NewsBlog

Friday, December 6, 2013

சிறப்புக் கட்டுரை: 'எவ்வளவோ பிரச்னைகள் இருக்க.. தங்களைப் பற்றியே பேசுவது ஏன்"


அண்மையில், வலைப்பூக்களுக்காக செய்திகளை பதிவேற்றிக் கொண்டிருந்த ஒரு பரபரபப்பான சூழலில் இன்பாக்ஸில் ஒரு நண்பர் அழைத்தார். என் பதிவு சம்பந்தமான ஒரு சிறு விளக்கமும் வேண்டினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியும் கேட்டார். அதற்கான பதிலை அளிக்க இயலாமல் அன்றைய இரவு முழுவதும் சரியான உறக்கமின்றி தவித்ததோடு இதுவரையிலும், சங்கடப் பட்டவாறே இருக்கிறேன். 

ஏனென்றால், அந்த கேள்வியின் அழுத்தம் மிகவும் சுமைக்குரியது. பல்வேறு அறிவுஜீவிகள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருப்பது. நண்பர் கேட்ட கேள்வி இதுதான்:

நாட்டில் எல்லா மக்களும் பாதிக்கப்படும் வகையில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்னைகள் பற்றிதான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பதையே காண்கின்றேன். மற்ற பிரச்னைகளை முஸ்லிம்கள் முன்னெடுத்து செல்வதில்லையே ஏன்? அடுத்தவர் பிரச்னைகளுக்காக அவர்கள் குரல் எழுப்புவதில்லையே ஏன்?”

இந்த கேள்விக்கான பதில் தருவதற்கு எனக்கேற்பட்ட சங்கடம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. ஏனெனில் புதையுண்டு, நிறமிழந்து, அடையாளமிழந்து போன ஒரு வரலாற்றுப் 'பாவையை' செப்பனிட்டு அதன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த எவ்வளவு சிரமமோ அதைவிட அதிக சிரமான பணி முஸ்லிம்களின் சுய அடையாளங்களை நிலைநிறுத்துவது. அசலான வர்ணத்தைத் தவிர பல்வேறு வர்ணங்களை பூசிக் கொண்ட சமுதாயம் இது. இந்த கலப்படங்களால்தான் அவர்கள் சிறகொடிந்து போனதும்; கொள்கை தடம் புரண்டு போய் கொண்டிருப்பதும்; அசலான இலக்கை விட்டு விலகிக் கொண்டிருப்பதும்.

இஸ்லாத்தின் வருகையே மனித இனத்தின் அடிமைத் தளைகளைத் தகர்த்து அவர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தருவதுதான் நோக்கம். ஒவ்வொரு இறைத்தூதரும், தீர்க்கத்தரிசியும் இந்தப் பணியைத்தான்  செய்யும்படி இறைவனால் பணிக்கப்பட்டார்கள். இதற்காக அருளப்பட்ட வாழ்வியல் வழிகாட்டியான திருக்குர்ஆனும் மனிதர்களை நோக்கிதான் உரையாடுகிறது. அன்பு நபியும் மனித நலன் போராளியாகவே தங்கள் ஜீவிதம் முழுக்க செயல்படுகிறார்கள்.

ஹீரா மலைக்குகையில், முதன்முதலாக இறைவனின் திருச்செய்தி அருளப்பட்டு நபிகளார் இறைத்தூதராக அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு சற்றும் அயராது உழைத்து.. அந்த திருச்செய்தியை மக்களுக்கு எப்பாடுபட்டாவது சேர்த்திட துடியாய் துடித்தவர்கள்.

"போர்த்து மூடி உறங்குபவரே! எழுந்திருங்கள்! மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!" (74:1,2) - இறைக்கட்டளைப் பிறந்ததும், 'ஸபா மலைக்குன்றின் மீது ஏறிக் கொண்டு துளியும் அஞ்சாமல் மக்களை இறைவனின் பக்கம் அழைத்தவர்கள்,

சத்தியத்திற்காக, அதை மேலோங்க செய்ய இரத்த பந்துக்களான உறவினரின் கடும் பகைக்கு ஆளாகி தாய் மண்ணான மக்காவின் தெருதோறும் உதிரம் கொட்டியவர்கள்,

