NewsBlog

Friday, February 7, 2014

காலப்பெட்டகம்: 'மோடியின் அந்த நரத் தாண்டவம்!'


நரேந்திர மோடி நாளை 08.02.2014 சனிக்கிழமை சென்னைக்கு வரவிருக்கிறார். வண்டலூரில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதற்கு அடுத்த நாள், 09.02.2014 ஞாயிற்றுக் கிழமை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மோடி தமிழகத்துக்கு வருவதிலோ, அவர் பேசுவதிலோ யாருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. எல்லா இந்தியருக்கும், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லும் உரிமையைப் போலவே அவருக்கும் எங்கும் வர, போக உரிமைகள் உண்டு. ஆனால், அவருடைய குற்றங்களும், பாவங்களும் விக்கிரமாதித்தனின் வேதாளமாய் அவரைத் துரத்துவதை யாராலும் மறுக்க முடியாது. சட்டம் என்ற இருட்டறையிலிருந்து தப்பி வந்த கொடும் குற்றவாளி அவர். இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்காத நிலையில் இன்னும் சர்வதேச நீதி மன்றங்களுக்கு அவரது வழக்குகளை கொண்டு சென்று வழக்காட வேண்டிய அத்தனை மோசமான கொலையாளி அவர்.

மோடியின் தமிழக வருகை, பிப். 28, 2002 நினைவூட்டுகிறது.

முஸ்லிம்கள் மண்ணுலகில் வாழவே தகுதியற்றவர்கள் என்று இந்துத்துவ தீவிரவாதிகளால் பிரகடனம் செய்யப்பட்ட அந்த நாளை எப்படிதான் மறக்க முடியும்?

சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்திற்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் 'பந்த்' என்ற போர்வையில் குஜராத் முழுவதும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மற்றும் அதன் கிளை அமைப்புகளான விஸ்வ ஹிந்த் பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் பரிவாரங்கள் இரத்த வெறி பிடித்து, முஸ்லிம்களுக்கு எதிராக நரத் தாண்டவம் ஆடிய அந்தக் காட்சிகளை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு உறைந்து போகிறது.


அஹ்மதாபாத் பெரு நகரம் அந்த ரத்த வெறிக்கு இன்றளவும் சாட்சியாக நிற்கிறது. முழு ஆயுதம் தறித்த இந்துத்துவ பயங்கரவாதிகள் வெறிப்பிடித்தவர்களாய் தெருக்களில் இறங்கி கடைகளை தீ வைத்துக் கொளுத்தியதையும், முஸ்லிம்களை  உயிருடன் கொளுத்தியதையும் எப்படி மறக்க முடியும்?

நாடா? காடா?

அந்த மயான சூறையாடலில் 'இது மனிதர்கள் வாழும் நாடா?' அல்லது விலங்குகள் வாழும் காடா?' - என்ற வினாக்கள் அல்லவா எழுந்தன! காட்டுக்கும்கூட சில சட்டங்கள் உண்டு. தேவையில்லாமல் அங்கு உயிர்கள் பறிபோவதில்லை. எந்த வனவிலங்கும், மற்றொரு விலங்கின் இருப்பிடத்தை சூறையாடுவதில்லை. எந்த விலங்கினமும் அடுத்த இன ஜோடியைக் கற்பழித்துக் கொல்வதில்லை.

வெறிப்பிடித்த இந்துத்துவ தீவிரவாதிகள் கண்ணில் எதிர்பட்ட முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். இந்த மண்ணில் வாழவே தகுதியற்ற புழு, பூச்சிகள் முஸ்லிம்கள் என்று உலகுக்கு பிரகடனம் செய்தார்கள்.


குஜராத் முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் அஹ்மதாபாத் ஒன்று. முஸ்லிம்களும், இந்துக்களும் கலந்து வாழும் அதன் புற நகர் பகுதி நரோடா. பிப்.28ம் நாள் காலையிலிருந்து இருட்டும் வரை செய்ய வேண்டிய செயல்திட்டம் மிகவும் கச்சிதமாக நிறைவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அது. அதன்படி ஆர்.எஸ்.எஸ் தலைமையில் பி.ஜே.பி பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்த் பரிஷத் தீவிரவாத குழுக்களால் அமைக்கப்பட்ட கொலைக்காரப் படையிடம் மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டன.

வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் இவற்றைத் தவிர கொலைகாரப் படையில் இடம் பெற்றிருந்த சாமான்யமானவனும் எளிதில் ஆயதமாகக் கையாளும் விதமாக செங்கல் முதல் காஸ் சிலிண்டர், டீஸல் டாங்குள் வரை முஸ்லிம்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. அப்பாவி முஸ்லிம்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அப்படி எரியூட்டுவதற்கு முன்பாக கற்களால் நசுக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 

இந்த நர தாண்டவாம் நடந்து கொண்டிருந்தபோது, இடைவிடாமல் செல்ஃபோன்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை, கற்பழிக்கப்பட்ட முஸ்லிம் தாய்மார்களின், சகோதரிகளின் எண்ணிக்கையைப் பறிமாறிக் கொண்டு குதூகலித்தார்கள்... சுண்டெலிகளைக் கொன்றது போல!


சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை நரோடா பாட்டியா மற்றும் அதன் அண்டைப் பகுதியான நரோடா காவோனைச் சார்ந்த பெரும் பகுதி முஸ்லிம்கள் காய்கறிகளைப் போல சீவப்பட்டார்கள். குப்பைகளைப் போல எரிக்கப்பட்டார்கள். முஸ்லிம் தாய்மார்களின் கருக்களை வயிற்றிலிருந்து பிளந்து எறிந்தார்கள். அந்தக் கருக்கள் கூட மீண்டும் உயிர் பெற்றிடக் கூடாது என்று சுவற்றில் அடித்து சூறைத் தேங்காய்களைப் போல தலையைச் சிதறடித்தார்கள். ராவணன், நரகாசூரன், கம்சன் போன்ற புராண, இதிகாச நாயகர்கள் எல்லாம் அங்கு தோற்றுப் போனார்கள்.

நரோடா நகரின் தொலைத்தூர புறநகர்ப் பகுதி அல்ல! அங்கிருந்து வெறும் 5 கி.மீ. தொலைவில் மாநில காவல்துறையின் கண்ட்ரோல் ரூம் அமைந்துள்ளது. 4 கி.மீட்டருக்கும் குறைந்த தொலைவில் அதாவது ஷாஹியாபாக்கிலிருந்து வெறும் சொற்ப தொலைவில் அஹ்மதாபாத் பெரு நகரின் தலைமைக் காவல்நிலையம் உள்ளது.

வேறு யாரைக் காரணமாக்குவது?

முஸ்லிம்களுக்கு எதிரான கொலை  வெறியைத் தடுக்க வேண்டிய சட்டஒழுங்கின் நாயகர்களான காவல்துறையினர் வாளாவிருந்தனர். நிர்வாகத்துறையினர் கண்ணிழந்த திருதராட்ச மன்னர்களானார்கள். அன்றைய நாளில் எதுவொன்றுமே முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. இந்தக் கொலை வெறிக்கு மோடியைக் காரணமாக்காமல் வேறு யாரைதான் பொறுப்பாக்குவது?


மண், பொன், பொருளுக்காக நாட்டின் மக்களவையை செயலிழக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு மனித உயிர்களைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? மலைகளும், மரங்களும், நதிகளும் தானே புனிதமானவை! மனித உயிர்கள் அல்லவே!

