பகுத்தாய்தலும்,
அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் மறுத்தலும், பகுத்தாய்ந்த அந்த இருத்தல்
ஒன்றை மட்டும் உறுதிப்படுத்தலும்தான் சத்தியசோதனையாகும்! அதுவும்
அந்தஆழ்ந்த தேடலில் கிடைக்கும் நிஜம்தான் பரம்பொருள் என்பது! "கேட்க
முடியாத... பார்க்க முடியாத.. எந்தச் செயலையும் சுயமாக செய்ய முடியாத
படைப்புகளை வணங்குவதேன்?" ஆணித்தரமான அந்தக் கேள்விகளின் வீச்சில்
சமூகமும், பெற்றோர்.. உற்றார் - உறவுகளும் நிலைகுலைந்த
ு போகின்றன..
<><><><><><><><><><><><><><><><><><><><><>
ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புப் பகிர்வு:
````````````````````````````````````
பரம்பொருள் ஒன்றெனப் பறைச்சாற்றும் பயணம்
`````````````````````````````````````````````````
மனித இனத்துக்கு நேர்வழி காட்ட தனது திருத்தூதர்களை அனுப்பி வைத்தான்
இறைவன். மனித இனத்திலிருந்தே தோன்றிய அந்த உத்தமர்கள, நல்வழியில்
நடப்போருக்கு நற்செய்தியையும், தீயவழியில் உழல்வோருக்கு அச்சமூட்டி
எச்சரிக்கையும் செய்தார்கள்.
நேர்வழி குறித்து மக்ளிடையே ஏற்பட்ட
கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக வான்மறைகளையும் இறைவன் இறக்கியருளினான்.
நபிமார்கள், தீர்க்கத்தரிசிகள் அல்லது இறைத்தூதர்கள் என்றெல்லாம்
அழைக்கப்படும் இந்த மாமனிதர்களின்
வரிசையில் அனுப்பட்டவர்தான்
ஆப்ரஹாம் என்றழைக்கப்படும் இப்ராஹீம் நபி. இவருக்கு 'கலீலுல்லாஹ்' அதாவது
இறைவனின் தோழர் என்ற பட்டப் பெயரையும் வழங்கிச் சிறப்பித்தான் இறைவன்.
இப்ராஹீம் நபியவர்களின் வாழ்க்கையில் ஐந்து முக்கியமான கட்டங்கள் இடம் பெறுகின்றன.
அவை:
1.ஓரிறைக் கொள்கைக்கான தேடல்,
2.இறைத்தூதை சமர்பிக்க வீடு வாசல், நாடு நகரம், சொந்த பந்தங்கள் துறத்தல்.
3.இறையாணைப்படி மனைவி-மகனைப் பாலையில் துறந்து விடல்,
4. பெயர் சொல்லப் பிறந்த பிள்ளையை இறைவனுக்காக பலியிடத் (குர்பானி) துணிந்த மனப்பாங்கு,
5.கஅபா இறையாலயத்தை எழுப்பி ஓரணியில் ஒத்தக் கருத்தாளர்களை திரட்டல்.
இப்ராஹீம் நபியவர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் அவருடைய தந்தையார்..பெரிய
மதத்தலைவராக இருந்தார். அரசப் புரோகதிதர்களில் முதன்மையானவர் அவர். அவரது
இல்லம் சிலை வழிபாட்டுக்கும் .. சிலைகள் விற்பனைக்கும் தலைமையகமாக
இருந்தது. ஆட்சியாளர்களிடமும்.. மக்களிடமும் அவரது செல்வாக்கு கொடி கட்டிப்
பறந்தது.
தமது சமுதாயத்தவரின் நடவடிக்கைக் கண்டு .. அவர்களின் இறைவணக்க முறைமைகளைக் கண்டு..
இப்ராஹீம் நபி சிந்தனையில் ஆழ்ந்தார். அதை தந்தையிடம் கேட்கவும் செய்தார்
இப்படி:"கேட்க முடியாத.. பார்க்க முடியாத.. தனக்குத் தாமே எந்தச் செயலையும்
செய்து கொள்ள முடியாதவைகளை நீங்கள் வணங்குவதேன்?பூமி, ஆகாசங்களைப்
படைத்தவன் எவனோ.. யாருடைய கட்டளைப்படி சூரிய-சந்திரன்கள் சுழல்கின்றனவோ
அந்த வல்லோனையே நான் வணங்குகின்றேன். அவன்தான் எனது இறைவன். அவனே எனது
அதிபதி. அவனையே நீங்களும் வணங்குங்கள்!" - என்றார்.
