NewsBlog

Friday, November 23, 2012

செங்குருதியால் நனைந்த கர்பலா!


 அது ஹஜ்ஜுக் காலம்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக அருள்மாரி சொரியும் மக்கா மநாகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். 

"வந்துவிட்டேன்! இறைவா! வந்துவிட்டேன்!" - ஹாஜிகளின் முழக்கம் விண்முட்ட எழுந்தது. 

அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் கஅபாவை நோக்கி நடக்கிறார். எண்ணங்களை ஒருமுகப்படுத்தித் தொழுகிறார். அதன் பின் இரு கரங்களையும் விரித்து இறைஞ்சுகிறார்:

"இறைவா! உலகின் பல திசைகளிலிருந்தும் மக்கள் கூட்டம் ஹஜ்ஜை நிறைவேற்றிட உனது இல்லத்திற்கு வருகை தரும் வேளையில், உன் அடியானான ஹீஸைனோ இங்கிருந்து வெளியேற இதோ நின்றிருக்கின்றேன். மக்கள் தியாகத் திருநாளுக்காக இங்கு திரண்டிருக்கும் வேளையில் இந்த ஹீஸைனும் தனது குடும்பத்தாருட்ன தியாகம் செய்ய சத்தியத்திற்கு சான்று பகர இதோ புறப்பட்டுவிட்டார்.


இரட்சகா! உனது திருபூமியின் புனிதத்துவம் காக்கப்பட இந்த அருள்பூமி ரத்தக் கறைபடியாமல் காத்திட இறைத்தூதரான எனதருமைப் பாட்டனாரின் கட்டளைகளை சிரமேற்கொண்டு  இதோ கூஃபா நோக்கி பயணமாகிவிட்டேன். 

கருணையாளனே! என் பாவங்களையும், என் குடும்பத்தாரின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

அருளாளனே! தற்போது என் பிரியத்துக்குரிய பாட்டனாரும், என்னருகில் இல்லை. என்னை ஈன்றெடுத்த பெற்றோரும் இல்லை. உடன் பிறந்த சகோதரரும் துணையாய் இல்லை. இந்நிலையில், அசத்தியம் எனக்கு எதிராய் நிற்கிறது. என் உயிரைக் குடித்திட துடியாய்த் துடிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நீயே எங்கள் பாதுகாவலனாய் இருப்பாயாக!

எனது அதிபதியே! உனது பிரியத்திற்கூய இறைத்தூதர் எந்தக் கரத்தைத் தம் திருவாயால்.. முத்தமிட்டார்களோ அந்தக் கரம் அநியாக்காரனான யஜீதின் கரம் பற்றி ஒருபோதும் 'பைஅத் - பிராமணவாக்குமூலம்' செய்யாது. உனது திருத்தூதர் எந்த வாயை அன்பால் முத்தமிட்டார்களோ அந்தத் திருவாயால் அநீதிக்காரனான யஜீதைக் கலிஃபாவாக ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தாது.

இறைத்தூதரின் இதயத்துண்டு,சுவனத்தின் தலைவி (ஃபாத்திமா) ஈன்றெடுத்த புதல்வர் இதோ சுவனப்பாதையில் புறப்பட்டுவிட்டார்.

அகிலங்களின் அதிபதியே! எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக! சத்தியததில் நிலைத்திட உதவி செய்வாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்!

புனித கஅபாவே! சத்தியம் காத்திட உன்னிடம் பிரியா விடை பெறுகின்றேன்.

புனித சஃபா-மர்வா மலைக்குன்றுகளே! அசத்தியத்தை எதிர்த்திட அன்னை ஃபாத்திமாவின் மைந்தன் இதோ போர்க்களம் புறப்பட்டு விட்டார். இதற்கு நீங்களும் சாட்சியாக இருங்கள்!"

இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் (ஸல்) பேரரான இமாம் ஹீஸைன் அவர்கள் தம் குடும்பத்தாருட்ன இராக்கின் கூஃபாவை நோக்கிப் பயணமானார்கள். 

தீயோரை எதிர்த்திட சத்தியத்திற்குத் தோள் கொடுப்பதாகக் கூறிய கூஃபாவாசிகள் புனைந்திட்ட பொய்யுரையை நம்பிய பயணமது.

