NewsBlog

Wednesday, November 14, 2012

வெள்ளை மாளிகையின் அந்த வெற்றிக்குப் பின்னால் (பகுதி -1)

அது ஒரு நீண்ட கசப்பான பந்தயம்! அதற்கான செலவோ சுமார் 2.5 பில்லியன் டாலர்கள்! 2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களுக்கான அரங்கேற்ற செலவிது!

உண்மையிலேயே இரு வேட்பாளர்களுக்கிடையே நடந்த சரியான போட்டியா இது? அல்லது அமெரிக்க தேர்தல்கள் அமைப்பு சரியான ஜனநாயக அமைப்புதானா?

இதற்கான விடை காண நாம் முதன் முதலில் செல்ல வேண்டிய இடம் ஒபாமா மற்றும் ரோம்னி கலந்து கொண்ட விவாத மேடைக்கு..


நகர அரங்குக் கூட்டம் என அழைக்கப்பட்ட இந்த மேடையில், தேர்தல் சம்பந்தமான முக்கியப் பிரச்சினைகள் நாட்டு நலன் மிக்க உண்மையான அமெரிக்கர்களிடமிருந்து வரும் என அறிவிப்பு செய்யப்பட்டது. 

ஆனால், அந்த கூட்டம் முழுவதும் முன்னமே ஆயத்த வடிவமைப்புடன்  தயாரிக்கப்பட்டது என்பது நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்து போனது. முக்கிய வினாக்களுக்கான பதில்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும்! அந்த வினாக்கள் எழுப்பக்கூட அங்கு அனுமதியில்லை எனபதைதான் அந்த ஜனநாயக அரங்கு நிரூபித்தது. 

2012, அமெரிக்க தேர்தல்களின் கருத்துக் கணிப்பு என்ற பெயரால்.. அதற்கான நிறுவனம் ஒரு 82 தனிநபர்களைத் தேர்வு செய்து, அவர்கள் எந்த தரப்பு வாக்காளர்களையும் சேர்ந்தவர்கள் அல்ல என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டது. நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நடுநிலை வாக்காளர்களின் பிரதிநிதிகளைப் போல, சுயமாக அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். 

இந்த 82 நபர்களும் தமது கேள்விகளை முன் கூட்டியே தயாரித்து சிஎன்என்  தலைமை நிருபர் நிகழ்ச்சியின்  அமைப்பாளர் காண்டி கிரௌலியிடம் அளிக்கப்பட்டது. யார் பேச வேண்டும்? எதைப் பேச வேண்டும்? என்பதை தீர்மானிப்பவர் காண்டிதான்! ஊடகங்களுக்கு தீனியாய் பரபரப்பூட்டும் கேள்வி-பதில்கள் அவை. 


 திட்டமிட்டபடி வினாக்கள் முறையாக தொடுக்கப்பட வேண்டும் அதாவது எழுதி வைத்திருந்ததைப் பார்த்து வாசிக்க வேண்டும்.  அப்படி படிக்கும் போது சொதப்பினாலோ அவரவர் முறைத் தவறி வாசித்தாலோ.. அவ்வளவுதான் அரங்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார். கேள்வி கேட்கப்பட்டதும், ஒலிப்பெருக்கி உடனுக்குடன் அணைக்கப்படும்.

இத்தகைய ஒருவிதமான அச்ச உணர்வே அரங்கு முழுவதும் நிரம்பி இருந்தது என்கிறது உலக சோசலிஸ வலைத்தளம் (ஆதாரம்:  WSWS - The Obama-Romney Debate - Joseph Kishore - 18.10.2012)

அந்த அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்கான பதில்கள் எல்லாம் ஏற்கனவே திட்டமிட்ட ஆயத்த வடிவிலானது என்பது உண்மையானது. ஆனால், உலக மக்கள் மனதில் எழும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பர்? விணணளாவிய கேள்விகள் இருந்தாலும்.. சில முக்கியமான கேள்விகள் இவை:


