NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Tuesday, November 5, 2013

சிறப்புக் கட்டுரை:'சிலந்தி வலை'



இருண்ட இரவு. இன்னும் சில மணி நேரத்தில் கிழக்கு வெளுத்துவிடும். அதன் பிறகு மக்கத்து குறைஷியருக்கு விஷயம் தெரிந்து போகும். தங்களின் இரவு முற்றுகை வீணாய் போனதை அறிந்து மக்கா கொதிக்கும். நகரம் சல்லடை போடப்படும்!

மக்காவில் இறைத்தூதர் முஹம்மது நபிகளார் தம் போதனைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்த காலமது. உருட்டலும், மிரட்டலும், பொன், பெண் பேரங்கள் தலை குப்புற விழுந்தபின், சாம, பேத, தான, தண்டமாய் எதிரிகள் எடுத்த முடிவு ‘படுகொலை’. தனிநபர் மீது பழி விழுந்திடாமலிருக்க ஒவ்வொரு குலத்திலிருந்தும ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொலைக்கான நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இரவில் தப்பிப் போகாமல் முற்றுகையிட்டுக் காவல் காப்பது, பொழுது புலரும் வேளையில் கொன்றுவிடுவது. இதுவே எதிரிகளின் திட்டம்.கருத்தை, கருத்தைக் கொண்டு உரசாமல் ஆயுதங்களின் கூர்மையால் ஒடுக்க நினைத்தது மக்கத்து இளவட்டம்.

தம்மைச் சுற்றி நடப்பதை நபி பெருமானார் அறிந்து கொண்டார்கள். நுண்ணறிவுடன் ஒரு திட்டம் தீட்டினார்கள். அதற்கு முழுமையாய் ஆதரவு தர 12 வயது நிரம்பிய இளந்தோழர் அலியும் ஒப்புக் கொண்டார். தாம் தப்பி விட்டதை எதிரிகள் அறிந்து கொள்ளாமலிருக்க அலி படுக்கையில் பொழுது புலரும்வரை துயில் கொள்ள வேண்டும். முள் படுக்கையை மலர் படுக்கையாய் எண்ணி அத்தோழரும் அதற்கு இசைந்திட்டார்.

நபி பெருமானார் தம் அருமைத் தோழர் அபூபக்கருடன் மக்கா மாநகரை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். ஏற்கனவே இறைவனிடமிருந்து முன்னெச்சரிக்கையாய் மக்காவைத் துறக்க வேண்டியிருக்கும் என்ற சமிக்ஞைகள் வந்துவிட்டிருந்தன. அதற்கொப்ப ஏற்பாடுகளும் சித்தமாயிருந்தன.

வீட்டிலிருந்து கிளம்பிய நபிகளார் கஅபாவுக்குத் தெற்காக அமைந்திருந்த ‘மிஸ்பலா’வை அடைந்தார்கள். அங்குதான் அபூபக்கரின் வீடும் இருந்தது. மக்காவைத் துறந்து மதீனாவை அடைவது நபிகளாரின் திட்டம்.

மதீனா வட திசையிலிருக்க பயணமோ தென் திசை நோக்கி அமைந்தது. ஏனெனில், நபிகளாரைக் காணாத எதிரிகள் முதலில் விரைவது இரண்டு இடங்கள். ஒன்று அபூபக்கரின் வீடு; அடுத்தது மதீனாவுக்குச் செல்லும் பாதை. எதிரிகளைக் குழப்பி, பாதுகாப்பாக, தாம் எண்ணிய இடத்தை அடைய நபிகளார் தம் பயணத்தை வேறு விதமாக அமைத்தார்கள்.

இரவின் கும்மிருட்டு, நட்சத்த்திரங்களின் கண் சிமிட்டல், இதனூடே மக்காவுக்கு தெற்கிலிருந்த மலைப்பகுதியை நபி பெருமானாரும், அபூபக்கரும் சென்றடைந்தார்கள். யார் கண்ணிலும் படாமலிருக்க நல்லதொரு மறைவிடம் தேடினார்கள். அங்கு ‘தெளர்’ என்னும் மலையிலேயே இருந்தது ஒரு குவை. குறுகியதும், ஆழமானதுமான தக்க புகலிடம்.

இரவு இன்னும் இருட்டிலிருந்து கரையவில்ல.

நபித்தோழர் அபூபக்கர் குகைக்குள் நுழைந்தார். அதைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். விஷ ஜந்துக்களால் தம் தோழருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலை அவருக்கு. குகையின் தரையில் நிறைய பொந்துகள் இருந்தன. அபூபக்கர் தம் மேலாடையைக் கழற்றி அதை சிறு சிறு துண்டுகளாய் கிழித்தார். ஒவ்வொரு துண்டையும் உருட்டி பந்தாக்கினார்; பொந்துக்களை அடைத்தார். இனிக் கவலையில்லை என்ற முழு நிம்மதியுடன் நபிகளாரைக் குகைக்குள் அழைத்துச் சென்றார்.

