NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Monday, May 27, 2013

Cock Fight 2 - 'சண்டைக்கோழி'

Moon Light - 'நிலவழகி'

Thursday, May 23, 2013

Big Fight - 'யுத்தம்!'

Sunday, May 19, 2013

சிறப்புக் கட்டுரை: 'தாழட்டும் துப்பாக்கி..! உயரட்டும்.. மனிதம்!!'

‘அந்நியனுக்கு வரி கட்ட முடியாது!’ – என்றதால் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது கட்டபொம்மனுக்கு; அது அந்தக் காலம். ‘தீவிரவாததுக்கு துணைப் போக முடியாது! வரியும் கட்ட முடியாது!’ – என்று சொன்னதால் அதைச் சொன்ன கோர்டேஜுக்கு நெக்லஸ் வெடிகுண்டு மாட்டப்பட்டது. இது பயங்கரவாதிகளின் காலம்.

கொலம்பியாவின் ‘பொகோடா’வில் பால் வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவும் ஏழைப் பெண் கோர்டேஜ் (53). இவர் கொலம்பியா தீவிரவாதிகளின் வரித் தண்டலுக்கு உடன்படவில்லை. விளைவு, கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த ‘சித்தாந்தவாதிகள்’ அப்பாவியான ஏழைப் பெண்ணுக்கு உடனுக்குடன் என்ன தண்டனை அளித்தனர் தெரியுமா?
கழுத்தில் வெடிகுண்டைப் பொருத்தி.. பூட்டி விட்டனர்.
எந்த நேரமும் வெடிக்கத் தயாராய்க் காத்திருக்கும் அந்த மின்னணுக் கந்தக பூதத்தின் பிடியில் சிக்கி ஆறு மணிநேரம் அப்பெண் சித்திரவதையை அனுபவிக்க வேண்டியிருந்தது.
படபடக்கும் இதயங்களுடன் சுற்றியும் உறவினர்கள் சூழ்ந்திருக்க.. அண்டை – அயலார் அச்சப்பட்டு சிலையாய் நிற்க ..
நிபுணர்களின் வெடிகுண்டுச் செயலிழப்பு முயற்சிகள் பலனளிக்காமல் கோர்டேஜின் உடல் சுக்கு நூறாய் சிதறடிக்கப்பட்டது. மற்றொரு முறை வரலாற்றில் மனிதநேயம் வெட்கித் தலைகுனிந்தது.
உடல் நடுங்கச் செய்யும் பயங்கரவாதம் கொலம்பியா போன்ற ஏதோ தொலைதூர நாட்டில் நடந்தாலும் அல்லது இலங்கை போன்ற அண்டை நாட்டில் நிகழ்ந்தாலும் அது மனித நேயத்துக்கும், மனித குலத்துக்கும் எதிரானது என்பது மட்டும் நிச்சயம்.
வடக்கில் காஷ்மீரிலிருந்து ஒடிசா, அசாம், பிகார், உ.பி, ம.பி மாநிலங்களைத் தாண்டி தெற்கில் ஆந்திரம்வரை நமது நாட்டிலும் பயங்கரவாத்தின் வேர்கள் ஆழமாக பதிந்திருப்பது பெரும் கவலையளிப்பதாகும்.


தீவிரவாதிகள, கொரில்லாக்கள், வகுப்புவாதிகள், சாதீயவாதிகள், இனவாதிகள் என்று பன்முகப் பெயரகளில் ‘பயங்கரவாதம்’ இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு முகமூடிகளுடன் உலவி வருகிறது. அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்ற பெரியார் – அண்ணாக்களின் பூமியில் … தமிழகத்திலும் இதன் நச்சுவிதைகள் தூவப்பட்டுவிட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைக் கர்ஜனைகளும், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளின் கந்தக நெடிகளும் ரத்தக் களறியை ஒருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
உ.பி, பிகார், ஹரியானா மாநிலங்களில் மிட்டாமிராசுகளும், நிலக்கிழார்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ள தனியார் படைகள் என்ற பெயரால் ‘ரண்வீர் சேனை’ என்ற கூலிப்படையை நிறுவியுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளோ தற்காப்பு, முதலாளித்துவத்துக்கு எதிரான.. பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவான நிலைப்பாடு காரணமாக துப்பாக்கி மொழியில் பேச மனித ரத்தம் ஆறாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஒருபுறம் அந்நிய பயங்கரவாதமும், மறுபுறம் உள்நாட்டுத் தீவிரவாதமும் இந்தியாவை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் ஒரு கூட்டம் ஆயுதமேந்தினால்… அசாம், போடோ, மிஜோ போராட்டங்களோ மண்ணின் மைந்தர்களான அங்கீகாரக் கோரிக்ககையாகத் தீவிரவாத வடிவம் பெற்றன. நிலபிரபுத்துவம், சுரண்டல், சமூகமாற்றம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு தெலுங்கானாவின் தொடராய் எழுந்ததே நக்சலைட்டுகளின் தீவிரவாதம்.

