NewsBlog

Tuesday, April 1, 2014

சிறப்புக் கட்டுரை: உலுத்துப் போன ஜனநாயகமா? எதிர்பாராமல் நடந்த சருக்கலா?

15-வது மக்களவை 21.02.2014 வெள்ளி அன்று நிறைவடைந்தது.

நிறைவு நாளின் காட்சிகள் கண்ணை இன்னும் விட்டு அகலவில்லை.

நமது அரசியல் அறிஞர் பெருமக்கள் ஹாலிவுட் திரையுலகத்துக்கு சென்றிருந்தாலாவது நாட்டுக்கு நிறைய ‘மிகச்சிறந்த நடிப்புக்கான பதக்கங்கள், பரிசுகள்’ நிச்சயம் கிடைத்திருக்கும். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு; கண்ணீர் உகுப்பு.

அந்த இறுதிநாளில் பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமான உரை நிகழ்த்த (அவர் சாதாரணமாக பேசும் போதே உருகுவார்) பாஜக மூத்த தலைவர் சுஷ்மா தன்னை நேர்மையாளர், நியாயவாதி என்று சொல்லுரைத்த காரணத்துக்காக அத்வானி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவையில் கண்ணீர் சிந்தினார். 

அதேபோல, சோனியா பிரதமரானால், மொட்டையடித்துக் கொள்வேன் என்று ஒரு காலத்தில் கூறிய சுஷ்மா, மக்களவை நிறைவுநாளில் சோனியா பெருந்தன்மையான தலைவர் என்று மனதாரப் பாராட்டினார்.

வழக்கமாக, கூச்சல் குழப்பங்கள், அமளியில் தத்தளிக்கும் மக்களவை அமைதிப் பூங்காவாக அன்று திகழ்ந்தது. அவை உறுப்பினர்கள், பசுமை நிறைந்த நினைவுகளே என்று திரைப்படப் பாடலைப் பாடாத குறையாக கலைந்து சென்றனர்.

ஆக, ஒரு வழியாக பெரும் ஏமாற்றத்துடன் 15வது மக்களவை நிறைவுக்கு வந்தது.

மக்களவை கூடுகிறது என்றாலே அதில் அரங்கேறும் அமளிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இந்திய மக்களவை ஜனநாயகம் நாளுக்கு நாள், தேர்தலுக்கு தேர்தல் அதன் உறுப்பினர்களின் நடத்தையிலும், செயல்பாட்டிலும், எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் தரம் தாழ்ந்து வருவது வருத்தமளிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, அவற்றுக்கான சட்டங்களை வகுத்து, அவற்றை சட்டமியற்றி நிறைவேற்றி செயல்படுத்துவது என்ற சூத்திரம் மாறிப்போய், பணபலம், புஜபலம் இவற்றால் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து செலவழித்ததை ஒன்றுக்கு இரண்டு மடங்காய் மீட்டெடுப்பது என்ற சூத்திரத்தில் சிக்கிக் கொண்டது. மக்களவை என்பது நமது அரசயில் நாயகர்களின் ‘நலவாழ்வு அமைப்பு’ என்றாகிவிட்டது. நமது தரம் தாழ்ந்த அமைப்பின் வீழ்ச்சி இது என்றால் மிகையல்ல.

15வது மக்களவை பல சாதனைகளுக்கு உடமையாளராய் விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு பணியாற்றிய சாதனைப்படைத்த மக்களவை இதுதான்! 326 மசோதாக்கள் மக்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்க, வெறும் 177 மசோதாக்கள் மட்டுமே இந்த மக்களவை நிறைவேற்றியது. கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு இவற்றில் செலவான நேரம் விவாத நேரத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங்கின் தலைமையிலான 14வது மக்களவையில் 248 மசோதாக்களும் அதற்கு முந்தைய வாஜ்பேய் தலைமையிலான 13வது மக்களவையில் 297 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

15வது மக்களவையில் 177 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன என்பது ஒருபுறம் இருக்க, மகளிர் இட ஒதுக்கீடு போன்ற முக்கியமான 68 மசோதாக்கள் காலாவதியாகி உள்ளன. மாநிலங்களவையில் 60 மசோதாக்கள் நிறைவேறவில்லை. மொத்தத்தில் 128 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள 60 மசோதாக்கள் காலாவதியாகாது. ஆனால், மக்களவையில் அங்கீகாரத்துக்கு வைக்கப்பட்டிருந்த 68 மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அடுத்ததாய் தேர்நதெடுக்கப்படும் அரசு அவற்றை மீண்டும் தாக்கல் செய்தால் மட்டுமே அவை உயிர் பெறும் என்பது நடைமுறை.

சரி.. 15வது மக்களவை மக்களின் இன்றியமையாதப் பிரச்னைகளையாவது உருப்படியாய் விவாதித்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் தெளிவாய் வரும். புதிதாக சட்டமியற்ற வேண்டாம்; அன்றாடம் மக்களின் பிரச்னைகளை விவாதித்து, அதை சீர்களைவது, நிர்வாக அமைப்பை சீராக்குவது, நிதித்துறை மசோதாக்களை அங்கீகரிப்பது என்று செய்திருந்தால்கூட உருப்படியான மக்களவையாக இருந்திருக்கும்.

1957ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டுவரையிலான நாட்டின் முதல் மூன்று மக்களவைகள் சரசரியாக 600 நாட்கள் கூடின. 3700 மணி நேரம் விவாதங்களிலும், மசோதாக்களை நிறைவேற்றுவதிலும் நேரத்தைக் கழித்தன. 15வது மக்களவையோ வெறும் 357 நாட்கள்தான் கூடியது. 1338 மணி நேரம்தான் செயல்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் சண்டை, சச்கரவுகள் மற்றும் அவை ஒத்திவைப்பு என்றுதான் கழிந்தது.  

அதேபோல, ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்த மக்களவை இதுதான். இதனாலேயே மத்திய அரசின் பல நல்ல திட்டங்களும், சாதனைகளும்கூட எடுப்படவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி 2010 குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. இதனால் அந்தக் கூட்டத் தொடர் முழுமையாக முடங்கியது.

2012ம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் போது, நிலக்கரி சுரங்க ஊழலுக்குப் பொறுப்பேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, மக்களவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

15வது மக்களவையின் கடைசி அமர்வு இந்திய மக்களவையின் வரலாற்றில் பெரும் அவமானத்தைத் தேடித்தந்தது. கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டதாக சொன்னதும், மிளகுப் பொடித் தூவப்பட்டதுமாய் இந்த அமர்வு, இந்திய மக்களவை உறுப்பினர்களின் தரத்தை உலகறிய பறைச்சாற்றியது. தெலுங்கானா மசோதா நிறைவேறும்போது, ஜனநாயக அமைப்பின் சர்வாதிகாராமாக தொலைக்காட்சி ஒளிப்பரப்பைக் கூட இருட்டடிப்பு செய்ய வேண்டி வந்தது.

உலகின் மிகப் பெரிய ஜனநாய அமைப்பின் உலுத்துப் போன யதார்த்தமா இது? அல்லது எதிர்பாராமல் நடந்த சருக்கலா?

16வது மக்களவைதான் பதில் தர வேண்டும். 

0 comments:

Post a Comment