NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Wednesday, November 25, 2020

எச்சரிக்கை கூண்டு ஏற்றுவதன் பொருள் என்ன?

புயல் ஏற்படும் காலங்களில் துறைமுகங்கள், கடலோர பகுதி மக்கள், கப்பல்களை எச்சரிக்கும் வகையில் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். அதில் புயலின் அபாய நிலையை உணர்த்தும் எண்கள் குறிப்பிடப்படும். இந்த பணியை வானிலை ஆய்வு மைய தரவுகள் அடிப்படையில் துறைமுக நிர்வாகம் மேற்கொள்ளும்.

சில நாடுகள் புயல் அபாய எச்சரிக்கையை வண்ண கொடிகள் மூலம் உணர்த்தும். இந்தியாவில் புயல் அபாய எச்சரிக்கை, எண்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

1864ஆம் ஆண்டில் அப்போதைய கல்கத்தா (தற்போது கொல்கத்தா) மச்சிலிப்பட்டினம் இடையே பலத்த புயல் ஏற்பட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது முதல் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றும் வழக்கத்தை இந்திய துறைமுகங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கின. அந்த வகையில், புயல் அபாய எச்சரிக்கை கூண்டு முதன் முதலாக கொல்கத்தா துறைமுகத்தில் ஏற்றப்பட்டது.

இந்த வகை எச்சரிக்கை எண்கள் 11 வகைப்படும். அது பற்றிய எளிய விளக்கத்தை பார்க்கலாம்.

எண். 1 என்பது, தூர முன்னறிவிப்பை குறிக்கும். அது புயல் உருவாகக் கூடிய திடீர் காற்றோடுகூடிய மழையுள்ள வானிலைப் பகுதியை குறிக்கிறது. இது கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுவதையும், மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் புயல் வருவதையும் குறிக்கும். ஆனால், இது காற்றின் வேகம் பற்றிய எச்சரிக்கையாக மட்டுமே கருதப்படும். கரைக்கு ஆபத்தில்லை.

எண். 2 என்பது தூர எச்சரிக்கையை குறிக்கும். புயல் உருவாகியுள்ளதை குறிக்க இந்த எண் பயன்படுத்தப்படுகிறது. இது கடலில் ஏற்படும் அழுத்தம் மற்றும் மணிக்கு சுமார் 60 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும் காற்றை குறிக்கும். இந்த நேரத்தில் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் புறப்பட அனுமதிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

எண் 3 என்பது உள்ளூர் முன்னறிவிப்பாகும். திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்படுவதை இது குறிக்கிறது. இது கடலில் அழுத்தம் உருவாகி துறைமுகத்துக்கும் ஆபத்தை தோற்றுவிக்கலாம். கரையை நோக்கி மணிக்கு சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் என்ற எச்சரிக்கையை இது உணர்த்தும்.

எண் 4 என்பது உள்ளூர் எச்சரிக்கை. இது துறைமுகம் புயலால் அச்சுறுத்தப்படலாம். ஆனால், அது மிகவும் அதிகமான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு தீங்கை விளைவிக்கும் என்று தோன்றவில்லை என்பதை குறிக்கிறது. கடலில் ஏற்படும் ஆழமான அழுத்தத்தால் துறைமுகத்துக்கு பிந்தைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தை எச்சரிப்பதாக இது அமையும். மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி காற்று வீசும் என்பதால் இது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய எச்சரிக்கையாக அமையும்.

எண். 5 என்பது அபாய நிலையை குறிக்கிறது. துறைமுகத்தின் இடது பக்கமாகப் புய.ல் கரையைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது. இது கடலில் ஏற்பட்ட ஆழமான அழுத்தம், புயலாக உருப்பெற்று கரையை கடப்பதை குறிக்கும். இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

எண் 6 என்பது அபாய நிலையை குறிக்கிறது. துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது. எண் 5 போலவே இது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இது துறைமுகத்தின் வலப்பக்கத்தில் நிகழும்.

எண் 7 என்பது அபாய நிலையை குறிக்கிறது. இது துறைமுகத்தை நெருங்குகிற அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் புயலால் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிக்கிறது. இது புயல் கரையை கடப்பதையோ துறைமுகத்துக்கு அருகே கடப்பதையோ குறிக்கும். மொத்தத்தில் எண் 5,67 ஆகியவை துறைமுகங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கையாகும்.

எண் 8 என்பது பெரிய அபாயத்தை குறிக்கிறது. துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். புயல் கரையை கடக்கும்போது தரைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகம் வரை இருக்கும். எனவே இதை மிக ஆபத்தானதாக கருத வேண்டும்.

எண் 9 என்பது பெரிய அபாயம். இது துறைமுகத்தின் வலது புறமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். இது புயல் கடுமையான நிலையில் இருந்து மிகக் கடுமையான நிலைக்கு செல்வதை குறிக்கும் என்பதால் இதுவும் மிக, மிக ஆபத்தானது.