வடகிழக்கில் தீவிரவாதத்தைத் தடுப்பதற்குப் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஒப்பந்தங்களுக்கு பிறகு உடனுக்குடன் பிரச்னைகள் முடிந்துவிடுவதில்லை. பஞ்சாப் பிரச்னைக்கு லோங்கோவால் ஒப்பந்தமும் உடனடித் தீர்வாய் அமையவில்லை.
1993, பிப்ரவரியில் கையெழுத்தான போடோலாந்து ஒப்பந்தமும் இத்தகையதுதான். தீவிரவாதிகள் அதை ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.
வழக்காமாக அரசு செய்யும் ஒரு தவறையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற அமைப்புகளிடம் எப்போதும் அது ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, தனது நம்பிக்கைக்கு மட்டும் பாத்திரமான.. மக்களிடம் அவ்வளவாக எடுபடாத.. ஒரு சிறிய குழுவை அல்லது பிரிவை மட்டும் கொண்ட அமைப்புகளுக்கு கிரீடம் சூட்ட முனைகிறது.
ஒவ்வொரு பிரச்னையையும் அரசு சரியாக அணுகாததே அனைத்துச் சிக்கல்களுக்கும் அசலான காரணம்.
பிரச்னைகளின் கேந்திரமான பகுதிகளில் முக்கியத் தீவிரவாதக் குழுக்களை கண்டறிய வேண்டும். அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை, மக்கள் பிரச்னைகளுக்கு அவை முன் வைக்கும் தீர்வுகளை, அவர்கள் தரப்பு வாதங்களை, நியாயங்களை எல்லாம் அரசு உளப்பூர்வமாக காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

தீவிரவாதிகள் தானே உருவாவதில்லை; அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள்.
அசாமில் பங்களாதேஷ் அகதிகள் நிரம்பியதால் அதற்கு எதிரானதாக உருவானதே, ‘அனைத்து அசாம் மாணவர் இயக்கம்’ தங்கள் பூமியை ஆக்கிரமித்தார்கள் என்ற கோபத்தில் வெகுண்டெழுந்தவர்களே லாலுங் பழங்குடிகள்.
1947 இல், 93 விழுக்காடாக இருந்த தொழிலாளர்கள் 1981 க்குள் எல்லாம் சொற்ப எண்ணிக்கையாகிவிட்டது. வாழ்வுரிமைக்கான யுத்தம் தொடங்கியது. ‘திரிபுரா நேஷனல் வாலண்டீர் ஃபோர்ஸ்’ உருவானது. அந்தத் தீவிரவாதத்துக்கு வங்காளிகள் பலியானார்கள். இதற்கிடையில் ஒடுக்கப்ட்டோர் நலம் காப்பதாக ‘பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி’ மற்றும் மாவோயிஸ்ட் ரெவெலூஷனரி ஃபோர்ஸ் குழுக்கள்’ துப்பாக்கிகள் ஏந்தின. இவற்றில் கல்வியாளர்களும், மேதைகளும், கலை – இலக்கியவாதிகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி வடகிழக்கு மாநிலங்கள் குருதியில் முங்கின.

ஆந்திராவில் பெருந்தலைவலியாக மாறியிருக்கும் நக்சலிஸம் 30 ஆண்டு வரலாறு கொண்டது. மேற்கு வங்கத்தில் தொடங்கிய நக்சல்பாரி இயக்கம் 1969-இல், ஶ்ரீகாகுலம் மாவட்டத்தில் தீவிரமாக செய்ல்பட்ட காலகட்டத்தில் தீவிரவாதிகள் வரிந்து கட்டிக் கொண்டு எந்த போலீஸாரையும் கொன்றதில்லை. இன்றோ துப்பாக்கிகளுக்கும், நிலக் கண்ணி வெடிகளுக்கும் பலியாகும் போலீஸாரின் மரணங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. கொல்லப்பட்டவர்களில் ஆந்திரத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் மாதவரெட்டி போன்றவர்கள் அடக்கம்.

அதுபோலவே, 2000 - ஆம், ஆண்டு ஏப்ரல் இறுதிவரை 'மோதல்கள்' என்ற பெயரால் 120 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைக்கழகம் பட்டியலிட்டது. ஏப்ரல் மாத்த்தில் மட்டும் 27 மோதல்கள் நடந்ததாகவும், அவற்றில் 52 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இவற்றில் நக்சல்கள் என்ற பெயராலும், ஐ.எஸ்.ஐ உளவாளிக் என்ற பெயராலும் நடந்த மோதல்களும் உண்டு.

