NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, October 27, 2013

விருந்தினர் பக்கம்: 'கட்டுக்கடாங்காத இனவெறி'


தருமபுரி சாதிய ஆதிக்க வன்முறையாளர்களால் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் வருகிற நவம்பர் 7ந்தேதியுடன் ஒரு வருடத்தை எட்டப் போகிறது. அந்நாளை நினைவு கூர்ந்து அம்மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்னெடுக்கும் வகையில், அதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்கிற அடிப்படையில் தற்போது தருமபுரி நிலவரத்தை அனைவரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.  

நிவாரண நிலைமைகள்:

 எரிக்கப்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு சில வீடுகள் கட்டப்பட்டும் உள்ளன. இந்தப் பணி முழுவதுமாக முடிவடைய இன்னும் ஒரு வருடம் ஆகும் என மக்கள் கூறுகிறார்கள். ஒரு வருடம் கடந்தும் அம்மக்கள் இயல்புவாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இன்னும் இழப்பீடுகள் முழுமையாக கிடைக்கவில்லை.  அதனால், மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் கிராமங்களிலேயே இருந்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் ரேசன் பொருட்கள் போன்ற மற்ற பொருட்கள் வழங்கப்படுகிறன.. 

தாக்குதலுக்கு ஆளான மொத்த 135 வீடுகளில் ஒரு பகுதிதான் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமோ எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திடம் 3 பங்கு வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளது. இந்நிலையில், ஆணையர் 'சிவண்ணா' நேரில் வந்து பார்த்தபின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன.

தமிழக அரசின் நிவாரணத் தொகையான ரூபாய் 50,000, சேதமடைந்ததற்கு ஏற்றாற்போல்
இழப்பீட்டுத்தொகையாக வழங்கப்பட்டது. அதேநேரத்தில், பாதிக்கப்படாத வீடுகளுக்கு இழப்பீடும், பாதிக்கப்பட்ட வீட்டிற்கு இழப்பீடு வழங்காமலும், இன்னும் பாதிக்கப்பட்ட சிலருக்கு சரிவர மதிப்பீடு செய்யப்படாதாலும் குறைவான நிவாரணத் தொகை பெற வேண்டிய நிலை. இது மக்களிடையே மோதலையும், ஒற்றுமையின்மையையும்  ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடாத வகையில், அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலையிலேயே உள்ளனர் அதாவது அரசாங்கம் ஒரு சிலருக்கு கடைகள், மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவி போன்றவற்றை வழங்கி மக்களை பிளவுபடுத்தியுள்ளது.
 

ஊர்க்கட்டுப்பாடுகள்:

குறிப்பாக,


1. தாக்கப்பட்ட கிராம மக்களுக்கு முடிவெட்டுதல்கூடாது,
2. துணிகளை சலவை செய்யக்கூடாது,
3. நெல்,மாவு அரைத்துத்தரக்கூடாது
4. வயலில் வேலைக்கு அமர்த்த கூடாது
5. பால் கூட்டுறவு சங்கங்களில் பால் வாங்கக்கூடாது
6. தாழ்த்தப்பட்ட மக்களோடு பேசக்கூடாது.
7. தாழ்த்தப்பட்டோர் நிலங்களில் டிராக்டர்களை ஓட்டக்கூடாது.
8. தாழ்த்தப்பட்டோருக்கு கடன் கொடுக்கக்கூடாது,

என்று ஊர்க்கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளுக்கு வன்னிய மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. ஏனென்றால்,
ஏற்கனவே அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம்  பொருட்களை விற்பது, வாங்குவது போன்ற பொருளாதார உறவுகளைப் பேணி வந்துள்ளார்கள். அது மீண்டும் தொடர்ந்தாலும், பெரும்பாலான மக்களிடையே மனவிரிசல் போக்கே காணப்படுகிறது. இது வன்னிய, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இக்கட்டுப்பாடுகளை ஏற்காத சில வன்னிய குடும்பங்களும் இருக்கிறன.

கொண்டம்பட்டியை அடுத்துள்ள புளியம்பட்டி வன்னிய கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாத 10 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசிவந்த வன்னிய அடித்தட்டு மக்கள் ஊர்க்கட்டுப்பாடு என்பதால் பேசகூடாது என்று பயந்து மறைந்து பேசும் சூழல் நிலவுகிறது.

தாழ்த்தப்பட்ட ஒருவருடன் பேசியதால் பஞ்சாயத்தில் வன்னியர் ஒருவர் தண்டத்தொகை கட்ட வைக்கப்பட்டுள்ளார்.
 

இத்தகைய சூழல் பாதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றி நிலவுகிறது. குறிப்பாக பத்துபேர் கொண்ட குழுக்களால் ஒவ்வொரு வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமத்திற்கும் சென்று ஊர்க்கட்டுப்பாடுகளை ஒத்துக்கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பதற்கான பஞ்சாயத்துக்கள் நடந்து வருகின்றன. 

பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் நெருக்கடிகள்:

 
வேலைவாய்ப்பை பொறுத்தவரை, 'தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் எந்த வேலைக்கும் வைத்துக்கொள்ளக்கூடாது!'- என பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள 'சாதிய கும்பல்' சமூக புறக்கணிப்பை, புதிய சாதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதனால்,  இம்மக்கள் எங்கும் வேலைக்கு செல்ல இயலாமல் முடக்கப்பட்டுள்ளனர். 


மாவட்ட நிர்வாகமும், உயர்நீதிமன்றம் அமைத்த வாசுகி தலைமையிலான ஆய்வுக் குழுவும் ஏற்கனவே அம்மக்கள் செய்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலையை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரக வேலையில், தோண்டும் குழிகள் என்பது ஏரி, கால்வாய் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஊர்ப்பகுதியில்தான் அமைந்துள்ளன. அங்கு வரக்கூடாது என்ற நிலை இருப்பதால் அங்கு யாரும் இந்த பணி காரணமாக செல்வதில்லை. அப்படியே இந்த வேலை செய்தாலும் தலித் மக்கள் வசிக்கும் ஊர்ப்பகுதியில் உள்ள ஏரி, கால்வாய்க்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவை நீண்ட நாட்களுக்கான வேலைக்கான  உத்தரவாதமில்லாதவை. அத்துடன் அப்பணிகள் ஏற்கனவே முடியும் தருவாயில் உள்ளன. ஆதலால் ஊருக்கு அருகாமலேயே செய்த வேலை என்பதுபோய் மக்கள் அறிமுகமற்ற பகுதிக்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 'தாட்கோ லோன்' கொடுத்துள்ளது. அவற்றில் கரவை மாடும் வழங்கியுள்ளது. அதனை மேய்ப்பதற்கு சுற்றியுள்ள வன்னிய மக்களின் நிலங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்கும் தடை போடப்பட்டுள்ளது. அவற்றால் வரும் வருமானம் என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும், வன்னிய, தலித் பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்கனவே இயங்கிவந்தன. அதனை பா.ம.க வன்னிய சாதி வெறியர்கள் சிலர் கலைப்பதற்கான உள்வேலையை செய்துவருகிறார்கள். குறிப்பாக செல்லன்கொட்டாய் பெண்களும், அருகில் வசிக்கும் நத்தம் கிராம பெண்களும் இணைந்த குழுக்களை பிரித்து வன்னிய பெண்கள் மட்டுமே கொண்டகுழுக்களை உருவாக்குவது நடக்கிறது. இங்குமட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நடைபெற்றுவருகிறது. அதற்கு அடித்தட்டு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிடையாது. தூண்டும் சில சாதிய சக்திகள்தான் இதனை செய்துவருகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


