NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Wednesday, January 22, 2014

Great Escape

அறிவுக்கு வேலை கொடு: ஆதலின், கவனம் கொள்வீர்!


இன்றைய ஊடகங்களுக்கு மாற்றாக ஒரு ஊடகம் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான சில முக்கிய குறிப்புகள் இவை.

  • எல்லா ஊடகங்களிலும் இடதுசாரி மற்றும், சிறுபான்மை ஆதரவு சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை முதலில் ஒன்றுபடுத்தி அவர்களிடமே ஆலோசனையை முன்வையுங்கள். அனுபவ ரீதியான நல்ல பதில் கிடைக்கும்.
  • முஸ்லிம்கள் சிறப்பாக நடத்திவரும் ஊடகங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக கேரளாவில் வெற்றிகரமாக நடக்கும் மாத்யமம், தில்லியில் வெற்றிகரமாக இயங்கிவரும் ரேடியன்ஸ் மற்றும் தாவத் ஏடுகள். அச்சு ஊடகமாக இருப்பினும் அவர்களை நேரில் சந்தித்து பிரச்னைகளை பகிர்ந்த கொள்வது அடுத்த கட்டத்துக்கு வழி வகுக்கும்
  • ஒரு திட்டத்தை வரையறை செய்து கொள்ளுங்கள். இதற்காக, இத்தனை நாட்களில் செயல்வடிவம் தருவேன் போன்ற திட்டங்கள் அவை.
  • உங்கள் கொள்கை, கோட்பாடுகள் என்ன என்பதில் தெளிவாக இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்க்கு பதில் தர என்பதெல்லாம் அனுபவ ரீதியாக எடுபடாது. அதில் நமது கவனமும் சிதறக் கூடாது.
  • வானத்துக்குக் கீழ், பூமிக்கு மேலாக உள்ள அனைத்தையும் எழுதுவேன் என்று சங்கல்பம் கொள்ளுங்கள். மனித இனத்துக்கு நன்மை விளைவிப்பவை அனைத்துமே ஆகுமானவைதான்! ஹலாலின் வரையறை இதுவேயாகும். அதனால், அரைகுறை அறிவுகளுடன் வாத, விவாதங்களில் ஈடுபடும் நபர்களை சற்று விலக்கியே வைப்பதில் தவறில்லை.
  • என்ன செய்வதாக உத்தேசம்? இதில் தெளிவாக இருங்கள்!
  • வணிகமயமாகவே பாருங்கள். தர்மத்துக்காக யாரும் எதையும் செய்ய முடியாது. என்னாலும் ஓரளவு பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்ள முடியும் என்பது இறையருள் முதற்காரணமானாலும், ஒரு நிறுவனத்தில் பத்திரிகைத்துறைக்கு சமமாக ஏறக்குறைய 35 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளேன். அதுதான் என் தேவைகளை நிறைவேற்றியது.
  • .மனித வளம் கண்டிப்பாக தேவை. உங்களிலிருந்தே தொலைநோக்குக் கொண்டவர்களாக, விட்டுக் கொடுப்பவர்களாக, நற்பண்புகள் கொண்டவர்களாக அவர்கள் இருப்பது முக்கியம். திறமைகளைகூட பிறகு அனுபவத்தில் வார்த்தெடுத்துக் கொள்ள முடியும். கோடிக்கணக்கான பணம் உங்களிடம் இருந்தாலும் அந்தக் கட்டுக்கள் காமிராவை தோளில், சுமந்து செல்லாது.செய்திகளைத் தொகுத்துத் தராது. மனிதர்கள் முக்கியம்.
  • அவசரப் பட வேண்டாம். நிதானமாக யோசியுங்கள்.சிறிதே செய்தாலும், நிலையாக செய்ய வேண்டும். கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும்.
  • கடைசியாக இருந்தாலும், இதுதான் முதன்மையானது. தனது மார்க்கத்தை எப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது நம்மைவிட இறைவன் அதிக பொறுப்புள்ளவன். அவன் நாடினால், ஊடகங்களில் கொடிக்கட்டிப் பறக்கும், யூத, கிருத்துவர்களை அப்படியே முஸ்லிம்களாக மாற்றிவிட முடியும். அவர்களின் செயல்களில் ஏதோ ஒன்று அவனுக்குப் பிடித்திருப்பதால் என்னவோ அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், முறையீடுகளை அருளாளனிடம் முன் வையுங்கள். அவன் வழிகாட்டுவான்.
    அதுவரை, இருக்கும் அத்தனை பத்திரிகைகளையுமம் உங்கள் மேடையாக்குங்கள். இருக்கவே இருக்கின்றன ஆசியரியர்க்கான கடிதப் பகுதிகள். அவற்றில் நேர்மையாக இரு வரிகளை, உணர்ச்சி வசப்படாமல் பதிந்து வாருங்கள். பிரசுரமானால் மகிழ்ச்சி. பிரசுரமாகாவிட்டால் இறைவனிடம் இரட்டிப்பு நற்கூலி. ஒவ்வொரு கடிதமும் ஆசிரியர் பார்வைக்கு செல்லும் வலிமையான எழுத்துக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். தினமணியில் எனது ஆரம்ப பயணம், அறிமுகம் வாசகர் கடிதங்கள்தான். அந்த தொகுப்புகள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன. இதனுடைய நீட்சியும், கடின உழைப்பும், இறையருளும்தான் மற்றொரு காலத்தில் தினமணியின் 'ஆஸ்தான எழுத்தாளனாக' என்னை ஆக்கியது.
  • உங்கள் நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் இறைவன் நாடினால் வெற்றிப் பெறும் கவலை வேண்டாம்.

