படிப்பறிவு இல்லை. பெரிதான கட்டமைப்புக் கொண்ட சமூகமும் அல்ல. கடலுக்குச் சென்றால்தான் வாழ்க்கை என்பதாய் அன்றாடம் காய்ச்சி குடும்பம்தான். மனைவியை நேசிக்கும் குடும்ப பொறுப்புள்ள அன்பான கணவன். இரண்டு சிறு குழந்தைகள் என்றாகிப் போன வாழ்க்கையிலிருந்துதான் சுந்தரி என்னும் அந்த புயல் மையம் கொண்டு, பெரும் சூறாவளியாய் உருவெடுத்து வீசிக் கொண்டிருக்கிறது.
ஆயுதம் ஏந்தாமல், கானகங்களில் மறைந்திராமல், எந்த சட்டம் பொய்யான வழக்குகள் மீது வழக்குகளாய் போட்டு போராட்ட குணத்தை மழுங்கடிக்க நினைக்கிறதோ அதே சட்டத்தை கொண்டு நெடிய போராட்டம் நடத்திவரும் இடிந்தகரை சுந்தரியின் நிஜக் கதை இது.
மக்களுக்காக தெருவில் இறங்கிய ஒரே காரணத்தால் நமது மக்களாட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு வெகுஜனத்திடமும் நடந்து கொள்ளும் முறையை தனது அனுபவங்களிலிருந்தே சமூகத்தின் முன் வைக்கிறார் சுந்தரி.
பெண் என்பவள் ஆணுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவள் அல்ல என்று அணு உலைக்கு எதிராக உக்கிரமாக நடந்துவரும் அறப்போரின் நாயகியாய் தனது தியாகங்களிலிருந்தே ஜொலிக்கும் சுந்தரியின் நிஜக் கதையை அவரே சொல்வதை இனி கேளுங்கள்.
விழுப்புரம், ஐந்திணை வெளியீட்டகத்தாரின் ‘இடிந்தகரை: சிறைபடாத போராட்டம் என்னும் சமகாலத்து வரலாற்று நூலிலிருந்து சில முக்கிய பகுதிகளை பாமரன் நன்றியோடு சகோதரி சுந்தரியின் போராட்ட அனுபவங்களை தொடராய் அளிக்கிறது.
கடல்தாயின் மடியில் தலை வைத்து விளையாடிய மீனவ பெண் நான். எனது 35 வயதுவரை படிக்கும் பழக்கமோ, எழுதும் பழக்கமோ அதிகம் இல்லை. சமுதாயத்தில் நடக்கும் எதன் மீதும், எவ்வித அக்கறையும் இன்றி, தொலைக்காட்சி, சினிமா, பாட்டு, தொலைக்காட்சி தொடர்கள் என்று மட்டுமே வாழ்ந்து வந்த சராசரி சுந்தரி என்ற என்னை அனைவரும் கவனிக்கும்படி மாற்றியது அணுஉலை போராட்டம்தான்! ஒரு பொம்மை போல எதுவும் அறியாமல் வாழ்ந்துவந்த எனக்கு அணுஉலை போராட்டத்தின் மூலம் உயிர் கொடுத்தவர்கள் எங்கள் போராட்டக்குழு தலைவர்கள்தான். அணுஉலைப் போராட்டத்தில் என்னை இணைய வைத்த பெருமையெல்லாம் முதலில் எங்கள் ஊர் பங்குதந்தை பாதர் ஜெயக்குமார் அவர்களையே சாரும்.
வீட்டைவிட்டு வெளியே வந்தபின்தான் இந்த சமூகத்தை முழுமையாக அறிந்தேன். அரசாங்கம், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து துடித்துப் போய்விட்டேன்.
அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் இடிந்தகரை பெண்களை உலகெங்கும் தெரியவைத்துள்ளது. எண்ணற்ற பெண்களை பேச்சாளர்களாக மாற்றியது. இந்தியாவில் எங்கு போராட்டம் நடந்தாலும் இடிந்தகரை பெண்களை பேச அழைக்கும் கவுரவத்தைத் தந்தது. எட்டுவயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர்கள்வரை அணுஉலைப் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களாக மாற்றியதோடு அல்லாமல் அதன் தீய விளைவுகள் குறித்து சரளமான பரப்புரைகளை மக்கள் முன் வைக்க செய்தது. இடிந்தகரையைச் சேர்ந்தவர்கள் அணுஉலைக்கு எதிரான கவிஞர்களாக, ஓவியர்களாக, எழுத்தாளர்களாக மாற்றியதும் இந்தப் போராட்டத்தின் விளைவுகள்தான்!