'தாயிப்' எனப்படும்  தொலை நகரில் இறைத்தூதை சமர்பிக்கச் சென்றவர்கள், அந்த இறைச்செய்தி நிராகரிக்கப்பட்டு தெருக்களில் ஓட ஓட விரட்டப்பட்டு ரத்தக்களறியாய் ஆனவர்கள்,

13 ஆண்டுக்காலம், தாய் மண்ணில் சொல்லொண்ணாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளானவர்கள், சத்தியத்தை சொன்னதற்காக துன்புறுத்தப்பட்டவர்கள்,

தாயகம் துறந்து, மதீனா சென்ற பின்பும் எதிரிகள் நிம்மதியாய் விடுவதாயில்லை. ஒரு 10 ஆண்டுக்காலம், தற்காப்பு யுத்தமுனைகளில் வாள் ஏந்தி நின்றவர்கள் என்று,

இப்படி 23 ஆண்டுகாலம் ஓயாத அறப்போராட்டத்தின் இடையே சத்திய ஜோதியை ஏற்றி வைத்த அன்பு நபியின் தியாகங்கள் அளப்பரியவை. (விரிவாக படிக்க: http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_15.html) இவை அனைத்தும் மனித குல நலனுக்கான போராட்டங்களாக நாம் எடுத்துக் கொள்ளப் போவது எப்போது?

திருக்குர்ஆனின் அழைப்பை இதோ கேளுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்" (49:13)
இந்த பரந்த மனப்பான்மையினால் ஆன தத்துவம்தான் உலகை ஈர்த்துக் கொண்டது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இனம், நிறம், நாடுகள் என்ற எல்லைகளை எல்லாம் தகர்த்துக் கொண்டு மனித சமூகத்தை பிணைத்துக் கொண்டிருக்கிறது. 

திருக்குர்ஆனின் இந்த திருவசனம், நபிகளாரை மனித இனத்துக்கு பொத்தாம் பொதுவானவர் என்கிறது இதோ: “நபியே! நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பி வைத்துள்ளோம்!” (திருக்குர்அன்: 34:28)  

ஹஜ்ஜின் போது, அரஃபா திடலில் ஆயிரக்கணக்கான நபித்தோழர் மற்றும் நபித்தோழியரின் முன்பாக நபிகளார் இனத்தையும், நிறத்தையும் கடுமையாக கண்டித்து உரையாற்றுகிறார்கள். (ஆதார நூல்: முஸ்னது அஹ்மது)

இதை இறைவனும் திருக்குர்ஆனில் இப்படி சுட்டிக் காட்டுகின்றான்: “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக இவற்றில் எல்லாம் அறிவுடையோருக்கு நிறைய சான்றுகள் உள்ளன’ (30:22) (மேலும் படிக்க: http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_1122.html)
தற்போது முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளை, 'மனிதர்களை உருவாக்காமல், கடமைகளை உயிர்ப்பிக்க முயன்றதன் விளைவு!-என்கிறார் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். அவர் தொடர்ந்து சொல்லும்போது,

"இந்தப் பிரச்னையின் தாக்கம் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது என்றால், 
  • தொழுகை என்ற கடமையை நிறைவேற்றுகின்ற ஒருவர், 
  • கல்வி என்னும் கடமையை இகழ்ந்துரைக்கிறார். அதேபோல, 
  • கல்வி என்னும் கடமையை நிறைவேற்றியவரோ 
  • சகோதரத்துவம் என்னும் கடமையை குழிதோண்டிப் புதைக்கிறார். 
  • சகோதரத்துவம் என்னும் கடமையை வலியுறுத்தும் ஒருவர்
  •  நபிகளாரைப் பின்பற்றும் கடமையை இகழ்ந்துரைக்கிறார்.  
ஆக கடமைகளை வாழ வைக்கப் புறப்பட்டதால் வந்த விளைவே இது. .......

