"முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு யார் காரணம்? பின்தங்கியிருக்கிறார்கள் என்று த.மு.மு.க உட்பட பலரும் கூறுகிறார்கள். படிக்க வேண்டாம் என்று இவர்களை யார் தடுத்தார்கள்?" (இராம கோபாலன் -16.07.1999, விஜய பாரதம்)
இந்தக் கேள்வி வலுவானது. கேட்பவர் இராம கோபாலன் என்பதாலேயே கேள்வியில் நியாயமில்லை என்றாகிவிடாது.
'இந்த நாட்டில் முஸ்லிம்களை கல்வி கற்க வேண்டாம் என்று யார் தடுத்தது? யாரும் தடுக்கவில்லை! அப்படியானால்.. முஸ்லிம்கள் அறிவைப் பெற வேண்டாமென்று இறைவேதம் தடுக்கிறதா? அல்லது இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) தடுக்கிறார்களா?'
ஒருக்காலும் இல்லை. இறைவேதமும் தடுக்கவில்லை. இறைத்தூதரும் தடுக்கவில்லை.
"இறைவா! என் அறிவை அதிகப்படுத்துவாயக!" (திருக்குர்ஆன் - 20:144)
"எவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு இறைவன் உயர்ந்த பதவிகளை வழங்குவான்!" (திருக்குர்ஆன் - 58:11)
"எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார்" (திருக்குர்ஆன் - 2:269)
"அறிவைப் பெற்று அதைப் பரப்புபவரே உங்களில் சிறந்தவராவார்!" - அறிவின் முக்கியத்துவம் குறித்து நபிகளார் (ஸல்) இதுபோன்ற பல பொன்னுரைகளை வழங்கியுள்ளார்கள்.
கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய திருமறையின் கட்டளைகளையும், திருநபிகளாரின் (ஸல்) பொன்னுரைகளையும் முஸ்லிம்கள் அலட்சியப்படுத்தினார்கள். இந்தப் புறக்கணிப்பால் பின்தங்கி போனார்கள்.
உண்மை நிலை இப்படி இருக்க முஸ்லிம்கள் கல்வி பெறாததற்கு மற்ற சமூகங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடுகள் அவசியம் என்னும் அதேவேளையில் அவற்றை நிரப்ப சீரான நடைமுறைகள் வேண்டும். அதற்கான பிரத்யேக பயிற்சிகள் தர வேண்டும். கற்போரை முனைப்புடன் உருவாக்க வேண்டும். ஏற்கனவே பிற சமுதாய மக்களுக்கான குறுகியகாலத்திட்டமான இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படாததால்.. நாடு விடுதலை அடைந்து இதுவரையிலான காலத்துக்கு அதன் அசல் இலக்கை அடைய முடியாமலிருக்கிறது.
அஞ்சலையின் வயிற்றிலிருக்கும் அமாவாசைக்கு இட ஒதுக்கீடு காத்திருந்தும் அவன் அதற்கான தகுதி பெறவில்லை. அதனால்.. காடு-கழனியில் வயிற்றுப்பாட்டுக்காக சகதியுடன் சகதியாக உள்ளான். ஹாஜிரா பீவியின் வயிற்றிலிருக்கும் சான் பாஷாவுக்கும் இதே நிலைதானே?
முஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையில் நடப்பது என்ன?
பையனுக்கு பத்து வயதானதும், கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். பதினெட்டு வயதானதும் வெளிநாட்டு பயணத்துக்கு தயார் நிலையில் பாஸ்போர்ட்-விசா எடுக்கப்படுகிறது!
அதனால், இடஒதுக்கீடுக்கான கொடிகள் தூக்குவதைவிட முஸ்லிம் சமுதாயத்தை படித்த சமூகமாக மாற்றி அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதே அவசியம். அதுதான் அறிவுடமைகூட!
