NewsBlog

Thursday, November 1, 2012

புனித ஹஜ்ஜின் சர்வதேச பிரகடனம்: இளவரசர் காலித் அல் பைஸல் பெருமிதம்!

ஒரே ஒரு வேளை விருந்துக்கு அழைத்து.. வந்த விருந்தாளிகளை இன்முகத்துடன் கவனித்து அனுப்ப நாம் எவ்வளவு சிரமப்படுகின்றோம். அவர்களின் தேவைகளைக் கவனிக்க பாடாத பாடுபடுகின்றோம். 

ஆனால், 40 லட்சம் பேர்களை ஒரே இடத்தில் திரட்டி.. ஒரு மாதத்திற்கு மேலாக அவர்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றி அவர்களை இன்முகத்துடன் திருப்பி அனுப்ப முடிகிறதென்றால்.. இது இறைவனின் திரு உதவியன்றி வேறொன்றாக இருக்க முடியாது.

ஆம்.. புனித கஅபாவை தரிசிக்க உலகம் முழுவதிலிருந்தும் திரண்டு வரும்  ஹஜ் யாத்திரிகர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இறையருளுக்கானது. அத்தகைய பொறுப்பு வகிக்கும் சவுதி அரசாங்கம் நிச்சயம் இறைவனின் திருப்பொருத்தத்துக்கு ஆளாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

"இவ்வாண்டு கிட்டதட்ட 40 லட்சம் யாத்திரிகர்கள்  ஹஜ் வழிபாட்டை நிறைவேற்றியுள்ளனர்!" - என்கிறார் மக்காவின் ஆளுநர் மற்றும் இளவரசர் காலித் அல் பைஸல்.

"இறையருளால்.. இவ்வாண்டின்  ஹஜ் வழிபாடு சிறப்பாக முடிந்தது!"- செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  

"முஸ்லிம்கள் அமைதி விரும்பிகள். அவர்கள் அடுத்தவரோடு இணக்கமாக வாழவே விரும்புகின்றனர்!"- என்ற  ஹஜ்ஜின் செய்தியை சர்வதேச ஊடகங்கள் பிரதானப்படுத்தியதற்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 


"இஸ்லாம் மனித இனத்துக்கு சேவைச் செய்யும் மார்க்கமாகும். சாந்தியையும், சமாதான வாழ்வியலையும் போதிக்கும் வாழ்க்கை நெறியாகும்.. ஆனால், துரதிஷ்டவசமாக எதிர்மறைக் கருத்துக்களையே ஊடகங்கள் பிரதானப்படுத்துகின்றன!"-என்று தமது வருத்தத்தையும் அவர் தெரியப்படுத்திக் கொண்டார். 

 ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் ஒரே சீறுடையில் இருந்தார்கள். ஓரே இடத்தில் வாழ்ந்தார்கள். ஒரே இடத்துக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள். அங்கு ஒரேவிதமான சடங்குகளை நிறைவேற்றினார்கள். இதன் மூலம் அவர்கள் அனைவரும், "தாங்கள் அமைதி விரும்பிகள்"- என்ற ஒரே செய்தியை முழு உலகுக்கும் உணர்த்தியுள்ளார்கள்!"- என்றார் அவர் தொடர்ந்து.

ஊடகங்களின் விமர்சனங்கள் சம்பந்தமான ஒரு கேள்விக்கு கவர்னர் காலித் அல் பைஸல் பதிலளிக்கும்போது, "ஆக்ககரமான விமர்சனங்களை சமூக கண்ணோட்டத்துடன் தரும் ஊடகங்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம். சீர்த்திருத்தங்கள் தேவை எனும் போது, அதை எங்களிலிருந்தே நாங்கள் ஆரம்பித்துக் கொள்வோம்!"- என்றும் அவர் பதிலளித்தார். 

"சட்டவிரோதமாக  ஹஜ் செய்ய வருவோரை தடுக்கும் விதமாக அரசு அடுத்த ஆண்டு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க இருக்கிறது. புள்ளிவிவரவியல் துறையின் அறிக்கையின்படி இவ்வாண்டு 3.16 மில்லியன் பேர்  ஹஜ்ஜை நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்த அவர் அதன் பிறகு வந்த புள்ளி; விவரப்படி, பெருநாளின் முதல் நாளன்று மட்டும் 3.65 மில்லியனுக்கும் அதிகமானோர் சாத்தானுக்கு கல்லெறியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்டதட்ட 1.4 மில்லியன் பேர் முறையான ஆவணங்கள் இன்றி  ஹஜ் செய்ய வந்திருந்த சவுதி நாட்டைச் சேராதவர்கள்!" - என்றார் அவர் தொடர்ந்து. 

"இறையருளால் எல்லாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. சமீப காலத்தில் நடந்த  ஹஜ்ஜில் இது மிகவும் சிறப்பான  ஹஜ் ஆகும்!" - என்றும் அவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

1,20,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 

புனித இடங்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிடங்களை ஏற்படுத்தித் தந்த நாட்டின் பிற துறையினருக்கும் கவர்னர் காலித் அல் பைஸ் நன்றயையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார். 

 ஹஜ் யாத்திரிகர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியோடும், கடமையுணர்வோடும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்டதற்கு அவர் வெகுவான பாராட்டுதல்களை தெரிவித்தார். 

அதேபோல, யாத்திரிகர்களை கவனித்துக் கொள்ள பொறுப்பு வகித்த தொண்டர் படையினரையும் மற்றும்  ஹஜ் உறுப்பினர்களுக்கும்  அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

யாத்திரிகர்களுக்கு மஷாயிர் ரயில்நிலையத்தில் நடந்த அசௌகர்யங்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
 (Source: Arab News)

0 comments:

Post a Comment