இந்தப் போராட்டமே எனக்கு சிறை என்ற இன்னொரு உலகத்தை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. எனது சிறை அனுபவங்களையும், போராட்டக் களத்தில் போராடிய அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
சிறையில் இருந்து விடுதலையாகி மதுரைக்கு நிபந்தனை பிணையில் இருந்தபோது போராட்டக் குழு தலைவர்களின் தூண்டுதலால்தான் அந்த 50 நாட்களில் நான் இதை எழுதினேன்.
சிறை போராட்ட அனுபவம் என இதில் எழுதப்பட்டுள்ள எதுவும் நான் மட்டும் பெற்றதல்ல. என்னோடு இணைந்து களத்தில் இருந்த அனைவரும் கூட்டாய் சேர்ந்து செய்த தொகுப்பின் அனுபவங்களாகும்.
12 ஆண்டுகளுக்கு முன், ஒருநாள்.
இடிந்தகரையில் உள்ள எங்கள் தெருவில் பறைச் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்து வெளியே தெருவில் வந்து பார்த்தேன். அங்கு கல்லூரி மாணவர்கள் தெருவில் பறையடித்து எங்களை எல்லாம் கூட்டி வைத்து ஒரு நாடகம் நடத்தினார்கள்.
அப்போது, எனக்கு அணுஉலை பற்றி முழுமையாகப் புரியவில்லை. கூடங்குளத்தில் இந்தத் தொழிற்சாலை வந்தால் நம்ம ஊரும் பெரிய வசதிகள் உள்ள நகரமாக மாறிவிடும் என நினைத்துக் கொண்டு அப்போது இதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்வில்லை. அணுஉலையின் ஆபத்தும் அப்போது எனக்கு முழுமையாக தெரியாது.
மார்ச் 11, 2011.
அன்று வழக்கம் போல தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். செய்தி நேரத்தில் ஜப்பான் புகுஷிமாவில் சுனாமி வந்ததையும், அந்த சுனாமி அணுஉலையைத் தாக்கி நடத்திய பேரழிவுகளையும் பார்த்தேன். அது என்னை பெரிதும் பாதித்தது. அந்த அழிவுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.
புகுஷிமா விபத்து நடந்த சில மாதங்களிலேயே நாகர்கோவிலில் இருந்து வெளிவந்த பேப்பரில், "அணுஉலையைக் கட்டி முடித்து இயக்கும்போது விபத்து ஏதாவது ஏற்பட்டால், மக்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டும். எச்சரிக்கை சத்தம் வந்தவுடன் வீட்டிற்குள் சென்று கதவு, சன்னல் அனைத்தையும் மூடிவிட வேண்டும். மின்சாரத்தை அணைத்துவிட வேண்டும். எந்த உணவுப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அயோடின் மாத்திரையை உடனே சாப்பிட வேண்டும்!" - என்று எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக பிரசுரமாகியிருந்தது.
இப்படிப்பட்ட அணுஉலையை வைத்துக் கொண்டு நாம் வாழ முடியுமா? என்ற கேள்வி ஊரில் அனைவரிடமும் எழுந்தது. என்னால், இந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உடனே எங்கள் ஊரின் பங்கு தந்தையைச் சந்தித்து, "ஏதாவது செய்யுங்கள் ஃபாதர்!" - என்று கேட்டுக் கொண்டேன்.
இந்த நிலையில்தான் அணு உலையின் சோதனை ஓட்டம் என்ற ஒன்றை நடத்தினார்கள்.
ஊரில் மக்கள் இருக்கவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமான, கர்ணகடூரமான, காதுகளைக் கிழிக்கும் சத்தம் தொடர்ந்து சில நாட்கள் கேட்டது. இதனால், ஊரில் யாரும் உறங்கவே முடியவில்லை. குழந்தைகள் பயத்தால் கதறி அழுதவாறு இருந்தன. இப்படி சத்தத்தோடும், பயத்தோடும் பயந்து பயந்து நாங்கள் வாழ முடியுமா?

- இறைவன் நாடினால் இன்னும் வரும்.
0 comments:
Post a Comment