தனது இனம், தனது மக்கள் என்று ஒரு வட்டத்துக்குள் முஸ்லிம்கள் அடைத்துக்கொள்ள முடியாது! அப்படி நபிகளார் (ஸல்) நினைத்திருந்தால்... இஸ்லாம் உலகம் முழுக்க பரவியிருக்காது!
அதனால்.. முஸ்லிம்கள் முதலில் தங்கள் பொறுப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். அறிவு ஜீவிகளாக, மனிதகுல நலன் விரும்பிகளாக, மனிதரில் மாணிக்கங்களாக தங்கள் பண்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருநாள் மாலையில், நடந்த உண்மை சம்பவம் இது. எனது வீட்டுக்கு எதிரே அடிபம்பு ஒன்று இருக்கிறது. அன்று எதிர்வீட்டுச் சிறுமி லட்சுமி தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள். பம்பின் வாஷர் தேய்ந்து போனதால்... "கிறீச்.. கிறீச்.." என்று அதிகப்படியான சத்தம் வர ஆரம்பித்தது. ஓடோடி வந்த நண்பர் சுப்பிரமணியன் லட்சுமியின் தந்தை மகளிடம் இப்படி சொன்னார்:
"எதிர்வீட்டு மாமாவுக்கு இப்போ தொழுகை நேரம். பம்ப் சத்தம் தொழுகைக்கு இடைஞ்சலா இருக்கும். அஞ்சு நிமிஷம் கழிச்சு தண்ணி புடிச்சுக்கலாம்.. வா.."
நமது நாட்டில் இருக்கும் ஆயிரமாயிரம் சுப்பிரமணியன்களுக்காக முஸ்லிம்கள் எதையும் இழக்கலாம். இந்த நல்லவர்களுடன் நம் தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது முக்கியப் பணியாகும்.
நல்லிணக்கம் குலைந்து விட்டால்.. சமூகத்திலிருந்து அமைதியும் பறிபோய்விடும். அமைதி பறிபோனால்.. முன்னேற்றம் தடைப்பட்டுவிடும்.
இந்நிலையில், மதசார்பற்ற தன்மையில் நம்பிக்கைக் கொண்ட அறிவு ஜீவிகள் அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியப் பணி இதுதான்:
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை கிஞ்சிற்றும் தயக்கமின்றி முஸ்லிம்களுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதேபோல, அவர்களது பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் முஸ்லிம்கள் மன இறுக்கங்களிலிருந்து விலகி இயல்பு நிலைக்கு வர முடியும். தங்களது கவனத்தை தேச நிர்மாணப்பணிகளின் பக்கம் திருப்ப முடியும்.
புகழ் பெற்ற இஸ்லாமிய பேரறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான் சொன்னது போல, "தேசப் புனரமைப்பு என்பது முஸ்லிம்களை ஒதுக்கியா? அல்லது அவர்களின் பங்களிப்புடனா?"
இந்தக் கேள்விக்கு நமது அரசியல் தலவர்கள், "முஸ்லிம்களின் பங்களிப்புடனேயே தேச நிர்மாணம்!" - என்று உரத்துச் சொல்ல வேண்டும்.
வெறும் அரசியல் முழக்கங்களோ, உணர்ச்சிகரமான உரைகளோ, அலைக்கடல் கூட்டமோ, மைதானங்கள் கொள்ளா மாநாடுகளோ முஸ்லிம்களின் அறிவுபூர்வமான வளர்ச்சிக்கு துணையாகாது. இதற்கு சாட்சியாக ஒரு அரைநூற்றாண்டுக்கும் அதிகமான இந்திய வரலாறு கண் முன் நிற்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.
தொலைநோக்குடைய திட்டங்களும், அதை நிறைவேற்றத் துடிப்பான செயல்பாடுகளுமே முஸ்லிம்களுக்கான இன்றைய அவசியம் தேவை!
(இந்தக் கட்டுரை, 1-15 செப்டம்பர் 1999 இல் சமரசம் மாதமிருமுறை இதழில் நான் எழுதியபோது, அன்று பார்த்த அதேநிலைதான் ஒரு 13 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் தொடர்கிறது. கட்சிகள், அமைப்புகள் பெருகியதே தவிர .... இந்த சமூகம் வளர்ச்சியுறாமலிருப்பதையே காண முடிகிறது!)