Tuesday, January 21, 2014

விருந்தினர் பக்கம்:'இருப்பவர்களுக்கும் தெரியும்! இல்லாமல் போனவர்களுக்கும் தெரியும்!'


வாழ்க்கையில் நான் எவரிடமும் நன்றியையோ விசுவாசத்தையோ எதிர்பார்த்ததில்லை. அதை வைத்துக்கொண்டு நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. ஒரு காலத்தின் நண்பர்களாக இருந்தவர்கள் ஏன் சட்டென மனம் இறுகி விரோதித்துக் கொண்டார்கள் என்று எனக்கு ஒருபோதும் காரணம் தெரிந்ததேயில்லை. அவர்களில் சிலர் இன்று கற்பிக்கும் காரணங்கள் பொய்யானவை. அபத்தமானவை. அவர்களுக்கு தங்கள் வெறுப்பை நியாயப்படுத்த ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.

அவர்கள் என்னை வெறுப்பதற்குக் உண்மையான காரணம் நான் அவர்களை புறக்கணித்தேன் என்பதுதான். ஆனால் ஒரு மனிதனைக் கூட நான் அப்படி நடத்த எண்ணியதில்லை. பாதுகாப்பான ஒரு வேலை, குடும்பம் , வரையறுக்கபட்டட சில இலக்குகள் என வாழ்பவர்களால் என்னைப் போன்ற ஒருவனை புரிந்துகொள்ளவே முடியாது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்பத்திலும் என்னிடமிருந்த எல்லாவற்றையும் வைத்து சூதாடியிருக்கிறேன். எனது உணர்ச்சிகரமான பைத்தியக்காரத்தனமான மன நிலைகளால் என்னை சார்ந்தவர்களை கடும் அபாயங்களுக்கு ஆளாக்கியிருக்கிறேன். எனக்கு இயற்கையும் சமூகமும் ஏற்படுத்தியிருக்கும் தடைகளை மிருக பலத்துடன் சளைக்காமல் எதிர்த்துப் போரிட்டிருக்கிறேன். இந்தப் போராட்டத்தில் சில சமயம் உறவுகளை பேண முடியாமல் போயிருக்கிறது. எனக்கு அவ்வளவு அவகாசமும் சவுகரியமும் உள்ள ஒரு வாழ்க்கை வாய்த்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்!