கர்பலா கவலையும் துன்பமும் சூழ்ந்துகொண்ட மைதானம்.

ஹிஜ்ரி 61, முர்ரம் 10.

கொடுங்கோலன் யஜீதின் 4,000 பேர் கொண்ட பெரும்படை இப்னு ஸஃது தலைமையில் ரத்த வெறிக் கொண்டு ஒருபுறம்.  நிராயுதபாணிகளான பெண்கள், குழந்தைகள் என்று 72 பேர் கொண்ட குழுவுடன் இமாம் ஹீஸைன் அவர்கள் மறுபுறம்.


கண்ணிமைக்கும்  நேரம். கர்பலா மைதானம் செங்குருதிக் காடானது.

முஹம்மது நபிகளாரின் (ஸல்) அருமைப் பேரர் இமாம் ஹீஸைனின் தலை கொய்யப்பட்டது. அன்னாரின் பொன்னுடல் ரத்தச் சகதியாய் குதிரைகளின் காலடிகளில் மிதிப்பட்டு கூழானது. 

நபி பெருமானாரின் குடும்பத்தைச் சார்ந்த 19 நபர்கள் உட்பட 72 பேர் வீரமரணம் அடைந்தார்கள். (இறைவனிடமிருந்து வந்தோம். திரும்பவும் அவனிடமே செல்பவர்களாக இருக்கின்றோம்!)

இமாம் ஹீஸைன் அவர்கள் தம் உதிரத்தால் கர்பலாவைச் சிவக்கச் செய்ததன் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்கள் யஜீதை ஜனாதிபதியாக 'பைஅத்' செய்து ஏன் ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை?

 இந்தக் கேள்விகளுக்கு விடை காண வரலாற்றின் பக்கங்களைப் புரட்டியாக வேண்டும.

நபி பெருமானாரின் மரணத்துக்குப் பிறகு, நபித்தோழர் அபூபக்கர் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

பதவியேற்ற அடுத்த நாள தோளில் மூட்டையைச் சுமந்த வண்ணம கடைத் தெருவில் நின்றிருக்கிறார். 

மக்களுக்கு வியப்பு!

ஜனாதிபதி பழையபடி துணி வியாபாரம் செய்கிறாரே!

அந்த நேரத்தில் நபித்தோழர் உமர் அவர்கள் அங்கு வந்தார்கள். நேராக அபூபக்கரிடம் சென்றார்கள்.

"ஜனாதிபதி அவர்களே! இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" - என்று கேட்டார்கள். 

"வழக்கம் போல இவைகளை விற்பனை செய்யப் போகின்றேன்!"

"என்ன துணி விற்பனையா? இப்போதுமா? தற்போது, தாங்கள் எங்களின் கண்ணியத்திற்குரிய ஜனாதிபதி! எங்களை வழிநடத்த வேண்டியவர். எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர். இந்நிலையில் வியாபாரம் செய்ய நேரம் எங்கிருக்கிறது?"

"நான் என் வயிற்றுப்பாட்டையும் கவனிக்க வேண்டும் உமரே!  இல்லையென்றால்.. என் குடும்பத்தார் பட்டினி கிடக்க வேண்டியதுதான்"

இதைக் கேட்டதும் உமர் மௌனம் சாதிக்கிறார்கள். அதன் பின், "சரி வாருங்கள்.. இது குறித்து நம் தோழர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்!" - என்று அபூபக்கரை அழைத்துச் செல்கிறார்கள்.



ஜனாதிபதியின் பிரச்சினை சம்பந்தமாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கடைசியில், 'பைத்துல்மால்' எனப்படும் 'பொதுநிதியிலிருந்து' ஜனாதிபதிக்கு உதவி வழங்க முடிவெடுக்கப்படுகிறது.

ஒரு சராசரி குடும்பத்தின் குறைந்தளவு தேவைக்கான நிதி உதவி அது. ஆண்டுக்கு கோடையில் இரு ஜதை துணிகள், குளிர் காலத்தில் இருபோர்வைகள், ஜனாதிபதிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் தேவையான அன்றாட உணவு.

அபூபக்கரும் இந்த முடிவை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட அதேசமயம், தம் சொத்துக்கள் அனைத்தையும் ஒரு பைசா விடாமல் பைத்துல்மால் நிர்வாகியிடம் (கருவூலக அதிகாரி) ஒப்படைத்துவிட்டார்கள்.

