NewsBlog

Saturday, November 10, 2012

மியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல..! (இறுதிப்பகுதி - 4) ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்களும், நமது கடமையும்!



உலகின் மிகவும் மோசமாக கொடுமைக்குள்ளான சிறுபான்மை இனம் என்று ஐ.நா. மன்றத்தால் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் ரோகின்ய பர்மிய முஸ்லிம்கள். இவர்கள் வாழும் ராகின் மாநிலம் மேற்கு மியான்மரில் அதாவது மேற்கு பர்மாவில் உள்ளது. 

மூன்று மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இந்த மாநிலம் மேற்கில் வங்கக் கடலை எல்லையாகக் கொண்டது. இங்கு பெரும்பான்மை இனமாக பௌத்தர்கள் வாழ்கிறார்கள். 

அரகான் பகுதியில் வாழும் ரோகின் இன முஸ்லிம்களின் துன்பம்-துயரங்கள் இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறன. 

மார்ச் 18, 1942-இல், சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் கொடுரமான முறையில் ராகின் தேசியவாதிகளால் ‘மின்பா’ மற்றும் ‘மொரோ ஹாங்’ பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தத் துயர சம்பவத்துக்குப் பிறகு இவர்கள் மீது பர்மிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் - அடக்குமுறைகள் தொடர் கதைகளாயின. இவர்களுக்கு சட்ட ரீதியான குடியுரிமைகளைத் தர அரசாங்கம் மறுத்துவருகிறது.

ஐ.நா.மன்றத்தின் அகதிகளுக்கான முதன்மை ஆணையரின் கூற்றுப்படி,

  • பர்மிய முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒடுக்கப்படும்.
  • கல்வி கற்கும் உரிமையோ அல்லது சொத்துரிமையோ மறுக்கப்படும் என்பதுதான் பர்மிய அகதிகள் என்ற சொல்லுக்குப் பொருளாகும்.
ஒரு அரசாங்கமே தன் குடிமக்களுக்கு எதிராக நடத்தும் இத்தகைய அராஜகப் போக்கை சகிக்க முடியாமல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷ்கும் இன்னும் 24 ஆயிரம் பேர் மலேசியாவிற்கும் தங்களைக் காத்துக் கொள்ள தப்பிச்  சென்று விட்டார்கள். இன்னும் பலர் தாய்லாந்துக்கு புகலிடம் தேடிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தாய்லாந்தோ, பங்களாதேஷோ இவர்களை இன்முகத்துடன் வரவேற்று அடைக்கலம் அளிக்கவில்லை.


பங்களாதேஷ், அகதிகளாக வந்துள்ள ரோகின்ய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்துக் கொள்ளம்படி பர்மிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்  கொண்டிருக்கிறது. தாய்லாந்தோ அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. அது இன்னும் ஒருபடி மேலே சென்று குழந்தை பெண்கள் சகிதமாக நீர்வழியாக அகதிகளாக வருவோரை கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் தடுத்து நிறுத்துகிறது. அத்துடன் பலவந்தமாக அப்படகுகளை இடித்து நீரில் மூழ்கடிக்கும் முயற்சிகளில் இறங்கிவருகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ (Human Rights Watch) பர்மிய அரசு ரோகின்ய முஸ்லிம்களை கொத்தடிமைகளாக மாற்ற வற்புறுத்தி வருகிறது!’ – என்ற தகவலையும் தருகிறது. இப்படி மாற மறுப்போரை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்குவதாகவும் முஸ்லிம்களின் ஏழு வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறுவர்கள் கூட இத்தகைய கொத்தடிமை சிறார் குழுக்களில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சிகரமான தகவலையும் தொடர்ந்து தருகிறது.


‘வாட்டர்லூ’ பல்கலைக்  கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ‘முஹம்மது எல்மஸ்ரி, ‘தி எகிப்தியன் கெஸட்டுக்கு’ எழுதும்போது, ரோகின்ய முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாகவே பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த மக்கள் மீது தனியாக வரி விதிக்கப்படுவதாகவும், பலவந்தமாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும், அவர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதாகவும், திருமண நேரங்களில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.  ரோகின்ய முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் இராணுவ முகாம்களில் கீழ்நிலைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையும் வருத்தத்தோடு எழுதுகிறார். 