கலவரங்களால் பாதிக்கப்பட்டு சொந்தபந்தங்கள், வீடு-வாசல்கள் என்று முழு அடையாளங்களைத் தொலைத்துவிட்ட முஸ்லிம்கள் தங்கள் இழப்புகளுக்கு எதிராக முதன் முதலாக குரல் எழுப்ப ஒரு ஐந்தாண்டு காலம் பிடித்தது. அதுவரை எதுவுமே நடைபெறாதது போல குஜராத் மாநில அரசு நடந்து கொண்டது. நடந்த கொலை வெறிச்சம்பவங்களை ஒரு பொருட்டாகவே அது மதிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக எட்டாண்டுகளுக்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சில மனித உரிமைப் போராளிகளால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 'ரிட்' மனு உயிர் பெற்றது. அதன் விளைவாக குஜராத்திற்கு எதிரான கலவர வழக்குகள் மறு விசாரணைக்காக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பத்தாண்டுகளுக்கு பிறகு ஒரு பகுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடிமை வாழ்க்கை

கலவரங்களில் நேரடியாக பங்கு கொண்ட கொலையாளிகள் எளிதில் பிணையில் விடப்பட்டார்கள். கலவரங்களைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் நரேந்திர மோடி பெரும் வெற்றியைப் பெற்றார். கலவரங்களில் அனைத்தையும் இழந்தவர்கள் அஹ்மதாபாத்தின் புற நகர் பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். சொற்ப எண்ணிக்கையினரே தமது பழைய குடியிருப்புகளுக்குத் திரும்பினார்கள். இவர்கள்  பொருளாதார ரீதியாக பின்தங்கி, தங்கள் சக சமய அண்டை வீட்டாரின் சமூகப் புறக்கணிப்புகளோடு அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்கள்.


அஹ்மதாபாத் பெரு நகரின் மையப்பகுதியிலிருந்து வெறும் 15 கி.மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிதான் நரோடா காவோன் மற்றும் நரோடா பாட்டியா. 70 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த சேரிப் பகுதிகள்; அஹ்மதாபாத் நகராட்சிக்கு உட்பட்டவை. இரண்டு பகுதிகளுக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகம் இராது.

இடப்பரப்பில் நரோடா காவோன் சிறியது. நாரோடா பாட்டியாவோ சற்றுப் பெரியது. குறுகியத் தெருக்கள், முட்டுச் சந்துக்கள், முறையாக கட்டப்படாத அரைகுறை காங்கிரீட் தளங்கள். அவற்றில் சில இரண்டு தள கட்டிடங்கள் என்று வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. கலவரங்களுக்கு முன் அன்றாடங் காய்ய்சிகளான 2000 முஸ்லிம்களின் வாழ்விடங்களாக திகழ்ந்த பகுதிகள் அவை. இங்கு வசித்து வந்த முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் கர்நாடக மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்.

இந்தக் குடியிருப்புகள் அமைந்திருந்த சாலைக்கு மறுபுறம் மாநில அரசு போக்குவரத்துத் துறையின் கிட்டங்கி. அதன் பக்கத்தில் இந்துக்கள் பெரும் பகுதியாக வாழும் 'கோபிநாத் மற்றும் கங்கோத்ரி' குடியிருப்புகள். இவற்றின் அருகில் சஹாரா நகர். இதில் வசித்து வரும் சஹாராக்கள் பூர்வீகமாகவே கொலை, கொள்ளை, வழிப்பறி என்று குற்றப் பின்னணி கொண்டவர்கள். சாராயம் காய்ச்சுவதும், சூதாட்டமும் இவர்களது பிரதான தொழில்.

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவோன் கலவரங்களைத் தொடர்ந்து பதியப்பட்ட வழக்குள் இரண்டு. அதுவும் தனித்தனியாகப் பதியப்பட்ட வழக்குகள்  அவை. வெறும் 8 முஸ்லிம்கள் நரோடா காவோன்வில் கொல்லப்பட்டது சம்பந்தமான வழக்குகளாக அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், நேரடி சாட்சிகளோ நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலவரங்களில் கொல்லப்பட்டதாக சாட்சியமளித்தனர். துல்லியமான எண்ணிக்கை கொலைகாரர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