முஸ்லிம்கள் கடமைகளை உயிர்பிக்க முனைவதற்கு முன்பாக மனிதர்களை உருவாக்க முயன்றிருந்தால் இத்தகைய விபரீதங்களை தவிர்த்திருக்கலாம்" - என்கிறார். (ஆதாரம்: அழைப்பின் நிலம், பக்.69) 

புற்றீசல்களைப் போன்று பெருகிவரும் பல்வேறு இயக்கங்கள் ஒன்றுபட 'மனிதர்களை' உருவாக்கும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினாலே ஒற்றுமை தானாக வந்து பிணைந்துவிடும். அந்த பிணைப்பின் உறுதியில் இழந்து போனவைகள் அனைத்தும் நிலைநிறுத்தப்படும். தங்களைக் காத்துக் கொள்வதோடு பிற மனிதர்களையும் காக்கும் போராளிகளாக்கிவிடும்.

பேரறிஞர் முஃப்தி முஹம்மது ஷஃபி (ரஹ்) தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இப்படி பதிவு செய்கிறார்:

"உலமாக்கள் கூடிப் பேசி மார்க்க விஷயங்களை பரஸ்பரம் விவாதித்து தெளிவு பெறுவதற்கு ஓர் அரும் வாய்ப்பாக அமையும் அந்த மாநாட்டை ஒட்டி அன்றும் காதியான் கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

மாநாட்டின் இரண்டாம் நாள், வைகறை தொழுகைக்குப் பின்னர், மஸ்ஜிதின் திண்ணையில், அல்லாமா கஷ்மீரி சோகமாக அமர்ந்திருந்தார்.

அல்லாமாவுடன் கலந்துரையாடுவது ஒரு பேரின்ப அனுபவமாகும். குர்ஆனில் எந்த இடத்தில் எந்த வசனம் இடம் பெற்றுள்ளது என்பது அவருக்கு அத்துப்படி. நபிமொழிகளை அறிவிப்பாளர்களின் பெயர்களுடன் 'கிடு கிடு' வென பட்டியலிடுவார். எந்தவிதமான பீடிகைகளும் இல்லாமல் பளிச் பளிச்சென்று நேரடியாக பதில் அளிக்கும் வகையைச் சேர்ந்தவர். 'ஃபிக்ஹ் - இஸ்லாமிய சட்டம்', ஷரீஅத் சட்டங்களில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். 

வெள்ளை ஜிப்பா, வெள்ளை தலைப்பாகை, வெள்ளை தாடியுடன் கம்பீரமான தோற்றமுடையவர். அவர் பேச ஆரம்பித்தால் நாங்கள் எல்லாம் பேச்சு மூச்சில்லாமல் சுற்றி அமர்ந்துவிடுவோம். மார்க்க அறிவுடன் அரபி, ஃபார்ஸி, உர்தூ மொழிகளிலும் தேர்ந்த புலமைப் பெற்றிருந்தது அவரது மிகப் பெரிய சிறப்பு எனலாம். 

இப்படிப்பட்ட மெளலானாதான் அன்று சோகமாக அமர்ந்திருந்தார்.

நான் அல்லாமாவை  நெருங்கி, "ஹஜ்ரத் நலம்தானே?" - என்று விசாரித்தேன். 

"உம்.. நலம் என்ன வேண்டிக் கிடக்கிறது? வாழ்வே வீணாகிப் போன கவலையில் நான் இருக்கிறேன்!" - அதே சோகத்துடன் மௌலானா.

ஒரு கணம் நான் திகைத்துப் போனேன். "ஹஜ்ரத்! நீங்கள் வாழ்வு முழுவதும் கல்விப் பணியிலும், மார்க்கச் சேவையிலுமே கழித்திருக்கிறீர்கள். உங்களுடைய மாணவர்களே ஆயிரக் கணக்கில் இருப்பார்கள். உங்களிடம் கற்றுத் தேர்ந்த அவர்கள் இன்னும் ஏராளமானோருக்கு அறிவு புகட்டிக்  கொண்டிருக்கிறார்கள். உங்கள் வாழ்வு வீணாகிவிட்டது என்றால் பிறகு யாருடைய வாழ்வுதான் பயனுள்ள வாழ்வு?" - என்று கேட்டேன்.

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். எனது வாழ்வே வீணாகிவிட்டது சகோதரரே!"

"ஏன் அப்படி சொல்கிறீர்கள் ஹஜ்ரத்?"

"என்னுடைய மார்க்கப் பணி, எனது சொற்பொழிவுகள், என்னுடைய கட்டுரைகள், என்னுடைய முயற்சிகள் எல்லாமே ஒரே அச்சில் சுழன்று கொண்டிருந்தன. மற்ற மத்ஹபுகளைவிட ஹனஃபி மத்ஹப்தான் உயர்ந்தது என்பதை வலியுறுத்துவதே என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்தின் மையக்கருவாக அமைந்து போனது.

