NewsBlog

Friday, November 30, 2012

அமிலாபிஷேகங்களில் கருகும் தேவிகள்!

 அந்த இருண்ட இரவு அவளுடைய வாழ்க்கையையே இருட்டாக்கி விடப்போகிறது என்பது உண்மையிலேயே தெரிய நியாயமில்லைதான்! அன்றைய நித்திரைதான் அவளது சுகமான கடைசி நித்திரை எனபதையும் அவள் அறியமாட்டாள்! நடு இரவில் கதவை உடைத்துக் கொண்டு நுழைகிறது ஒரு கூட்டம். அவள் எழுந்திருக்காதவாறு அழுத்தி கைக்கால்களைப் பிடித்துக் கொள்கிறது. முகம் முழுக்க அந்த 'தேவிக்கு' அமிலாபிஷேகம் நடத்தப்படுகிறது. தோலும்-சதையும் உருகிக் கரைந்து தந்த வேதனையால் அவள் போட்ட சத்தம்... அழுகை.. கூப்பாடுகள்.. இரவின் இருளில் கரைந்து போயின அவளது முகம் போலவே! மூக்கு சிதைந்து..காதுகள் சிறுத்து.. பார்வை பறிப்போய்.. கேட்கும் சக்தியையும் இழந்து இயற்கை அழகுகள் சிதைந்து செயற்கையான கோரப் பிறவியாகிவிட்டாள் அவள்! நடைபிணமாய் தொடர்கிறது அனுதினமும் அவளது வாழ்க்கை!



அவள் செய்த குற்றம்தான் என்ன?

அந்த வெறியர்களின் உடல் பசிக்கு இணக்கம் தெரிவிக்காத ஒரே காரணம்தான்!

கடந்த ஒன்பது ஆண்டுகளாக 27 வயது கொண்ட சோனாலி முகர்ஜி மருத்துவ சிகிச்சைகாக பல்வேறு முறையீடுகள் செய்தும் அரசாங்கத்தின் மனம் இரங்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூவரும் மூன்று ஆண்டு சிறைவாழ்க்கைக்குப் பிறகு பிணையில் வெளிவந்து அடுத்த பசிக்கு அடுத்த இரையை தேடிக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!

தன்னை கொன்றுவிடும்படி சோனாலி கெஞ்சியும் எவ்வித பயனுமில்லை. 

"கடந்த நான்காண்டுகளாக நான் பெரும் வேதனைகளை அனுபவித்து வருகின்றேன். எதிர்காலம் குறித்து எந்த நம்பிக்கையும் இன்றி தவியாய் தவிக்கின்றேன்!" - என்கிறார் சோனாலி விரக்தியுடன். 

"நீதி கிடைக்காவிட்டாலோ, மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் செய்து தரப்படாவிட்டாலோ நான் இறந்து போவதைத் தவிர வேறு வழியில்லை!" - என்கிறர் சோனாலி.. தெற்கு தில்லியின் சீக்கியர் கோயிலை ஒட்டிய ஒற்றை அறை குடியிருப்புக்குள் அமர்ந்தவாறு.

"அரைமுகத்துடன் அரைகுறையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை!" -  என்கிறார் இவர் தொடர்ந்து.



சோனாலியின் பரிதாபகரமான இந்த முறையீடு உலகம் முழுக்க நாடு-எல்லைகள், சாதி-மதங்கள் இவற்றைத் தாண்டி அமில வீச்சுகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண் சார்பான முறையீடாகும். 

பாதிக்கப்பட்டவர்க்கு தகுந்த நஷ்ட ஈடில்லை! கொலைக்கு ஒப்பான இந்த குற்றச் செயலுக்கு ஒப்பான தண்டனையும் இல்லை!! வெகு சொற்பகால தண்டனையை அனுபவித்துவிட்டு சுதந்திர மனிதர்களாக கொடியவர்கள் நடமாடிக் கொண்டிருப்பது சகிக்க முடியாதது. 

பெண்களுக்கு எதிரான அமில வீச்சுகள் உலகளவில் கம்போடியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் அதிகளவில் நடந்து வருகின்றன.

