NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, July 26, 2020

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,




அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம் பூரிக்கின்றேன் டாக்டர்.

உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

முழுக்க... முழுக்க ஆட்சி எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்..  இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

வெறுப்பு அரசியல் விதைகளை விதைத்து அரியணையில் அமர்ந்துள்ள வகுப்புவாத அதிகார வர்க்கத்துக்கு குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து என்னதான் கவலை? அதுவும் மாநில முதல்வரின் சொந்த தொகுதியிலேயே நடந்துள்ள இந்த உயிரிழப்பு அவர்கள் மக்களிடம் காட்டும் அக்கறையின்மையைத் தவிர சொல்லும் செய்திதான் என்ன?

டாக்டர் கான் சாப்,

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் நிகழ்கால உதாரணம் என்பதில் பெருமையடைகிறேன்.

வெறுப்பு அரசியல்வாதிகள் அதிகார ஆர்ப்பாட்டத்துக்கு இடையே அமைதியாக தாங்கள் செய்திருக்கும் பணி மகத்தானது.

ஆகஸ்ட் 10 அன்றைய நள்ளிரவில், பிராணவாயு வினியோகத்துக்கான பிரதான குழாயில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. பிராணவாயுவின் அளவு குறைந்து போனதற்கான சிவப்பு அடையாள எச்சரிக்கை அது. உயிர்க்காக்கும் பிராணவாயுவின் அளவு ஓரிரு மணிநேரம்கூட தாக்குப்பிடிக்காது என்ற நிலையில் மருத்துவமனை பணியாளர்களும், மருத்துவர்களும் கைகளைப் பிசைந்து நின்ற கொடுமையான வேளை அது.

ஒரு குழந்தை மருத்துவரான நீங்கள் தாயுமானவராக அல்லவா அந்த நேரத்தில் மாறி நின்றீர்கள்..! எவ்வித பதட்டமும் படாமல் நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தீர்கள்..! சீராதிட்டமிட்டீர்கள்..! நேரடியாக களத்தில் இறங்கினீர்கள்! ஒருவேளை திரும்பி வருவதற்குள் பிராணவாயு குறைந்து போனால்... செயற்கை சுவாசப் பைகளை (Ambu bag) பயன்படுத்தி குழந்தைகளை காக்க வேண்டும்!’ - என்று கீழ்நிலை மருத்துவர்களுக்கு ஆணை பிறப்பித்தீர்கள்.

ஓடோடி சென்று பிராணவாயு உருளைகளுக்கான வினியோகஸ்தரிடம் கெஞ்சியிருக்கிறீர்கள். அதுவரையிலான பாக்கித் தொகை கணக்கு முடிக்காமல் பிராணவாயுவை வழங்க முடியாது என்று கை விரித்த வணிகரிடமிருந்து தோல்வியுடன் திரும்பிவந்த நீங்கள் அத்துடன் நிற்கவில்லை.

நட்பு ரீதியாய் அண்டை மருத்துவமனைகளை அணுகி மூன்று பிராணவாயு உருளைகளை காரில் எடுத்து வருகிறீர்கள். அவற்றின் கொள்ளளவு வெறும் அரைமணி நேர பயன்பாடுதான்..!

காலை 6 மணி. பதற்றத்துடனேயே விடிகிறது. அவசர சிகிச்சைப் பெற்று வந்த பல குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் உயிருக்கு போராடும் தகவல் கேட்டு மீண்டும் பதறியடித்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாய் செல்கிறீர்கள். 12 பிராணவாயு உருளைகளை மீண்டும் இரவலாக பெற்று வருகிறீர்கள். இதற்காக நான்குமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மனம் இளகிய பிராண வாயு வினியோகஸ்தர் ஒரு நிபந்தனையுடன் உருளைகளை தர முன்வருகிறார். மோடி சர்க்காரின் பணமில்லா வர்த்தகம் - காஷ்லெஸ் எகனாமி ஏற்கனவே கேலியான நிலையில், கையில் பணம் கொடுத்து பிராணவாயு உருளைகளை வாங்கிக் செல்ல சம்மதிக்கிறார்.

