NewsBlog

Saturday, April 5, 2014

சிறப்புக் கட்டுரை: 'ராக்கெட் கனவுகள்'


மணிக்கூண்டின் முட்கள் இரவு 8.40 மணி என்றன. கிளம்பத் தயாரான பேருந்தில் ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். உயரமான பின் சீட் என்னை 'வாங்க" என்று வரவேற்க அமர்ந்தேன்; பேருந்து புறப்பட்டது.

"வாழ்த்தியார்.. வாழ்த்தியார்.. பஸ் நிறுத்து.." - சிறு கும்பலொன்று வார்த்தை 'குழறுல்களுடன்' பேருந்தை விரட்டியது.

"டிரைவர்.. கொஞ்சம் நிறுத்தப்பா..!" - நடத்துனரின் சமிக்யைினால் பேருந்து மெதுவானது.

முட்டியும், மோதியும் இருவர், மூவராக எல்லோரும் பேருந்தில் ஏற, கடைசியானவரும் ஒருவழியாய் ஏறி படியிலேயே நின்றிருக்க, பேருந்து விரைவாகச் சென்றது. முன்னால் நடத்துனர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களைத் தெளிவாக நோட்டமிட்டேன்.

எல்லோரும் நான் பணி புரியம், இந்தியாவின் தலைச்சிறந்த வாகன உற்பத்தி ஆலையின் இரவு நேர பணியாளர்கள். அவர்களுடன் சமீபத்தில் நடந்து முடிந்த தொழிற் சங்கத் தேர்தலில், "பாட்டாளியின் தோழர்களாகவும், உழைக்கும் வர்கத்தின் நண்பர்களாகவும்" போஸ்டர்களில் சித்தரிக்கப்பட்டு தேர்தல்களில் வென்றவர்கள், இப்போது மதுவினால் சிறுமூளை செயலிழந்து போயிருந்தனர். உணவு இடைவேளையில், வெளியே வந்து மதுவின் போதையுடன் தொழிற்சாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

"தல்வரே..! வரட்டுமா..? சொன்ன விஷயத்தை மறந்துடாதீங்கோ..!" - படியில் நின்றிருந்தவர், தன்னை மறந்திருந்த சங்கப் பிரதிநிதியிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தார்.

"ஹி..ஹி.. போறீயா..ம்.. ம்.. கவல்படாத..! நான் அதை கவனிச்சுக்றேன்..!" - அவரும் விடை கொடுத்து, தள்ளாடிக் கொண்டே பேருந்தின் அகலத்தை அளந்து சென்றுக் கொண்டிருந்த தன் சகாக்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டார்.

முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை நாங்கள் சென்று கொண்டிருந்த பேருந்து விரட்ட... படியில் நின்றிருந்தவர் தான் என்ன செய்கிறோம் என்று உணர்வில்லாமல் பேருந்திலிருந்து இறங்க ஆரம்பித்தார்.

நான் எழுந்தபோய் தடுப்பதற்குள் அது நிகழ்ந்துவிட்டது; தரையில் கால்களைப் பதித்தவர், பேருந்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ... பேருந்தோடு இழுக்கடிக்கப்பட்டு .. பிடி நழுவி ... மூன்று, நான்கு முறை  நடுரோட்டில் உருண்டு.. புரண்டு.. மல்லாக்க அடங்கினார். 

பின் கண்ணாடி வழியே இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான், பதறி எழுந்துபோய், அவர்களுடைய சகாக்களிடம் சொன்னேன். அவர்களோ போதை தலைக்கேறி அதை கேட்கும் நிலையில் இல்லை.

நடத்துனரிடம் சொன்னபோது அவர், "போய்யா.. உனக்கு வேற வேலையேயில்லை!" - ஒத்த வரியில் பேசிவிட்டு தனது பார்வையாலேயே என்னைச் சுட்டார்.

மறுநாள் மாலை.

சைரன் அலற, பகல் நேர பணி முடிந்த பணியாளர்கள் தொழிலகத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வாசல் வழியே இரவு நேர பணியாளர்கள் தொழிலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். 

பகல் நேர பணி முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த நான் எதிரே பிளாஸ்டர் ஒட்டுக்களுடன் ஒரு முகம் உள்ளே நுழையக் கண்டு, "யார்..?"  - சிந்தனைப் பொறிகள் மூளையில் தெறிக்க நின்றேன்.

"ஓ..!" இரவு நடந்த பேருந்து நிகழ்ச்சியின் நாயகன், தத்தித் தத்தி நடைப்பயின்று கொண்டிருந்தார். 

மிக மோசமான விபத்தில் சிக்கி, சொற்பக் காயங்களுடன் அவர் செல்லும்போது, 'ஒரு நாழிகை முந்தாமலும், ஒரு நாழிகை பிந்தாமலும் படைப்பினங்களின் முடிவுகளை நிர்ணயித்துள்ள இறைவனை வாயாரப் புகழ்ந்தேன்!'

அதேசமயம், ஆயிரக் கணக்காணோர் பணிப் புரியும் இந்த தொழிலகத்தில் மிகவும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மது, சூது, விபச்சாரம் போன்ற ஒழுக்கக்கேடான தீமைகளினால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு, 'நோட்டீஸ் போர்டுகளில்' சகஜமான இரங்கல் செய்திகளாக மாறுவதை நினைக்கும்போது, கவலையாக இருந்தது. 

பலமற்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கட்டிடமாக இருக்கும் இந்தத் தொழிலாளர் அமைப்பை ஒழுக்க மாண்புகளில் சிறக்க வைக்கும் அமைப்பாக மாற்றி அமைத்தால் நாம் காணும் விண்வெளியுக கனவுகள் நிறைவேறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றியது.

- சமரசம் 16-30, ஏப்ரல் 1987ல் - பக்கம் 23, 24 ல் பிரசுரமானது.

0 comments:

Post a Comment