NewsBlog

Thursday, December 27, 2012

"அன்புள்ள மம்தா மேடத்துக்கு.."



அன்புள்ள மம்தா மேடத்துக்கு,

ஒரு ரயில் பயணியின் கடிதம். 

ஒரு துறைச் சார்ந்த கடிதம் இதுவானாலும், மத்திய அரசில் தாங்கள்தான் எல்லாம் சர்வமயம், இரும்பு மனுஷி என்பதாலும், நம் பிரதமர் சிங் அய்யா அவர்கள் வானத்திலிருந்து இடி விழுந்தாலும் எந்த பிரதிபலிப்பும் முகத்தில் காட்டாதவர் என்பதாலும் நான் இந்த கடிதத்தை தங்களுக்கு விலாசமிட்டு எழுதுகின்றேன். நீங்கள் எனக்கு ரூ.3206.00 தர வேண்டும். அதுவும் தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் (கட்டுப்படாவிட்டால்.. என்ன நடக்கும் என்பதற்கு தினேஷ் திரிவேதி ஐயாவே சாட்சி!) மத்திய இரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்ஸால் அய்யாவிடமிருந்து இந்தத் தொகையை தாங்கள் பெற்றுத் தர வேண்டும் என்ற உறுதி மொழியுடன்.. நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பிக்கின்றேன்.

ஆண்டு தோறும் அலுவலக விடுமுறைக்காக சென்னையிலிருந்து நான் அஹ்மதாபாத் செல்வது வழக்கம். இம்முறை தாங்கள் மன்னிக்கவும் தங்களின் பிரதிநிதி மத்திய இரயில்வே அமைச்சர் பன்ஸால் அய்யா கொண்டு வந்த தக்கல் முறையால் பெரும் அவதிக்குள்ளானதுதான் மிச்சம். ஏற்கனவே முன்பதிவு செய்ய முடியாத காரணங்களால் மூன்று நாட்கள் நான் பல்வேறு நண்பர்கள் உறவினர்கள் மூலமாக கணினி (ஆன் லைன் மற்றும் நடுஇரவே சென்று வரிசையில் நின்று) மற்றும் நேரிடையாக வரிசையில் நின்றும் கிட்டதட்ட மூன்று நாட்கள் அவதிப்பட வேண்டி வந்தது. 

இந்த அவதியில் இரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டிருந்த பல்வேறு அரசு அடையாளங்களை கொடுத்திருந்தது ஒரு சிறு குழப்பமாகிவிட்டது. 

கடைசியில் ஒரு வழியாக மூன்று நாட்கள் தொடர் முயற்சியின் விளைவாக நடுஇரவில் உறவினர் ஒருவரை நிற்க வைத்து அவசர அவசரமாக பெற்ற பயணச்சீட்டு.. இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என்று ஒரே குழுவாக ஒரு சீட்டு இரயில் ஏறப்போகும் அந்த கடைசி நிமிடத்தில் கையில் கிடைத்தது. இருந்த அனைத்து அடையாள அட்டைகளையும் அள்ளிப் போட்டுக்  கொண்டு குடும்பத்தாருடன் இரயிலும் ஏறிவிட்டோம்.

ரயில் புறப்பட்டதும் பூர்வாங்க சோதனைகள் டிக்கெட் பரிசோதகரால் செய்யப்பட்டு எங்கள் பயணம் S1 கோச்சில், 42,43,44 மற்றும் 45 இருக்கைகளில் (PNR No: 466-0147637 - Train No:12656-25.12.2012-Ticket No:82370243) ஒரு வழியாக தொடர்ந்தது. 



அது என்ன ஒரு வழி? என்று தாங்கள் கோபப்பட்டுவிட வேண்டாம். 

தாங்கள் கோபப்படப் போகிறீர்கள் என்றுதான் இதுவரையும் நான் பத்திரிகை உலகைச் சார்ந்தவன் என்று சொல்லவில்லை. அண்மைக் காலமாக நீங்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக எதிர்த்து வருவதும் எனக்குத் தெரியும். 

சரி நாம் விஷயத்துக்கு வருவோம். 