உண்மையிலேயே உங்கள் தாய், தந்தையர் அற்புதமானவர்கள் டாக்டர் கான் சாப். இவ்வளவு தாராளமனம் கொண்டவராக  உங்களை வளர்த்திருக்கிறார்கள்..! உடனுக்குடன் பத்தாயிரம் ரூபாய் சொந்த பணம் கொடுத்து, அதுவரையிலான போக்குவரத்து செலவுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிராணவாயு உருளைகளை நீங்கள் வரவழைத்திருக்காவிட்டால்... எங்கள் இளைய சிற்பிகளில் இன்னும் பலர் பரலோகம் சென்றிருப்பார்கள். எங்கள் தாய்மார்கள் ஆற்றாமையால் காலமெல்லாம் அழுதழுது புலம்பியிருப்பார்கள். எங்கள் ஆட்சியாளர்களோ வாக்குக்காக கிளிசரின் போடாமலேயே கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.

டாக்டர் கபீல் கானின் போற்றுதலுக்குரிய மனிதநேயப் பண்பை கண்டுக் கொள்ள முடியாமல், இந்நேரம், அநேகமாய் இந்திய ஊடகங்கள் அனைத்தும், பார்வையிழந்திருக்கலாம். செவிப்புலன் பறிபோய் இருக்கலாம். வாய்ப்பேச முடியாமையால் தடுமாறியிருக்கலாம். அதனால், தாங்களும், தங்களின் அரிய சேவையும், அவர்களின் உலகாயதப் புலன்களுக்கு படாமல் போயிருக்கலாம்.

ஆனால், அந்த சில மணி நேரத்தில் நீங்கள் பெற்றிருக்கும் மன நிம்மதியும், பெற்றோர்களிடமிருந்து பெற்ற ஆசிகளுக்கும், தங்களின் சகாக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், அவற்றின் கனமும் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை டாக்டர்.

உண்மையிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் விளம்பரத்துக்காக செய்யும் அரசியல்வாதி இல்லை என்பதே உண்மை.

நீங்கள் சார்ந்த சமுதாயத்தின் இறந்த பெண்மணிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அவற்றை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குங்கள் என்று ஆக்ரோஷமாய் முழக்கமிட்டு, மதவாதம் அரசியல் கடிவாளத்தைக் கைப்பற்றிய அதே உத்தரப் பிரதேசத்தில்தான் நீங்களும் பணியில் இருந்தீர்கள்.

உங்கள் உணவு எது? உறைவிடம் எது? கல்வி எது? உணர்வுகள் எவை? என்று உங்கள் வீட்டு உள்ளறைகள் வரை அத்துமீறி நுழைந்து, மோசே காலத்து பனீஇஸ்வேலர் சமுதாயம் ஒடுக்கப்பட்டதுபோல, கடும் சட்டங்களால் ஒடுக்கிக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் மத்தியில்தான் அன்றாடம் நடந்தீர்கள். ஆனாலும், உங்கள் தனித்துவமும், ஆளுமையும் எவரும் உங்களை மிஞ்ச முடியாதளவு உயர்ந்தது என்பது எவ்வித சந்தேகமுமில்லை.

மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு தர மறுக்கிறது இந்த ஓட்டுக்கான ஆட்சி அதிகாரம். அப்படி மனிதர்களுக்கு முக்கியத்துவம் தந்திருந்தால்...

காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!

என்று தாலாட்டுப்பாடி தூங்க வைக்க வேண்டிய மழலையரை தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாமல் பறிக் கொடுத்த தாய்மார்கள் இப்போது, ஒப்பாரி பாட வைத்துவிட்டார்களே நமது ஆட்சியாளர்கள்.