அதேபோன்று நகர்ப்புறங்களில், அனைத்து சாதியத்தைச் சார்ந்த தொழிலாளரையும் உள்ளடக்கிய 'ஆட்டோ நிறுத்தத்தை', 'பா.ம.க ஆட்டோ கிளை' என்று பெயர் சூட்டி அதற்கான திறப்பு விழாவுக்கான ஆயத்தங்கள் நடப்பதாக ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவித்தனர். 


தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில், சாதிய வன்முறை கும்பலால் வன்னிய பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்களும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தாக்கப்பட்டதற்கான நிவாரணக்கோரிக்கை எழுந்தபோது,
காவல்துறையின் தேடுதலால் வன்னிய மக்களுக்கு  வயலில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. மாடுகளை மேய்க்க முடியாமலும், எந்த பொருளையும் விளைவிக்க முடியாத நெருக்கடியை சந்தித்த வேண்டி வந்தது. குறிப்பாக வயலில் வேர்க்கடலை செடி அதிகளவு பயிரிடுவார்கள். தாக்கப்பட்ட நேரத்தில் அவை முற்றிலும் சேதமடைந்தன. 

இன்று ஊர்க்கட்டுப்பாடுகள் போடுவதால் பொருட்கள் விற்க, வாங்க, வேலைக்கு ஆட்கள் இல்லாத பற்றாக்குறையும் நீடிக்கிறது. சில அப்பாவிகளும் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதனால் இரவு நேரங்களில் பெண்கள் மட்டுமே குடும்பத்தை காக்கவேண்டிய நிலைமை நீடிகிகிறது. இதையும் கூட பெண்களை திரட்டுவதற்கு சாதிவெறி கும்பல் சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பல வன்னிய ஆ,ண்கள் தாங்கள் வைத்திருந்த வியாபார கடைகளை திறக்காமல் மாதக்கணக்காக பூட்டியிருந்தில் பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

உளவியல் மாற்றம் பொறுத்தவரை:

ஒட்டுமொத்த வன்னிய மக்களிடம் சாதிய உணர்வு மேலோங்கியுள்ளது. இன்னும் அதற்கான முரண்பாடுகள் ஆங்காங்கே வெடித்தவண்ணம் உள்ளன. . நண்பனாக இருந்தவன் இன்று 'பறையன்' என்று ஒதுங்கி நிற்கும் சூழல். உழைக்கும் வன்னிய பிற்படுத்தப்பட்ட மக்களில் சிறு பிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்த இணக்கத்தை பேணுகின்றனர். மக்கள் அன்றாடம் வாழ்க்கை பிழைப்புக்கு கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் சங்கங்களாக இயங்கும் இடங்களில்தான் சாதிய உணர்வு மேலோங்கி உள்ளது. முன்பு ஆட்டோக்களில் எந்த சின்னத்தையும் வரையாத தொழிலாளர்கள் பெரும்பான்மையினர் இன்று வன்னியர் சங்கத்தின் சின்னத்தை அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் (தீ சட்டியை) வரைந்து அடையாளப்படுத்தி வருகிறார்கள். ஆனால் விதிவிலக்காக, நத்தம், கொண்டபம்பட்டி, அண்ணாநகர் கிராம மக்கள் மற்றும் வன்னிய மக்கள் ஒன்றாகவே பயணம் செய்கிறார்கள். உதவியையும் செய்துகொள்கிறார்கள். 

சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகள் மௌனம் காக்கும் சூழல் நிலவுகிறது. 'வி.சி.க' வை சேர்ந்த ஒருவரிடம் குற்றவாளியே முன்வந்து தாங்கள் செய்யவில்லை 'மதியழகன்'தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர்களுக்குள்ளேயே காட்டிக்கொடுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குற்றவாளிகளை காவல்துறைக்கு அடையாளம் காட்டியதற்காக பாதிக்கப்பட்ட மக்களில் சிலரை வெட்டுவதாக பேசி அச்செய்தியை பரப்பி இன்னும் சிலர் பயத்தை உண்டாக்கி வருகிறார்கள்.

சிறைக்கு சென்றுவந்த குற்றவாளிகளைச் சார்ந்த வீடுகள், சொந்தங்கள் மத்தியில் கடுமையான தலித் மக்கள் மீதான எதிர்ப்பு நிலவிவருகிறது. அவர்கள்தான் முழுக்க பா.ம.க வன்னியர் சங்கத்தில் இணைந்துள்ளனர். இணைந்தவர்கள் தே.மு.தி.க, அதி.மு.க, தி.மு.க என அனைத்துக் கட்சிகளிலும் உள்ள குற்றவாளிகள். அதற்கான புள்ளிவிவரங்கள் யார் என்ற பட்டியலும் விசாரித்து வருகிறேன்.

சிறை சென்று வந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொருவருக்கும் அதிகளவு பணமும் கொடுத்து, கறி சாப்பாட்டுடன் விருந்தளித்து பாதுகாக்கும் வேலை நடந்துவருகிறது. இவற்றிலும் முக்கிய ஆட்களுக்குத்தான் பணமும், பராமரிப்பும் கிடைப்பதால் போலீசாரால் தேடப்பட்டதில் மன பாதிப்படைந்த வன்னிய மக்கள் பெரும்பான்மையினர், "செய்தவன் தின்றான்! நாம் எதுக்கும் போகவில்லை! நம்மை சிக்க வைத்து விட்டனரே!' - என்று திட்டம் தீட்டிய குற்றவாளிகளை திட்டித் தீர்க்கும் குழப்பங்களும் நடக்கின்றன.

ஒருமாதத்திற்கு முன்பு கொண்டம்பட்டியை சேர்ந்த செயராமன், வன்னியர் ஒருவரின் நிலத்தில் வேலைசெய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவை மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது.

நிலத்தின் சொந்தக்காரரான வன்னியர், இறந்தவரோடு நண்பராகத்தான் இருந்திருக்கிறார். மூன்று மாதமாக அவரின் காட்டிற்கு வேலைசெய்ய இறந்தவரை அனுமதித்தும் உள்ளார். வன்னிய சாதியைச் சேர்ந்த அக்குடும்பம் சமாதானத்துடன் விபத்துக்கான செலவை ஏற்றுகொண்டு, நஷ்ட ஈடு தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. அவர் சேர்ந்த கர்த்தானூர் வன்னிய கிராம தலைவர்களிடம் கொண்டம்பட்டி மக்கள் முறையிட்ட போதும், 'சமாதானத்துடன் பேசித் தீர்த்து கொள்வோம்!'- என்றுகூட கூறியுள்ளார். 