பொழுது புலர்ந்தது.

விடியலில் தம் எதிரியை ‘அஸ்தமனமாக்கிட’ உருவிய வாட்களுடன், பயங்கர ஆயுதங்களுடன் நின்றனர் மக்கத்து இளைஞர்கள். வீட்டில் கண்டதோ சிறுவர் அலியை. கோபத்தின் உச்சிக்கே சென்றவர்கள் பெரும் கூப்பாடு போட்டார்கள். வசை மாரி பொழிந்தார்கள்.

“விடாதீர்கள்..! ஓடுங்கள்..! அபூபக்கர் வீட்டிற்கு! தேடுங்கள்.. நகர் முழுவதும் வலை வீசி! மக்காவை விட்டுச் செல்லும் பாதைகள் அனைத்தையும் அடைத்துவிடுங்கள்!

எங்கே அந்த பாலையின் வேடுவர்கள்? சென்று தேடுங்கள்.. அப்துல்லாஹ்வின் மைந்தன் முஹம்மதுவை! பெறுங்கள் அளவற்ற பரிசுகளை!

தேடுங்கள்..! விடாதீர்கள்..! விடாதீர்கள்…!!”

கூச்சலும், குழப்பமுமாய் பொழுது புலர்ந்தது.

வழித்தட தடயங்களில் நிபுணத்துவம் பெற்ற சில பாலைவாழ் மக்கள் நபி பெருமானார் சென்ற பாதையைக் கண்டுபிடித்தும் விட்டனர். அதைத் தொடர்ந்து மலைப்பகுதிக்கும் வந்து சேர்ந்தனர். எதிரிகளால் இவ்வளவு சீக்கிரம் வளைக்கப்படுவோம் என்று நபிகளார் எண்ணவில்லை.

மலையின் ஒவ்வொரு அங்குலமும் எதிரிகளின் கண் வீச்சுக்கு ஆளாக.. குகைக்குள் இருந்த நபித்தோழரின் நெஞ்சமோ பட படத்தது. ‘தம் உயிரினும் இனிய தோழர்க்கு ஊறு ஏதும் நேர்ந்திடக் கூடாதே!’ – என்ற உணர்வின் வெளிப்பாடு அது.

இப்போது காலடிகளின் ஓசையும், வாட்களின் உரசலும் தெளிவாய்க் கேட்டன.

‘தெளர்’ கலைக்குகையையும் எதிரிகள் கண்டுபிடித்து விட்டனர். குகையின் வாயிலோ சிலந்தி வலையயால் பின்னப்பட்டிருந்தது. தேடி வந்தவர்களில் ஒருவன், “காலடிச் சுவடுகள் இத்துடன் முடிகின்றன. அவர்கள் இங்கு எங்கோதான் இருக்க வேண்டும். எதற்கும் குகைக்குள் நழைந்து பார்த்து விடுவோம்!” – என்றான்.

மற்றவர்களும், “ஆம்..! ஆம்..! குகைக்குள் தேடுவோம்!” – என்றவாறு பளபளக்கும் வாட்களுடன் குகைக்குள் நுழையத் தயாரானார்கள்.

இந்தச் சமயத்தில் குறைஷிகளின் கனவான் ‘உமைய்யா பின் கலப்’, தலையை அசைத்தவாறு “நாம் தேடி வந்தவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை. இதோ! பார்த்தீர்களா சிலந்தி வலையை? யாராவது குகைக்குள் நுழைந்திருந்தால் இவ்வலை அறுந்திருக்க வேண்டுமே!

நாம் இங்கு கிடந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்! வாருங்கள்! வேறு பக்கம் தேடுவோம்! அவர்கள் தப்பி விடுவதற்குள் பிடித்தாக வேண்டும்!” – என்றான் பதற்றத்துடன்.

அதேநேரத்தில் குகைக்குள் வெளியில் நடப்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நபித்தோழர் அபூபக்கர் பெரும் கவலை அடைந்தார். தமது அருமைத் தோழருக்கு எதிரிகளால் ஆபத்து விளைந்திடுமோ என கலங்கி நின்றார். நபிகளாரோ எவ்விதமான சலனமுமின்றி இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்கள்.

எண்ணங்கள் குவிக்கப்பட்ட அமைதி! பரம் பொருளைச் சரணடைந்துவிட்ட உள் அமைதி!