இனி, எதிர்கட்சிகளின் கூப்பாடுகள் விண்ணதிரும்..! முதல்வர் அய்யா ஆதித்யாநாத்தும் அவரது மதவாத கும்பல்களும் மற்றொரு பக்கம் மக்களை திசைத்திருப்ப எத்தனிப்பார்கள். மீண்டும் தீவிரவாதம் என்பார்கள். குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். இந்தியர் மனங்களை ஒட்ட வைக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் சீர்க்குலைப்பாரகள். நீங்களாகவே ஒரு மருத்துவரின் அரிய கடமையாய் கருதி, முன்னெடுத்து குழந்தைகளை காத்திருக்கும் முயற்சிகளைக்கூட திசைத்திருப்பி உங்கள் மீதே குற்றம் சுமத்தி தூக்கு மேடையிலேற்றினாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை டாக்டர்..!

இந்த அனைத்து களேபரத்தின் மத்தியிலும், நல்லதொரு மனிதனை, மருத்துவ சேகவரை கண்ட மகிழ்ச்சி என் மனதில் பொங்கி பிரவாகிக்கிறது.

எப்போதும் கான்கள் உலகுக்கானவர்கள் அல்ல. மனித சேவையில் இறைவனைக் காண்பவர்கள் என்பது பாலூட்டும்போதே அன்னை ஊட்டியது என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பெருமைப்பட முடிகிறது டாக்டர்.

நீங்கள் நீடூடி வாழ்க என்று மனம் வாழ்த்துகிறது டாக்டர் கபீல் கான்.


பெருமையோடு,

இக்வான் அமீர்
மூத்த இதழியலாளர்.
 13.08.2017
சென்னை

Saturday, July 25, 2020

என் வள்ளம் கரைக்கு திரும்பாத அந்த நாள்!




உப்புக்கரிக்கும் கடல். திரண்டு உருண்டு வந்து மணல் போர்வை போற்றிய கரையை மெல்ல சீண்டிப்பார்க்கும் அலைகள். ஒட்டுப் போட்டு என் போன்று தள்ளாத வயதில் காலம் கழிக்கும் ஒரு வள்ளம், என் துதிக்கையாய் எப்போதும் என்னுடன் இருக்கும் உக்கிப்போன ஒரு மரத்துடுப்பு,ஆசை தீர கட்டி அணைத்துக் கொள்ளும் அளவுக்கு சின்ன கண்கொண்ட வலைகள். இவைதான் என் பூர்வீக சொத்துக்கள்.

எல்லோரும் காற்றை சுவாசிப்பதாய் சொல்வார்கள். ஆனால் நானோ இந்த மீன் வாடையை சுவாசிப்பதால்தான் இன்னும் உயிர் வாழ்வதாய் உணர்கிறேன்.

மீனவனுக்கு உப்புக்காற்றும் அதில் திரண்டுவரும் புலால் வாசனையையும் ஒரு நாள் நுகர முடியாவிட்டாலும் பித்துப் பிடித்து விடும். அதனை  நாற்றம் என மொழிபெயர்ப்பவர்களை அருவருப்பாய் நான் பார்ப்பதும் உண்டு. என்னைப்  போன்ற மீனவர்களுக்கு பண நோட்டுக்களில் வீசும் வாசனையை விட இந்த மீன்களின் வாடையில்தான் மோகம் அதிகம்.

அனேக பண்டிதர்கள் மீனவனின் ஏழ்மை வாழ்க்கை பற்றி கூடுதலாக கிறங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனால்  ஒருபோதும் என்னை நான் ஏழையாக உணர்ந்து கொண்டது கிடையாது.

பரந்து விரிந்த சமுத்திரம் முழுவதும் எனக்கு சொந்தமாக இருக்கையில் எப்படி என்னை ஏழ்மையானவனாக உணர்ந்து கொள்ள முடியும்?