இந்நிலையில், இந்த சமாதான நடவடிக்கைகளுக்காக, அவர் பா.ம.க தரப்பிலும் சில ஆதிக்க சக்திகளாலும் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். சாதிய ஆதிக்க சக்திகள் நுழைந்து அக்குடும்பத்தையும், ஊரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். "வழக்கு போடுங்கள் சந்திக்கிறோம்!" - என்று சவால் விட்டும் அவர்களைப் பிரித்து வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது, மக்கள் கோபத்தில் உடலை எடுக்கவிடாமல் மறியல் செய்துள்ளனர். மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு பல பேர் பலமாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசை அடித்த சிஆர்.பி,.எப்பை சேர்ந்த ஒருவரை கைதுசெய்ததுடன், இறந்தவரின் உடலை காவல்துறை எடுத்து சென்றுவிட்டது.

வன்னிய மக்களிடம் இருக்கும் சாதி உணர்வை சாதிவெறியாக மாற்றுவதற்கு சாதிய பஞ்சாயத்துகளின் தலைமை சக்திகளும், உதிரிகளும்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். உழைப்பில் ஈடுபடுகின்ற அன்றாட கூலி மக்களோ இதற்கு ஏதோ ஒருவகையில் பலியாகிவருகிறார்கள்.

இளவரசன் இறந்துவிட்டார். 'திவ்யாவின் நிலை என்ன ஆனது?' - என்பது தெரியவில்லை. அப்பெண் மனமுடைந்த நிலையில்தான் இருக்கிறார். 'சமூகமே என்னை புறக்கணிக்கிறது. யாரும் செய்யாத செயலையா நான் செய்தேன்?' - என்ற கேள்வியோடு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். தற்போது, காவல்துறையின் பாதுகாப்போடு வேலைக்கும் செல்கிறார்.

நாகராசன் இறந்தபின் பா.ம.கவின் கட்டுப்பாட்டில் இருந்த தாயார் தேன்மொழி தனி வீட்டில் தன் மகன், மகளுடன் வசித்து வருகிறார். செல்லன்கொட்டாய் கிராமமே அவர்களை புறக்கணித்துள்ளது. இப்போது அவர் தனது கணவர் செய்த வேலையை (கூட்டுறவு சங்கத்தில்) தொடர்கிறார், நத்தம் கிராமத்தின் வழியாகத்தான் காவலர் ஒருவர் பாதுகாப்புடன் தினமும் அவர் வேலைக்கு வந்து செல்கிறார். 

அரசு அடக்குமுறை:

இதுபோன்று மக்கள் தங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை நடத்தவிடாமல் எதற்கெடுத்தாலும் 144 என்ற காரணம் காட்டி அச்சுறுத்தும் வேலையை அரசு கடைபிடித்து வருகிறது. 'சாதிய கலவரங்கள் நடக்கக்கூடாது!'- என்று இதற்கான காரணமும் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.  இதனால் அப்பகுதியில் எந்தவித அரசியல் செயல்பாடுகளோ, கூட்டங்களோ, நடப்பதில்லை. யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது என்று நிபந்தனையால் தலித் மக்களின் கோரிக்கையை கொண்டு செல்வதற்கும் தடையாக உள்ளது.

கொண்டம்பட்டியில் நடந்த சம்பவத்தை கண்டித்து துண்டறிக்கை விநியோகித்த போஸ்டர் ஒட்டிய 'ம.ஜ.இ.க.' வைச் சேர்ந்த தோழர்களை காவல்துறை தேடிவருகிறது. அதனை அச்சடித்த அச்சகத்தாரை கைதுசெய்து தேச துரோக வழக்கினை பதிவு செய்துள்ளது. செப். 12   அன்று நாயக்கன்கொட்டாயில் உள்ள அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதற்காக 19 - க்கும் மேற்பட்ட 'ம.ஜ.இ.க,' மற்றும்  'ம.ஜ.இ.அ' தோழர்களை கைது செய்திருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறையை ஏவி மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

பா.ம.கவின் சாதிய அணிதிரட்டலும், அச்சுறுத்தலும்:

வன்னியர் சங்கமும் ஆதிக்க சக்திகளும் சுதந்திரமாக செயல்படும் சூழலையும், சாதகத்தையும் மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தருமபுரி முழுவதும் வன்னியர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு மேலிடத்திற்கு ஒப்படைக்கும் திட்டம் அமைதியாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்லம்பள்ளி யூனியனில் 200 க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் ரகசியமாக நடந்திருக்கிறது. அதன்படி தருமபுரி முழுவதும் உறுப்பினர் படிவத்திற்கு ரூ.200 கட்டணத்துடன் சேர்க்கைக்கான வேலைகள் முடிந்து தற்போது தேர்தல் நிதிதிரட்டல் வேலைவரை நீண்டிருக்கிறது.

பா.ம.க வன்னியர் சங்கத்தை கூட்டுவதாகவும், ஒவ்வொரு வீட்டுக்கும் வன்னியர் சங்க அறிக்கை விநியோகிக்கப்பட்டு குறிப்பட்ட தொகையும் வழங்கப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், மகளிர் அணியை கூட்டிப் பேசுவதாக விசாரித்ததில் தகவல் கிடைத்தது. 'வன்னியர்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க தி.மு.க கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம்!'- என்ற அறிக்கையும் வன்னியர் சங்கம் சார்பாக விநியோகிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதிதிரட்டலுக்கான 'குழுக்கள்' வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இவற்றில் மிக முக்கியமான செய்தி, தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க. என அனைத்துக் கட்சிகளில் உள்ள வன்னிய சாதியைச் சேர்ந்த நபர்களுக்கும் வன்னியர் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தை கொடுத்துள்ளனர். கட்சிகள் எதுவாக இருந்தாலும் தாங்கள் சார்ந்த வன்னிய சாதிக்கான சங்கம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அமைப்பாக்கல் நிகழ்ந்திருக்கிறது. வன்னியராக அணிதிரட்டல் வேலைதிட்டம் பா.ம.க ஜி.கே.மணி, சரவணன், தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் தலித் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து அவர்களை பணிநீக்கம் மற்றும் பணிமாற்றம் செய்யும் சதியும் நடந்து வருகிறது. பா.ம.க, அ.தி.மு.க, தி.மு.க.வைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் இதனை முன்னெடுத்து செய்து வருகிறார்கள். குறிப்பாக அரியகுளம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலித் ஆசிரியர் மகேந்திரன் என்பவரை வன்னிய பள்ளி மாணவியை அடித்த காரணத்திற்காக சின்னேறி மோட்டுப்பட்டியை சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் மோகன் என்பவர் சாதிவெறியோடு இவற்றில் தலையிட்டு பணிஇடை நீக்கம் செய்ய பள்ளிக்குள்ளேயே வலியுறுத்தி இடைநீக்கமும் செய்யவைத்து பின் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுபோன்று இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை மிரட்டுவது வெளிப்படையாக நடந்துவருகிறது. ஏற்கனவே சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் பயந்து வெளிப்படையாக நடமாடுவதற்கும் அஞ்சி ஊரைவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயரும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. நாம் கேள்விப்பட்ட வகையில் பல குடும்பங்கள் இதுபோன்று இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரத்தில், சாதிமறுப்புத்திருமணங்கள் அப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றன என்பது முக்கியமானது. 


கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது இது:


பாலக்கோடு சாமனூரைச் சார்ந்த பாத்திர வியாபாரி தங்கராஜ். இவர் தலித் அல்லாதவர். ஆனால், இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்துவருகிறார். இது வல்லப்பட்டியைச் சேர்ந்த சாதிய வெறியர்களுக்கும் ராஜா என்கிற கவுன்சிலருக்கும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கராஜை கட்சியைவிட்டு வெளியே வரச்சொல்லி பலமுறை மிரட்டியுள்ளனர். அதற்கு பணியாத தங்கராசை மரத்தில் கட்டிவைத்து காலை உடைத்துள்ளனர். அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றார். இந்த சம்பவம் பகிரங்கமாகவே ஊரறிய நடந்துள்ளது.


இதுபோன்று தருமபுரி முழுவதும் பல்வேறு வடிவங்களில் சாதிய ஆதிக்கமும், அச்சுறுத்தலும் மக்கள் மத்தியில் பரப்ப்பட்டு வருகின்றன. இன்னும் ஆழமாக மக்களிடம் விசாரணை செய்தால் முழுமையான நிலைமையை உணரமுடியும். இதற்கான திட்டமிடலை செய்ய வேண்டியிருக்கிறது.


வழக்கை பொறுத்தவரை:


1. 150 பேர் கைது செய்யப்பட்டு, மூன்று மாதத்திற்குள்ளேயே பிணையில் வெளிவந்துள்ளனர். மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 1000 பேரில், 50 முதல் 100 பேரின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு மற்றும் பலர் என பொத்தாம் பொதுவாக பதிவு செய்துள்ளனர்.


அனைத்து வழக்குகளும் நிலுவையிலும், வாய்தாவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறன. குறிப்பாக சங்கரசுப்பு, என்.ஜி.ஆர் பிரசாத், செங்கொடி ரஜினி, சத்தியசந்திரன், ரத்தினம் ஆகியோர் வழக்கை நடத்துகிறார்கள்.


2. கிராமங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கான வழக்கை அரசாங்கம், 'சி.பி.சி.ஐ.டி'யிடம்  மாற்றியது. குற்றவாளிகளை கைது செய்வதில் அரசு காட்டிய மெத்தன போக்கின் விளைவாகவே தற்போது அதனை சி.பி.ஐக்கு மாற்றக் கோரிய வழக்கு போடப்பட்டுள்ளது.


3. சி.பி.சி.ஐ.டி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதற்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பான வழக்கறிஞர்கள், 'முழு விசாரணை செய்யாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது!'- என்று வழக்கு போட்டுள்ளனர். அதனால் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.


4. பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நிவாரணத்திற்காக போட்டுள்ள வழக்கையும் வாசுகி தலைமையிலான குழு விசாரித்து விட்டது. 


5. கிராமத்தில் மாடி வீடு கட்டியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டதிற்கான நிவாரணம் கேட்ட வழக்கு, ஆய்வுக்குழு விசாரித்துள்ளது.



இளவரசன் கொலை வழக்கு


6. ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவும், அரூர் டிஎஸ்பி சம்பத்குமார் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரின் மீதும் சாதிய ரீதியான புகார்கள் மற்றும் சாதிய மனோபாவத்தோடு சில வழக்கை அணுகுபவர்கள் என்று புகார்கள் இருக்கின்றன. அதனால்,  இக்குழுக்களின் தலைமையிலான விசாரணை வேண்டாம் என்று நிராகரித்து இளவரசன் குடும்பம் மற்றும் திவ்யாவின் குடும்பமும் விசாரணைக்கு போகவில்லை. 

7. இளவரசன் மரணத்திற்கு நீதிபதி சந்துரு தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைகுழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். அவையும் வாய்தாவில் இருக்கிறது. 


8. இதுபோக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 144 ஐ நீக்க வேண்டும், இளவரசன் இறுதி அஞ்சலிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. 


9. ம.க.இக. சார்பாக இளவரசனின் மனைவியான 'திவ்யாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!' மேலும் 'அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்!'- என கோரி மனு தாக்கல் செய்தும் அதற்கான உத்தரவும் பெற்றனர். தற்போது, அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.


10. சி.பி.எம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, 'வழக்குகளை 'சி.பி.ஐ'க்கு மாற்ற வேண்டும்!'- கோரிய வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.


இத்தகைய சூழலில், ஆதிக்க சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் அனைத்து வழக்குகளையும் இணைத்து நடத்தவேண்டிய அவசியம் உள்ளது. சிறப்பு நீதிமன்றக் கோரிக்கை, சுண்டூர் படுகொலை மற்றும் அதன் நீதி இவை பற்றிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இவை வழக்குகளை முன்னெடுத்து செல்ல பெரிதும் உதவும்.


அதேபோல் வன்னிய பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பா.ம.க மற்றும் சாதிய வன்முறை கும்பலைத் தனிமைப்படுத்த வேண்டிய பெரும் சவாலும் உள்ளது.  அதற்கான வேலைதிட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவையும் உள்ளது.


சாதிய கட்டபஞ்சாயத்துகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளதால், சட்ட ரீதியாக அவற்றை தடைசெய்ய வலியுறுத்த வேண்டும்.


ஆக, தருமபுரி மாவட்டத்தில் சாதிய - ஆதிக்க வன்முறையாளர்களும், பா.ம.க வும் தங்களுக்கான திட்டத்தை தங்குத் தடையின் செய்து கொண்டிருப்பதும், தலித் மக்கள் பயந்து முடங்கியுள்ள நிலையுமே தற்போதும் நீடிக்கிறது.


மேற்கண்ட விவரங்கள் அங்குள்ள நிலைமையை புரிந்துகொள்ள போதுமானவையாக இருந்தாலும் நமது தரப்பில் ஒரு குழு அமைத்து தொடர்ச்சியாக தருமபுரி சம்பவத்துக்கான கோரிக்கையையும், வழக்கையும் நகர்த்த வேண்டும். 


சுண்டூர் படுகொலையில் பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான கோரிக்கையையும் வலுப்படுத்த வேண்டும்.  இந்த பிரச்னைகள் குறித்த வெளியீடுகளும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான பரந்தளவிலான மக்கள் இயக்கங்களை இணைத்துக்கொண்டு முன்னெடுப்பதை நோக்கி நகரவும் வேண்டும்..
 


- தோழர் ரமணி, 

கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, 
தமிழ்நாடு.

