NewsBlog

Thursday, April 3, 2014

சிறப்புக் கட்டுரை: 'நடைபாதை மன்னர்கள்'


என்.எஸ்.சி. போஸ் ரோட் 'நியான்' வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்தது. விளம்பரப்பலகைகள் பல வண்ணங்களில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஜில்லென்ற பனிக்காற்று உடலை நடுங்கச் செய்து கொண்டிருந்தது. 

எம்.யூ.சியின் தெற்கு சுவரை ஒட்டி பேருந்து நின்றது.

"சார்.. டிக்கெட்.. டிக்கெட் ப்ளீஸ்..!" - கண்டக்டர் வரப்போகும் 'ஸ்டேஜீக்கு' டிக்கெட் 'க்ளோஸ்' செய்துக் கொண்டிருந்தார்.

கண்டக்டர் சார்..! ஒரு ஜமாலியா கொடுங்க..!" - டிக்கெட்டை பத்திரப் படுத்திக் கொண்டேன். 

"அய்யா.. சாமி.. காலில்லாதவன் தர்மம் பண்ணுங்க.. அய்யா.. அம்மா..!" 

அழுக்கடைந்த சல்லடை சட்டை, பரட்டை தலையுமாக.. நடுத்தர வயதுடைய உடல் ஊனமுற்ற ஒருவர் 'சாப்பாட்டுக்கு' வழி தேடிக்  கொண்டிருந்தார்.

என் கவனம் அவர் மீது சென்றது. 

சிறிது நேரத்தில் நடைப்பாதை ஓரமாக ஒரு பெண்மணியின் அருகில் சென்று அவர் அமர்ந்து கொண்டார்.

அங்கே நான் கண்ட காட்சி.. என்னை நிலைகுலைய வைத்தது. 

சில நாட்களுக்கு முன்தான் இவ்வுலகத்துடன் பரிச்சயம் ஆன சின்னஞ் சிறு குழந்தை ஒன்று கந்தைத் துணியில் கிடத்தப்பட்டிருந்தது. அதன் அருகே, ஒரு பெண்மணி ஏக்கம் நிறைந்த விழிகளுடன், சோக கீதங்களை இசைத்துக் கொண்டு தலையைச் சொறிந்தவாறு இருந்தார்.
"ஆராரிரோ..! கண்ணுறங்கு.. என் கண்ணே கண்ணுறங்கு..!" - என்ற தாலாட்டினிசையில்,

"கொசு கடிக்கப்போவுது சரியா போர்த்துங்க குழந்தைக்கு..!" - கவனிப்பில் வளர வேண்டிய அப்பிஞ்சு, வானமே கூரையாய்.. நடைப்பாதையே தன் வீடாய் வறுமையில் தன்னுடைய பிஞ்சு கால்களை பதிந்திருந்த கோரம் என் கண்களை  கண்ணீரால் முட்டச் செய்துவிட்டது.

காடு. கோரமான கும்மிருட்டு.

மின்மினுக்கும் வெளிச்சத்தை நோக்கி ஒரு உருவம் நகர்கிறது மெல்ல.

அங்கே_

சுற்றி சில குழந்தைகள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, அழுதுக் கொண்டிருந்த ஒரு குழந்தையை, "இதோ சமைத்துவிட்டேன்..! கண்ணே..! அழாதே என் செல்லம்.!" - என்று அதன் தாய் அடுப்பின் மீது வெறும் தண்ணீர் பாத்திரத்தை வைத்து குழந்தைகளை ஏமாற்றி தூங்க வைத்துக்  கொண்டிருந்த துயரத்தைக் கண்டு கலங்கிப் போனார் மாறு வேடத்திலிருந்த அன்றைய ஜனாதிபதி. 

உடனே திரும்பிச் சென்று அக்குடும்பத்திற்கு தேவையான உணவு பண்டங்களை தானே சுமந்து வந்து, உணவை சமைத்து, குழந்தைகள் வயிறார உண்ணும் காட்சியை கண்டு ரசித்து, அவர்களின் வறுமையை விரட்டிய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சரித்திரம் ஞாபகம் வந்தது.

ஆனால், இன்றைய நம் ஆட்சியாளர்களின் பயனற்ற பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு பணக்காரர்களின் வளர்ச்சிக்கு துணை புரிந்து, நடைபாதையின் மன்னர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சிந்தனை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவிட முடியும்?

கிரிமினல்களின் பகடைகளாய், சமூக சீர்கேட்டின் மொத்த உருவங்களாய்தான் இவர்களின் வருங்காலம் அமையப் போவதன்றி வேறேன்ன?

நல்ல ஆட்சியாளர்களுக்கு உறக்கத்தில்கூட மக்களின் நலன் பற்றிய சிந்தனையே இருந்தது. அவர்களின் மனங்கள் இறைவனின அச்ச உணர்வால் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆட்சி அதிகாரம் ஒரு அமானிதம்; அதற்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை வாட்டியது.

ஆனால், இன்றைய நம் ஆட்சியாளர்களின் இரவுகள் எதிர்கட்சிகளின் போராட்டங்களை உடைக்கும் வழிமுறைகளும், எதிர்கட்சியினர் ஆளும் கட்சியினருக்குத் தர வேண்டிய தொல்லைகளுமாய்தான் பொழுதுகள் விடிகின்றன.

மேடுகள் உயர்ந்து கொண்டேயும், பள்ளங்கள் மேலும் பள்ளங்களாகவும் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த மனித சமூகம் மீட்சி பெற முதலில் தேவையானது 'இறைவனின் அச்ச உணர்வன்றி வேறென்ன இருக்க முடியும்?

அதுவரை, இந்த மன்னர்களின் ஜனனமும் நடைப்பாதைதான். மரணமும் திறந்தவெளிதான்.

"ரைட்..! ரைட்..!" கண்டக்டரின் விசிலில் பேருந்து கிளம்பியது.

என்னுடைய கண்களில் நீர்த்துளிகள் திரையிட மங்கலாக அந்தக் குடும்பம் மெல்ல மெல்ல மறைந்தது.

- சமரசம், ஜனவரி 16-31, 1987 - பக்கம் 13ல் வெளியான கட்டுரை.


0 comments:

Post a Comment