NewsBlog

Thursday, November 1, 2012

சர்வதேசம்: சோமாலியாவின் அரசியல் வடிவமைப்பில் பெரும் புயலாய் ஹலீமா!

அவருக்கு 15 வயதுதான் அப்போது! உயர்நிலைப்பள்ளி மாணவி! தனது ஊரான 'மொகாடிஷீ'விலிருந்து 'அப்கோயே' ஏறக்குறைய 30 கி.மீ. சென்றுதான் கல்வி கற்க வேண்டும். உள்நாட்டு அரசியல் சிக்கல்கள், சர்வதேச சிக்கல்கள் என்று நாட்டில் ஏராளமான பிரச்சினைகள். இத்தனையையும் தாண்டி அவர் மனித உரிமைகள் மற்றும் பெண்ணுரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளை கையில் எடுத்து தளராமல் போராட வேண்டியிருந்தது. அமைப்புச் சார்ந்தும், அமைப்புச் சாராமலும் அவர் மேற்கொண்ட அந்த நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தற்போதுதான் அவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆம்.. TSC என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'டெக்னிகல் செலக்‌ஷன் கமிட்டி'யின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் ஹலீமா இஸ்மாயீல் இப்ராஹீம். சோமாலியாவின் இரும்பு மங்கை!



உண்மைதான்! பல்லாண்டு காலம் ஏழை-எளியோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான அவரது போராட்டத்தின் விளைவாக கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் இது.

வேளாண்மைக் குறித்து ஏட்டுக் கல்வியை போதிப்பதோடு அவர் தமது பணியை  நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. நேரிடையாக களத்தில் இறங்கினார். சேறும்-சகதியமான வயல்காட்டில் வேளாண்பணிகளில் ஈடுபடும் பெண்களோடு பெண்ணாய் இருந்து பிரச்சினைகளை நேரிடையாய் பங்கிட்டுக் கொண்டார். உழைப்பின் வலியும்,வேதனையும் முட்களாய் அவரைத் தைத்தன.

அந்த கள ஆய்வின் விளைவாக... அவர் தெரிந்து கொண்டது இவைதான்:

  • பெண்கள் வயல்காட்டில் கடுமையாக உழைப்பதோடு, 
  • வீட்டில் குடும்பத் தலைவியாய் தனது கடமைகளை செம்மையாய் நிறைவேற்ற வேண்டும். 
  • பிள்ளைகளைப் பாரமரிக்கும் சுமைகள் வேறு. இத்தனையும் சிரமேற்கொள்ளும் அந்த ஏழைப் பெண்கள் அதற்கான ஊதியமோ, உரிமைகளோ பெற முடியவில்லை. 
  • தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். 

பத்தோடு பதினொன்றாக இதை பார்த்துக் கொண்டு ஹலீமாவால் சும்மா இருக்க முடியவில்லை. சுரண்டி வாழும் நிலச்சுவன்தாரர்களுக்கு எதிராகப் போராட சட்ட உதவியை நாட வேண்டியிருந்தது. 

அதேபோல, விதவைகள் சம்பந்தமான உரிமைகள் மீட்டெடுப்பதிலும் அவர் இதற்கிணையாக ஒரு யுத்தம் தொடங்க வேண்டியிருந்தது. 

கணவனைப் பறிக் கொடுத்த விதவைப் பெண்களுக்கு உழுவதற்கு என்று ஒரு சொந்த நிலம் இல்லை. தனித்திருந்தால் வலுவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்திய ஹலீமா 1980-இல், விதவைப் பெண்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டுறவு சங்கமாக வடிவமைத்தார். இந்த சங்கத்தின் நிர்பந்தத்தின் விளைவாக அரசாங்கத்தை பணியவைத்தார். பெண்களுக்கான நில ஒதுக்கீடு தர அரசு கொள்கை அளவில் முன்வந்தது.

1990-இல், சோமாலியாவில் மூண்ட உள்நாட்டுப் போரின் விளைவாக பெண்கள் சம்பந்தமான மனித உரிமைகளின் நிலைமை இன்னும் மோசமடைந்தது. இந்த சூழலிலிருந்து விடுபட தன்னோடு இன்னும் ஒன்பது பெண்களையும் இணைத்துக் கொண்டு பெண்களுக்கான அரசு சாரா தன்னார்வு அமைப்பொன்றைத்  தொடங்கினார்.  'IIDA' என்ற பெயரில் தொடங்கிய அந்த அமைப்பு பெண்ணுரிமைகளை மீட்டெடுக்கவும், அவர்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லவும் களத்தில் இறங்கியது. 

 ஹலீமாவின் தளராத இத்தகைய முயற்சிகளின் விளைவாக சோமாலியாவின் பெண்களின் சமூக அந்தஸ்து கணிசமாக மேம்பட்டுள்ளது. அவரை 'டிஎஸ்சி' யின் தலைமைத்துவத்துக்குத் தள்ளியது. இது எத்தகைய வலிமைப் பெற்ற குழு என்றால்... மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தவிர்க்க இயலாத அரசியல் சக்தியாக இது உருப்பெற்றுள்ளது. 

'டிஎஸ்சி' யில் பிரதிநிதித்துவம் வகிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கண்களில் சந்தோஷ மின்னல்களுடன் சொல்லும் ஹலீமா, நுண்ணறிவுடன் கூடிய செயல்பாட்டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.  ஆம்.. பல்வேறு இனங்களின் குழுவான சோமாலியாவின் இனத் தலைவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தங்களின் கருத்துக்களை விளக்கி ஒத்தக் கருத்தாளர்களாக மாற்றியுள்ளது சாமான்ய பணியாக கருதவே முடியாது. 