நான் பயணம் செய்த அந்த S1 கோச்சில் டாய்லெட்டுகளில் நீரே வரவில்லை. பிளக் பாயிண்டுகள் இருந்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை செயல்படவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் அமர்ந்கொள்ளும் விதமாக ஒரு ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட் போலவே இருந்தது. இது சம்பந்தமாக டிடிஆர் மற்றும் அதற்கான பொறியியல் வல்லுநர்களிடம் புகார் செய்தும் யாரும் கண்டுக் கொள்ளவில்லை.



சரி.. இது எங்கள் தலைவிதி என்று நொந்து கொண்டே ஒரு இரவு பயணம் கழித்துவிட்ட நிலையில் வழியில் வந்தது பறக்கும் படை. 

சக பயணிகள் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் கேட்டுக் கொண்டே வர  நான் சும்மா இருக்கக் கூடாதா, "அய்யா யார் நீங்கள்? கொஞ்சம் உங்கள் அடையாள அட்டையைக் காட்டுகிறீர்களா?"- என்று கேட்டதுதான் தாமதம்.. 

அந்த பறக்கும் படை பரிசோதகர் என்னை மேலும் கீழும் பார்த்த பார்வையிலே "உன்னை வச்சுக்கிறேன் இரு!"- என்று கண்களாலேயே சொல்வது புரிந்தது. 

ஜல்காமுக்கு முன்னால்..  S.D.சவுக்கார் தலைமையில் வந்த பறக்கும் படையைச் சேர்ந்த அந்த நபர் என்னுடைய டிக்கெட்டை ஒரு எழுத்தும் விடாமல் பரிசோதனைச் செய்ய ஏதோ வம்பு என்று தெரிந்துவிட்டது. 

டிக்கெட்டில் இருந்த அடையாள எண்ணுக்குரிய அடையாள அட்டையைக் காட்டும்படி அவர் வற்புறுத்த என்னிடமிருந்த அத்தனை அடையாள அட்டைகளைக் காட்டியும் அவர் காட்டிய எண் பொருந்திப் போகவில்லை. 

இந்தப் பிரச்சினைக்கு நடுவே கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தப் போது டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த எண் எங்கள் வீட்டு ரேஷன் காட்டின் என்பது தெரிந்தது.

ஏற்கனவே பரிசோதித்த டிக்கெட் பரிசோதகர் அதை குறிப்பிட்டிருந்தாலாவது சென்னைக்கு அருகிலேயே இறங்கி எங்கள் பயணத்தை ரத்தாவது செய்திருக்க முடியும்.

நடுவழியில் மொழி தெரியாத நபர்களிடம் பணயச் சீட்டு செல்லாது என்ற நிலையில் குழப்பம்தான் மிஞ்சியது. 



கடைசியில் பறக்கும் படை அதிகாரியை சந்தித்து நிலைமையை விளக்கியும் அவர் ஏற்றுக் கொள்வதாயில்லை. 

"நான்தான் இந்த பெயருக்குரியவன். ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில்கூட பெயர் இருப்பதைப் பாருங்கள்!"- என்று எடுத்துரைத்தும் அவர் அசர்வதாக காணோம். 

சட்டங்கள் நமக்காத்தான். சட்டங்களுக்காக நாமல்ல. இந்தச் சட்டங்கள் தலைக்கீழாக இருப்பதாகவே என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்!

கடைசியில் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த  ரூ.3206.00 அபராதமாகக் கட்டிவிட்டு (அபராத சீட்டு எண்: G232293) நான் பயணத்தைத் தொடர வேண்டியிருந்தது.



"ஏங்க வாய் வைச்சுகிட்டு சும்மா வரக்கூடாதா? நீங்க அந்தாள்கிட்ட அடையாள அட்டை கேட்டதாலே வந்த வினை இது!"

- இது என் அன்பு துணைவியின் அர்ச்சனை. எத்தனை வருஷம் தொடரும் என்பது தெரியவில்லை.

இத்தகைய சூழல்களில் குறிப்பிட்ட அடையாள அட்டையை காட்டத் தவறும்போது, அது டிக்கெட் இல்லாத பயணமாக கருதப்படும் என்று டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கிறதே இது மோசடி கிடையாதா?

பணம் இருந்தது கட்டிவிட்டேன். பணமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது எங்கள் நிலை என்னாவது?