உலகளவில் ஆண்டுக்கு பதிவாகும் 1500 அமில வீச்சுகளில் 80 விழுக்காடு பெண்களுக்கு எதிரானவை என்று லண்டனை மையமாக வைத்து செயல்படும்  'Acid Survivors Trust International' - என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகவம் குறைந்தளவிலான தகவல்கள் குறித்த புள்ளிவிவரங்களாகும். பாதிக்கப்பட்டோர் இதை வெளியில் சொல்ல பயப்படுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

 இந்தியாவைக் குறித்தத் தகவல்கள் அதிகாரப் பூர்வமானவையாக இல்லாவிட்டாலும்,2011 இல், Cornell University திரட்டிய புள்ளிவிவரங்கள் படி, 1999-2010 இடைப்பட்ட காலத்தில் நமது நாட்டில் 153 அமில வீச்சு சம்பவங்கள் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பெரும்பான்மையான சம்பவங்கள் செக்ஸ் வன்முறைகளாகவும், கட்டாய திருமண வற்புறுத்தல்கள் நிராகரிக்கப்பட்டதற்காகவும் நிகழ்ந்தவை. 



"நான் அடைய முடியாததை யாரும் அடையக்கூடாது என்ற மனப்போக்கின் விளைவு இது!" - என்கிறார் ஐநா மன்றத்தின் தெற்கு ஆசிய நாடுகளுக்கான இணை இயக்குனர் சுஷ்மா கபூர். 

இளமைத்துள்ளும் கனவுகளுடன் ஜார்கண்டின் தன்பாத் நகரில் சமூகயியல் மாணவியாக கல்விப்பயிலும் போது சோனாலிக்கு வயது 17. 

குற்றவாளிகள் மூவரும் சோனாலியின் அண்டை வீட்டார். ஒவ்வொரு நாள் காலையும் இந்த மூவரும் பாலியல் தொடர் தொந்திரவுகளைத் தந்துகொண்டிருந்தார்கள். 

இது எல்லை மீறி போகவே சோனாலி காவல் நிலையத்தில் புகார் செய்வதாக எச்சரிக்க அவரை பழிவாங்கும் நடவடிக்கையாக அமில வீச்சு கையாளப்பட்டது. 

முகத்தின் 70 விழுக்காடு பகுதி கருக்கிவிட்டது. குற்றவாளிகள் கைது  செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிணையில் விடுதலையானார்கள். 

சோனாலி மேல்முறையீடு செய்துள்ள நிலையிலும் மீண்டும் குற்றவாளிகள் எங்கே தன்னை பழிவாங்குவார்களோ என்று பயந்தவாறு இருக்கிறார். 

பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் போன்ற நாடுகளில் அமில வீச்சு கடும் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால், நமது நாட்டிலோ இது பெண்களுக்கு எதிரான துன்புறத்தலாகவே குற்றம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், குற்றவாளிகள் எளிதாக பிணையில் வந்துவிட முடிகிறது.

 அமில வீச்சு குற்றங்களின் கடுமையைக் கருத்தில்கொண்டு நடப்பு மக்களவைத் தொடரில் அமில வீச்சுகள் தனியான குற்றமாக கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைதண்டனையும், 10 லட்சம்வரையிலான அபராதமும் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலாக மக்களவை ஒப்புதலுக்காக தற்போது நிலுவையில் உள்ளது.



பாதிக்கப்பட்டவர்களும், தன்னார்வ அமைப்புகளும் கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்காக எளிதாக கிடைக்கும்  ஹைட்ரோகுளோரிக் மற்றும் கந்தக அமிலங்கள் போன்ற சக்திமிக்க அமிலங்கள் சம்பந்தமாக ஒரு வரையறை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர். இவற்றை தயாரிக்க எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் இவை துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்களாக மாறிவருகின்றன என்கின்றனர் இவர்கள்.

"வெறும் 50 ரூபாயில் அடர்த்தியான ஆபத்து மிக்க அமிலங்களைக் கூட நமது கடைகளில் எளிதாக வாங்க முடிகிறது. வெறும் 50 ரூபாயில் என்னைப் போன்ற பெண்களின் வாழ்க்கையை சிதைத்துவிட முடிகிறது!" - என்று கவலைத் தெரிவிக்கும் சோனாலியா, "அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்! ஆனால், நானோ தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றேன்!' - என்கிறார் தொடர்ந்து.

Source: Reuters

0 comments:

Post a Comment