இப்போது யோசித்துப் பார்த்தால் எப்படிப்பட்ட அற்பமான விஷயத்தில் வாழ்வை வீணாக்கிவிட்டோம் என்பது தெரிகிறது. இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்) இன்னும் பிற ஃபிக்ஹீ வல்லுநர்களைவிட இமாம் அபூஹனீஃபாவே உயர்ந்தவர் என்று நிரூபிக்க படாதபாடுபட்டேன். அதன் பயன்தான் என்ன?

எந்த மத்ஹப் சரியானது? எந்த மத்ஹப் தவறானது? என்பது இறுதிநாளில் கூடத் தெரியப் போவதில்லை.

இந்த உலகில் ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகும், இதுவும் சரி, இதுவும் சரி, இதுவும் சரிதான் என்று நான் சொல்ல முடியும். அவ்வளவு ஏன்? மண்ணறையில் முன்கர், நக்கீர் என்னும் வானவர்கள்கூட, 'ஆமீன் மெதுவாகச் சொல்ல வேண்டுமா? சத்தமாக சொல்ல வேண்டுமா?' - என்று வினவ மாட்டார்கள்.

சட்டங்களைத் தொகுத்துத் தந்த எந்த இமாமையும் இறைவன் மறுமை நாளில் அவமானப்படுத்த மாட்டான்.

அந்த மனிதப் புனிதர்களுக்கு இறைவன் அளப்பெரும் அறிவைத் தந்தான். மனிதர்களில் பெரும் பிரிவினரை அவர்களின் வழிமுறைகளைக்  கடைப்பிடிப்பவர்களாக ஆக்கியிருக்கிறான். அவர்கள் சத்திய ஒளியை உலகெங்கும் பரப்பினார்கள். அவர்களது வாழ்வு மார்க்க ஒளியை பரப்புவதில் கழிந்தது. எனவே, நிச்சயமாக அவர்களை மஹ்ஷர் மைதானத்தில் நிறுத்தி அபூஹனீஃபாவின் விளக்கம் சரியானதா? தவறானதா? ஷாஃபியின் விளக்கம் சரியானதா? தவறானதா?' - என்று விசாரித்து அந்த மனிதப் புனிதர்களை அவமானப்படுத்தவும் மாட்டான்!

இந்த உலகிலும், மண்ணறையிலும், மறுமையிலும் பயன்படாத ஒரு அற்ப விஷயத்துக்காக என் முழு வாழ்வையே வீணாக்கிவிட்டேனே!

நபிமார்கள் கொண்டு வந்த செய்தியை உலகுக்கு அறிவிப்பதில் தவறிவிட்டோம். எது நம் மீது கடமையாக்கப்பட்டிருந்ததோ அதைச் செய்ய மறந்து போனோம். தீமைகளை அழித்து நன்மைகளை ஏவும் பணியிலிருந்து நமது கவனம் திசை திரும்பிவிட்டது. 

இன்று எந்த தீமைகளை அழிப்பதற்காக இஸ்லாம் வந்ததோ அந்தத் தீமைகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. வழிகேடு பரவி வருகிறது. நாத்தீகம் தலையெடுத்துள்ளது. இணை வைப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஹலால், ஹராம் பேணுதல்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாமோ உப்புசப்பில்லாத ஒன்றுக்கும் உதவாத அற்ப பிரச்னைகளில் மூழ்கியிருக்கிறோம்" - என்று நிறுத்திய அல்லாமா கஷ்மீரி கடைசியில் சோகம் ததும்ப சொன்னார்: 

"இதைத்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசிக்க.. யோசிக்க துக்கம் மேலிடுகிறது. வாழ்வை வீணாக்கி விட்டேன் என்ற உணர்வே மேலிடுகிறது!" (ஆதாரம்: சமரசம், 1-15, மார்ச் 1994, பக்.43,44)

நமது அனைத்துப் பிரச்னைகளும் இந்த கவலையால்தான் நிச்சயம் தீரும். இழந்தவைகள் நம்மால் பெறவும் முடியும்.





 










0 comments:

Post a Comment