“பிராணனில் அமைதி!
பேரானந்தத்தை
தொட்டுவிட்ட அமைதி!
இறையருளைப் பெற்றுவிட்ட
பிரத்தியட்ச அமைதி!"

நபிகளார் தொழுது முடித்தார்கள். ஏறிட்டுப் பார்த்தார்கள். தம் தோழரின் விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்தோடுவதைக் கண்டார்கள். 

“இறைத்தூதரே! அவர்கள் நம்மை நெருங்கிவிட்டார்கள். நாமோ… நாமோ.. இருவர்..!”

தம் தோழரின் நிலையைக் கண்டதும் நபிகளாரின் வதனத்தில் புன்னகை மலர்ந்தது. அது பூரண சந்திரனாய்த் தகதகத்தது. விழிகளோ சுடர்விட்டுப் பிரகாசித்தன.

எதிரிகளை எதிர்கொள்ளத் தக்க ஆயுதமும், வேண்டிய ஆள் பலமும் இல்லாத நிர்க்கதியான அந்நிலையில் நபி பெருமானாரின் அமுத வாயிலிருந்து தெள்ளத் தெளிவாய் நீரோடையின் சலசலப்பாய் வார்த்தைகள் வெளிப்பட்டன.

“அஞ்சற்க தோழரே! அஞ்சற்க! இருவர் அல்ல நாம் மூவர்; இறைவனையும் சேர்த்து! இறைவன் நம்மோடு இருக்கிறான் அஞ்சற்க!”

இறைநம்பிக்கையின் இறுக்கமான உறுதியால் மலை போல வந்த பேராபத்து பனியாய் விலகிக் போனது.

மலைக்குகையின் வாயை, அற்ப சிலந்தி வலையால் பின்னச் செய்து தன் அடியாரை இறைவன் காத்துக் கொண்டான்.

-  'தினமணி கதிரில்' பிரசுரமான ஆக்கம்.

Monday, November 4, 2013

விருந்தினர் பக்கம்: 'படிக்காததால் என்னவோ..'


  1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டால் கிடைப்பது 6,000 ரூபாய்!
  2. ஒரு ஏக்கர் வாழை போட்டால் கிடைப்பது 9,000 ரூபாய்!
  3. ஒரு ஏக்கர் நெல் போட்டால் கிடைப்பது 15,000 ரூபாய்!
  4. ஆனால், ஒரு ஏக்கர் 'பிளாட்' (PLOTS) போட்டால் கிடைப்பது கை நிறைய - 1.6 கோடி ரூபாய்!

நீங்களும், நானும் படித்து விட்டதால் தேர்ந்தெடுப்போம் நான்காம் அம்சம். 

ஆனால், நமக்கு சோறு போடும் உழவன் படிக்காததால் என்னவோ பட்டாவுக்கு பதிலாக வியர்வையை போடுகிறான். 

அதிகாரப் பூர்வமான புள்ளிவிவரங்களின்படி நாட்டில் ஆண்டுதோறும் 17,500 உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகுக்கு உணவளிக்கும் உழவனை அங்கீகரிக்காத எந்த சமூகமும் அழிவை நோக்கி செல்வதிலிருந்து யாராலும் தடுக்க முடியாது என்பது உண்மை. 

அதேபோல, டாலர்களுக்கு அடகு வைக்கப்படும் கல்வி, உழவனின் உழைப்புக்கு முன் மண்டியிடும் என்பதும் திண்ணம்.

- Jmferoz Dheen

Sunday, November 3, 2013

நடப்பு செய்தி: 'வெல்பர் பார்ட்டியின் மாநாடு'

பெண்கள் தலைவர் காலிதா பர்வீன் (உள்படம்: மாநாட்டு அமைப்பாளர்: ஷபியுல்லாஹ்)
 வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா - ஆந்திர கிளையின் சார்பாக, 'நாட்டின் நடப்பு பிரச்னைகளும், அவற்றின் தீர்வுகளும்' என்னும் தலைப்பில் ஹைதராபாத் மாவட்டத்தின் ராஜேந்திர நகரில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு தேசிய தலைவர் முஜ்தபா பரூக் மற்றும் தேசிய செயலாளர் கியூ. ஆர். இல்யாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  மாநிலத்து பெண்கள் பிரிவின் முக்கியத் தலைவரான காலிதா பர்வீன் உட்பட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கிட்டதட்ட 600 பேர் கலந்து கொண்ட மாநாட்டை அதன் அமைப்பாளரான சையத் ஷபியுல்லாஹ் காதிரி திறம்பட நடத்திக் காட்டியது முக்கியமானது.