ஆனால், அவர் தந்தையோ அதைக் கேட்பதாயில்லை. அந்தக் கருத்தையும் ஒப்பவில்லை.
கடைசியில், பகுத்தறிவு பேசிய .. பரம்பொருளை உணர்ந்த... இப்ராஹீம் நபி
வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். தமது வீடு, வாசல்.. வாழ்க்கை
வளங்கள் எல்லாவற்றையும் துறந்தார்.
தந்தையாருக்கு விடுத்த
அழைப்பையே சமூக மக்களுக்கும் தந்தார். அந்த அறிவுரையைக் கேட்கவில்லை
சமுதாயம். கடுமையான பகைமை பாராட்டியது. தங்களின் நம்பிக்கைகள் சரிந்து
விடாமலிருக்க ..தங்கள் தெய்வங்களை விமர்சித்ததற்கும் , விக்கிரங்களை
உடைத்ததற்கும் தண்டனை அளிக்க முடிவெடுத்தார்கள் சமுதாயத்தார்.
பெரிய அக்னி குண்டத்தைத் தயார் செய்து அதில் இப்ராஹீம் நபியை
எறிந்தார்கள்.இறைவனின் ஆணைப்படி நெருப்பு தனது இயல்பை மாற்றிக் கொள்ள
குளிர்ந்த சோலையானது அக்னி குண்டம்.
சமூகம் இனி தமது போதனையை ஏற்காது என்ற நிலையில்.. இப்ராஹீம் நபி நாட்டைத் துறந்தார்.
பிறந்த நாடு, பெற்ற உறவு, சொந்த - பந்தங்கள், சமூக அந்தஸ்து இவை
அனைத்தையும் இழந்தார். மற்றொரு நாட்டை அடைந்து தமது பகுத்தறிவு வாதத்தை
முன் வைத்து ஓரிறைக் கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் பணியைத்
தொடர்ந்தார்.
அந்தக் காலத்தில் நம்ரூத் என்னும் மன்னன் ஆட்சிப்
பீடத்தில் அமர்ந்திருந்தான். மன்னனுக்கும் இறைச் செய்தியை விடுத்தார்
இப்ராஹீம் நபி. ஆளுவோனோ தானே இறைவன் என்றான். வாழ்வும், மரணமும் அளிக்க
வல்லவன் தான்தான் என்று மமதையுடன் பேசினான். ஓரிறைக் கொள்கையை முற்றிலும்
நிராகரித்தான்.
அப்போதும் இப்ராஹீம் நபி ஆவேசப்படாமல் அருமையாக
தர்க்கம் புரிந்தார். " நீதான் இறைவன் என்றால்.. கிழக்கில் உதிக்கும்
சூரியனை எங்கே மேறகில் உதிக்கச் செய் பார்ப்போம்!" - வாய் மூடி நின்றான்
நம்ரூத். அதிகாதர இறுமாப்பில் பல்வேறு தொல்லைகளைத் தர ஆரம்பித்தான். அதை
எல்லாம் துணிவுடன் எதிர்கொண்டார் இப்ராஹீம் நபி.
உலக நாடுகள்
பலவற்றில் சுற்றித் திரிந்தார். சிரியா, பாலஸ்தீனம், எகிப்து என்று பல
நாடுகள் சென்றார். இந்த நேரத்தில் இறைவன் அவரைப் பல்வேறு கடும்
சோதனைகளுக்கு உட்படுத்தினான்.
இப்ராஹீம் நபியின் வாழ்க்கைத்
துணைவியார் ஹாஜிரா அம்மையார், பெயர் சொல்ல தள்ளாத வயதில் பிறந்த பிள்ளை
இஸ்மவேல் எனப்படும் இஸ்மாயீல் இவர்களும் சோதனையானார்கள் இப்ராஹீம்
நபிகளுக்கு.இந்த இருவரையும்... இறைவனின் கட்டளைப்படி ஒரு சொட்டு தண்ணீர்கூட
கிடைக்காத பாலையில் விட்டுவிட்டு இறைத்தொண்டு செய்ய வேண்டும் என்பது
இறையாணை!