இப்போது என்னோடு இருப்பவர்களுக்குத் தெரியும். நான் அவர்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று. இப்போது என்னோடு இல்லாமல் போனவர்களுக்கும் தெரியும். நான் அவர்களை எவ்வளவு நேசித்தேன் என்று. என்னை அவமானப்படுத்துவதற்கு ஒருவர் ரொம்பவும் மெனெக்கெட வேண்டியதில்லை. அவ்வளவு எளிமையான இலக்கு நான். நான் அவமானங்களை கண்டு பின் வாங்கியதில்லை. ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து என்னால் பேச முடியும். ஆனால் அவர்களின் கண்கள் மிகவும் தாழ்ந்து போகின்றன.

ஆத்மாநாம் ஒரு கவிதையில் கேட்பார். ‘இந்த உலகில் சிகிட்சைக்கு தேவையான அன்புகூடவா இல்லாமல் போனது?' - என்று. இந்த வார்த்தைகளை இப்போது அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.

- மனுஷ்ய புத்திரன்
 

கவிதை: 'யுத்தம் ஒன்று வரும்!'



"இன்னும்..
புலிகளும் வரும்..
எலிகளும் வரும்..
செடி, கொடி, தாவரங்களும் வரும்
வியூகம் அமைத்து போர்த்தொடுக்க..!

மனித இனம்
சுயநலங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட..
அவைகளின் ஜன்ம பூமியை
மீட்டெடுக்க..!”


- சின்னக்குயில்

Monday, January 20, 2014

Saturday, January 18, 2014

நடப்புச் செய்தி: '4 வயது சகோதரனை துப்பாக்கியால் சுட்ட குழந்தை!'


விளையாட்டுப் பொம்மைகளாகி விட்டன நிஜத்தில் துப்பாக்கிகள். மலிந்து போன இந்தக் கலாச்சாரத்தால் கல்வி நிலையங்கள் ரத்தமயமாகிக் கொண்டிருப்பது போதாதென்று இப்போது வீடுகளிலும் இதேநிலை! ஆம்! அமெரிக்க சமூக அமைப்பில் மிகைத்துவரும் துப்பாக்கி கலாச்சாரத்தின் விளைவாக சொந்த அண்ணனையே குழந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் இது.

அமெரிக்காவின் டெட்ராய் நகரின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை 16.01.2014, வியாழன் அன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த தனது 4 வயது சகோதரனை சுட்டுக் கொன்றது. அதிஷ்டவசமாக கூட இருந்த மற்றொரு 5 வயது குழந்தை உயிர் தப்பியது. 


இந்த 3 குழந்தைகளும், தங்களது வீட்டின் படுக்கையறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போதுதான் இந்த அசம்பாவிதம் நடந்தது. 

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெட்ராய்ட் காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆடம் மாதேரா தெரிவிக்கிறார்.


வடக்கு கரோலினாவின் 'பயட் வில்லே'யில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரண்டு வயது பெண் குழந்தை தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இறந்துபோனது. அதேபோல, கடந்த அக்டோபர் மாதம் 5 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது.

2001 முதல் 2010 ஆண்டுவரையிலான அமெரிக்காவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் துப்பாக்கி சூடு மரணங்கள் 703, படுகாயமடைந்தோர் 7,766.

Friday, January 17, 2014

நடப்புச் செய்தி:'கெயில் நிறுவனத்துக்கு தடை'


தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக வேளாண் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் இந்தியா நிறுவனத்தின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் 4 வார காலம் தடை விதித்துள்ளது.

வேளாண் நிலங்களில் எரிவாயுக் குழாய் கொண்டு செல்வதை அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் கொண்ட அமர்வு முன் 17.01.2014 அன்று விசாரணைக்கு வந்தது. 