(தகவல்: Venkata Naga Narasimham T)

Saturday, October 26, 2013

Friday, October 25, 2013

நடப்புச் செய்தி:' ஒரே கவலை... இருவருக்கும்..!'


நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர், அடுத்தவர் வளர்ந்துவரும் இளையத் தலைவர், இவர்கள் இருவரும் ஒரே விதமான கவலையைத் தெரிவித்திருக்கிறார்கள். முதலாமவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர். அடுத்தவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் தாம்பரத்தில் எழுத்தாளர் சாதத் ஹசன் மாண்டே பிறந்தநாள் நூற்றாண்டு விழா 20.10.2013 ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட யெச்சூரி,

"துளியும் பொறுப்புணர்வின்றி அப்பட்டமாக சிறுபான்மையோருக்கு எதிராக மத உணர்வு கிளறிவிடப்படும் சூழல் இந்திய அரசியலில் இன்று நிலவுகிறது. ராமர் கோயில் விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 307 ஆவது சட்டப் பிரிவு நீக்கம், அனைவருக்கும் ஒரே மாதிரியான சமூகச் சட்டம் ஆகிய விஷயங்களில் தங்களது கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பா.ஜ.க. தலைவர் வெளிப்படையாகவே பேசுகிறார்.

மற்றொருபுறம் இந்திய தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் மோடியை, நாட்டையும், பொருளாதாரத்தையும் காக்க வந்த ரட்சகராகச் சித்தரிக்கின்றனர். மோடியை ஒரு சந்தைச் சரக்காகக் கையாளுகின்றனர்!"

- என்று தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இதேவிதமான வருத்தம் ராகுல் காந்தியிடமும் வெளிப்பட்டது.


ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது இது:

"நாட்டில் வகுப்புவாதத்தைப் பரப்பி பல உயிரிழப்புகளுக்கு பா.ஜ.க. காரணமாகிவருகிறது. அண்மையில் முஸாபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு சோகமான முகங்களைக் கண்டேன். அவர்கள் (பா.ஜ.க) முஸாபர் நகரில் வகுப்புவாதத் தீயைப் பற்ற வைத்தனர்; குஜராத்திலும், உ.பி.யிலும், காஷ்மீரிலும் அதையே செய்தனர். அதனால், நாடு சீரழிகிறது"

மூத்தத் தலைவரது கவலையும், இளைய தலைவரது கவலையும் நியாயமானது. கவனிக்கத்தக்கது. அரசியல்வாதிகள் என்பதாலேயே புறக்கணிக்கவும் அவசியம் இல்லாதது. 

வகுப்புவாதத்தைவிட 'பாஸிஸம்' படு பயங்கரமானது. வரலாற்றில் அழியாத களங்கத்தை கற்பித்திருப்பது!


20.10.2013 ஞாயிறு அன்று சென்னை தம்பு செட்டி தெருவில்  UAPA, AFSPA, MCOCA  போன்ற கருப்புச் சட்டங்களுக்கு எதிராக வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கண்ணியமான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஜி.தேவசகாயம் சொன்னது இது. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் கவனத்தில் கொள்ள வேண்டியது:

"முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளை கைது செய்ய வந்தார்கள். நான் எதிராக குரல் கொடுக்கவில்லை; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

அவர்கள் சோசலிஸ்ட்டுகளை கைது செய்ய வந்தார்கள். நான் எதிராக குரல் கொடுக்கவில்லை; ஏனென்றால் நான் சோசலிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களை கைது செய்ய வந்தார்கள். அப்போதும் நான் எதிராக குரல் கொடுக்கவில்லை ; ஏனென்றால் நான் யூதனல்ல.

கடைசியில் அவர்கள் என்னை கைது செய்ய வந்தபோது, எனக்காக குரல் கொடுக்க அங்கு யாருமேயில்லை!


மகளிர்: 'ஜனாஸா பணியில் சகோதரி ஃபாத்திமா தாஹிரா!'



ஒவ்வொரு பகுதியிலும் முக்கிய பிரச்னையாக உருவெடுப்பது இது. அதாவது இறந்தோரின் உடலைக் குளிப்பாட்டி அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி சம்பந்தப்பட்டது. இப்பணியில் ஆண்கள் நிறைய பேர் கிடைக்கின்றனர். 

இறப்பு செய்தியை முஹல்லாவின் மசூதியிலிருந்து கேள்விப்பட்டதும் அந்த நிர்வாகம் சார்பாகவே அவர்கள் இறந்தவரின் இல்லம் சென்று 'மைய்யத்தின்' கசப்பு துணிகளை மாற்றி அதன் பிறகு குளிப்பாட்டி அடக்கத்துக்குத் தேவையான அத்தனைப் பணிகளையும் செய்கிறார்கள். 

ஆனால், பெண்கள் இறப்பெய்தும் போது மைய்யத்தை குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யும் பணிகளுக்கான பெண்கள் அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். 

எங்கள் பகுதியில் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருக்குமான மரண சடங்குகள் சம்பந்தமான பயிற்சிகளை (முதல் நிலை உடை மாற்றுதல், குளிப்பாட்டுதல், கபனிடுதல், ஜனாஸா தொழுகை உட்பட நல்லடக்கம் செய்யும்வரையிலான அத்தனைப் பயிற்சிகளையும்) ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே கொடுத்துள்ளோம்.  

துரதிஷ்டவசமாக மைய்யித்தை நல்லடக்கம் செய்வதற்கான பணிகளை அவரவர் குடும்ப உறுப்பினர்கள் செய்வதில்லை! அப்படி செய்ய நினைத்தாலும் அவர்களை செய்யவிடாமல் ஆதாரமற்ற சட்டங்களைக் காட்டி தடுத்து மூலையில் இருத்தி விடுவோரும் உண்டு.

உண்மையில், ஒருவர் உயிருடனிருக்கும் போது கொடுக்கும் கண்ணியத்தையும், மரியாதையையும் இறந்தவருக்கும் கொடுத்தாக வேண்டும்.  உயிருடனிருக்கும்போது, அரை நிர்வாண நிலை உடலைக்கூட வெளியார்க்கு காட்ட பெரும்பாலோர் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது யாரோ அந்நியர் தொழில் ரீதியாக முன்வந்து அடுத்தவர் உடலை தொடுவது என்ன நியாயம்?

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் என்று அந்தந்த குடும்ப உறுப்பினர்களே இறந்தவருக்கான அத்தனை சடங்குகளையும்  செய்ய சொல்கிறது இஸ்லாம். அதற்கான குறைந்தளவு அறிவையும் பெற அது ஊக்குவிக்கிறது.

