NewsBlog

Wednesday, December 18, 2013

நடப்புச் செய்தி: 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே?'


தேவயானி கோப்ரகடே
 கோபித்துக் கொண்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் 'சொப்புக்களை' தூக்கி எறிந்து ஆட்டத்தை கலைத்து விடுவது போல உள்ளது இந்திய அரசின் செயல்! அமெரிக்காவின் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை விளையாட்டுத்தனமாய் உள்ளது. 

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இதற்கு பதிலடியாக, 

  • அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தர வேண்டும் என்று இந்தியா உத்திரவிட்டுள்ளது.
  • அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான 'அனுமதி சீட்டுக்கள்' அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
  • அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அமெரிக்க தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படும்.
  • டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழைமை அகற்றப்பட்டன.  அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர். 

இத்துடன் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து வந்துள்ள 5 எம்.பிக்களுடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.  இதற்கு முன்னர் சொல்லிவைத்தாற் போல இதே காரணத்துக்காக அமெரிக்க எம்.பிக்கள் குழுவினருடனான சந்திப்பை மக்களவைத் தலைவர் மீரா குமார் திங்கள்கிழமை ரத்து  செய்தார். 

இந்நிலையில், "இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில், விதிமுறைகள் முறையாக பின்பற்றுட்டுள்ளன" - என்று அமெரிக்கா கூறியுள்ளது. 'வியன்னா தீர்மானத்தின்படி தூதரக ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே அமெரிக்க சட்டத்திலிருந்து சில விலக்குகள் அளிக்க வழிவகை உள்ளது. தனிநபர் என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்ட தேவயானிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது!" - என்று செவ்வாய் அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேரி ஹார்ஃப்
ஆக, இந்திய துணைத் தூதர் தேவயானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தன்மை என்ன? அதில் உண்மை உள்ளதா? இல்லையா? என்ற உண்மையை கண்டறிவதை விட்டு, பதில் தருகிறேன் என்று சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளக்கூடாது. 

ஒருவேளை இந்தியா தற்போது அமெரிக்காவுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்ட ரீதியாக சரியானவைதான் என்றால், இதுவரை அந்த சட்டம் அமல்படுத்தப்படாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. 

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; குற்றமிழைப்பதற்கான தண்டனை அவரவர் வகிக்கும் பதவிகளின் தகுதிக்கு ஏற்ப மாறுவதில்லை என்பதுதான்  உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய துணைத் தூதர் தேவயானி விசாரணை முடிவில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?




0 comments:

Post a Comment