 1. மதிப்பிற்குரிய அமெரிக்க ஜனாதிபதி தமது சொந்த குடிமக்களை படுகொலை செய்வத சம்பந்தமான சட்ட பூர்வமான வரையரை என்ன? இலக்கு நிர்ணயித்து மக்களைக் கொல்லும் உரிமை என்பது அமெரிக்க மக்களுக்கும் பொருந்துமா? அல்லது உலக மக்களுக்கு மட்டுமா? (இந்தக் கேள்விக்கான பதிலை ஏற்கனவே  FBI இயக்குநர் ரோபர்ட் முல்லர் தெளிவாக பதில் சொல்லமல் மழுப்பியது குறிப்பிடத்தக்கது)

2. ஒவ்வொரு செவ்வாய் கிழமை ஒரு கூட்டம் நடத்துவது. உலகில் கொல்லப்பட வேண்டியவர் பட்டியலை வெளியிடுவது, அதன் பிறகு அமெரிக்க ஆளில்லா விமானம்  மூலமாக அவரைத் தீர்த்துக் கட்டுவது - (ஏற்கனவே ஒபாமா நியூயார்க் டைம்ஸ்ஸீக்கு அளித்த பேட்டியில்  கூறியது போல) என்ற முடிவு எடுக்கப்படுமா?

3. இப்படி முடிவெடுத்து வைக்கப்பட்டுள்ள மரண ஆணைகள் எத்தனை?

4. சித்திரவதைக்கு எதிராகவும், ஒற்று வேலைகள் சம்பந்தமாக முன்னாள் அதிபர் புஷ்ஷின் நிர்வாக அதிகாரிகளை குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஏன் எதிர்க்கிறீர்கள்?

5. அடுத்தாண்டு தாக்குதலுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஈரான் விஷயத்தில் இஸ்ரேலின் பங்களிப்பு என்ன? அதற்கு அளிக்கப்பட்டுள்ள உத்திரவாதங்கள்தான் என்ன? உண்மையிலேயே இத்தகைய போருக்கு அமெரிக்கா தயாரா? அப்படி போர் மூளுமாயின் அதற்காக அமெரிக்கா அணு ஆயுதங்களைக் கையாளுமா?


 இந்தக் கேள்விகள் அனைத்துமே இரு வேட்பாளர்களுக்கும் பொத்தம் பொதுவானவையாகும். அமெரிக்க மக்கள் எதிர்படவிருக்கும் போர்களினால் சுமக்க வேண்டிய சுமைகள் சம்பந்தமானது. உலக மக்கள் அனுபவிக்கும் வேதனைகள் சம்பந்தமானது.

கடைசியாக இந்தக் கேள்வி எழுவதும் தவிர்க்க இயலாததாக இருக்கிறது. ஆமாம். உலகப் பொருளாதாரத்தை பெரும் கலக்கத்தில் ஆழ்த்திய வால்ட் ஸ்ட்ரீட் சம்பந்தமானது. இதற்கு காரணமான எந்த வங்கியாளரையும் அல்லது பொறுப்பாளரையும் இதுவரையும் தண்டிக்கவில்லையே ஏன்? இதற்கு இணையான கடைசி கேள்வி, அமெரிக்க மக்களில் அதிகம் பேர் மிக வறிய நிலைக்குத் தள்ளப்பட்டும், வேலையின்மையின் சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில் பங்குச் சந்தை நிறுவனங்களும், பெரு நிறுவன லாபங்களும் பல்கிப் பெருகுவது எப்படி?

நடைபெற்ற அரங்கில் அமெரிக்க தேர்தல்களில் எவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் செல்வந்தர்கள்தான் சுகபோகமாக வாழ்வார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாயிற்று. இரு வேட்பாளர்களும் முதலாளித்துவ அமைப்புக்கு முட்டுக் கொடுப்பவர்கள், பெருநிறுவனங்களின் பாதுகாவலர்கள் என்பது மீண்டும் நிரூபணமானது அந்த அரங்கில்!

  • உங்கள் பணம்!
  • உங்கள் வேட்பாளர்!!
  • உங்கள் முடிவு!!! 

இதுதான் அந்த அரங்கின் முடிவாய் ஒலித்தது.

-- இறைவன் நாடினால்.. தொடரும்.

(Source: உலக சோசலிஸ வலைத்தளம், அல்ஜஸீரா.
படங்கள்- நன்றி- ராய்டர் மற்றும் அசோசியேட் பிரஸ்.)



0 comments:

Post a Comment