபாச சுவரொட்டிகளையும், தியேட்டர் தோறும் திரையிடப்படும் வன்முறை படங்களையும் காணும் இளம் தலைமுறையினர்,
மஞ்சள் பத்திரிகைகளையும், கொச்சை எழுத்துக்களையும் படித்து ‘ஆன்மா’ செத்துவிட்ட ‘நாளைய சிற்பிகள்’ பிஞ்சிலேயே வெம்பிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு தரம் கெட்டவர்களாக மாறிவருவதற்கு என்ன பரிகாரம்?
திருட்டு, கொலை – கொள்ளைகள், சிறுமிகளையும் துரத்திக் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகள், கற்பழிப்புகள், சமய நல்லிணக்க சீர்குலைவுகள், விபச்சாரம், குடி, சூதாட்டம் போன்ற தொடரும் சமூகத் தீமைகளும், ஒழுக்கக் கேடுகளும் சமுதாயத்தில் தழைத்தோங்கி மேலோங்கும்போது, பாதிக்கப்படுவது யார்?
நாம்தானே?
நம் சகோதரர்கள்தானே?
நம் அண்டை – அயலார்தானே?
நம் பிரியத்திற்குரிய நண்பர்கள்தானேஃ
யார் தடுப்பது?
சமுதாயத்தில் மிதமிஞ்சி கொழுந்துவிட்டெரியும் தீமைகளை யார் தடுப்பது?
சிதைந்து கொண்டிருக்கும் சமூக அமைப்பை சீர் செய்யப் போகும் அந்த ‘மகான்’ யார்?
அலைகளில் சிக்கித் தவிக்கும் இத்தோணியை வழிநடத்தும் படகோட்டி எங்கே?
அவர் வானத்திலிருந்து.. அதோ அந்த மேகக் கூட்டங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து.. பறந்து வருவாரா? அல்லது
இதோ இந்த பூமியை “படார்” – என்று பிளந்து கொண்டுதான் வருவாரா?
சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் தீமைகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் களைந்து அமைதியை நிலைநாட்டி.. தூய்மையான சமூகத்தை உருவாக்கப் போகும் அந்த ‘மகாத்மா’ எங்கே..? எங்கே??
சுற்றி… சுற்றி ரீங்காரமிடும் இந்தக் கேள்விகளுக்கு பதில் .. ஒரே ஒரு பதில் “அது நீங்கள்தான்!”
ஆம்..! சமுதாயத்தில் மலிந்து போயிருக்கும் சீர்கேடுகளை களையும் உன்னத பணி நம்மில் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு.
ஒரு பிடி மண்
ஏனென்றால், ‘தீ’ பற்றி எரியும் வீட்டைக் கண்டு யாரும் தயங்கி நிற்பதில்லை. தம்மால் இயன்றளவு ஒரு கைப்பிடி மண்ணையாவது ஒவ்வொருவரும் அள்ளிப் போட்டாலும் கூட போதும்! சில நிமிடங்களிலேயே அத்தீயை நிச்சயம் அணைத்துவிடலாம். அதற்கு முதலில் தேவையானது:
“அய்யோ! தீ என்ற அச்ச உணர்வும்..
“அணைக்க வேண்டும்!” – என்ற துடிதுடிப்பும்தான்!
அதேபோல, சமுதாயத்தில் மலிந்துவிட்ட தீமைகளையும், ஒழுக்கக் கேடுகளையும், நான் களைந்தே தீருவேன்!”-என்று கங்கணம் கட்டிக் கொண்டு திடமான மனதுடன், உருக்குப் போன்ற நெஞ்சுடன் ஒவ்வொரு சமூக அங்கத்தினரும் எழுச்சியுடன் முன்வர வேண்டும்.
தியாக சிந்தனைகளின் எழுச்சி
- எந்த தீமைகள் நடைபெறுவதையும் நான் அனுமதிக்க மாட்டேன்!
- லஞ்ச – லாவண்யங்களை ஊக்குவிக்க மாட்டேன்!
- கல்வி – அறிவை சிறந்த முறையில் எல்லோருக்கும் எட்டச் செய்து கல்லாமையை முற்றிலும் ஒழிப்பேன்!
- விஷ காளானாக பரவி வரும் ஆபாசத்தை ஒழித்தே தீருவேன்!
- பெண்களுக்கு உரிய கண்ணியத்தையும், அந்தஸ்தையும் கட்டிக் காப்பேன்! அவர்களது பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் தருவேன்! அவர்களை கேவலமான வணிக சந்தையாக்குவதை ஒருகாலும் அனுமதிக்க மாட்டேன்!
- சமயங்களின் பெயரால் நடைபெறும் ‘ரத்தக் களறியை’ கண்டிப்பாக தடுத்து நிறுத்துவேன்.
- ஒவவொருவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பேன். அடுத்தவர்களை என் சகோதரர்களாக பாவித்து அவர்களின் உரிமைகளுக்கு நான் பாதுகாவலனாக நிற்பேன்!
- என் கண் முன் நடைபெறும் ஒரு கடுகளவு அநீதியையும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது! இதில் என் உயிரே போனாலும்கூட பரவாயில்லை!
- நந்தவனமான ‘சமூக பூங்கா’ சீரழிந்து போவதை என்னால் காண முடியாது!
- என்று சிறியோர் முதல் முதியோர்வரை சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தியாக மனப்பான்மையுடன் வீறுகொண்டு எழ வேண்டும்.
இத்தகைய எழுச்சியில், பிணக்காடாகவும், நாற்றமெடுக்கும் சாக்கடையாகவும்.. கள்ளிச் செடிகளாகவும் மண்டிக் கிடக்கும் சமுதாயம் என்ற நந்தவனம் தென்றல் தவழும் ‘பூஞ்சோலையாக’ மாற முடியும். சாந்தியும், சுபிட்சமும் அதில் தழைத்தோங்கவும் செய்யும்.
(இந்தக் கட்டுரை மணிச்சுடர் நாளேட்டில் 'அபாபீல்' என்னும் புனைப்பெயரில் நான் எழுதி 01.09.1988 அன்று பிரசுரமானது. ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டு கழிந்த பின்னும் நம் சமூக அமைப்பில் எந்த மாற்றமும் நிகழாதது வருத்தத்துக்குரியது)
(இந்தக் கட்டுரை மணிச்சுடர் நாளேட்டில் 'அபாபீல்' என்னும் புனைப்பெயரில் நான் எழுதி 01.09.1988 அன்று பிரசுரமானது. ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டு கழிந்த பின்னும் நம் சமூக அமைப்பில் எந்த மாற்றமும் நிகழாதது வருத்தத்துக்குரியது)
கட்டுரை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் எத்தனை நுற்றாண்டானாலும் சமுக அமைப்பு மாறாது. களத்திற்கு வாங்க தோழரே......?
ReplyDelete