NewsBlog

Wednesday, May 8, 2013

சிறப்புக் கட்டுரை: 'விதைப்பின் அறுவடை'


முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் நடப்பவற்றை நாளேடுகள், வார ஏடுகளின் வழியாக, அதுவும் கற்றவர்கள் மட்டுமே அறிந்து கொள்வார்கள். ஆனால், இப்போதோ கல்லாதோர்கூட மக்களவை நடப்புகளை உடனுக்குடன் தொலைக்காட்சியின் வழியே தெரிந்துகொள்கிறார்கள்.
அண்மைக்காலமாக, மக்களவையில் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைகளைக் கண்டால் அஹிம்சை, அறப்போராட்ட வழிமுறைகளால்தான் நாம் சுதந்திரம் பெற்றோமா என்று நினைக்கத் தோன்றும். நமது அரசியல் நாயகர்கள் மற்றும் காளான்களைப் போல பெருகியுள்ள கட்சிகளின் தலைவர்களுடைய நடத்தைகள் சகிக்க முடியாமலிருக்கின்றன.
அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்கள் நலன்களைவிட சுயநலன்களையே பிரதானமாகக் கொண்டுள்ளனர். அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே அரசியல் நடைபெறுவதையும் அரசியல் வணிகமாகிவிட்டதையும் காண முடிகிறது. இந்த நிலைமை ஜனநாயகத்திற்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
கட்சிகளை உடைப்பதும், புதிய கட்சிகள் உதயமாவதும் நாட்டில் வழக்கமாகிவிட்டன. தற்போது தேர்தல் ஆணையத்திடம் 540 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்தாந்தங்களும், பொது நலன்களும் அரசியல்வாதிகளுக்காகவே என்றாகிவிட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை பெற்றுவந்த கௌரவ ஊதியம்கூட இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. இந்த நிலைமை மத்தியில் மட்டுமல்ல.. மாநிலங்களிலும்தான்!
உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 94 எட்டியது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்போடு ஒப்பிட்டால்.. அங்கெல்லாம் இரண்டு அல்லது மூன்று கட்சிகளே என்பது வியப்பானது.
மக்களவையில் நாட்டு நலன்களுக்கான, மக்கள் நலன்களுக்கான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் செயல்கள் அமைய வேண்டும். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருப்பது வேறு. கூச்சல், குழப்பங்கள்,  வெளிநடப்புகள், மன்றத்தின் நடுப்பகுதியை அடைந்து அங்கிருந்து விடும் மிரட்டல்கள்! அவையை ஸ்தம்பிக்கச் செய்வது, நிலைமையை கட்டுக்கடங்காமல் செய்து அவையை ஒத்தி போடுவது என்று ஒரு போர்க்களச் சூழல் உருவாக்கப்படுகிறது.

சட்டசபைகளிலும் இப்படித்தான். முன்பு ஒருமுறை உ.பி. சட்டமன்றத்தில் மிக மோசமான வன்முறை நிகழ்ந்தது. மன்ற உறுப்பினர்கள் நாற்காலிகளையும், மைக்குகளையும் தூக்கி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உயிர் பிழைத்தால்  போதும் என்று எம்.எல்.ஏக்கள் மேசைகளுக்கடியில் புகுந்து தப்பினர். இந்த அற்புதமான காட்சிகள் தொலைக்காட்சி வழியே சாமான்ய இந்தியனையும் அடைந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மக்கள் பிரதிநிதிகள் குறித்து வெறுப்பே ஏற்படுகிறது.
மக்களவை ஒரு நிமிடம் நடைபெறுவதற்கு 17 ஆயிரம் ரூபாய் செலவாகிறது அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவு! மக்களவை ஒத்திவைக்கப்படும்போது, நாட்டுக்கு நாளொன்றுக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இத்துடன் மக்களவை உறுப்பினர்களின்ள குடியிருப்புகள், வாகனச் செலவுகள் என்று நாட்டின் மீது பல சுமைகள் விழுகின்றன. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் உள்ளிட்ட இந்திய மக்கள் நாடாளுமன்ற இரு அவைகளின் நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டொன்றுக்கு இருநூறு கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய அவலநிலையில் உள்ளார்கள்.
அப்படியிருந்தும் மக்களவை களேபரங்கள், வெளிநடப்புகள், ஒத்திவைப்புகள் போன்றவற்றால் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேறாமலேயே நின்றுவிடுகின்றன. இப்படி 70 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகளின் இத்தகைய கூத்துக்கள் வியப்புக்குரியவை அல்ல. ஏனென்றால்.. எத்தகைய நபர்களைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கேற்பவே பலாபலன்களும் இருக்கும். நாம் விதைத்தவற்றின் அறுவடைக்காலம் இது. ஒழுக்க நெறிகளைக் கோட்டைவிட்டுத் தேர்வு செய்ததன் விளைவுகள் இவை. 


0 comments:

Post a Comment