யதார்த்தங்கள் இவ்வாறு இல்லாத நிலையில் பெண் மய்யித்துக்களை குளிப்பாட்டும் பணிகளை ஒரு சேவையாக செய்து வருகிறார் சகோதரி ஃபாத்திமா தாஹிரா. தான் செய்வது மட்டுமல்லாமல் பிற பெண்கள் கற்றுக் கொள்ளவும் பயிற்சிகளையும் அவர் தருகிறார். இப்படி சுமார் 5 ஆயிரம் பெண்களுக்கு இவர் கற்பித்ததாக சொல்கிறார். சென்னை மதுராவாயில் பகுதியில் வசிக்கும் இவரது அத்தனை நற்பணிகளுக்கும் தோள் கொடுத்து வருகிறார் இவரது கணவர்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, மரணடைந்தோருக்கான அத்தனை சடங்குகளையும் அவரது நெருங்கிய உறவினர்கள்தான் நிறைவேற்ற வேண்டும். இவை இறந்தோருக்கான உரிமைகள் என்று கூட இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். 

கற்றலும், கற்பித்தலுமே வாழ்வின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கும் வழிகோலும். சக மனிதர்களிடையே மதிப்பச்சத்தைப் பெற்றுத் தரும்.

காலப்பெட்டகம்: 'வழக்கு எண்: 0001 - மெய்யாலுமா?'

20.10.2013 தினமணி நாளேட்டின் 'மெய்யாலுமா..?' என்ற தலைப்பில் பக்கம் 9 இல், வெளியாகியிருக்கிறது இந்த செய்தி.

முதல்வரின் விருப்பத்துக்கு ஏற்பதான் வழக்கு கொண்டு செல்லப்படுகிறதா மெய்யாகவே? 

உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள். தண்டனைக் கொடுங்கள் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே மெய்யாகவே கேட்கிறோமய்யா!


நடப்புச் செய்தி: 'என்னாச்சு மதிக்கு?'

இன்றைய தினமணி மதியின் அடடே ..! கேலி சித்திரம் ஒருசாரரின் மனதைப் புண்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். 

இதில் உங்கள் கருத்து என்ன?

 

என் கேள்விக்கு என்ன பதில்?: 'மூன்றாம் அணி நாடு காக்குமா?'



'போலி கோஷங்களும், பொய்மை வேஷங்களும்' - என்னும் தலைப்பில், 25.10.2013 இன்றைய தினமணியின் தலையங்கப் பக்கத்தில் தழிழருவி மணீயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழருவி மணியனின் அரசியல் சார்ந்த முடிவுகள் கருத்து வேறுபாடுகள் கொண்டவையாக இருந்தாலும் அவர் எழுப்பும் கேள்விகளில் உள்ள நியாயத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது.

பாமரனின், 'என் கேள்விக்கு என்ன பதில்?' பகுதியில் அவரது கட்டுரையின் முக்கியப் பகுதிகள் வெளியிடுகிறோம். பதில் சொல்பவர்கள் சொல்லட்டும்; சரியான பதில்களை!

ஜெயலலிதா, முலாயம்சிங், நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், தேவகவுடா, ஜகன் மோகன் ரெட்டி போன்ற மாநிலத் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது அணிதான் நாடு காக்கும். மதச் சார்பற்ற, சிறுபான்மையினர் நலம் காக்கும் நல்லரசை உருவாக்கக் கூடியது என்று மார்க்சியர்கள் முடிவெடுத்துவிட்டனர்.

மூன்றாவது அணியில் இடம் பெற வேண்டும் காம்ரேடுகள் அடையாளம் காட்டும் மாநிலத் தலைவர்களின் கடந்த காலம் எப்படிப்பட்டது? தமிழகத்தில் பா.ஜ.க. வேர் பிடித்து வளர்வதற்கு முதலில் வேண்டிய நீர் ஊற்றியவர் ஜெயலலிதா. பின்பு அதற்கு உரமிட்டு மரமாக்கி மகிழ்ந்தவர் கருணாநிதி.

1998-இல், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரவேற்பு ராகம் வாசித்தவர் ஜெயலலிதா. அப்போது, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதவாத நச்சரவத்தைக் கொண்டு வந்து சேர்த்தவர் ஜெயலலிதா என்றும், 'பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ்' - என்றும் 'பா.ஜ.க.வில் உள்ளவர்கள் பண்டாரம், பரதேசிகள் ' - என்றும் கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர் கருணாநிதி. ஆனால், அடுத்த ஆண்டிலேயே தேர்தல் திருமணத்தில் பா.ஜ.க.வின் மாப்பிள்ளைத் தோழனாக அவர் அவதாரம் எடுத்தார்.

மோடியின் நிர்வாகத்தில் 2002-இல், முஸ்லிம் சமுதாயம் பேரழிவைச் சந்தித்தததாகக் கூறப்படும்போது, மத்திய அரசில் வாஜபாய் பக்கத்தில் ஆதரவுக் கரம் நீட்டியபடி அமர்ந்திருந்வர்தான் கருணாநிதி. குஜராத் படுகொலைகள் பற்றிய கேள்விக்கு, 'அது ஒரு மாநிலத்தின் பிரச்னை' - என்று கருத்து வழங்கி நழுவிக் கொண்டவர்கள்தான் திமுகவினர். குஜராத் படுகொலைக்குப் பின்பும் மோடியிடம் நல்லன்புடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதா, அவர் மீண்டும் முதல்வரானதும் தனிவிமானத்தில் சென்று நேரில் நல்வாழ்த்து வழங்கி மகிழ்ந்ததை 'புதிய அம்மா பக்தர்கள்' மறைக்கப் பார்க்கலாம். ஆனால், மார்க்சியர்கள் மறக்கக்கூடுமா?

மாயாவதியும், முலாயம்சிங்கும் பிறவி பா.ஜ.க. எதிர்ப்பாளார்களா? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங். அவருடைய ஆசியுடன்தான் அந்த கயமைத்தனம் அன்று அரங்கேறியது. 'பாபரி மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்பு!' - என்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பா.ஜ.க.விலிருந்து வெளியேறியபோது, பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை விரிவாக்க அவரை அரவணைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர் முலாயம்சிங். இதைவிட மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் வேறுண்டா?

பா.ஜ.க.வோடு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்த கொண்டவர் மாயாவதி. பா.ஜ.க. துணையோடு ஒடிஸா முதல்வராக வலம் வந்தவர் நவீன் பட்நாயக். பிகாரில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவோடு வெற்றிக் கனியைச் சுவைத்தவர் நிதிஷ்குமார்.

அவருக்கு மோடிதான் பிரச்சினை; பா.ஜ.க. அல்ல. 'சாறு வேண்டும்! இறைச்சி வேண்டாம்!' - என்பவர் வள்ளலார் வாரிசு என்றால்... நிதிஷ்குமாரும் வகுப்புவாத எதிர்பாளர்கள்தான்!

தேவகவுடா சந்தர்ப்பாவத அரசியலில் கருணாநிதியையும் மிஞ்சியவர். மதசார்பற்ற ஜனதாதளம் என்று பெயர் வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் பா.ஜ.க. உதவியோடு தன் மகன் குமாரசாமியை முதல்வராக்கிய 'கொள்கை வேந்தர்' அவர். 