போலீஸ் காவலில் ஒரு கைதி சித்திரவதை காரணமாக இறக்கும்போது, சந்தேகத்துக்குரிய மரணம் - குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 174 - இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302 - இன், கீழ் கொலைக் குற்றமாக அது பதிவு செய்யப்படுவதில்லை. 

அதேபோல, போலீஸ் மோதல்களில் ஒருவர் கொல்லப்படும்போது, தற்காப்புக்காக கொல்லப்பட்டது என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 

மனித உரிமை இயக்கமோ பிற கொலை சம்பவங்களைப் போலவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302 - இன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. 



ஆந்திரத்தில் மக்கள் யுத்தக் குழுவினரின் எண்ணிக்கைஅரசுத் தரப்புத் தகவல்களின்படி 5 ஆயிரம் மட்டுமேயாகும். ஆனால், இவர்கள்தான் 8 கோடிக்கும் அதிகமான ஆந்திர மக்களின் வாழ்க்கையை அவ்வப்போது 'பந்த்'கள் மற்றும் போராட்டங்கள் மூலம் ஸ்தம்பிக்கச் செய்பவர்கள். 

ஒருபுறம் காக்கிச் சட்டைகளின் கெடுபிடிகள். மறுபுறம் ஆலிவ் கிரீன் தீவிரவாதிகளின் அதிரடித் தாக்குதல்கள். மக்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்கள். 

வடக்கு தெலுங்கானா கிராமங்கள் முழுவதும் துப்பாக்கி கலாச்சாரம்தான்.

காஷ்மீரை எடுத்துக் கொண்டால்.. வாக்களித்தபடி கருத்துக் கணிப்பு நடத்தாதது....

370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அரசியல் சட்ட சுயாட்சி உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டது...

தேர்தல்கள் என்ற பெயரால் நடந்த ஜனநாயக விரோத ஊழல்கள்...

1990 முதல் 1995 வரை ஐந்தாண்டுகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுதான் காஷ்மீரிகள் இந்திய அரசுடன் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரணமாக 'குடியுரிமை மற்றும் ஜனநாயக உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு' தெரிவிக்கிறது. இந்தியாவின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 13 பேர் கொண்ட ஓர் உண்மை அறியும் குழுவை 1995 ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 7 வரை காஷ்மீருக்கு அனுப்பியிருந்தது. நாற்பதாண்டு கால ஜனநாயக அத்துமீறல்களை எல்லாம் சகித்துக் கொண்ட காஷ்மீர் மக்கள் 1980 களின் இறுதியில்தான் ஆயுதம் ஏந்தத் தொடங்கியதாக அக்குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இப்படிப்பட்ட சிக்கலான காஷ்மீர் விவகாரத்தில் கடுமையைக் காட்டி வந்த மத்திய அரசு ஒரு கட்டத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க ஹீரியத் அமைப்புடன் பேச்சு வார்த்தைக்கு முன்வந்ததது வரவேற்கத்தக்கது. ஆண்டின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் உல்லாசமாக கழிக்கும் பாரூக் அப்துல்லாஹ் போன்ற  பொம்மைத் தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் மக்கள் தலைவர்களை பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க அரசு அதிக ஆர்வம் காட்ட வேண்டும். 2000 க்கு முந்தைய பத்தாண்டுகளில் காஷ்மீரில் 9 ஆயிரம் ராணுவ வீரர்கள், 2 ஆயிரம் தீவிரவாதிகள், 10 ஆயிரம் பொதுமக்கள் பலியானதாக அப்போதைய தகவல்கள் தெரிவித்தன.



66 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டியிருக்கும். இனியும் இத்தகைய ஈடு செய்ய முடியாத மனித உரியரிழப்புகளை அனுமதிக்கக்கூடாது. அமைதிப் பேச்சுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கான நடுநிலையாளர்கள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகளையும், அறிஞர்களையும், மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் இக்குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

"தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு வார்த்தைகளா?" - என்று முகம் சுளிப்பதில் பயனில்லை. இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கு பெரும் அறைகூவலாக இருப்பது போரோ அல்லது அணு ஆயுத போட்டிகளோ அல்ல; தீவிரவாதம்தான்!

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாதிகளுக்கு அந்நிய சக்திகளிடமிருந்து ஆயுதங்கள் உட்பட எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. நிதிகளும், பயிற்சிகளும் தாரமாக தரப்படுகின்றன. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் அந்நியப் படையினர் இந்தியாவில் ஊடுருவி கண்ணும், கருத்துமாக பணிபுரிவதாகவும், இவர்களின் எண்ணிக்கை 1993 லிருந்து 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பஞ்சாபில் தீவிரவாதத்துடன் கடும் மல்லுக்கட்டிய முன்னாள் டி.ஜி.பி கே.பி.எஸ்.கில்லின் எச்சரிக்கை மறக்க முடியாதது. 