வா.. வா.. ஓடிவா.. மீனவா ..! என்னுள் இருக்கும் செல்வங்களை எடுத்துக்கொள்!” - என்று அலைகள் மூலம் இந்த பெருங்கடல் எப்போதும் எனக்கு செய்தி அனுப்புகையில் எப்படி என்னை ஏழ்மையானவனாக உணர்ந்து கொள்ள முடியும். பரந்துவிரிந்தகடலின் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் போது வரும் மிடுக்கு மீனவனை தவிர வேறு யாருக்கு வரமுடியும்.

கடலில் துடுப்பு வலிப்பதற்கு  என் கைகள் ஒருபோதும் அலுத்துக் கொண்டது கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒற்றை ஆளாய் துடுப்பு வலித்து கடலினுள் சங்கமிக்கும் போது ஆழி பெருங்கடல் என்னை ஆரத்தழுவுவதாய் உணர்ந்து கொள்கிறேன். அது ஒரு இனம் புரியாத அன்பு. மீனவனின் ஆன்மா மட்டுமே உணரும் பேரன்பு அது

ஆழிப் பெருங்கடலில் என் வலைகளை வீசுகையில் கூடவே என் மனதின் பாரங்கள் அனைத்தையும் இந்தப் பெருங்கடலினுள் வீசி விடுகிறேன். வலையில் சிக்கிய மீன்களை சிக்கெடுக்கும் போது என் வாழ்வில் உள்ள சிக்கல்களும் தீர்ந்து போவதாய் உணர்ந்து கொள்கிறேன். கிடைத்த செல்வங்களை அள்ளிக்கொண்டு கரையை தொடும்போது வெற்றிவாகை சூடிய வீரனாய் களி கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் கடலை தழுவி கரையை திரும்பும்போது கவலைகளின் ரேகைகள் அற்ற மனதில் பாரங்கள் அற்று புத்துணர்ச்சி பெற்ற மனிதனாக  வீடு திரும்புகிறேன்.

மாலை மங்கும் நேரத்தில் பேராழியுடன் சங்கமித்திருக்கும் வேளைகளில் தொடு வானத்தில் நிகழும் வர்ண மாயா ஜாலத்தில் நான் எப்போதும் மூழ்கிப் போவதுண்டு. அச்சமயம் என்னையே மறந்து  தொடுவானத்தை தொட்டுவிடும்  வேட்கையில் துடுப்பை வீரியம் கொண்டு தொடுக்க எண்ணுகையில்  கரையில் நமக்காக காத்துநிற்கும் உறவுகள் இடையில் குறுக்கிட்டு மீண்டும் படகை கரையை நோக்கி திரும்பச் செய்துவிடும்.

நான் எண்ணிக் கொள்வதுண்டு... என்றாவது ஒரு நாள் அந்தி மாலையில், தொடு வானில் வர்ணஜாலங்கள் ஊற்றெடுக்கும் வேளையில் அதனை நோக்கி என் துடுப்புகளை இயலுமான வலிமை கொண்டு  தொடுக்க வேண்டும். அன்றைய நாள் என் வள்ளம் ஒருபோதும் கரையை நோக்கி திரும்பாது. தொடு வானத்தை தொட்டு  முத்தமிட்டு அந்த மாய வர்ணங்கள் அனைத்தையும் என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்!’

கடலில் மடியில் தவழ்ந்து, உப்பு காற்றில் உடலை ஒத்தடம் எடுத்து, தொடரும் இரவின் பவுர்ணமியை ரசித்திட வேண்டும். இந்த உலகம் காணாத அதிசயங்களை காண ஆழியின் அலைகள் விரும்பும் திசையில்  என்னை அழைத்து செல்ல வேண்டும். இங்கு நானும் கடலும்  வானும் அலையும்.... ஈற்றில் அலைகளில் மிதந்தவாறு  இந்த உப்பு காற்றிலேயே  என் இறுதி மூச்சு நிரந்தரமாய் கலந்து விடவேண்டும். இந்த உப்புக் கடலிலேயே உக்கிப்போன  இந்த உடலும் கரைந்துவிட வேண்டும். 