நபித்தோழர் அபூபக்கரின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் நடந்தது. மிகவும் எளிமையாக வாழ்ந்து மக்களுக்கு நல்லாட்சியைத் தந்தவர் நோயுற்றார்கள். மரணத்தருவாயில் தம் மனைவி மக்களை அருகில் அழைத்தார்கள். "இதுவரையும் நாம் பயன்படுத்திய பைத்துல்மால் பணம் எவ்வளவு என்று நான் அறிய விரும்புகின்றேன்.!" - என்றார்கள்.

அவருடைய பிள்ளைகள் உடன் கணக்கிட்டு அத்தொகையை தம் தந்தையாரிடம் சொன்னார்கள். "பிள்ளைகளே! நான் இறந்த பின் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிடுங்கள். நாம் பயன்படுத்திய மக்கள் பணத்தை பைத்துல்மாலில் சேர்த்துவிடுங்கள். இதன் மூலம் மக்களின் ஒவ்வொரு பைசாவும் திருப்பிச் செலுத்தப்பட்டுவிடும்!" - என்று பணித்தார்கள்.

அபூபக்கர் அவர்களின் விருப்பம் பூர்த்தி செய்யப்பட்டது.

தம் தோழரின் கோரிக்கையை அறிந்த உமர் அவர்கள் தேம்பி.. தேம்பி.. அழுதார்கள். அழுகையினூடே சொன்னார்கள்: "ஓ! எனதருமைத் தோழர் அபூபக்கரே! உமக்குப் பின்னால் எவரும் எளிதில் பின்பற்ற முடியாத முன்மாதிரியை விட்டு விட்டுச் சென்றீரே!"



அபூபக்கரின் மறைவுக்குப் பின்னால் மக்கள் நபித்தோழர் உமர் அவர்களை தங்கள் ஜனாதிபதியாக தேர்நதெடுத்துக் கொண்டார்கள்.

வாரிசுரிமை வரவில்லை.

நபித்தோழர் உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய பேரரசு விரிந்து பரந்திருந்தது. குறைவாக உண்ணுவதையும், எளிமையாக உடுத்துவதையும் உமர் அவர்கள் பழக்கமாக கொண்டிருந்தார்கள். கிழிந்த ஒட்டுப்போட்ட ஆடைகளும், பழைய கந்தல் ஆடைகளையும் அவர்கள் அணிவார்கள். ரொட்டியும் அதில் தடவிக் கொள்ள ஆலிவ் எண்ணையுமே அவர்களின் உணவாக இருந்தது.

ஒருநாள்.

ரோமப் பேரரசிலிருந்து தூதுவர் ஒருவர் மதீனாவுக்கு வந்தார். ஜனாதிபதி அவர்களைச் சந்திக்க விரும்பினார். பல நாடுகளுக்கு விஜயம் செய்து பல்வேறு ஆட்சியாளர்களைச் சந்தித்த அனுபவசாலி அவர்.

மதீனாவின் தெருவில் எதிர்ப்பட்ட சிலரிடம் அவர், "உங்கள் அரசரைக் காண வேண்டும். எங்கிருப்பார் அவர்?" - என்று விசாரித்தார்.

உலகம் முழுக்க அரசர்கள் ஆண்டு வந்த காலத்தில் இஸ்லாமிய ஜனநாயக அமைப்பு, மக்களாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்திவிட்டிருந்தது.

ரோமின் தூதுவர் கேட்ட கேள்வி மதீனாவாசிகளை அதிர்ச்சியடைய வைத்தது.

"அரசரா.. ? எங்களுக்கா? அய்யா! எங்களுக்கு அரசர் என்று யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?" - என்றனர் அவர்கள்.

இதைக் கேட்டதும் தூதுவருக்கு ஒரே வியப்பு. திகைப்பு. "என்ன அரசர் யாருமில்லையா? அப்படியென்றால் இந்த நாட்டின் தலைவர்..?" என்று தொடர்ந்து கேட்கிறார்.

"ஆங் இருக்கிறார்... இருக்கிறார். நாங்கள் எங்களில் சிறந்த ஒருவரை எங்கள் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம்."

"அவரைச் சந்திக்க வேண்டுமே!"

"எங்கள் தலைவரைச் சந்திக்க வேண்டுமா? இதோ! இந்தத் தெருவில் நேராகச் சென்றால் வழியில்.. நீங்கள் அவரை எங்கேயாவது சந்திக்கலாம்!"

மதீனத்து மக்கள் சொன்ன செய்தி ரோம் நாட்டுத் தூதருக்கு மிகவும் வியப்பளித்தது. நம்பியும் நம்பாமலும் தூதர் நடந்தார்.

கடைசியில், தெருவோரத்து மரத்தடியில் அந்தக் காட்சியை காணவும் செய்தார்.



இஸ்லாமியப் பேரரசின் மக்கள் தலைவர் .. ஜனாதிபதி .. கலிஃபா உமர் அவர்கள் ஒரு மரத்தடியில் தம் கையையே தலையணையாய் தலைக்கு முட்டுக் கொடுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஜனாதிபதி அணிந்திருந்த சட்டையில் பனிரெண்டு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன! 

நபித்தோழர் உமர் அவர்களின் ஆட்சி 13 ஆண்டு காலம் நடந்தது. இவர்களின் மறைவுக்குப் பின்னர் அடுத்த மக்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினை வந்தது. அதற்குப் பொருத்தமான நபர் உமர் அவர்களின் மகனார் அப்துல்லாஹ் என்று மக்கள் அபிப்ராயப்பட்டார்கள்.

மரணப் படுக்கையில் இருந்த உமர் அவர்கள் தமக்குப் பின் வாரிசுரிமை உருவாவதை விரும்பவில்லை. தமது மகனுக்கு எல்லா தகுதிகள் இருந்தும் அதற்கு உடன்படவில்லை. மக்கள் கருத்தை நிராகரிக்கிறார்கள். வேறொருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி ஆணையிடுகிறார்கள் அந்த மாபெரும் மக்கள் தலைவர்.

நபித்தோழர்கள் அபூபக்கர், உமர் அவர்களைத் தொடர்ந்து நேர்வழிச் சென்ற கலிஃபாக்களாக (குலபாயே ராஷிதீன்கள்) நபித்தோழர்கள் உஸ்மான் மற்றும் அலி (பொழியட்டும் இறையருள் இவர்கள் அனைவர் மீதும்) ஜனாதிபதிகளாக மக்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாட்சியைத் தருகிறார்கள்.

இவர்களுக்குப் பின்னும் வாரிசுரிமை வரவில்லை.



ஆனால், இப்பெருந்தகைகளுக்குப் பின்னர், ஜனாதிபதியாகும் நபித்தோழர் முஆவியா அவர்கள் பிள்ளைப் பாசத்தால்.. தடுமாறி.. மனம்நிலைமாறி தம் மகன் யஜீதை ஜனாதிபதி பீடத்தில் வலிய அமர்த்துகிறார்.

கொடியவன் யஜீத் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கி சர்வாதிகாரி ஆட்சி புரிகின்றான்.

இதற்காக மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த முஹம்மது நபிகளாரின் பேரர் இமாம்  ஹீஸைன் அவர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

கொடியவனை எதிர்த்து மக்களாட்சியை நிலைநிறுத்த இமாம் அவர்கள் வீறு கொண்டு எழுகிறார்கள்.

அறப்போரில் வீரமரணம் அடைகிறார்கள். (இன்னா லில்லாஹி..)

முஹர்ரம் 10 இல் நடக்கும் இந்தத் தியாகக் களப்பலி தீயோருக்கு எதிராய் நல்லோர் ஒன்றுபட்டுப் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

கர்பலா தரும் படிப்பினை இதுவே!

இதை விடுத்து துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரிலும், "அன்று தப்பு செய்துவிட்டோமே!" (கொலைச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைப் பின்பற்றுபவர்கள்) என்று ரத்தக் களறியாய் உடலையாக்கிக் கொள்வதும் மூடப்பழக்கமே அன்றி வேறில்லை. அதுவும் திருக்குர்ஆனுக்கும், திருநபிகளாரின் வழிமுறைகளுக்கும் மாற்றமான செயல்களேயன்றி வேறில்லை!

0 comments:

Post a Comment