தீவிரவாத்தை நசுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கினால்.. உயிர், பொருள் இழப்புகள் இரு பக்கமும் தொடர்ந்தவாறே இருக்கும். அதற்கு ஒரு முடிவும் கிடைக்காது. அன்றைய காந்தஹார் விமான கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது அமைதி பேச்சு வார்த்தைக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம்.



மக்களைக் காப்பதற்காக அரசாங்கங்கள் இறங்கிவருவதில் தவறேதும் இல்லை. இது தலைகுனிவான செயலுமல்ல. 

அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு முன் துப்பாக்கிகள் தாழ வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களான இணையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

தோட்டாக்களுக்கு தோட்டாக்கள் பதிலாக முடியாது. 

அருமையான மனிதவளம் பல நூற்றாண்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதுதான் மிச்சம். 

மக்கள் ஒவ்வொரு நிமிடமும் அஞ்சி.. அஞ்சி வாழ்வதில் பொருளே இல்லை. 

அரசின் நலத்திட்டங்களும் மக்களைச் சென்றடைவதில் வாய்ப்பேதும் இல்லை. 

உலகில் எங்கெல்லாம் தீவிரவாதம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் வறுமை, வளர்ச்சியில் பின்னடைவு, அறியாமை ஆகியவை தலைவிரித்தாடும். இந்த மூன்றும் வன்முறைக்கு வழிவகுப்பவை. அமைதியை சீர்குலைப்பவை. அது நக்சல்களின் தெலுங்கானவாக இருந்தாலும் சரி.. தாலிபான்களின் ஆப்கானாக இருந்தாலும் சரியே! 



Friday, May 17, 2013

சிறப்புக் கட்டுரை:‘அறிவை அரியணையிலேற்றி..!’


கஅபாவின் சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்த அந்த நேரம். ‘இறைவனின் தோழர் – கலீலுல்லாஹ்’ இப்ராஹீம் நபியும் அவரது அருமை மகனார் தியாகச் செம்மல் இஸ்மாயீல் நபியும் (இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) இருகரமேந்தி இறைவனிடம் பிரார்த்தித்த அந்த தருணம். தொலைநோக்கு பார்வையுடன் அறிவார்ந்த ஒரு சமுதாயத்துக்கு அடித்தளமிட்டு பிறக்கிறது அந்தப் பிரார்த்தனை. அந்தகார இருட்டை விரட்டியடிக்க அறிவொளி கதிரொளி பாரெங்கும் பரவ மனிதகுலம் முழுமையும் மீட்சியடைய அடிமனதிலிருந்து எழுகிறது ஓர் இறைஞ்சுதல். வழிகாட்ட ஒரு தூதரை வேண்டி.. இறை சட்டங்களை ஓதிக்காட்ட… வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுத்தர, மாந்தர்தம் வாழ்வை தூய்மைப்படுத்த உதிர்கிறது அடிமனத்துநாதம்:

“எங்கள் இறைவனே! மேலும், இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டுபராகவும், வேதத்தையும் – ஞானத்தையும் கற்றுத் தரருபவராகவும், மேலும், அவர்களை (அவர்களுடைய வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும்” (திருக்குர்ஆன் - 2:129)

கருணையே உருவான இறைவன் இறைஞ்சுதலை ஏற்கிறான். அண்ணல் நபி (ஸல்) அவர்களை தூதராக தேர்ந்தெடுத்து வான்மறையை அருள்கின்றான். இஸ்லாம் என்னும் இறைநெறியை உலகெங்கும் பரவச் செய்கிறான். வெறும் 23 ஆண்டு காலத்துக்குள் அரபு நாடு முழுவதும் அறியாமை காரிருள் விலகி, அறிவொளி தீபம் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜு காலத்தில் அரஃபா மைதானம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உத்தம நபித்தோழர் – தோழியர்களால் நிரம்பி வழிகிறது.

அறிவுக்கான உவமையாக தாவூத் நபி, “இருள்படர்ந்த வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கு!” – என்கிறார்கள்.

ஈஸா நபியோ, தமது தோழர்களான ஹவாரியீன்களிடம் உரையாற்றும் போது, இப்படி கூறுகிறார்கள்:

“எனதருமை தோழர்களே! நான் உங்களுக்கு அறிவும் – விவேகமும் கலந்த அறிவுரைகள் சொல்வது, கேட்டு வியப்படைய அல்ல செயல்படவே சொல்கிறேன்!”

சூடானைச் சேர்ந்த இறையடியார் ஹகீம் லுக்மானிடம் யாரோ கேட்டார்கள்:

“உலகில் எல்லோரையும்விட பெரிய செல்வந்தன் யார்?”