(ஆக்கம்: MKM Rikkaz, இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், வாழைச் சேனையைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்)

படங்கள் - Ikhwan Ameer இந்தியா

Monday, July 20, 2020

பாலம் 2


தெலுங்கு மூலம்: கே.கே.மேனன் - தமிழில் : இக்வான் அமீர்
 '''''''''''''''''''''''''''''''''''''
யாராவது மலையிலிருந்து இறங்கி மோடா நாயக்கின் வீட்டிற்கு வரவேண்டும் என்றால், கால்வாயைப் போன்ற அந்த நீர்ப்பகுதியை கடந்துதான் வர வேண்டும். அதற்கு வசதியாய் கால்வாய் மீது ஒரு பழைய மரப்பாலம் இருந்தது. அதை கட்டியது யார்? எப்போது கட்டினார்கள்? என்பதெல்லாம் மோட்டா நாயக்கும் தெரியாது. தற்போது இரண்டு மூன்று பலகைகள் தவிர பாலத்தின் மீது ஒன்றுமில்லை. அப்படி இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் யார்?

விழுதில் சாய்ந்தவாறு மோடா நாயக் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக பாலத்தின் பக்கத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. எழுந்து நின்று காதுகளை கூர்மையாக்கி கவனித்தான் மோட்டா நாயக்.

டக்.. டக்.. _ என்று யாரோ மரப்பலகைகளை தட்டும் சத்தம் அது. அங்கிருந்து பார்த்தால் எதுவும் தெரியவில்லை.

வீட்டிலிருந்த மோத்தியை அழைத்தான் மோட்டா நாயக்.

மகளே, கவனி! அதோ அந்தப் பக்கம் ஏதோ சத்தம் வருவது போல் இல்லை?என்று கேட்டான்.

ஆமாம். அங்கே யாரோ இரண்டு பேர் கட்டைகளை அடிக்கிறார்களப்பா

எதன் மீது?

பாலத்தில்தான்!சொல்லிவிட்டு மோத்தி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அந்த நேரம் பார்த்து பெரியவன் பசுக்களை ஓட்டிக் கொண்டு அந்தப் பக்கம் வர, அவனை அழைத்து மோட்டா கேட்டான்: என்னடா அங்கே சத்தம்?

பாலத்தை பழுது பார்க்கிறார்களப்பாஎன்று சொன்னான். அதற்கு மேல் அவனுக்கு ஒன்றும் தெரியாது.

பாலத்தை யார் பழுது பார்க்கிறார்கள்? ஏன் பழுது பார்க்கிறார்கள்?என்று மோட்டா நாயக்குக்கு புரியவில்லை. ஒரு காலத்தில், அந்த மலை மீது லம்பாடிகள் இருந்தபோது பயன்படுத்திய பாலம் அது. அவர்கள் அங்கிருந்து வெளியேறியபின், அந்த பாலத்தை யாரும் பயன்படுத்துவது இல்லை. இத்தனை நாள் கழித்து அதை பழுதுபார்க்க அவசியம் என்ன? இந்த சந்தேகத்தை தீர்ப்பவர் யார்?

கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவன் சின்ன மகன் ஒருவனே! இரவில் அவன் வீட்டுக்குத் திரும்பியதும் மோட்டா கேட்டான்: பாலத்தை பழுது பார்க்கிறார்களாமே.. யாரது?

யாராக இருந்தால் என்ன? பாலத்தை பழுது பார்ப்பது என்னவோ உண்மைதான்! நம் பிழைப்பிற்கு ஏதோ ஆபத்து வரப்போகிறதுஎன்றான் கவலையுடன்.

பாலம் பழுது பார்க்கப்படுவதற்கும், தங்கள் பிழைப்பிற்கு ஆபத்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? என்பது அவர்கள் யாருக்கும் புரியவில்லை.

ஒருவழியாக, பலகைகளைத் தட்டும் சத்தம் நின்றுவிட்டது. பாலம் பழுது பார்க்கும் பணி முடிவடைந்துவிட்டது என்று பொருள்.