கல்வி என்பது எல்லா துறைகளிலும் இருக்கவேண்டும் , ஒரு பக்கம் மட்டும் வீங்க கூடாது , தொட்டதுக்கெல்லாம் ஹராம் பார்க்க கூடாது , ஹராம் ஹலால் நம் நெஞ்சிலுருந்தாலே போதும் , ஒரு உதாரனத்திற்க்கு பேங்கில் வேலை பார்ப்பது ஹராமா ? அங்கும் வட்டி கணக்கு எழுதப்படுகிறதே , கெமிக்கல் துறையில் வேலை பார்ப்பது ஹராமா ? அங்கு எத்தில் அல்கஹோல் தயாரிக்க படுகிறதே . டெலிபோன் டிபார்ட்மெண்டில் அபாச பேச்சுகளுக்கு இணைப்பு கொடுக்கபடுகிறது , ஹோட்டல் மானேஜ்மேண்டில் எல்லா வேலையும் பார்ப்பது போல் வரும் ? எல்லா தொழிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் . நாம்தான் பகுத்து அறிந்து நடக்க வேண்டும் , இல்லை நாங்கள் இப்படியே தான் இருப்போம் என்றால் எல்லா முஸ்லிம்களும் இமாம்களாகி விடுவோம் , கையில் மயில் இறக்கையும் ஊதுவத்தியும் சாம்பிராணியும் வைத்து கடைகளுக்கு புகை போடுவோம் வாருங்கள் .
ReplyDeleteஅஞ்சலையின் வயிற்றிலிருக்கும் அமாவாசைக்கு இட ஒதுக்கீடு காத்திருந்தும் அவன் அதற்கான தகுதி பெறவில்லை. அதனால்.. காடு-கழனியில் வயிற்றுப்பாட்டுக்காக சகதியுடன் சகதியாக உள்ளான். ஹாஜிரா பீவியின் வயிற்றிலிருக்கும் சான் பாஷாவுக்கும் இதே நிலைதானே? பொருளாதாரமும் காரணமில்லையா....?
ReplyDeleteஇந்த உலக வாழ்க்கை மறுமைக்காகத்தான் வாழ வேண்டும்.அல்லாஹ்வின் கட்டளையில் சிறிதும் கூட்டவோ ,குறைக்கவோ முடியாது.முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்பதை ஏற்றுக்கொண்ட நாம் ஹராம் ஹலால் பேணித்தான் ஆக வேண்டும்.உலக வாழ்க்கை மட்டும் போதும் என்றால் ஹராம் ஹலால் பேனாமல் வாழலாம். வட்டி ஹராம் என்றால் ஹராம் தான்.அதற்க்கு புது வடிவம் குடுத்து ஹலால் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.இசை ஹராம் என்றால் ஹராம் தான்.அதில் எந்த சமரசத்திற்க்கும் வேலையில்லை.இதில் தான் நாம் அல்லாஹ்விற்க்காக முழுமையாக கட்டுப்படுகிறோம் என்பதை குறிக்கிறது.
ReplyDeleteமுஸ்கானின் அல்லாஹ் அக்பர் பெரிதாக பார்க்கப்ப்டும் இந்த சமூகத்தில் தன்னுடைய வாழ்க்கையில் ஃபஜ்ர் தொழுகையின் அல்லாஹ் அக்பர் அலட்சியபடுத்த படுவதே இந்த சமூகத்தின் சாபக்கேடு.
உலக கல்வி கற்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை.அது மார்க்க வரம்புக்கு உட்பட்டு இருக்கிறதா என்று மிக தெளிவாக பார்க்க வேண்டும்.
ஆனும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் முறையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.இப்போது நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.வாழ்வது எனது அல்லாஹ்விற்க்காகவா இல்லை உலகத்திற்காகவா என்று.