“எல்லா நிலைகளிலும் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு திருப்தி அடைபவன்; பேராசையும் – பொருளாசையும் இல்லாதவன்” – அறிஞர் பதிலளித்தார்.

மீண்டும் கேட்கப்பட்டது:

"உலகில் எல்லோரையும்விட பெரிய அறிஞர் யாரய்யா?”

“தன் அறிவை மேலும், மேலும் வளர்த்தவாறே உள்ளவர்!”

அறிவை முதன்மைப்படுத்தும் சமூகங்களும், அறிவுபூர்வமாக சிந்திக்கும் இனங்களும், அறிவை நேசித்து செயல்படும் மனித குழுக்களும் வெற்றிப் பெறும் என்பதே வரலாறு.
இறைத்தூதர் முஹம்மது நபிகளாரும் (ஸல்) அறிவின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை நபிகளார் மஸ்ஜிதுன் நபவியில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களது திருமேனியில் செந்நிறப் போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அங்கு நபித் தோழர் ஸஃப்வான் இப்னு ஆலி வந்தார். தங்களை அறிமுகம் செய்து கொண்டார்.

“இறைவனின் தூதரே! நான் முராத் கோத்திரத்தைச் சேர்ந்தவன். கல்வி கற்பதற்காக வீட்டைவிட்டு தங்களிடம் வந்துள்ளேன்!”

இதைக் கேட்டதும் நபிகளார் மகிழ்ச்சியடைகிறார்கள். எழுந்து நெஞ்சுடன் அணைத்து வரவேற்கிறார்கள். தமது தோழருக்காக இறைவனிடம் பிரார்த்தித்துவிட்டு சொல்கிறார்கள்:

“கல்வியைத் தேடி எந்த நபர் வீட்டைத் துறந்து வெளியேறுகிறாரோ, அவரை அருள்புரியும் வானவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லா பக்கமும் சூழ்ந்து தங்கள் இறக்கைகளால் அணைத்துக் கொள்கிறார்கள். கல்வியின் மீதுள்ள அளவற்ற அன்பால் தங்களை மறந்தவர்களாய்  கீழ்வானம்வரை வந்துவிடுகிறார்கள்!”

இன்னொரு முறை நபிகளார் நவில்கிறார்கள்:

“எந்த நபர் கல்வியைத் தேடி பயணப்பட்டாரோ அவர் இறைவனின் பாதையில் உள்ளவராவார்; திரும்பும்வரை இந்நிலை நீடிக்கும்!”

கல்வியைத் தேடும் நிலையிலேயே ஒருவர் மரணித்துவிட்டால்…

“அவர் இறைவனை சந்திக்கும்போது, அவருக்கும்.. நபிமார்களுக்கும் நபித்துவம் என்ற அந்தஸ்து மட்டுமே இடையில் இருக்கும்!” – என்கிறார்கள் நபிகளார்.

“நபி (ஸல்) என்னை மார்புடன் அணைத்தக் கொண்டு, “இறைவா! இவருக்கு ஞானம் வழங்குவாயாக!” – என்று பிரார்த்தித்தார்கள்!” – என்று நபித்தோழர் இப்னு அப்பாஸ் (இறையருள் பொழிவதாக!) கூறுகிறார்கள்.

கொடை என்பதும், தான – தர்மங்கள் என்பதும் பொருளோ, செல்வமோ, வீடோ அல்லது நிலமோ இவற்றைத்தான் குறிக்கின்றன. ஆனால், நபிகளாரோ சமுதாயத்தின் மகுடமான கல்வியைக் குறிப்பது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது:

“ஒரு முஸ்லிம் கல்வியைக் கற்று அதை தன் முஸ்லிம் சகோதரருக்கு கற்குக் கொடுப்பதே தானங்களில் மிகச் சிறந்த தானமாகும்!”

வணக்கமா, கல்வியா, என்ற நிலையில் எது முக்கியத்துவம் பெறும்? இதோ அதற்கான பதிலாய் ஒரு வரலாற்று நிகழ்வு:

ஒருநாள். நபிகளார் மஸ்ஜிதுன் நபவியில் நுழைகிறார்கள். அங்கு இரு குழுவினர் இருப்பதைக் காண்கிறார்கள். முதல் குழுவினரோ ‘திக்ர், தஸ்பீஹ்’ போன்றவற்றில் அதாவது இறை தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அடுத்த குழுவினரோ இஸ்லாமிய அறிவைக் கற்பதும் – கற்பிப்பதுமாய் இருந்தார்கள். 

“இரண்டு குழுவினரும் நற்செயல்களில்தான் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இவற்றில் ஒன்று மற்றதைவிட சிறந்தது.

முதல் குழு இறைவனை நினைவனை நினைவுகூர்ந்து பாவமன்னிப்பு கேட்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இறைவன் இவர்களின் கோரிக்கையை ஏற்கலாம்; ஏற்காமலும் போகலாம்.