"எங்கள் அமைப்பில் ஒவ்வொரு இனத்துத் தலைவரும் பிரதிநிதித்துவம் வகிப்பது வியப்பூட்டுவதாகும். எங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஒத்துக் கருத்துக்காக நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்!" - என்கிறார் ஹலீமா.

உண்மையில், இது ஒரு முன்னுதாரணம்! 

  • இத்தகைய 27 பேர் கொண்ட உறுப்பினராகக் கொண்ட குழுவில் (நாட்டின் ஒவ்வொரு இனம் சார்ந்த பிரதிநிதிகள் இவர்கள்) இருவர் கூடுதலாக வாக்களிக்காமல் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மற்றும் 
  • ஐநா மன்றத்தின் சோமாலியாவுக்கான அரசியல் அதிகாரிகளான (UNPOS) பிரதிநிதிகள். 
  • இவர்களோடு சர்வதேச அளவிலான பார்வையாளர்கள் எழுவரைக் கொண்டது இந்த குழு.

டிஎஸ்சியின் முக்கிய நோக்கம் சோமாலியாவின் அரசியல் அமைப்பை வடிவமைக்க உதவுவது. இதன் உறுப்பினர்களின் முக்கியப் பணி குற்றப் பின்னணி மற்றும் வன்முறைப் பின்னணிக் கொண்ட அரசியல்வாதிகளை அரசியலிலிருந்து ஒதுக்குவது. 

தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனுத்தாக்ல் செய்த இத்தகைய குற்றப்பின்னணி கொண்ட 70 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்து போட்டியிட முடியாமல் தடைவிதித்தது இந்த அமைப்பின் பணி என்பது அசாதாரணமானது. அதுவும், துப்பாக்கிகளும்,  கந்தக நெடிகளும் சகஜமாகிப் போன ஒரு சமூக அமைப்பில் ஹலீமாவின் தலைமையிலான இயக்கம் இதைச் செய்திருப்பது மிகவும் போற்றலுக்குரிய அருஞ்செயலாகும். 

"சோமாலியாவை பேரழிவிலிருந்து மீட்டெடுத்து நல்லதொரு சமூகமாக்க நாங்கள் நாட்டின் அனைத்து இனம்சார் தலைவர்களின் ஆதரவைக் கோருகிறோம். நாட்டின் மிகச் சிறந்த மக்களவையை உருவாக்க உதவும்படி அவர்களிம் கேட்டுக் கொள்கிறோம். சோமாலியாவின் புதிய சகாப்தம் இதன் மூலமே சாத்தியம் என்பதை விளக்குகிறோம். பல்வேறு விவதாங்கள் மூலம் இதை அவர்களுக்கு புரிய வைக்கிறோம். 

இதன் விளைவாக தற்போது சோமாலியாவின் மக்களவை உலகின் மிகச் சிறந்த உறுப்பினர்கள் கொண்ட மக்களவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது!"- என்கிறார் பெருமையோடு ஹலீமா.

மக்களவையில் பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் 15 விழுக்காடாக இருந்த நிலை மாறி தற்போது 30 விழுக்காடாக அது உயர்ந்துள்ளதை ஹலீமா குறிப்பிட்ட காட்டும் அதேநேரத்தில் அதற்கான கடும் உழைப்பையும் நினைவு கூர்கிறார். 

"1970 களில் அனைவருக்கும் கல்வி என்று இருந்த நிலை மாறியதால் பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார்கள். தற்போது அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நாங்கள் எட்டியே ஆக வேண்டும்!"-என்கிறார் ஹலீமா நம்பிக்கையோடு.

 "சமூக ரீதியாக சோமாலிய் பெண் இரண்டு முக்கியப் பாத்திரங்களை வகிக்கிறாள். எதிர்கால சந்ததிகளின் தாய் என்ற ஒரு தகுதியும்; வீட்டின் எஜமானி என்ற மற்றொரு தகுதியுமே அது. இத்தகைய சமூக வலிமைவாய்ந்த இதே பெண்கள்தான் வீட்டுக்கு வெளியே வாய்ச் செத்தவர்களாக, பேசா மடந்தைகளாக இருக்கிறார்கள். இத்ற்கு கல்வி அறிவை அவர்கள் தவற விட்டதே காரணம். திரும்பவும் அவர்கள் இழந்த தங்களின் சக்தியை.. வலிமையைப் பெற வேண்டும்!" - என்கிறார் ஹலீமா தமது அடுத்தக் கட்டப் போராட்ட தளத்தை நினைவு கூர்ந்தவராக.

"தேர்தல்களில் திறம்வாய்ந்த பெண் வேட்பாளர்களை நிற்க வைக்கும்படி இனத் தலைவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக தற்போ மக்களவையில் தகுதி வாய்ந்த கல்வியாளர்களான பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புத் தருவதே தற்போதைய தலையாயப் பணி. நாட்டின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் சட்டரீதியாக.. எழுத்துப் பூர்வமாக ஆக்குவதே தற்போதைய பணியாகும்!"-என்கிறார் ஹலீமா உறுதியோடு.

"எங்கள் கால்களாலேயே நாங்கள் நிற்க முடியும் என்பதை நாங்கள் உலகுக்கு உணத்தியாக வேண்டும்!"- என்கிறது இந்த பூவாய் மலர்ந்து பெரும் பூயலாய் உருவெடுத்துள்ள  ஹலீமா என்ற சோமாலியாவின் பெண் சிங்கம்..


1 comment: