NewsBlog

Saturday, December 8, 2012

'வீணாகும் இளைய பாரதம்!', பகுதி - 2



நமது கல்வி அமைப்பில் தொடக்கக் கல்வியில் அலட்சியம் காட்டி, மேல்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. நாட்டில் பல்கலைக்கழகங்கள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப ஆரம்ப கல்விநிலையங்கள் பெருகவில்லை. சார்க் நாடுகளில் கல்விக்காக மிகக் குறைந்தளவு செலவழிக்கும் நாடுகளில் இந்தியா கீழ்வரிசையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கக் கல்வியை பாதியிலேயே முடித்துக் கொள்வோரின் எண்ணிக்கை நமது நாட்டில் அதிகரித்துவருகிறது.

உயர்நிலை கல்விக்கு காலடி எடுத்து வைப்போரில் பாதியிலேயே படிப்பை நிறுத்துவோரில் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம். உயர்கல்விக்கான வசதி அருகில் இல்லாமை, பெண்களுக்குக் கல்வி தேவையில்லை என்ற மனோபாவம், அந்த எண்ணங்கள் வடிவெடுப்பதற்கான சூழல்கள் இவை எல்லாம் காரணங்கள்.

 வீட்டு பராமரிப்புப் பணிகளுக்கு பெண்களின் தேவை அவசியம் என்ற கருத்து கிராமப்புறங்களில் மிகைத்துக் காணப்படுகிறது. இது திருமண வயது சம்பந்தமான அரசின் சட்டத்தை நிராகரித்து சிறுவயதில் மணம் முடிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. இதைத் தொடர்ந்து உண்டாகும் பேறுகாலப் பிரச்சினைகள் வேறு!

பெற்றோர்களின் நிர்பந்தங்கள் பிரிதொரு காரணமாக நிற்கிறது. விருப்பமில்லாத பாடங்களை சுயமாகவே அவர்கள் தேர்வு செய்து பிள்ளைகளின் தலைகளில் சுமத்திவிடுகிறார்கள்.



மற்றொருபுறம், நவீன தகவல் தொர்பு சாதனங்களில் கணிசமான பங்கு இளைய சக்தியை நிலைகுலையச் செய்கிறது. வன்முறைகள், ஆபாசம், மேற்கத்திய கலாச்சார சீரழிவுகள் இவர்களை வெகுவாகப் பாதிக்கிறது.

வாழ வழியில்லாத பெண்கள் தரகர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகிறார்கள். ஆந்திரம், ஒடிசா, கேரளா, நேபாளம் பகுதிகள் இதற்கு உதாரணம்.

 பாதை மாறிக் கொண்டிருக்கும் இளைய சக்தியை நேர்வழிப்படுத்த வேண்டிய தருணமிது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒரு நூற்றாண்டு காலம்வரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது!

இதுவரை நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலம், கல்விக்கான விழிப்புணர்வுகளுக்காக கணிசமாக செலவழித்துள்ளது. உண்மையில், இளைஞர் உடல்நலம் குறித்து அது பிரத்யேகமாக எத்தகைய அக்கறையும் காட்டவில்லை. இளமையில் நுழையும்போது, உடலின் எடை 35 விழுக்காடும், உயரம் 25 விழுக்காடும் அதிகரிக்கிறது. இதற்கு போதிய போஷாக்கு மிக்க உணவுகள் அவசியம்.

1993-இல், கெய்ரோவில் நடந்த மக்கள் தொகை மாநாட்டில் இளமையில் நுழையும் பருவத்தினர் குறித்து பிரத்யேகமான விவாதங்கள் நடந்தன. அப்போது இளைஞர்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்று பரிந்துரைகள்  வழங்கப்பட்டும் அவை இன்னும் முழுஉருவம் பெறவில்லை.

இளமை வேண்டுவது திறமைக்கேற்ற வேலைவாய்ப்புகள், இளைய சக்தியைப் பயன்படுத்தும் விதத்திலான சரியான களம்.

அதனால், அரசு இளைஞர் முன்னேற்றத்துக்கான திட்டங்களில் அதிக முனைப்புக் காட்ட வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டங்களை பரவலாக விரிவு படுத்த வேண்டும்.

இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்! கையோடு கைத்கோர்த்து தேசத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மாபெரும் திறன் இது.

இளைய சக்தியின் எழுச்சி முழுக்க.. முழுக்க சமூகத்துக்குக் கிடைத்தால்... உலக  நாடுகளில் இந்தியா முதல் வரிசையில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை!
 


0 comments:

Post a Comment