இரண்டாவது குழுவினரோ அறிவைப் பெறுவதும், பெற்ற அறிவை அடுத்தவர்க்கு சேர்ப்பதுமாய் (கற்பதும், கற்பிப்பதுமாய்) உள்ளனர்.

நான் ஆசிரியராகவே – ‘முஅல்லிம்’ அனுப்பப்பட்டுள்ளேன்!” – என்றவாறு இரண்டாம் குழுவினரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார்கள்.

கல்விக்காக முன்னோர்கள் செய்த அர்ப்பணங்களால் அந்தச் சமூகம் உலகின் திசை எட்டும் பரவ காரணமானது. இதில் வறுமை ஒரு பொருட்டே அல்ல. உயரிய எண்ணமும் அதற்கான அர்ப்பணமும் அறிவொளி பரவ காரணமானது என்பதற்கு திண்ணைத் தோழர்களே உதாரணம்.

மஸ்ஜிதுன் நபவி எதிரே ஒரு பெரிய திண்ணை இருந்தது. அதில் கல்வியின் மீது தீராத அன்பு கொண்ட ஒரு குழுவினர் தமது இருப்பிடமாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வீடோ, வாசலோ, சொத்து – சுகங்களோ எதுவுமில்லை. கற்பதும், கற்பிப்பதும் அவர்களின் முக்கியப் பணி. கிடைப்பதை உண்டு.. தங்களுக்கு என்று எந்த விருப்பமும் இல்லாமல் இரவு – பகல் எந்த நேரமும் அறிவொளியை பரப்பி வந்த உத்தமார்கள் ‘அஸ்ஹாபே சுப்பா’ என்ற திண்ணைத் தோழர்கள். இவர்களில் புகழ் மிக்கவர் அபூஹீரைரா (இறையருள் பொழிவதாக!). அவர்களின் வறுமை நிலைக்கு கீழ்க்கண்ட இந்தச் சம்பவமே எடுத்துக் காட்டு:

ஒருநாள் நடந்ததை நபித்தோழர் அபூ ஸய்யீத் அன்சாரி (இறையருள் பொழிவதாக!) விவரிக்கிறார்கள்:

“சரியான குளிர்காலமது. உடலை உறையச் செய்யும் குளிர். போர்த்திக் கொள்ள ஆடையில்லாமல் திண்ணைத் தோழர்கள் தவித்தார்கள். நெருங்கி அமர்ந்து உடல் வெப்பத்தையே கதகதப்பாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் திருக்குர்ஆன் ஓத மற்றவர்கள் கவனமாக கேட்டவாறு இருந்தார்கள். அங்கு நபி (ஸல்) வந்தார்கள். அச்செயலுக்காக இறைவனைப் புகழ்ந்தார்கள். அக்கூட்டத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

“யாரொருவர் இம்மையில் தனது சகோதரனின் ஒரு குறையை மறைக்கிறாரோ, மறுமையில் இறைவனும் அவரது குறையை மறைத்து விடுகின்றான்!”

இந்த சின்னஞ்சிறு நபிமொழிக்காக மதீனாவிலிருந்து எகிப்துவரை வாகன வசதி இல்லாத அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது நினைக்கவே பிரமிப்பூட்டும். நம் மூதாதையரின் தியாகங்களை எண்ணி கண்கள் குளமாகும். இப்படி பயணம் மேற்கொண்டவர் நபித்தோழர் அபூஅய்யூப் அன்சாரி நபித்தோழர் அகபாவிடம் (இவர்கள் இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) மேற்கண்ட நபிமொழியை கேட்பதற்காகவே பயணம் மேற்கொண்டவர்.

கல்வியாளர்கள் குறித்து திருக்குர்ஆன் கூறுகிறது:

“அறிந்தோரும், அறியாதோரும் சமமாக இருக்க முடியுமா?” (39:9)

“உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்களோ, மேலும், எவர்களுக்கு ஞானம் வழங்கப்படுகின்றதோ அவர்களுக்கு இறைவன் உயர்ந்த பதவிகளை வழங்குவான்” ( 58:11)

“உண்மையில், இறைவனின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அதிகமாக அஞ்சுகிறார்கள்”

ஞானத்தை வேண்டி கேட்கும்படி திருக்குர்ஆன் ஊக்குவிக்கிறது இப்படி:

“என் இறைவனே! எனக்கு அதிகமாக ஞானத்தை வழகுவாயாக!” (20:114)

இஸ்லாம் என்பது அறிவுக்குப் பெயர்.

அறிவு பெறாமல் எதையும் செயலுருவம் ஆக்க முடியாது.