இறைவனின் கட்டளைப் பிறந்ததோ இல்லையோ, உணர்வுகளை அடக்கிக்
கொண்டு மக்கா திசையில் புறப்பட்டுச் சென்றார். ஆள் அரவம் இல்லாத அந்தத்
தனியிடத்தில்.. ஒரு பேரீச்சம் மரநிழலில் ஒரு சிறிய நீர் துருத்தியை
மட்டும் அளித்துவிட்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டு புறப்பட்டார் இப்ராஹீம்
நபி.
"இறைவா! உனக்காக உனது பாதுகாப்பில் இவர்களை விட்டுச் செல்கின்றேன். காத்தருள்வாயாக!"அவரது நெஞ்சம் கசிந்தது இறையருளுக்காக!
தனது அடியாரின் உயரிய தியாகம் கண்டு மகிழ்ந்த இறைவன் எக்காலமும் வற்றாத 'ஜம்..ஜம்..' நீரூற்றைத் தோன்றச் செய்தான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இறையருளின் சாட்சியாக... வற்றாத ஊற்றாகி இன்றுவரை அது காட்சியளிக்கிறது.
ஜம் ஜம் நீரூற்றைச் சுற்றி குடியிருப்புகள் உருவாயின. நாளடைவில் சிறிய கிராமமாக அவ்விடம் உருவெடுத்தது.
தள்ளாத வயதில் இப்ராஹீம் நபி மற்றொரு கடுமையான சோதனையைச் சந்திக்க வேண்டியிருந்தது.
"இறைபக்தி உயர்ந்ததா? பிள்ளைப் பாசம் உயர்ந்ததா?" - இந்தக் கேளவிகளுக்குப்
பதிலாக "இறைவனின் திருப்பொருத்தம் ஒன்றே போதும்..!" - என்றார்
திட்டவட்டமாக இப்ராஹீம் நபி. தள்ளாத வயதில் பெயர் சொல்லப் பிறந்த பிள்ளை
இஸ்மாயீலையும் பலியிடத் தயாராகிவிட்டார்.
கடைசியில், பக்தி
வென்றது. மகனாரும் பலி பீடத்திலிருந்து இறக்கப்பட்டு உயிர் பிழைததார்.
தியாகத்தில் தந்தையாருக்குத் தப்பாத தனயன் என்று வரலாற்றில் பெயர்
பெற்றார்.
இறைவனின் கட்டளைப்படி இப்பராஹீம் நபி கஅபாவை கட்டத் தொடங்கினார்.
அரபுநாட்டின் மக்கா மாநகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலே கஅபா. ஓரிறைக் கொள்கைக்கான உலகின் முதல் வழிபாட்டுத் தலம்.
இப்ராஹீம் நபியும், அவது மகனார் இஸ்மாயீல் நபியும் எழுப்பிய இறையில்லமே
கஅபா. ஓரிறைக் கொள்கையின் தலைமைக் கேந்திரம் அது. உலகெங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட இறையில்லம்.
"பரம்பொருள் ஒன்று!" - என்று நம்பிக்கைக் கொண்ட உலக மக்கள் எல்லாம்
அவர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வர அழைப்பு கொடுக்கும்படி
கட்டளைியட்டார்... இப்ராஹீம் நபி தன் மகனார் இஸ்மாயீல் நபிக்கு.
அந்த அழைப்புக்கு செவிசாய்த்தவர்களாய் .. "அல்லாஹீம்ம ... லப்பைக்க..
இதோ..ஆஜராகிவிட்டேன் இறைவா..!" - என்று பதில் முழக்கமிட்டவர்களாய் ஓரிறைக்
கொள்கையாளர்களினன் பயணம் தொடர்கிறது ஆண்டுதோறும்.
இப்ராஹீம் நபி
மற்றும் இஸ்மாயீல் நபி (இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) ஆகிய
இறைத்தூதர்களின் மாபெரும் இறை தியாகத்தை நினைவுறுத்தும் புனிதப் பயணமே ஹஜ்
யாத்திரை.
வசதி படைத்த ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் வாழ்வில் ஒரு
முறை கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய இடமிது. ஓரிறைக் கொள்கைக்குச்
சான்று பகரும் பயணம் இது.
<><><><><><><><><><><><><><><><><><><><><>
அன்பு சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தார் உற்றார் உறவினருக்கும் 'தியாகத் திருநாள்' வாழ்த்துக்கள்!
<><><><><><><><><><><><><><><><><><><><><>
|
|
0 comments:
Post a Comment