1938 இல், அல்லாமா இக்பாலின் அழைப்புக்கிணங்க மௌலானா மௌதூதி ஹைதராபாத்திலிருந்து லாஹீருக்குச் சென்றார். அவர் லாஹீர் சேரும்போது, இந்தியா சுதந்திரமடையப் போகிறது என்ற செய்தி ஊர்ஜிதமானது.
சுதந்திர இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு, இந்திய முஸ்லிம்களின் சமூக - அரசியல் வாழ்க்கைக்கு அந்த அரசு தரும் உத்திரவாதம் இவற்றை குறித்த கவலைகள் மௌலானாவின் மனதை அரித்தெடுக்கலாயின.
1941 ஆகஸ்ட், 26 இல், வெறும் 75 பேர் கொண்ட ஒரு சிறு குழுவை ஒன்றுபடுத்தி 'ஜமாஅத்தே இஸ்லாமி' (இஸ்லாமிய கூட்டமைப்பு) என்ற இயக்கத்தை மௌலானா ஆரம்பித்தார்கள். அக்குழுவினரால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒருபுறம் இயக்கப் பொறுப்புகள் மறுபுறம் எழுத்துப் பணிகள் என்று மௌலானா சூறாவளியர் சுழன்றார்கள்.
லெனின் இஸ்லாத்தை ஏளனம் செய்யும் வகையில், "வானத்தில் சுவனம் அமைப்பதைவிட பூமியில் சுவனம் அமைப்பதே எங்களது முக்கியப் பணி!" - என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மௌலானா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெருந்திரளாய் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், "வானத்தில் சுவனம் அமைப்பதை லட்சியம் கொண்டவரால் மட்டுமே பூமியிலும் சுவனம் அமைக்க முடியும் என்றே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன!" - என்றார். தொடர்ந்து சொல்லும்போது, "ஆகாயத்தில் சுவனம் அமைக்க விருப்பமில்லாதவர்களால் ஆகாயத்திலும் நரகமே; பூமியிலும் நரகமே அமைப்பார்கள்! ஒருகாலம் வரும் ; அன்று மாஸ்கோவில் கம்யூனிஸம் சமாதி கட்டப்படும்!" - என்றார்கள் தீர்க்கதரிசனத்தோடு!
மௌலானா மௌதூதியின் தலைமையில் உருவான இஸ்லாமிய பேரெழுச்சி உலகம் முழுவதும் பரவலாயிற்று. 1970 இல், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய 'தஃப்ஹீமுல் குர்ஆன்' உருதுவில் முழுமை அடைந்தது. திருக்குர்ஆனின் அந்த விளக்கவுரை இன்று உலகின் பல்வேறு மொழிகளிலும், இந்தியர்களின் பெரும் பகுதி மொழிகளில் ஏறக்குறைய 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மௌலானாவின் பல நூல்கள் உலகின் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய இலக்கிய உலகில் பல்வேறு சாதனைகள் புரிந்தோர் எல்லாம் மௌலானாவின் நூல்களையே 'சார்பு' நூல்களாக கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன உலகுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இறுதி வேத நூலான திருக்குர்ஆனின் கருத்துக்களுக்கு விளக்கவுரை எழுதியவர்களில் தலையாய இடம் பிடித்தவர்கள் மௌலானா அவர்கள்.
1947, ஆகஸ்ட் 15 இல், இந்தயா-பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தன. இருபுறமும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் மௌலானா மௌதூதியும், இந்தியாவில் காந்தியும் வகுப்புக் கலவரங்களைத் தடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள்.
ஆனால், காந்தியின் முயற்சிகளை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்தின. மெளலானாவின் முயற்சிகளையும், அமைதிக்கான பெரும் பணிகளையும் இருட்டடிப்புச் செய்தன. இஸ்லாம், முஸ்லிம்களின் விஷயத்தில் ஊடகங்களின் போக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் ஒரே மாதிரியாக தொடர்கிறது.
- இன்னும் வரும்.
0 comments:
Post a Comment