NewsBlog

Tuesday, December 11, 2012

'தென்றல் புயலாகும்!' - பகுதி 2



அன்றைய நாளின் 'சூப்பர் பவர்'  வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்த துருக்கியின் இராணுவப் படைப்பிரிவொன்றின் அதிகாரி அவள். 

அவளின் தந்தை யஸ்தானிகூட அவளது தலைமைக்குக் கீழ்தான்! இத்தகைய சிறப்புகள் பெற்ற வீராங்கனைதான் அம்துல்  ஹபீப்.

பயாஸித் துருக்கியை அமைதியுடன் ஆண்டுவந்த நாட்களவை. 

தைமூர் துருக்கி மீது போர்த் தொடுத்தான். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலையாத துருக்கியர் தீரத்துடன் தைமூரை எதிர்த்துப் போரிட்டனர். கடைசியில், தைமூரின் இரத்த வெறிப்பிடித்த படைகளின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் துருக்கியர் தோல்வியுற்றனர். எதிரிகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில்  ஹம்துல்  ஹபீபும் ஒருத்தி! 

அடுத்த நாள். தைமூர் சிறைக் கைதிகள் அனைவரையும் சிரச்சேதம் செய்துவிடும்படி கட்டளைப் பிறப்பித்தான்.

 இச்செய்திக் கேட்டு அம்துல்  ஹபீப் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தாள். இக்கொடுமையை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுடைய மனம் சிறைப்பட்ட அப்பாவிகளுக்காக அழுதது. இந்த ஆபத்திலிருந்து அவர்களை எப்பாடுபட்டாவது காக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆண்வேடம் தரித்து எப்படியோ தைமூரின் அரசவையிலும் நுழைந்து விட்டாள். தைமூரின் கொடுமையை எதிர்த்து சொற்போர்த் தொடுக்கலானாள்:

"மேன்மை மிக்க சக்கரவாத்தி அவர்களே! எவ்வித முகாந்திரமும், காரணமும் இன்றி துருக்கியின் மீது போர்த் தொடுத்தீர்கள். பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று புதைக் குழியிலிட்டீர்கள். தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள முன்வந்த 70 ஆயிரம் துருக்கியரை ஏமாற்றி ஒரு குகைக்குள் வைத்து கூட்டுக் கொலைச் செய்தீர்கள். 



இப்படுகொலைகள் அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். எந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதாக கூறிக் கொண்டிருக்கிறீர்களோ அந்த ஷரீஅத்தை நிராகரித்துச் செய்த கொலைகள் இவை.

பயாஸித் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தக் கூடாதென்று போர் நிறுத்த அறிவிப்பைச் செய்தும், அதை வெற்றி என்னும் செருக்கில் புறக்கணித்தீர்கள். 

 அரசே! எங்களைப் போலவே தாங்களும் ஒருநாள் நிச்சயமாக இறக்கப் போகிறவர்தான். இதை மறந்துவிட வேண்டாம். நாளை மறுமையில் இறை சந்நிதியில் தாங்கள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படும் வேளையில், இந்தப் படுகொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

அரசே! சுத்த வீரர்கள் என்றும் தங்கள் பிணைக் கைதிகளிடம் கோழைகளைப் போல் நடந்து கொள்வதில்லை. அதுவும் இஸ்லாமிய சமயமோ கைதிகளிடம் அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்க அவர்களின் உரிமைகளைப் பறிப்பது உண்மையில் அத்துமீறலேயன்றி வேறில்லை!

நாங்கள் நிராயுதபாணிகளான போர்க்கைதிகள். அதுவும் எங்களை தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் கை-கால்களில் விலங்கிடப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்களை கொல்வது கோழைத்தனமின்றி எப்படி வீரமாகும்.  அதுவும், வெறுப்புக்குரியதும், பழிப்புக்குரியதுமான சிறியோரது செயல்கள். தங்களைப் போன்ற மாமன்னர்கள்.. தேர்ந்தெடுக்கும் புத்திசாலிதனமான வழியுமல்ல அது!"-என்று சொல்லி முடித்த  ஹம்துல்  ஹபீப் தன் தலையிலிருந்த இரும்புத் தொப்பியை எடுத்து தரையில் எறிந்தாள். அவள் தன் மாறுவேடத்தைக் களைந்த பின்னும் ஓய்ந்தாளில்லை!


"...அரசே! என்னைப் பாருங்கள். ஓரளவே போர்ப் பயிற்சி பெற்ற பெண். ஆனால், துருக்கியப் பெண்களோ என்னைவிட பன்மடங்கு தைரியசாலிகள் என்பதை மறந்துவிட வேண்டாம். அப்படியிருக்கும்போது, எங்களுடைய ஆண்கள் எத்தகைய மாவீரர்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வீரர்களை தாங்கள் அநீதியாய் கொல்லப் பிறப்பித்த ஆணை நியாயமற்றது. கொடுமையானது!"

அரசவையிலிருந்தோர் அப்பெண்ணையும், அவளுடைய கனல் பொழியும் பேச்சுகளையும் கேட்டு பிரமைப்பிடித்தவர்களாக அமர்ந்திருந்தார்கள். அமைதி அங்கே ஆட்கொண்டது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் தொத்திக் கொண்டது. 

மௌனத்தில் மூழ்கியிருந்த தைமூரின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அம்துல்  ஹபீப் உட்பட கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்பின் தைமூர் அம்துல்  ஹபீபை மணந்ததும், அப்பெண்மணி வரலாற்றில் 'ஷாஹின்ஸா பேகம்'  அதாவது  'ஹமீதா பானு பேகம்' என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டதும், பிற்கால வரலாற்றுச் சம்பவங்கள். இவர் புகழ் பெற்ற ஞானியாகவும் விளங்கினார். பல அரிய புத்தகங்களை இலக்கிய உலகுக்குத் தந்தவர்.

பெண்ணை சிறுமைப்படுத்த நினைப்போர் வரலாறுகளை நினைவு கூற வேண்டும். சமயம் வந்தால் பெண்கள் கொடுமைகளுக்கு எதிராய் புயலாய் மாறிநிற்பார்கள் என்பதையும் அறிய வேண்டும்.

0 comments:

Post a Comment