தனது சொந்த குடிமக்களிடம் பர்மிய அரசு காட்டும் பாரபட்சத்தை.. முஸ்லிம்களை பர்மிய அரசு நடத்தும் மிக மோசமான நிலையை சர்வதேச அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.

பல்லண்டுகளாக பர்மிய அரசாலும், பெளத்த தீவிரவாதிகளாலும் துன்பங்களை அனுபவித்துவரும் ரோகின்ய முஸ்லிம்களுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உரத்துக் குரல் எழுப்பி வருகின்றன.


மே, 2009-இல், ‘ஹீயுமன் ரைட்ஸ் வாட்சின்’ ஆசியாவுக்கான இணை இயக்குனர் ‘எலைன் பெர்ஸன்’ ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, ‘அசோசியேஷன் ஆப் சவுத் ஏசியன் நேஷன்ஸ்’ (ASEAN) என்ற அமைப்பு பர்மிய அரசின் செயல்களைக் கண்டிக்க வேண்டும். உலக நாடுகள் அதன் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அவர், பர்மிய அரசாங்கம் ரோகின்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், பர்மிய அரசோ அவர்களை தன் சொந்த குடிமக்கள் என்ற அந்தஸ்தைக் கூட தர மறுப்பதை சுட்டிக் காட்டி வேதனைப்பட்டார்.

ஏற்கனவே துன்பத்துக்கு மேல் துன்பங்களை அனுபவித்து வரும் பர்மிய முஸ்லிம்கள் தற்போது மீண்டும் அலை அலையான அடக்குமுறைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 

ஐ.நா.மன்றத்தின் ஓர் அறிக்கையின் படி, தற்போது நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வெறிக்கு பலியாகி அகதிகளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம்வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதை துல்லியமாக கணக்கிடும் சாத்தியமில்லை. 

ராகின் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் கிட்டதட்ட 9 ஆயிரம் முஸ்லிம்களின் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன;  எரிக்கப்பட்டுள்ளன. இது பர்மிய நாட்டின் மனித உரிமை மீறலுக்கான ஒரு படி பின்னடைவு என்கிறது சர்வதேச மனித உரிமை ஆணையகமான ஆன்மெஸ்டி இண்டர் நேஷனல்!

‘’தி ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேஷன்’ (OIC) பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்துள்ளது. 



பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சம்பந்தமான உண்மைத் தகவல்கள் கசிந்துவரும் நிலையில் ‘டைம்ஸ் துருக் நியூஸ் ஏஜென்ஸி’ சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை மேற்கத்திய ஊடகங்கள் வாய்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.. செவிடர்களாய்.. ஊமைகளாய், குருடர்களாய் ...!

பல்வேறு தலைப்புகளில் புத்தம் புதிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை கட்டம் கட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பானது அன்றி வேறில்லை. தங்கள் ஊடகங்களைப் போலவே, மேற்கத்திய நாடுகளும் பார்வையிழந்தோரின் நிலையிலேயே உள்ளன.

தற்போது அமெரிக்கத் தேர்தல்களில் இரண்டாவது முறையாக வெற்றிவாகைச் சூடிய அதிபர் ஒபாமா முதன் முறையாக பர்மாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகமே தலையில் வைத்துக் கொண்டாடிய ஜனநாயகப் போராளி, பர்மிய அரசியல் நாயகி, ஆங் சென் சுகி தனக்கு நோபல் பரிசு அளிக்க நார்வேயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் அடக்கி ஒடுக்கப்படும் பர்மிய முஸ்லிம்களைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  பர்மாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சம்பந்தமாக மூச்சுகூட விடவில்லை. ஜனநாயகப் போராளிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்த சம்பவம் இது. 

மனசாட்சி மிக்க உலக மக்கள் இன வெறியால் படுகொலைச் செய்யப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது அவர்களின் தார்மீகக் கடமையும்கூட. பெயர்தாங்கிகளாக சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக உள்ள நிலையில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

0 comments:

Post a Comment