இரு முக்கிய கொலைக்காரர்கள்

கொலை களத்தில் இறங்கிய நூற்றுக் கணக்கான இந்துத் தீவிரவாத சங்பரிவார கும்பலுக்கு தொடர்ச்சியாக தலைமை தாங்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். அவர்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சரும், பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வான் மாயா பென் கோதானி. அடுத்தது, இந்து தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தளத்தின் தலைவரான பாபு பஜ்ரங்கி. கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்திலும் இவர்களின் பெயர்தான் இடம் பெற்றிருந்தது. கொலைக்குற்றவாளி கோதானியைக் கைது செய்ய நேரடி சாட்சிகள் இல்லை என்று காரணம் காட்டி ஆரம்பத்தில் கைது செய்ய காவல்துறை மறுத்தது. மூன்று மாத தலைமறைவிற்கு பிறகு உச்ச கட்ட நாடகமாக கொலையாளி பஜ்ரங்கி கைது செய்யப்படுகிறார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு குஜராத் உயர் நீதி மன்றத்தால் பிணையில் விடப்படுகிறார். இந்து தீவிரவாத குழுக்களான பி.ஜே.பி, பஜ்ரங்தளம் மற்றும் சஹராக்கள் சொற்ப எண்ணிக்கையில் கைது செய்யப்படுகிறார்கள். 

யார் இந்த பஜ்ரங்கி?

5 அடி மூன்று அங்குலம் கொண்ட பாபு பஜ்ரங்கி பட்டேல் குடும்பத்தைச் சேர்ந்த நரோடாவின் பெரும் புள்ளி. 22 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்து தீவிரவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்த் பரிஷத்துடனும் அதன் இளைஞர் அமைப்புடனும் தொடர்புடைய உள்ளூர் தாதா!

பஜ்ரங்கி நரோடாவிலும், சஹாரா நகரிலும் கடவுள் அந்தஸ்தைப் பெற்றவர். அப்பகுதிகளின் எல்லாக் குற்றச் செயல்களும் இவரின் ஆசியுடன்தான் நடக்கும். சஹாராக்கள் இவருடைய அடியாட்கள். "கொல்..!கொல்..! கொலையைத் தவிர வேறு இல்லை!" - என்பதே பஜ்ரங்கி அறிந்த ஒரே அரிச்சுவடி. பஜ்ரங்கி கற்றதும் இதுதான்! சஹாராக்களுக்குக் கற்பிப்பதும் இதுதான்!

அஜந்தா எல்லோரா ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள இரண்டாவது தளம்தான் பஜ்ரங்கியின் நீதிமன்றம். நெடுஞ்சாலைக்குப் பக்கத்திலேயே அமைந்துள்ள வணிக வளாகம் இது. பில்டர்ஸ் என்ற போர்வையில் இவரது மாத வருமானம் பல லட்சங்களைத் தாண்டுகிறது.

பஜ்ரங்கியின் பிரதான தொழில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களை வதைப்பது. "நான் முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் வெறுக்கிறேன்!" - என்ற உண்மையை தனது வாயாலேயே ஒப்புக் கொள்பவர். இவரது நீதிமன்றத்தில் நடக்கும் முக்கிய வழக்குகள் முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிப்போன இந்த இளம் பெண்களை மீட்டெடுப்பது. இந்தக் கட்டப் பஞ்சாயத்தைக் குறித்து காவல்துறையிடம் புகார்  செய்தாலும் காவல்துறை கண்டுக் கொள்ளாது. "இதுவரை 957 இந்து இளம் பெண்களைக் காப்பாற்றி இருக்கிறேன். சராசரியாக கணக்கிட்டாலும், ஒரு பெண் ஒரு முஸ்லிமை மணந்து ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும் நான் குறைந்தது 5000 முஸ்லிம்களை அவர்கள் பிறப்பதற்கு முன்னாலேயே கொன்றுவிட்டேன்!" - என மார்தட்டிக் கொள்பவர்.