இவர்கள்தான் மார்க்சியர்கள் திரட்டும் பரிவாரத்துக்கு வீரத்தளபதிகளாக விளங்கப் போகிறவர்கள்.

போகட்டும், இந்த மூன்றாவது அணியில் இடம்  பெறுபவர்கள் ஊழல் காங்கிரஸை வீழ்த்துவதற்கான தார்மிக தகுதியுள்ள நெறிசார்ந்த நேர்மையாளர்களா?

மாயாவதி ஒரு தபால்துறை ஊழியருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். இன்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தும் அரசியல் தலைவராக வளர்ந்து நிற்பவர்.

யாதவர்களின் சாதிவாக்கையும், இஸ்லாமியர்களின் மதவாக்கையும் பெற்றுப்  பெரிய மனிதராக அரசியலரங்கில் காட்சி தரும் முலாயம்சிங் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, லோகியா, சரண்சிங் நிழலில் வளர்ந்து இன்று குபேர வசதிகளுடன் வாழ்ந்து வருபவர். பெரியாரின் பெயர் சொல்லும் கருணாநிதியும், லோகியாவின் பெருமை பேசும் முலாயம்சிங்கும் எல்லா வகையிலும் ஒரு பறவையின் இரு சிறகுகள் என்பதுதான் உண்மை.

ஊழலில் ஊறித் திளைக்கும் தேவகவுடா, ஊழலின் மறுவடிவமான மாயாவதி, ஊழலுக்கு உற்சவம் நடத்திப் பல நூறு கோடியைத் திரட்டி வைத்த ராஜசேகர ரெட்டியின் திருமகன் ஜெகன் மோகன் ரெட்ட, பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கும் ஜெயலலிதா, தமிழகத்தையே ஊழல் மயமாக்கிய கருணாநிதி.. . இவர்கள்தான் மதவாத எதிர்ப்பாளர்களா?


( நன்றி: தினமணி)

- தமிழருவி மணியன்,
தலைவர், காந்தி மக்கள் இயக்கம்.
 
தமிழருவி மணியன்

Tuesday, October 22, 2013

சிறப்புக் கட்டுரை:'மோடியின் இரண்டு வினாக்களும்; தினமணியின் விளக்க உரையும்!'

 
சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்தும், வழக்கு தொடுக்கப்பட்டும் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு விடாப்பிடியாக மேடை ஏறினார் திருவாளர் நரேந்திர மோடி. 'பல்கிவாலா' நினைவு நாள் சொற்பொழிவு மேடையில்  அவர் ஆற்றிய உரையின் தலைப்பு 'இந்தியாவும், உலகமும்' 

மனிதர்களின் கண்ணியமும், மனித உயிர்களின் மதிப்பீடும் தெரியாத ஒருவர் இந்தியர்களையும், உலக மக்களையும் குறித்து பேச வந்தது வியப்புக்குரியது. நையாண்டிக்குரியது என்று சொன்னாலும் அது மிகையல்ல!

ஆக்ரோஷமாக முஷ்டியை உயர்த்தி மோடி மேடையில் பேசும்போது, ராஜாவின் மிமிக்ரியுடன் சொன்ன இரண்டு கருத்துக்கள் இவை:

1. இந்தியா என்பது தில்லி மட்டுமேயல்ல.. மதுரை, மைசூர், புவனேஸ்வர், வடேதரா, குவாஹாட்டி, கோலாப்பூர் உள்ளடக்கியவை. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் நடக்க வேண்டும்.

2. அடுத்தது, இந்திய நிர்வாகத்தின் செயல்பாட்டின்மை மற்றும் பொறுப்பின்மையைப் பற்றியது.

  • காணாமல் போன கோப்புகள்,
  • மீனவர் பிரச்னை
  • எல்லைப் பிரச்னை

என்று தூத்துக்குடி கப்பல்வரை விமர்சித்த மோடி முத்தாய்ப்பாய் சொன்ன கருத்துக்கள் இன்னும் வேடிக்கையானவை. 

'யாருக்கும் தேசப்பற்றில்லை! நிர்வாக கட்டுப்பாடோ, பொறுப்போ இல்லை! எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் பொதுநலன் கருதியும், தொலைநோக்குப் பார்வையுடனும் உடனடியாகத் தீர்வு காண தயாராக இல்லாத நிலையில் இயங்குகிறது நமது நிர்வாக எந்திரம். இந்த மெத்தனப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் மோடி.

மோடியின் இந்தக் கேள்விகளை நியாயப்படுத்தி தினமணி தனது '21.10.2013' அன்றைய தலையங்கத்தில் விளக்க உரை எழுதியுள்ளது. அதில் முத்தாய்ப்பு பகுதி இதுதான்:

"நரேந்திர மோடி எந்த சார்பைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன? அவரது கருத்தில் நியாயம் இருக்கிறதா? தேச நலன் இருக்கிறதா? என்பதுதான் முக்கியம். இன்றைய இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தத் தெரியாமல், ஆனால், எழுப்ப நினைக்கும் இரண்டு கேள்விகளை நரேந்திர மோடி எழுப்பியிருக்கிறார். இவற்றுக்கான விடை காணப்பட்டாலே போதும் வலிமை மிக்க இந்தியா உருவாகிவிடும்!"

மோடியின் பேச்சும், தினமணியின் விளக்க உரையும் சில அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன:

இந்தியா என்ற உப கண்டம் என்பது என்ன? வெறும் எல்லைகளா, நதியும், மலைகளுமான நிலப்பரப்பா? அல்லது உண்மையிலேயே பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் கொண்ட பன்முகத் தொகுப்பா? அதாவது இந்தியா என்பது உண்மையிலேயே இரத்தமும், சதையுமான மனிதர்கள் என்பது உண்மையா இல்லையா?

இதற்கான விடை இவர்களுக்கு சங்கடமளிக்கும்.

ஒருவேளை இப்படி கூறினால்.. ஒப்புக் கொள்வார்களோ என்னவோ?

இந்தியா என்பது, வர்ணாசிரம தர்மத்துக்கு உட்பட்டது. சிறுபான்மை இனத்திலும், மிக சிறுபான்மை இனமே இந்த நாட்டின் பேரசர்கள்.. ராஜாக்கள்! மற்ற இனங்கள் எல்லாமே அடிமைகள், அடியாட்கள், பணியாட்கள்! இந்த அளவுகோலை ஏற்காதவர்கள் எல்லாம் தாமாகவே செத்துப் போக வேண்டும். அல்லது தீயிட்டு உயிருடன் கொளுத்தப்படுவார்கள். கற்பழித்துக் கொல்லப்படுவார்கள். இனசுத்தகரிப்பு செய்யப்படும். 

இதுதானே குஜராத்தில் நடந்தது! இந்த கொலைப் பாதகத்தின் கைத்தேர்ந்த முதல்வன், அதி கொடூர கொலைஞன் என்ற மதிப்பெண்கள் பெற்ற கையோடு பிரதமர் வேட்பாளருக்கு மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தவிர வேறு அதிகப்படியான தகுதி அவருக்கு என்ன இருக்கிறது?