சடங்கு சம்பிரதாயங்கள், மந்திர – தந்திரங்கள், உணவு – பழக்க வழக்கங்கள், ஆடை – அணிகலன்கள், புறத்தோற்றங்கள், மூடப்பழக்க வழக்கங்கள் இஸ்லாம் அல்ல. மேலும், இஸ்லாம் என்பது பெற்றோரிடமிருந்து வழிவழியாக வரும் மூதாதையர் வாரிசும் அல்ல.

இஸ்லாம் என்பது இறைநெறி. வாழ்க்கை. அது ஒரு அறிவு சார் கொள்கை. திருக்குர்ஆன் மற்றும் திருநபிமொழிகளின் ராஜபாட்டை. அமல்களின் – செயல்களின் தொகுப்பு. நன்மை – தீமைகளை பகுத்தறியும் வழிமுறை. ஏவல் – விலக்கல்களின் அறிவு. அறிவார்ந்த செயல்முறை.

ஆக, அறிவார்ந்த செயல்முறை, ஆரோக்கியமான அறிவும், திடமான ஞானமும் நிறைந்தவர்களின் இதயங்களில்தான் காலத்துக்கும் இஸ்லாம் நிலைத்து நிற்கும்.

“இது மனிதகுலம் முழுமைக்கும் உரிய தூதுச் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும். மேலும், உண்மையில் இறைவன் ஒருவனே என்பதை அவர்கள் அறிந்திட வேண்டும். மேலும், அறிவுடையோர் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவே (இந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது!)” (14:15)

கல்வி அறிவை அலட்சியப்படுத்தி, கற்றோரின் நல்லுரைகளை புறக்கணித்ததால்… வந்த விளைவை நரசவாசிகள் இப்படி புலம்புவதாக திருக்குர்ஆன் கூறுகிறது:

“அந்தோ! நாங்கள் செவித்தாழ்த்தி கேட்பவர்களாய் அல்லது புரிந்து கொள்பவர்களாய் இருந்திருந்தால்.. (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பில் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோமே!” (327:10,11)

திருக்குர்ஆன் அறிவீலிகளின் உவமை ஒன்றையும் இப்படி காட்டுகிறது:

“இறைநெறியைப் பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள் செவிடர்களாய்.. ஊமையராய்.. குருடர்களாய் இருக்கிறார்கள். எனவே, எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (2:171)

இஸ்லாத்தில் முதல் அந்தஸ்து பெரும் வணக்கம் தொழுகை.

தொழுகைக்கான அழைப்பு ‘பாங்கு’ இது மனித அறிவைத் தட்டி எழுப்பும் அறிவார்ந்த ரீதியான ஒரு செயல். “இறைவன் மகா பெரியவன்!” – என்ற உண்மையை உணர்த்தும் அறைகூவல்; “பரம்பொருள் ஒன்று!” – என்று உரத்து ஒலிக்கும் மகா முழக்கம். வெற்றியின் பக்கம் மனித இனத்தை அழைக்கும் சங்கநாதம். மாறாக, இது காற்றில் ஏற்ற – இறக்கத்துடன் வெறுமனே ஒலித்து ஓயும் ஒலி அலைகள் அல்ல.

இதேபோல, தொழுகைக்கான ஒவ்வொரு அசைவும் அறிவைச் சார்ந்தவையே!

இதேபோன்றவைதான் நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் போன்ற இறைவணக்கங்களும். அறிவு பெறாமல் இவை எதுவொன்றையும் செயல்படுத்திட முடியவே முடியாது!

வான்மறையில் அருளப்பட்ட முதல் இறைவசனம்கூட, “ஓதுவீராக!” (96:1) என்பதுதான்.

உலக அறிவு, மார்க்க அறிவு என்று அறிவை கூறு போடாமல் நன்மைக்கான அறிவு எதுவானாலும் திரட்டிட வேண்டும் என்பதே திருக்குர்ஆனின் உள்ளடக்கம்.

புனிதமறை உலகைக்குறித்து ஏராளமான வசனங்களை எடுத்துரைக்கிறது.

“அறிவு முஸ்லிம்களின் காணாமல் போன சொத்து!” – என்கிறார்கள் நபி பெருமானார். (ஆதாரம்: திர்மிதி)

அறிவை ஈட்டுவதும், அதைப் பரப்புவதும், அதன் அடிப்படையில் உயிர்த்துடிப்புள்ள சமூகம் அமைப்பதும் வெற்றிக்கான ஒரே வழி. அதுவே அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வு.




