ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1பி நேவிகேஷன் செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் மூலம் இன்று (04.04.2014, வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 58 மணி நேரம் 30 நிமிடங்கள் கொண்ட 'கவுண்ட் டவுன்' நேற்று (02.04.2014, புதன்கிழமை) காலை 6.44 மணிக்கு தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட்டை ஏவுவதற்கு முன்பாக பல்வேறு சோதனைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட் மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைகோளின் எடை மட்டும் 1,432 கிலோ ஆகும். ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.
மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டவுடன் சுமார் 20 நிமிடங்களில் பூமியிலிருந்து குறைந்தபட்சமாக 284 கி.மீ. தொலைவும், அதிகபட்சமாக 20,652 கி.மீ. தொலைவும் கொண்ட புவிச்சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள் தாற்காலிகமாக நிலைநிறுத்தப்படும்.
செயற்கைகோள் தாற்காலிகமான பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், பெங்களூருக்கு அருகில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், (இஸ்ரோ) ஹாசன் கட்டுப்பாட்டு மையம் செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்.
இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைகோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைகோள் கடந்தாண்டு ஜுலை மாதம் இரவில் ஏவப்பட்டது. இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான .ஆர்.என். எஸ்.எஸ்.1பி செயற்கைக்கொள் மாலை நேரத்தில் தற்போது செலுத்தப்படுகிறது. இன்னும் 5 செயற்கைக்கோள்கள் அடுத்த ஆண்டுக்குள் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்துகளையும் கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணித்து உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment