NewsBlog

Saturday, April 5, 2014

சிறப்புக் கட்டுரை: 'மக்களவைக் குறித்து மகாத்மா'


ஆங்கில  அரசாங்க முறை பரிதாபத்திற்குறியது. இது நாம் விரும்பத் தக்கதோ, தகுதியானதோ அன்று என்பதால், இப்படியொரு நிலைமை இந்தியாவிற்கு என்றுமே வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

பாராளுமன்றத்துக்கெல்லாம் அன்னையான இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு மலடியைப் போன்றும், விபச்சாரியைப் போன்றும் இருக்கிறது.

இது சற்றே கடுமையான கருத்தே; ஆனாலும், முற்றிலும் சரியானதே!

இந்த பாராளுமன்றம், தானாகவே ஒரு நல்ல காரியத்தைக்கூட இதுவரை செய்ததில்லை.

இதனாலேயே அதனை ஒருமலட்டுப் பெண்ணுக்கு ஒப்பிடுகிறேன்.

வெளியில் இருந்து வரும் வற்புறுத்தலினால் அல்லாது, அது ஒன்றுமே செய்ய முடியாது என்பதே அதன் இயற்கையான நிலைமையாக இருந்து வருகிறது.

அடிக்கடி மாறும் மந்திரிகளின் ஆதிக்கத்தின்கீழ் அது இருந்து வருவதால், அதுவொரு விபச்சாரியைப் போன்றது.

இன்று அது ஒருவரின் கீழ் இருக்கும். நாளை வெறொருவரின் கீழ் இருக்கும். சிறந்தவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் எனக் கருதப்படுகிறது. உறுப்பினர்கள் சம்பளமின்றி வேலை செய்கின்றனர். ஆகையால், பொதுமக்களின் நன்மைக்காகவே சேவை செய்கிறார்கள் என்று கருதவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் படித்தவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். ஆகையால் தேர்ந்தெடுப்பதில் பொதுவாக தவறு செய்யமாட்டார்கள் என்றும் நாம் ஊகித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய பாராளுமன்றத்தை தூண்டுவதற்கு விண்ணப்பங்களோ அல்லது வேறுவகை தூண்டுதல்களோ அவசியமேயில்லை. அதுசெய்யும் காரியங்களின் தன்மை நாளுக்குநாள் மிகத் தெரிவானதாய் இருக்கும் வகையில், அதன் வேலை எளிதாக இருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில், அதன் உறுப்பினர்கள் கபடமுள்ளவர்களாகவும், சுயநலக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் சங்கதி. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறு நலன்களிலேயே கருத்துடன் இருக்கின்றனர். பயமே அவர்களை நடத்திச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. முந்தைய நாள் உருவாக்கியதை, மறுநாள் வேறுவிதமாக அழித்து மாற்றியாகி விடும். அதன் வேலையில், இதுவே முடிவானது என்று ஒன்றை எடுத்துக்காட்டுவது முடியாதகாரியம்.

பெரிய பிரச்சனைகள் விவாதிக்கப்படும்போது, அதன் உறுப்பினர்கள் காலை நீட்டிக்கொண்டு தூங்கி விடுகின்றனர். சில சமயங்களில் கேட்பவர்கள் சலித்துப்போகும் அளவிற்கு, உறுப்பினர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். அறிஞரும், எழுத்தாளருமான கார்லைல் என்பவர், அதனை ‘உலகத்தின் பேச்சுக்கடை’ என்கிறார்.

உறுப்பினர்கள் சிந்தித்துப் பாராமலேயே தங்கள் கட்சிக்கு சாதகமாக வாக்களிக்கிறார்கள். கட்டுப்பாட்டிற்கு இணங்கி அவர்கள் அப்படிச்செய்ய வேண்டியிருக்கிறது. எவரேனும் ஓர் உறுப்பினர் தப்பித்தவறி, சுயேச்சையாக வாக்கைச் செலுத்தி விட்டால், அவர் கட்சியை விட்டு பிரிந்தவராக கருதப்படுகிறார்.

பாராளுமன்றம் வீணாக்கி வரும் பணத்தையும், நேரத்தையும் சில நல்லவர்களிடம் ஒப்படைத்தால், அந்நாடு இன்னும் அதிக உயர்ந்த மதிப்பில் இருக்கும். அத்தேச மக்கள் அதிக செலவு செய்து நடத்தும் ஒரு பொம்மைக்கூத்தே பாராளுமன்றம்.

இதனை நான் மட்டும் சொல்லவில்லை. சில ஆங்கிலேய அறிஞர்களும் இதையே கூறியிருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர் எவரும் அதில் உறுப்பினராக இருக்க முடியாது என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கிறார். மற்றொருவர், அதுவொரு குழந்தை என்கிறார். எழுநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பாராளுமன்றம், இன்னும் குழந்தையாகவே இருக்கிறது என்றால், அது என்றுதாம் குழந்தைப்பருவத்தில் இருந்து மாறப்போகிறதோ?