எண் 10 என்பது பெரிய அபாயம். இத்துறைமுகத்தை அல்லது அதன் அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும். இது மிகவும் கடுமையான புயலாக துறைமுகத்தை கடந்தோ அதன் அருகேயே கடக்கலாம் என்பதை உணர்த்தும். இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 220 கி.மீட்டருக்குமான வேகத்தில் சூறைக்காற்று வீசும்.

எண் 11 என்பது தகவல் தொடர்பற்ற நிலையை குறிப்பது. இது வானிலை எச்சரிக்கை மையத்தோடு தகவல் தொடர்பற்றுப் போன நிலையில் மோசமான வானிலையால் கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர் கருதுவதை குறிக்கிறது. இதுதான் இருக்கும் ஆபத்துகளை எல்லாம் விஞ்சக்கூடிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும்.

தற்போது அதி தீவிர புயலின் மிக அதிக ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை எண் 10-ஐ குறிக்கும் சமிக்ஞை புதுச்சேரி துறைமுக பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதல் இரண்டு புயல் கவலை தரக்கூடியதாக இருக்காது. வேறு எங்கோ தொலைதூரத்தில் புயல் ஏற்பட்டிருப்பதை அவை குறிக்கும்.

3,4 ஆகியவை உள்ளூரில் நிலவும் மோசமான வானிலை கணிப்பை குறிக்கும்.

5,6,7 ஆகியவை அபாய நிலையை குறிப்பதாகும். துறைமுகத்தின் எந்த பகுதியிலும் புயல் கடந்து போவதை இது உணர்த்தும்.

8,9,10 ஆகியவை மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடன் புயல்சீற்றம் இருப்பதை உணர்த்தும்.

இதில் புயல் அதி தீவிர நிலையாக மாறும்போது 8ஆம் எண் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணை குறிக்கும் கூண்டு ஏற்றப்படும்.

உச்சகட்டமான ஆபத்தை குறிப்பதுதான் 11ஆம் எண் கூண்டு. இதுதான் மிக, மிக கவலை தரக்கூடிய பேரழிவை ஏற்படுத்தும் புயல் சீற்றத்தை குறிக்கிறது.



நிவர் புயலும், அடுத்து வரும் புயல்களும்!

 

பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.
 
அவ்வகையில், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து அதி தீவிர புயலாக உருப்பெற்றிருக்கிறது.

இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான்.

இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு ‘உம்பான்’ என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து.

இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு ‘நிஷாக்ரா’ என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம்.

இரு தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த ‘கடி’ (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா.

இப்படி பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது.

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது.

உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.

டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றது.

இந்த வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது,

•அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணுவது
•அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது
• ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது
• ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது
• மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.

சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.

இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு ஒன்பது நிபந்தனைகள் உள்ளன.

1.புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது
2. உலக அளவில் வாழும் மக்களில் எவ்விதத்தவரின் உணர்வை காயப்படுத்தும்படி பெயர் இருக்கக் கூடாது
3.   மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக் கூடாது
4.  சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையில் பெயர் இருக்க வேண்டும்
5.பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்
6.பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்
7.பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு
8.பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாக கூட அதை மறுஆய்வுக்கு உள்படுத்த அந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு;
9.ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.

இந்தியா பரிந்துரைத்துள்ள பெயர்கள் வரிசையில், கதி, தேஜ், முரசு, ஆக் ஆகியவை உள்ளன. இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுக்கு இறுதி செய்த பட்டியலில் மொத்தமாக 169 பெயர்கள் உள்ளன. இதில் இருந்தே ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைப்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்படுகிறது.

முந்தைய புயலுக்கு இந்தியா கதி என பரிந்துரை செய்தது. அதற்கு இந்தி மொழியில் வேகம் என பொருள். அதுபோல, தற்போதைய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த நிவர் என்ற வைக்கப்பட்டிருக்கிறது அதாவது, ‘வெளிச்சம்’  மற்றும் ‘வருமுன் காப்பது’ என்றும் பொருள்.

சுழற்சி முறையில் வரும் இந்த பெயர்களில் தமிழ் பெயரான ‘முரசு’ இடம் பெற்றிருக்கிறது.

இது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர்.

அதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.

நிவர் புயலைத் தொடர்ந்து, அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைப்படி ‘புரேவி’ என்ற பெயர் வைக்கப்படும்.

இதுபோல, அடுத்த 25 வருடங்களில் ஏற்படும் புயல்களுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட்டு எப்போது புயல் வந்தாலும் அவற்றை சூட்டுவதற்கான தயார் நிலையில் நாடுகள் இருக்கின்றன.

'''''''''''''''''

Source: BBC

படம்: யூஸீஃப் கனி