NewsBlog

Monday, December 10, 2012

சூடேறும் பூமி ..! பேராபத்தில் மனித வாழ்க்கை.. !! - பகுதி -2

 
 
தொழிற்புரட்சிக்கு முன்பாக சுற்றுச்சூழலில் கார்பன்-டை- ஆக்ஸைடு 270 பிபிஎம் (Parts Per Million) இருந்தது. தற்போதோ அதன் அளவு 300 பிபிஎம் ஐ தாண்டிவிட்டுள்ளது. சமீபகாலமாக இந்தோனேசியாவில் பெருக்கெடுக்கும் வெள்ளம் மற்றும் நில அதிர்வுகள், பெருவில் நிலவும் பஞ்சம், அமெரிக்காவில் அடிக்கடி வீசும் சூறைக்காற்றுகள் மற்றும் சுழல் காற்றுகள் (டெர்னெடோஸ்) இவைகளால் ஏற்படும் மரணங்கள் இவையெல்லாம் சூழல் மாசுவின் பின்விளைவுகள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால்.. நோய்-நொடிகள் பெருகுகின்றன. துருவ பகுதிகளில் பனிமலைகள் உருகி கடல் மட்ட உயரம் அதிகரிக்கிறது. தற்போது வடதுருவ பகுதிகளின் 40 விழுக்காடு பனிமலைகள் உருகிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால்.. கடல்மட்டம் 10 செ.மீ வரை உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் பல நாடுகள் லெமூரியா போல காணாமல் போய்விடும். வருங்காலத் தலைமுறையினருக்கு ஆய்வுக்கான தொல்லியல் பகுதிகளாகிவிடும். இந்த ஆபத்துக்கு முதலில் ஆளாவது மாலத்தீவு! அடுத்தவை பங்களா தேசம் போன்ற நாடுகள்!
 
 

மாலத்தீவு போன்ற சிறிய நாடுகளையும், இந்தியா-பங்களா தேசம் போன்ற ஏழை நாடுகளையும் அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் ஆபத்துக்கு (குளோபல் வார்மிங்) தள்ளியவை குபேர நாடுகளே! குறிப்பாக கார்பன்-டை- ஆக்ஸைடு நச்சுவாயுவை அதிகமாக வெளியேற்றி சூழல் மாசு உருவாக்கும் நாடு அமெரிக்காதான். உலகளவில் 25 விழுக்காடு நச்சு வாயுவை காற்றில் கலக்கும் புண்ணியவான் அது! அதாவது 55 லட்சம் மெட்ரிக் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு கழிவுகளை அமெரிக்கா காற்றில் கலந்து உலகை நச்சுமயமாக்கும் நாடு. இதற்கு அடுத்ததாக சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா,  ஜெர்மனி ஆகியவை உலகை நச்சுமயமாக்கும் பங்காளிகள்! இதில் நமது நாட்டின் பங்கு குறைவானதல்ல..  ஒரு லட்சம் மெட்ரிக் டன் கார்பன்-டை - ஆக்ஸைடை காற்றில் கலந்து நச்சுமயமாக்கி வருகின்றோம். இதற்கு முக்கியக் காரணம் ஆலைகள் மற்றும் வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகைத்தான்.
 
 

மறுபுறம் காடுகள் அழிந்து வருவதும் சுற்றுச்சூழல் மாசுவுக்கு பெரும் கேடு விளைவித்துவருகிறது. இந்தியாவில் மாசுக்களை வெளிப்படுத்தும் 70 விழுக்காடு ஆலைக்கழிவுகளை தூய்மைப்படுத்துவதில்லை என்பது வருந்தத்தக்கது.

இனிவரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு பெருத்த தலைவலி தரவிருப்பது வாகன மாசுதான்!

சுற்றுச்சூழல் குறித்த அலட்சியம், போதிய விழிப்புணர்வின்மை, அரசுகளின் கவனமின்மை இவையெல்லாம் சூழல் மாசுவின் காணங்கள். 



குளோபல் வார்மிங் சம்பந்தமாக 1997 - இல், கியூட்டோ மாநாட்டில் ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. 84 நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி 2010 - ஆம் ஆண்டுக்குள் கிரீன்  ஹவுஸ் அமைப்பைச் சிதைக்கும் வாயுக்களை 1990 - ஆம் ஆண்டு அளவைவிட 12.5 விழுக்காடு குறைக்க வேண்டும் என்பது முக்கிய ஷரத்து. இதை அமெரிக்கா மதிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க உலக நாடுகளும் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பது கவலையளிப்பது. 

தான் அமர்ந்துள்ள மரத்தின் கிளையை தன் கையால் வெட்டும் முட்டாள் தனத்திலிருந்து உலக நாடுகள் விடுபட வேண்டும். 

காடு வளர்ப்பு திட்டம், சூழல் மாசுவைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தங்களை அமல்படுத்தல், ஏழைநாடுகளின் ஒன்றுபட்ட முயற்சி, நமது வாழ்வை நாமே சிதைக்கக்கூடாது என்ற மனப்பான்மை  இவை எல்லாம் உயிர் பெறல் வேண்டும். 

இல்லையென்றால்.. ஆண்டுதோறும் சூரியக் கதிர்கள் நம்மைத் துளைத்தெடுத்து ஒருநாள் சாம்பலாக்கிவிடும். எச்சரிக்கை!



0 comments:

Post a Comment