அதன்பிறகு இரண்டு நாள் கழித்து, அரசு வாகனம் ஒன்று மோட்டா நாயக்கின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அவன் வழக்கம் போலவே ஆலமரத்தின் விழுதில் சாய்ந்து அமர்ந்திருந்தான். ஜீப்பை பார்த்து பதறியவாறு எழுந்து நின்றான்.

அந்த ஜீப்பிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர், “இங்கே மோட்டா நாயக் யார்? என்று கேட்டார்.

நான்தான் அய்யா!கைகளை கூப்பியவாறே சொன்னான் மோட்டா.

நாங்கள் ரெவின்யூ அதிகாரிகள்

புரியவில்லை அய்யா!   

அதாவது நாங்கள் அரசாங்கத்தின் வருவாய்த்துறை அதிகாரிகள்

அப்படியா அய்யா. தாங்கள் இங்கு வந்திருப்பது?

உன்னையும், உன் குடும்பத்தையும் இந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வந்திருக்கிறோம். இது அரசாங்கத்தின் ஆணை

மோடா நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

தனது நிலத்திலிருந்து, தன்னையும், தன் குடும்பத்தையும் அப்புறப்படுத்த வந்தார்களாமே இவர்கள்! ஏன்? எப்படி?குழம்பி நின்றான்.

தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை அய்யாஅவர்களிடம் வெள்ளந்தியாய் கேட்கவும் செய்தான் மோட்டா.

இந்த நிலம் உன்னுடையது கிடையாது. அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதனால்தான் இங்கிருந்து வெளியேறச் சொல்கிறோம்

அதெப்படி அய்யா? எங்கள் தாத்தா, முப்பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். இதுவரை யாரும் எங்களை போக சொல்லவில்லையே?

அப்போது இந்த இடம், அரசாங்கத்திற்கு தேவைப்படவில்லை. இப்போது தேவைப்படுகிறது

இப்போது அரசாங்கத்திற்கு எங்கள் நிலம் எதற்கு தேவைப்படுகிறதாம்?மோட்டா நாயக் அப்பாவியாய் கேட்டான்.

நீ கேட்டதற்காக சொல்கிறோம். அதோ அந்த மலை மீது பங்களாக்களில் வசிக்கிறார்களே பெரியய்யாமார்கள், அவர்களுக்கும், அவர்களது மனைவி, மக்களுக்கும் ஓய்வெடுக்கவும், பொழுதைப் போக்கவும் இடம் தேவையாம். அதனால், அரசாங்கம் இங்கே அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவிருக்கிறது

ஒன்றும் புரியவில்லை அய்யா!தலையை சொரிந்து நின்றான் மோட்டா.

அதை எல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் எங்களிடம் கிடையாது. பத்து நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்!என்று எச்சரித்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

இதையெல்லாம் குடிசையின் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மோட்டா நாயக்கின் மனைவி அங்கிருந்து ஜீப் புறப்பட்டு சென்றதும் தரையில் புரண்டு கதறி அழலானாள். ஏற்கனவே உள்ளுக்குள் குமைந்து அழுதுக் கொண்டிருந்த மோட்டாவால் மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை.

அந்த பருவத்து பயிர் நன்கு விளைந்திருந்ததால், அறுவடைக்கு பிறகு மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று அவர்களின் திட்டம். காய்கறித் தோட்டமும் பூவும், பிஞ்சுமாய் தழைத்து வளர்ந்திருந்தது.

சிறிது நேரம் கழித்து வயலிலிருந்து பெரியவன் திரும்பினான். நடந்ததை தெரிந்து கொண்டு துவண்டு போனான்.

இதில் எதுவும் பாதிக்காதவன் போல நடந்து கொண்டது சின்னவன் மட்டுமே! அவன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான்.

-     இறைவன் நாடினால் தொடரும்

முதல் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/1.html

(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு டிசம்பர் 3, 1995)