பாராளுமன்றத்துக்கு உண்மையான முதலாளி கிடையாது. பிரதம மந்திரியின்கீழ் அதன் நடவடிக்கை நிலையானதன்று. அதனால், ஒரு விபச்சாரியைச் செய்வதுபோல், அதனை அலைகழிக்கின்றனர். பிரதம மந்திரிக்கோ பாராளுமன்றத்தின் நன்மையைவிட, தனது அதிகாரத்தில்தான் அதிக சிரத்தை. அவருடைய சக்தியெல்லாம், தம்முடைய கட்சிக்கு வெற்றியை தேடுவதிலேயே ஈடுபட்டிருக்கிறது.

பாராளுமன்றத்துக்கு நியாயமானதையே செய்யவேண்டுமென என்பதில், அவருக்கு எப்பொழுதுமே அக்கறை கிடையாது. தம் கட்சிக்கு அனுகூலமாகவே பாராளுமன்றம் காரியங்களை செய்யும்படி பிரதம மந்திரிகள் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

பிரதம மந்திரிகள் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை. ஆனால், நான் பார்த்திருப்பவைகளில் இருந்து அவர்களை தேசத்தின் அபிமானிகள் என்று என்னால் எண்ணமுடியவில்லை. அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்பதற்காக அவர்களை யோக்கியர்கள் என நினைத்தால், யோக்கியர்கள்தாம்.

ஆனால், வெளிவராத பல தூண்டுதல்களுக்கு இவர்கள் உடன்பட்டு விடுகிறார்கள். தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக, மக்களுக்கு கௌரவப் பட்டங்களை லஞ்சமாக கொடுக்கின்றனர்.  அவர்களிடம் உண்மையான நேர்மையோ, மனசாட்சியோ கிடையாது என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை.

வாக்காளர்களுக்கு அவர்களுடைய பத்திரிகைகளே வேதவாக்கு. அப்பத்திரிகைகளை கொண்டே அவர்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன.  அப்பத்திரிகைகளோ எப்பொழுதுமே யோக்கியமானவையன்று. ஒரே விசயத்தைப்பற்றி, பல பத்திரிகைகளும், அவை எந்த கட்சியின் சார்பாக நடத்தப்படுகின்றனவோ அதற்கு ஏற்றப்படி, வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்கின்றன.

ஒருவரை குறித்து ஒரு பத்திரிகை, யோக்கிய பொறுப்புக்கு உதாரணப்புருஷர் என்று கூறும். மற்ற பத்திரிகைகளோ, அவரை அயோக்கியர் என்று சொல்லும். இந்த வகைப் பத்திரிகைகளைப் படிக்கும் மக்கள் அடிக்கடியும், அதிகபட்சம் ஏழாண்டுகளுக்குள்ளும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.  இக்கருத்துக்கள் கடிகாரத்தின் பெண்டுலம் போல அப்பக்கமும், இப்பக்கமுமாக ஊசலாடிக் கொண்டேயிருப்பதால், ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை.

நல்ல பேச்சாளர்கள் அல்லது தங்களுக்கு விருந்துகள், வரவேற்புகள் அளிப்பவர்களின் பின்னாலேயே அம்மக்கள் போய்க்கொண்டிருப்பார்கள்.  அம்மக்கள் எவ்வாறோ, அவ்வாறே அவர்களது பாராளுமன்றமும். ஆனால், அவர்களிடம் பலமாக ஊன்றிப்போன ஒருகுணம் மாத்திரம் நிச்சயமாக இருந்து வருகிறது. தங்கள் நாடு அழிந்து போவதற்கு இடந்தரவே மாட்டார்கள்.  எவரேனும் கெட்டஎண்ணத்துடன் தங்கள் நாட்டை நோக்கி விட்டால், அவர்களுடைய கண்களைப் பிடுங்கி விடுவார்கள். இதனால், அம்மக்களிடம் எல்லா உயர்குணங்களும் இருக்கின்றன என்றோ, அவர்களைப் பின்பற்றி நடக்கவேண்டுமென்றோ ஆகிவிடாது.

இந்தியா, இங்கிலாந்தைப்போல நடப்பதென்று ஆரம்பித்துவிட்டால், இந்தியா அழிவுறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. 

(1909 ஆம் ஆண்டில், தனது நாற்பதாவது வயதில் மகாத்மா காந்தி எழுதிய முதல் மற்றும் தத்துவ நூலான இந்திய தன்னாட்சியில், ‘இங்கிலாந்தின் நிலைமை’ என்கிற ஐந்தாம் பகுதியில் இருந்து, கருத்து மாறாமல் தேவைக்கேற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா)

0 comments:

Post a Comment