சர்வதேச அளவில் புகழ்  பெற்ற போலி என்கவுண்டர்கள் எல்லாம் இனி மதுரையில், மைசூரில், புவனேஸ்வரத்தில், வடேதராவில், குவாஹாட்டியில், கோலாப்பூரில் என்று நாட்டின் பட்டித் தொட்டிகள் எல்லாம் நடக்க வேண்டும் என்றா தினமணி விரும்புகிறது?

குஜராத் அரசின் எந்திரப் போக்கும்,  மெத்தனமும் தானே ஆயிரக் கணக்கான இந்தியர்கள் கொல்லப்படக் காரணமானது! கோடிக்கணக்கான இந்தியப் பொருளாதாரம் தீக்கிரையானது! 

தனயன் எதிரே, தாயும், தாய் எதிரே மகளும் கற்பழித்து எரியூட்டப்படுவதற்கு இந்த மெத்தனப் போக்கும் செயல்படாமையும்தானே காரணமாக நின்றது! 

நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனிதாபிமானம் மரத்துப் போய் இன ரீதியான அடையாளமாகத்தானே காவல் நிலையத்தின் எதிரே அவளைக் கற்பழித்து, வயிற்றைக் கிழித்து சிசுவை உருவி எரியூட்டி தகனம் செய்தது? 

துச்சாதனன்களும், துன்மார்கர்களும் பேயாட்டம் போட வைத்தது இதே மோடி ராஜ்ஜியத்தில்தானே! இதே மோடியின் தலைமையில்தானே?

கோப்புகள் காணாமல் போனது இருக்கட்டும்; அவை கிடைக்கலாம் அல்லது அந்த தவறுகளுக்காக ஆட்சி மாற்றங்கள் கூட நிகழலாம். ஆனால், ஆயிரக் கணக்கான மனிதர்கள் காணாமல் போனார்களே மீண்டும் திரும்பி வர முடியாமல்... அதற்கான பதில்தான் என்ன? 

தேசப்பற்று என்பது மனிதனை நேசிப்பதா? அல்லது  வெறும் மண்ணை நேசிப்பதா? தேசப்பற்று என்பது சொந்த நாட்டினரை நேசிப்பதா? அல்லது வெறும் எல்லைகளை நேசிப்பதா? இதற்கு மோடியும், அவரது பேச்சுக்கு விளக்க உரை எழுதிய தினமணியும் தரப்போகும் சமாதானம்தான் என்ன?

உண்மையிலேயே பெரியாரும், அண்ணாவும் கட்டிக்காத்த உயரிய மனித நேய சமத்துவ விழுமியங்களை, எண்ணற்ற தியாகங்களால் போராடிப் பெற்ற அந்த நன்னெறிகளை களங்கப்படுத்தி விட்டார் மோடி! அதுவும் பெரியார் - அண்ணா  பூமியில்.

இன வெறிப்பிடித்த நவீன ஹிட்லரான மோடியை உயிர்பிக்கும் பணிகளில் களமிறங்கி விட்டிருக்கிறது தினமணி ஜெர்மனியின் வரலாற்றை மறந்து போய்!

இனத்தை நேசிப்பது குற்றமாகாது! ஆனால், இனவெறிக் கொள்வது கிணற்றில் விழும் நிலையில் உள்ள ஒட்டகத்தின் வாலை இழுத்துப் பிடித்துக் கொண்டவன் போலாவான் என்கிறார்கள் நபிகளார்.
 
 

கவிதை: "மீண்டும் எதிர்ப்பார்ப்போடு நான்!"





கும்மிருட்டாய்
எனது மனதின் அத்தனை
சோகங்களையும்
தாங்கியவாறு
குடைப் பிடித்தது
கரும்மேகம்!

இதுவும் கடந்து போகும்
என்பதை நிஜமாக்கி
மழை மேகம்
நகர்ந்தபோது..
நிர்மலமாய் தெளிவடைந்த
என் மனம்
லேசாய் மிதக்கிறது
அதோ அந்த
வெண்மேகமாய்!

அய்யகோ..
பூமித்தாயின் மடியைச்
செழிப்பாக்க வந்த
கார் மேகம்
தன் கடமை
தவறியதைக் கண்டு
நெஞ்சு பதைபதைக்க
சோகத்துடன்
நிற்கிறேன்
மீண்டும் நான்
இன்னொரு கடப்பை
எதிர்நோக்கி!

-    - சின்னக்குயில்

முக்கிய செய்திகள் - வாசிப்பது மிஸ்டர் பாமரன்: 'காமன்வெல்த்தின் 'காமன்’ போக்குகள்'


காமன்வெல்த் கட்டமைப்புக்கான பேச்சுக்கள் 1884 இல், முதன் முதலாக துவங்கின.
 
1887 இல், பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்பட்டவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது.

1917 இல் பிரிட்டீஷ் காமன்வெல்த் நாடுகள் என்ற பெயர் ஜான் ஸ்மட்ஸ் முன்மொழிந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திடமிருந்து விடுதலைப் பெற்ற காலனிகள் காமன்வெல்த்தில் அங்கம் வகிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா குடியரசானபோது, 'காமன்வெல்த்தின் தலைமையை பிரிட்டீஷ் ராஜகுடும்பம் வகிப்பதில் கருத்து வேறுபாடு இல்லை! ஆனால், சுதந்திர நாடாகவே உறுப்பினர் பதவி வகிக்க முடியும்!'- என்று நிர்பந்திக்கவே பிரிட்டீஷ் என்ற வார்த்தை அகற்றப்பட்டது. 'காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காமன்வெல்த் நாடுகளின் மொத்த உறுப்பினர்கள் 53 நாடுகள். இதில் 16 நாடுகளுக்கு இப்போதும் பிரிட்டீஷ் ராணிதான் பேரரசியாக உள்ளார். அதேபோல, இன்னும் ஐந்து நாடுகளுக்கு அவரவர் அரசு குடும்பங்கள் தலைமை வகிக்கின்றன. 32 நாடுகள் குடியரசுகள். 

பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தும் எகிப்து, இராக், ஜோர்டான், பலஸ்தீனம் (இஸ்ரேல் உட்பட), மியான்மர், ஏமன், சோமாலியா, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் காமன்வெல்த்தில் இன்னும் உறுப்பினர்கள் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 'ஏட்டுச் சுரைக்காய் கறி சமைக்க உதவாது!'- என்பது போல, காமன்வெல்த் நாடுகளிடையே வெளியுறவுக் கொள்கையில் இணக்கம், வணிகம் மற்றும் பயணம் போன்ற திட்டங்கள் பேசப்பட்டாலும் அவை நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

மாநாடுகள் நடப்பதும், அவற்றுக்கான எதிர்ப்புகள் தொடர்வதும், விளையாட்டுப் போட்டிகளுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படுவதும் பிறகு அவற்றை எதிர்ப்பதும் தற்போது நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும் 'காமனான' அம்சங்களாகும்.