NewsBlog

Thursday, November 29, 2012

எதிர்காலம் தொலைத்துவிட்ட இளையபாரதம்!

"இன்றைய குழந்தைகளே நாளைய குடிமக்கள்!"- என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் எதிர்காலம் தொலைத்துவிட்ட இருள்படிந்த முகத்தினர் என்பதும், புத்தகம் சுமக்க வேண்டிய கைகள் ஸ்பேனர், சுத்தியல் என்று அழுக்குப் படிந்தவர்களாய்  மாறிவருகிறார்கள் என்பதும் சத்தியம்.

உலகில் இருக்கும் 10 ஆயிரம் மில்லியன் குழந்தைத் தொழிலாளர்களில் இந்தியாவில் இருப்போர் மட்டும் இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் என்று கசப்பான உண்மையைச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்!

பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒருபுறம் மையஅரசும், மறுபுறம் மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களை இயற்றியும் பயனில்லாமல் போய்விட்டது. பல தன்னார்வ சமூக அமைப்புகள் களத்தில் இறங்கி நடவடிக்கைகள் எடுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பெற்றோரின் பொறுப்பின்மை, நலிந்த குடும்பத்தின் சூழல்கள், வாழும் சமூகத்தின் அக்கறையின்மை போன்றவை நாளுக்கு நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகக் காரணங்களாக இருக்கின்றன.



தமிழகத்தின் தலைநகர் சென்னையில், எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் பரட்டைத்தலை, அழுக்குப் படிந்த சட்டை, கைக்கால்களில் காயத்தழும்புகள், சோகம் கப்பிய முகத்தில் துரு துருவென கண்களுடன் குழந்தைத் தொழிலாளர்களின் தரிசனம் காணலாம். உழைத்து சந்ததிகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெற்றோர்கள் தமது பொறுப்புகளை மறந்து தமது பிள்ளைகளையே மூலதனமாக்கி ஜீவிதம் நடத்துகிறார்கள். "அம்மா பசி, அய்யா பசி..!" -  என்று இரந்துண்ட வாழ அந்தக் குழந்தைகளை பழக்கப்படுத்துகிறார்கள்.

இதுபோலவே, 15 வயதுகூட நிரம்பாத குழந்தைகள்,  ஹோட்டல், தோல் மண்டிகள், பட்டாசு தொழிற்சாலைகள், உணவுவிடுதிகள், பெட்ரோல் பங்குகள், மெக்கானிக் ஷாப்புகள் என்று தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.பெரிய கோணிப்பையைத் தூக்கிக் கொண்டு குப்பைப் பெருக்கும் சிறுவர்-சிறுமிகளையும் காண முடியும்.



நகரின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை ஏழை - பாழைகள் குழந்தைகளை வளர்க்க போதிய வருமானம் இல்லததால், வருமானத்துக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால்.. தமது குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

கல்வி கற்க வேண்டும், வாழ்வில் உயர வேண்டும் என்ற ஆசைகள் நிறைவேறாமலேயே குழந்தைகள் மடிந்துவிடுகின்றன. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையினர் கல்லாதவர் என்பது குறிப்பிடதக்கது.

சென்னை நகரின் குடிசைப் பகுதிகளில் வசிப்போரில் 36 ஆயிரம் குழந்தைகள் கல்லாதவை என்று மாநகராட்சியினர் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவருகிறது.



வெல்டிங் பட்டறைகள் போன்ற ஆபத்துமிக்க இடங்களில் பணிப்புரியும் குழந்தைகள் உடல் ஊனமுற்றோராய் எதிர்காலம் இழந்து தவிப்பதும் அதிர்ச்சிகரமான தகவலாகும்.

 ஹோட்டல்களில் பணிப்புரியும் குழந்தைகள் 14, 15 மணி நேரம் ஓய்வு ஒழிச்சலின்றி கசக்கிப் பிழியப்படுகிறார்கள். பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்  பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் குவாரிகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள். பாறைகள் மற்றும் பறக்கும் தூசுக்கு இடையில் இவர்கள் படும்பாடு கண்ணீரை வரவழைத்துவிடும். இந்தப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் கல்லுடைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க இயற்றப்பட்ட சட்டங்கள் கையாலாகாதனத்துடனிருக்க.. நேரு கண்ட இளைய பாரத கனவுகள் கனவுகளாகவே  மிஞ்சி நிற்கின்றன.

மொத்தத்தில் உயிர்ப்பில்லாமல் நடைபிணமாய் இளைய பாரதம்.

நாடு விடுதலை அடைந்து அரை நூற்றாண்டை தாண்டியாகிவிட்டது. இந்நிலையில் குழந்தைத் தொழிலாளர்க்கு பூட்டியிருக்கும் அடிமைத்தளைகளை உடைக்கப் போவது யார்?



0 comments:

Post a Comment