கெயில் சார்பிலான வாதம்: "குழாய் பதிப்பு வேலை மிகவும் அவசரம். இப்போது விட்டால், உரிய காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நெடுஞ்சாலை  வழியே குழாய் பதிப்பது இயலாத காரியம். தனியார் நிலத்தில் விவசாயத்துக்கோ, விவசாயிகளுக்கோ எந்த இடையூறும் இல்லை. எனவே தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது. குழாய்கள் பதிக்க அனுமதிக்க வேண்டும்."


இதற்கு நீதிபதிகள், "எதற்காக இத்திட்டத்துக்கு விவசாயிகளின் வீடுகளும், நிலங்களும்தான் வேண்டும் என்று கேட்கிறீர்கள்? இது முறையற்ற செயல். நெடுஞ்சாலைகளில் குழாய்களை பதிக்க முடியாது என்பதை அறைகளில் இருந்துகொண்டு முடிவு செய்யாதீர்கள். குறிப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு நடத்துங்கள். தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் எவ்வளவு நிலம் வேண்டும் என்பதை கூறுங்கள்" - என்று கூறினர். 

இதையடுத்து வழக்கு விசாரணை பிப். 17ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை இத்திட்டத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்திரவிட்டனர்.


Thursday, January 16, 2014

Wednesday, January 15, 2014

விருந்தினர் பக்கம்: 'கறிச்சோறு'



"கறிச்சோறு தின்னு கொஞ்ச நாளாச்சு " - ஆறு வயசு சின்னப் புள்ளே என் கழுத்தைக் கட்டி சொன்னபோது மனசு கனத்துப் போச்சு!
 
" நாளைக்கு சாப்பிடலாம் பிள்ளே" ன்னு சமாதானமா சொல்லி வெச்சேன்!

பொண்டாட்டி கைமணத்தோட சமைச்சு, புள்ளைங்களோட உக்காந்து, அதுகளுக்கு ஊட்டிவிட்டு, உண்ணுற சந்தோசம் வேறே எதிலே கெடைக்கும்?


ராத்திரி போட்ட மப்புலே நேரங்கழிச்சு எந்திரிச்சாலும் கறிக் கடை பீருபாயி பழக்கத்தை மறக்காமே, பணத்தக்கூட வாங்காமே, தந்த கறியை வீட்டுலே கொடுத்துபுட்டு, வயக்கரைப் பக்கம் போயி நேரங்கழிச்சி திரும்பி வந்தா, தெரு பூரா கறி வாசம்!

சாணம் பூசுன தரையிலே, வாழை எலயைப் போட்டு மணக்க மணக்க சோறு கறியை எடுத்து வச்சு பெரிய பொண்ணு சாப்பிடச்சொன்னா !

இப்போ வேண்டாமுன்னு சொல்லிபுட்டு பொண்டாட்டி, புள்ளையை உண்ணச் சொல்லி, அதுங்க உண்ணுற அழகை கொஞ்ச நேரம் ரசிச்சுப் பார்த்தேன் !

அப்புறமா துண்டை எடுத்து தோளிலே போட்டுக்கிட்டு திண்ணையிலே போயி உக்காந்தா, எரிமலை கொழம்பு போலே நெஞ்செல்லாம் வெடிச்சு போச்சு!  

சத்தம் கேக்காத அழுகையிலே உசுரே கரைஞ்சு போச்சு!  

மனசுக்குள்ளே கசிஞ்ச ரத்தம் கண்ணீரா கண்ணுக்குள்ளே முட்டிரெண்டு கண்ணும் மறஞ்சு போச்சு !


போனவருசம் என்புள்ளையைபோல நான் படுத்த திண்ணைக்கு பக்கத்திலே படுத்துக் கிடந்த மாடு, செத்து ஒரு வருசமாச்சு !

மாட்டுக்கு பொங்கல் வச்ச என் வீட்டுக்குள்ளே இன்னிக்கு மாடு இல்ல ... மாட்டுக்கறி பொங்கல் !




- Abu Haashima Vaver