Saturday, November 2, 2013

மகளிர்: 'மகளிர் குற்றங்களுக்கு எதிராக ஜமாஅத்தின் பேரணி'

பெண்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றங்களை எதிர்த்தும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்காகவும் அக்.30-இல், கல்கத்தாவில் மாபெரும் மகளிர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மேற்கு வங்க ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி நடத்தியது. அக்.2 லிருந்து அக்.30 வரை மாநிலம் முழுவதும் பெண்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய ஜமாஅத்தின் மகளிர் அணி அந்த நிகழ்வின் நிறைவாக அக். 30 இல் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  கிட்டதட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.



மேற்கு வங்கத்து சிபிஐஎம்மின் முக்கியப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான அப்துர் ரஜாக் முல்லா பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தமது உரையில், "ஒவ்வொரு பெண்ணும் தாம் அணியும் ஆடை சம்பந்தமாக விழிப்புணர்வு பெறுவது அவசியம். இளம் பெண்கள் டீ சர்ட் - பேண்ட்டுகளை அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது நமது சமூகத்துக்கான ஆடையும் கிடையாது. பெண்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும் பெண்களின் கண்ணியத்துக்கு முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டும்!" - என்றார். மேலும், அவர், "பெண்கள் சல்வார் கமீஸ் போன்ற ஆடைகள் அணிவது மேலானது!"- என்றும் கருத்து தெரிவித்தார்.  


ஜமாஅத் மகளிர் அணியின் மாநில தலைவியான ரெஹானா சுல்தானா பேசும்போது, "மாநிலத்து முக்கிய அரசியல் கட்சிகள் பெண் கண்ணியம் மற்றும் உரிமைகள் சம்பந்தமாக அக்கறை காட்டாத நிலையில் ஜமாஅத் இந்த பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறது!" - என்றார். மேலும், அவர் தமது உரையில், "கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முன்வர வேண்டும். பெண்களின் உடலை வணிகமயமாக்கி ஆதாயம் தேடும் விளம்பரங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்!" - என்றார்.

ஜமாஅத்தின் மாநிலத் தலைவரான முஹம்மது நூருத்தீன், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் தலைவரான டாக்டர் முஹம்மது ரைஸீத்தீன், ஜமாஅத்தின் மாநில செயலாளரான அப்துர் ரபீக், மில்லி இத்தேஹாதின் செயலாளர் அப்துல் அஜீஸ், உருது பத்திரிகையாளருமான சையத் அலி போன்றோர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

பேரணியின் முடிவில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஊடக பொறுப்பாளர் மஸியூர் ரஹ்மான் தீர்மானங்களை வாசித்தார்.  



Friday, November 1, 2013

பெஸ்ட் கிளிக்: 'ஆபத்தற்ற கூடை!'

கூடையம்மா.. கூடை
நாற்காலியாய் கூடை
சிம்மாசனமாய் கூடை
சாய்ந்தமர கூடை
ஒய்யாரமாய் கூடை
சிரித்தமர கூடை
ஆபத்தற்ற கூடை

- 'சின்னக்குயில்'
- போட்டோ: இக்வான் அமீர்.
 

பெஸ்ட் கிளிக்: 'ஆனாலும்..'

வயிற்றுக்கு 
உணவில்லை..
ஆனாலும் ...

சிரிப்புக்கு
குறையில்லையே
மகராசா..!

- 'சின்னக்குயில்'
- போட்டோ: இக்வான் அமீர்


பெஸ்ட் கிளிக்: 'கண்ணே கலங்காதே!'

கல்வி 
கற்றிடலாம்..!  
வாழ்க்கை
கரை ஏறிடலாம்..! 
கண்ணே..
கலங்காதே!


- 'சின்னக்குயில்'
- போட்டோ: இக்வான் அமீர்
  
 

பெஸ்ட் கிளிக்: 'யாரை எரிக்கப் போகிறாய்?'


நீதி கேட்டு

மதுரையை எரித்தாள்
ஒருத்தி!
 

விடியலை எதிர்பார்த்து..
யாரை

எரிக்கப் போகிறாய்
தாயே நீ?

- சின்னக்குயில்,
- போட்டோ: இக்வான் அமீர் 

பெஸ்ட் கிளிக்: 'அங்கேயும்..'


விண்கலமேறி...
செவ்வாய் கிரகத்துக்கு..
புலம் பெயர்ந்திடதான்..
திட்டமோ..?

எச்சரிக்கை..!
அங்கேயும்..
எங்கள் அரசியல் நாயகன்..
கொடி நட்டி விலை பேசிடுவான்..
எச்சரிக்கை..!!

- 'சின்னக்குயில்' 
- போட்டோ: இக்வான் அமீர்