NewsBlog

Thursday, September 3, 2020

குழந்தைகளைக் காக்க போராடிய பயங்கரவாதி விடுவிக்கப்பட்டார்

 

 

"மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டேன்" - என்கிறார் அவர்.  ~இக்வான் அமீர்

'''''''''''''''''''''''

தொழில்நுட்ப காரணங்கள் என்ற பெயரால் தனது வழக்கு விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்தால், பன்னிரண்டுமுறை வாய்த்தாவுக்காக காத்திருந்த அதிபயங்கரவாதி மருத்துவர் அவர்! ஆம்! வகுப்புவாதி ஆதித்யநாத்தின் அரசால் புனையப்பட்ட பயங்கரவாதி டாக்டர் கஃபீல்கான்தான் அவர்!

கடைசியில், அவரது குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே, என்எஸ்ஏவுக்கு எதிராக சவால் விடுத்தனர்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரியில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் உலகை அதிர்ச்சியுறச் செய்தது. அந்தத் தருணத்தில், குழந்தைகளைக் காக்க விரைந்து செயல்பட்டு பிராணவாயு உருளைகளை வரவழைத்து அதற்கு மேலும் குழந்தைகள் இறப்பு நிகழாமல் தடுத்த டாக்டர் கஃபீல்கானை உலகம் மெச்சியது.

உபியின் சங்பரிவார் ஆட்சியாளரின் இயலாமை வெளிப்பட்டதும் கஃபீல்கான் ஆளும் அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளானார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அவதூறாக தூண்டிவிடும் வகையில் பேசியதாக சிறப்பு பாதுகாப்பு படையால் கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது, ஆனால் இந்த நேரத்தில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பிரிவை மாநில அரசு அவருக்கு எதிராக பயன்படுத்தியது.

கஃபீல் கானுக்கு எதிராக மாநில அரசு இதுவரை இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை நீட்டித்தது. 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை, அலகாபாத் உயர்நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது மற்றும் அவருக்கு எதிராக என்எஸ்ஏ பயன்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்று நீதிமன்றம் கூறியது.

கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், தான் கைதானது CAA எதிர்ப்பு போராட்டங்களின் போதான பேச்சுக்காக அல்ல, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்

“சிறையில் என்னை வேண்டுமென்றே சித்ரவதை செய்தனர். பல நாட்கள் பசியுடன் இருந்தேன்" - என்று பிபிசியுடனான உரையாடலில் கஃபீல் கான் கூறியுள்ளார்.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த பிறகு நான் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் இந்த முறை சிறை செல்வது மிகவும் பயமாக இருந்தது

மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டேன்.

50 கைதிகளை வைக்கும் திறன் கொண்ட பேரக்கில் 150 கைதிகளுடன் வைக்கப்பட்டேன். நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றபோதும் மூன்று நாட்களுக்கு நான் விடுவிக்கப்படவில்லை, பின்னர் எனக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

சிறை அதிகாரிகளின் அணுகுமுறை இவ்வாறாக இருந்தபோதிலும், சிறை கைதிகள் நன்றாக நடத்தினர்” – என்றார் கபீல் கான்.

"குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது குற்றமா? கொரோனா நெருக்கடியின் போது கூட நாட்டிற்கும் சமூகத்திற்கும் நான் அச்சுறுத்தலாக மாறுவேன் என்று அரசாங்கம் ஏன் உணர்ந்தது?. இறுதியில், உயர் நீதிமன்றம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானது" என்று கண்டித்துள்ளதை டாக்டர் கஃபீல் கான் சுட்டிக் காட்டுகிறார்.

0 comments:

Post a Comment