Thursday, May 16, 2013

'Flower Rain - பூ மழை'

Monday, May 13, 2013

KIDS WORLD - குழந்தைகள் உலகம்

OUR LEADERS- நமது தலைவர்கள்

'BEAUTIFUL DAY - இனிய நாள்'

'COCK FIGHT - சேவல் சண்டை'

Wednesday, May 8, 2013

சிறப்புக் கட்டுரை: 'விதைப்பின் அறுவடை'


முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் நடப்பவற்றை நாளேடுகள், வார ஏடுகளின் வழியாக, அதுவும் கற்றவர்கள் மட்டுமே அறிந்து கொள்வார்கள். ஆனால், இப்போதோ கல்லாதோர்கூட மக்களவை நடப்புகளை உடனுக்குடன் தொலைக்காட்சியின் வழியே தெரிந்துகொள்கிறார்கள்.
அண்மைக்காலமாக, மக்களவையில் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைகளைக் கண்டால் அஹிம்சை, அறப்போராட்ட வழிமுறைகளால்தான் நாம் சுதந்திரம் பெற்றோமா என்று நினைக்கத் தோன்றும். நமது அரசியல் நாயகர்கள் மற்றும் காளான்களைப் போல பெருகியுள்ள கட்சிகளின் தலைவர்களுடைய நடத்தைகள் சகிக்க முடியாமலிருக்கின்றன.
அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்கள் நலன்களைவிட சுயநலன்களையே பிரதானமாகக் கொண்டுள்ளனர். அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே அரசியல் நடைபெறுவதையும் அரசியல் வணிகமாகிவிட்டதையும் காண முடிகிறது. இந்த நிலைமை ஜனநாயகத்திற்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
கட்சிகளை உடைப்பதும், புதிய கட்சிகள் உதயமாவதும் நாட்டில் வழக்கமாகிவிட்டன. தற்போது தேர்தல் ஆணையத்திடம் 540 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்தாந்தங்களும், பொது நலன்களும் அரசியல்வாதிகளுக்காகவே என்றாகிவிட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை பெற்றுவந்த கௌரவ ஊதியம்கூட இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. இந்த நிலைமை மத்தியில் மட்டுமல்ல.. மாநிலங்களிலும்தான்!
உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 94 எட்டியது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்போடு ஒப்பிட்டால்.. அங்கெல்லாம் இரண்டு அல்லது மூன்று கட்சிகளே என்பது வியப்பானது.
மக்களவையில் நாட்டு நலன்களுக்கான, மக்கள் நலன்களுக்கான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் செயல்கள் அமைய வேண்டும். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருப்பது வேறு. கூச்சல், குழப்பங்கள்,  வெளிநடப்புகள், மன்றத்தின் நடுப்பகுதியை அடைந்து அங்கிருந்து விடும் மிரட்டல்கள்! அவையை ஸ்தம்பிக்கச் செய்வது, நிலைமையை கட்டுக்கடங்காமல் செய்து அவையை ஒத்தி போடுவது என்று ஒரு போர்க்களச் சூழல் உருவாக்கப்படுகிறது.

சட்டசபைகளிலும் இப்படித்தான். முன்பு ஒருமுறை உ.பி. சட்டமன்றத்தில் மிக மோசமான வன்முறை நிகழ்ந்தது. மன்ற உறுப்பினர்கள் நாற்காலிகளையும், மைக்குகளையும் தூக்கி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உயிர் பிழைத்தால்  போதும் என்று எம்.எல்.ஏக்கள் மேசைகளுக்கடியில் புகுந்து தப்பினர். இந்த அற்புதமான காட்சிகள் தொலைக்காட்சி வழியே சாமான்ய இந்தியனையும் அடைந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மக்கள் பிரதிநிதிகள் குறித்து வெறுப்பே ஏற்படுகிறது.
மக்களவை ஒரு நிமிடம் நடைபெறுவதற்கு 17 ஆயிரம் ரூபாய் செலவாகிறது அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவு! மக்களவை ஒத்திவைக்கப்படும்போது, நாட்டுக்கு நாளொன்றுக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இத்துடன் மக்களவை உறுப்பினர்களின்ள குடியிருப்புகள், வாகனச் செலவுகள் என்று நாட்டின் மீது பல சுமைகள் விழுகின்றன. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் உள்ளிட்ட இந்திய மக்கள் நாடாளுமன்ற இரு அவைகளின் நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டொன்றுக்கு இருநூறு கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய அவலநிலையில் உள்ளார்கள்.
அப்படியிருந்தும் மக்களவை களேபரங்கள், வெளிநடப்புகள், ஒத்திவைப்புகள் போன்றவற்றால் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேறாமலேயே நின்றுவிடுகின்றன. இப்படி 70 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகளின் இத்தகைய கூத்துக்கள் வியப்புக்குரியவை அல்ல. ஏனென்றால்.. எத்தகைய நபர்களைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கேற்பவே பலாபலன்களும் இருக்கும். நாம் விதைத்தவற்றின் அறுவடைக்காலம் இது. ஒழுக்க நெறிகளைக் கோட்டைவிட்டுத் தேர்வு செய்ததன் விளைவுகள் இவை.