அத்துடன் இந்து விரோதத் திரைப்படம் என்று 'பர்ஜானியா'வுக்கு விளக்கம் அளித்தவர் திருவாளர் பஜ்ரங்கிதான்! தனி ஆளாக நின்று அஹ்மதாபாத்தின் எல்லா திரைப்பட உரிமையாளர்களையும் மிரட்டி கட்டாயப்படுத்தி, அந்தத் திரைப்படத்தை திரையிட முடியாமல் தடுத்த பலவான். இவரது எல்லா 'கிரிமினல்' நடவடிக்கைகளையும் அரசு நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல், மௌனமாக நின்று ஆசிர்வதித்தது. "என் மரணத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை! மரணத்தறுவாயிலும் எனது கடைசி ஆசையாக முஸ்லிம் குடியிருப்புகள் மீது குண்டு வீசி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முஸ்லிம்களை கொன்றொழிப்பதையே விரும்புகின்றேன்!" - என்று வெளிப்படையாகவே சொல்பவர்.

மத்திய அரசுக்கே ஆலோசனை

தனது தனிப்பட்ட விருப்பங்களைத் தாண்டி, மத்திய அரசாங்கமே சட்ட ரீதியாக முஸ்லிம்கள் சம்பந்தமான பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்பவர். அதற்கான பல ஆலோசனைகளை இலவசமாக வழங்கியிருப்பவர். அதில் மாதிரிக்கு சில...

மத்திய அரசு முஸ்லிம்களைக் கொல்ல ஆணைப் பிறப்பிக்க வேண்டும். இந்த அரசாணையை உயர்க்குடியினரும், செல்வந்தர்களும் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், சேரி வாழ் இந்துக்கள் கண்டிப்பாக இதைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தின் ஒரு பகுதியின்படி  இவர்கள் முஸ்லிம்களின் வீடு, வாசல்களை சொத்துச் சுகங்களை இன்னும் தமக்கு விருப்பமான எதனையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு ஒரு நிபந்தனை. இதை மூன்று நாட்களுக்குள் செய்ய வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்களை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிந்து விடலாம் என்று ஹிட்லரையும் மிஞ்சும் முதல் ஆலோசனை இது.

அடுத்த ஆலோசனை, முஸ்லிம்கள் ஒரே ஒரு திருமணம் செய்து கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும். கூடவே அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும்!" - என்று அப்பட்டமான துவேஷங்களை விதைப்பவர்.

பிப்ரவரி 27, கோத்ரா- சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்து சம்பவம் நடந்ததை ஒட்டி அங்கு சென்ற பஜ்ரங்கி அச்சம்பவத்திற்கு அடுத்த நாளே நரோடா பாட்டியாவில் பழிக்குப் பழி வாங்குவதாக சூளுரைத்தார்: "நான் இதைவிட நான்கு மடங்கு முஸ்லிம்களை நரோடாவில் கொன்றொழிப்பேன்! என்று சூளுரைத்தேன்!" - என்று பின்னாளில் தெஹல்காவுக்கு அளித்த பேட்டியின் போது வாக்கு மூலம் அளித்தார்.

அஹ்மதாபாத்திற்கு திரும்பிய பஜ்ரங்கி முஸ்லிம்களை  கொன்றொழிப்பதற்கான திட்டங்களை அன்றிரவே உடனுக்குடன் தீட்டினார். அப்படி முஸ்லிம்களை கொலை செய்ய உடன்படாத இந்துக்கள் அடுத்த நாள் முஸ்லிம்களோடு சேர்த்து கொல்லப்படுவார்கள் என்று பஜ்ரங்கியால் எச்சரித்து பயமுறுத்தப்பட்டார்கள். தீ மூட்டுவதற்கு வசதியாக ஏராளமான எரிப்பொருட்கள் திரட்டப்பட்டன. இதற்காக ஒரு பெட்ரோல் பங்கின் உரிமையாளர் இலவசமாக பெட்ரோலை வழங்கியதாகவும் அதை முஸ்லிம்களை உயிருடன் எரிக்க பயன்படுத்தியதாகவும் பஜ்ரங்கி தெஹல்காவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.