இது என்ன அபத்தமான சட்டம்! 

இந்த டிக்கெட்டில் எந்தவிதமான தில்லு முல்லு நடைப்பெறாத ஒரு சூழலில் ஒரு எண்ணுக்கான அடையாள அட்டை இல்லாதது குற்றமாக எப்படி கருதப்படும்?

ஒருவேளை அந்த எண்ணை கணிணியில் பதிவு செய்யும்போது, இரயில்வே ஊழியர் ஏதாவது தவறு செய்திருந்தால்கூட அது பயணிகளைப் பாதித்து விடுவதாகாதா?

இத்தகைய நிலைகளில் பிற அடையாள அட்டைகள் செல்லுபடியாகும் என்று ஏன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது?

இல்லை... 

"இருந்தால் பணத்தைக் கட்டிவிடுங்கள்! அல்லது பயணம் முடிந்ததும் ஒன்று அதற்கான அடையாள அட்டையைக் காட்டி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்! அல்லது அபராதம் கட்டுங்கள்!"- என்று நிபந்தனைகளை தளர்த்தக் கூடாதா?

நடைமுறையில் உள்ள தக்கல் சட்டங்கள் பயணிகளுக்கு எதிரானவை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

மம்தா மேடம்,

"அன்றாடம் 2.30 கோடி பயணிகள் நம் இரயில்வேத் துறையைப் பயன்படுத்துகிறார்கள். நாள்தோறும் 36 லட்சம் சரக்குகள் சரக்குவண்டிகளில் கையாளப்படுகின்றன.

32 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில், 18 ஆயிரம் கேட்டுகளில் ஆட்களை நியமித்திருக்கிறார்கள். 14 ஆயிரம்  கேட்டுகளில் மேம்பாலம் அமைப்பதற்காக காத்திருக்கின்றன. இதற்கு மத்திய இரயில்வே அமைச்சகம் மாநில அரசுகளுக்கு 50 விழுக்காடு பங்களிப்புத் தர இருக்கிறது!"

இவை எல்லாம் அண்மையில் தங்கள் அன்புக்குரிய மத்திய இரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்ஸால் பத்திரிகையாளர் கூட்டத்தில் குறிப்பிட்டவை. 

நமது இரயில்வே அமைச்சர் மாநில அரசுகளுக்கு 50 விழுக்காடு பங்களிக்கட்டும் இன்னும் பல்வேறு சலுகைகள் செய்யட்டும். 

ஆனால், நான் அபராதமாக செலுத்திய ரூ.3206.00 ஐ திருப்பி செலுத்தும்படி தாங்கள் இரயில்வேத் துறையை வலியுறுத்த வேண்டும்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த ஆலோசனைகளை மக்களவையில் பயணிகள் பிரச்சினையாக கருதி அதில் மாற்றங்களைக் கொண்டுவர தாங்கள் உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். 

ஏசி அல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் எல்லா வசதிகளும், பாதுகாப்பும் அளிப்பது இரயில்வே துறையின் கட்டாயக் கடமை என்பதை தாங்கள் எங்களுக்காகப் பேசி உறுதிப்படுத்த வேண்டும். 

கடிதம் எழுத தங்களை நான் தேர்ந்தெடுத்தது தாங்கள் சாமான்யமானவர்களின் பிரச்சினைகளை எடுத்துப் போராடும் ஒரு போராளி என்று நான் கருதுவதால்தான்!

எனக்குச் சேர வேண்டிய ரூ.3206.00 கிடைக்காவிட்டால்.. நான் இறைவனிடம் மறுமையில் இது குறித்து கண்டிப்பாக முறையிடுவேன் என்பது மட்டும் நிச்சயம்!

பாதிக்கப்பட்டவனின் முறையீடுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தவொரு திரையும் இருக்காது என்று அண்ணல் நபிகளார் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கடிதம் நேரிடையாக தங்களுக்கு சேரலாம் அல்லது யார் மூலமாவது தங்கள் பார்வைக்கு வரலாம். அந்நிலையில் உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

ஒரு சாமான்யப் பயணி!


- அஹ்மதாபாத்திலிருந்து...
 

0 comments:

Post a Comment