'''''''''''''''''''''''''''''''''''''''
சக சமய சகோதரர்களுக்கு அவரவர் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வது கூடுமா..? கூடாதா..? என்ற விவேகமற்ற சர்ச்சைகள் அல்லது நினைப்புகள் மேலோங்கியிருக்கும் நேரத்தில்,
“மேன்மைமிக்க சமுதாயம்“ என்ற சொல்லாடல் சதா, மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கும் காலத்தில்,
எனது அண்டைவீட்டார் தனது நடத்தையால் திகைக்க வைத்த ஒரு சம்பவம் இது.
சமீபத்தில்தான் சகோதரர் முத்து சுப்பிரமணியன் எங்கள் அண்டைவீட்டாராக குடியேறியிருந்தார். அமைதி தவழும் முகம். சதா புன்முறுவல் இழையோடும் தோற்றம்.
இன்று காலை சகோதரர் முத்து சுப்பிரமணியனின் மனைவி, மக்கள் தீபாவளி இனிப்புடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
என் பங்காக தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி அவர்களை வரவேற்றேன்.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
இனிப்புத் தட்டை கையில் ஏந்தி வந்த மகேஸ்வரி முத்துசுப்பிரமணியன் சொன்னார்: "எங்கள் தலைவருக்கு பாலூட்டி வளர்த்தவர் ஒரு முஸ்லிம் தாய். அதனால், இன்றைய நாளின் இந்த பண்டிகையின் முதல் மரியாதை உங்களுக்குதான்!”
அம்மாவோடு வந்திருந்த ஸ்ரீநிதி மத்தாய்ப்பாய் சிரித்தார்.
மகேஸ்வரி முத்துசுப்பிரமணியன் இன்னும் நிறைய செய்திகளை அவருக்கு உரிய பாணியில் சொன்னார். அவை எல்லாமே இணக்கமான, நெஞ்சங்களைப் பிணைக்கும் செய்திகளான வரலாறுகள்.
நமது முன்னோர் விட்டுச் சென்ற இந்த இணக்கங்களோடான வாழ்க்கையின் முன்மாதிரியைப் பின்பற்றி அழகிய அன்புக் கோட்டையைக் கட்ட எத்தனை எத்தனை வாய்ப்புகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன ஆஹா.. !
(அக்டோபர் 29, 2016 நடந்த சம்பவம் இது-முகநூலில் வாசிக்க: https://www.facebook.com/ikhwan.ameer.9/post /698025880350444?__cft__[0]=AZUw2YxB4KSb2lNZj0E_D5iGo8NH2YhoshWO2W9YZvh98xQXaZPlYCbdsKSM0OyzoTlT4DilAkG-kZukZql2c71u-hyJg13oJhNdRCh71zR17otqLySzkmF0n2LR1xWEEllBx7S4Hbq8DM1VMHGpnl7b&__tn__=%2CO%2CPH-R )
0 comments:
Post a Comment