அடுத்த நாள். முஸ்லிம்களுக்கு எதிரான கோர நரத்தாண்டவம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. அரங்கேற்றம் செய்யப்பட்ட ... மனித இனம் பதறச் செய்யும் செயல்களை தனது வாயாலேயே தெஹல்காவிடம் வாக்குமூலம் அளித்தவர் பஜ்ரங்கி. முஸ்லிம்கள் இறந்துவிட்டால் அவர்களை எரிப்பதில்லை. புதைக்கப்படுவார்கள்; அதனால்தான் விபச்..... பிறந்த அவர்களை உயிருடன் எரித்தோம்! என்று வெளிப்படையாகவே தெஹல்காவிடம் ஒப்புக் கொண்டவர் பஜரங்கி. இந்த அரக்கத்தனத்தின் விளைவாகத்தான் தந்தையர் முன் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். கணவர் முன் மனைவிமார்களின்  வயிற்றிலிருந்து சிசுக்கள் கிழித்து எறியப்பட்டன. முஸ்லிம்கள் ஓட.. ஓட விரட்டப்பட்டு கொளுத்தப்பட்டார்கள்.

'பசித்தவன் பழத்தோப்புக்குள் நுழைந்தால் பழங்களை சுவைக்காமலா விடுவான்! இதைத்தான் என் விஷ்வ ஹிந்த் பரிஷத் சகோதரர்கள் செய்தார்கள். ம்.. போய்.. ஆசை தீர பழங்களை கடித்துக் குதறு என்று என் மனைவியே எனக்கு சொன்னாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!" - என்று முஸ்லிம் பெண்களை கற்பழித்ததை சர்வ சாதாரணமாக ஒப்புக் கொண்டார்கள் கொலைகளுக்குத் தலைமைத் தாங்கிய சுரேஷ் ரிசார்ட் போன்ற கொடும் பாதகர்கள்.

முஸ்லிம்   பெண்களை முழுமையாக துகிலுரித்த இந்த நவீன துச்சாதன்கள் அப்பெண்களை பல நாள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். முழு நிர்வாணமாகவே நிவாரண முகாம்களுக்கு அப்பெண்கள் ஆடு, மாடுகளைப் போல கொண்டு சேர்க்கப்பட்டார்கள்.

சுரேஷ் ரிசார்ட் தெஹல்காவுக்கு அளித்த பேட்டியில்,  நர தாண்டவம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், பி.ஜே.பி. எம்.எல்.ஏ. மாயா பென் கோடானி நரோடா முழுவதும் பம்பரமாய் சுற்றித் திரிந்து அந்த வெறித்தனமான கொலைகளுக்கு தூபமிட்டுக் கொண்டிருந்ததை வெளிப்படையாகவே சொன்னார்.


கலவரங்களுக்கு தலைமைத் தாங்கிய இவர்கள் உடனுக்குடன் தங்கள் கொலைப் பட்டியலை இந்து தீவிரவாத இயக்கமான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலுக்கு செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கு மரண தண்டனை அளித்து முடித்த அன்று மாலை பஜ்ரங்கி அந்தக்  கொலைப்பட்டியலை குஜராத் உள்துறை அமைச்சருக்கு சமர்பித்து இனி சட்ட ரீதியாக தங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருடையது என்றும் சொல்லியுள்ளார்.

இரவு மஹா ராணா பிரதாபை போல நிம்மதியாக தூங்கியதாகவும், கடவுளே வந்திருந்தாலகூட அன்று நரோடா பாட்டியாவில் நுழைந்து தம்மை தடுத்திருக்க முடியாது என்றும் பகிரங்கமாக தனது வாக்குமூலத்தை தெஹல்காவிடம் பஜ்ரங்கி பதிவு செய்தார்.

இந்த வாக்கு மூலத்தையே வழக்காக்கி கொலைகாரர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்க முடியும். ஆனால், துரதிஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை.



முஸ்லிம்களுக்கு எதிரான கொலை  வெறியை காவல்துறையினர் கைக்கட்டி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், முஸ்லிம்களை குறிபார்த்து சுட்டதாகவும், பள்ளத்தில் உயிர்க் காத்துக் கொள்ள பதுங்கிய சிலரை  காட்டிக் கொடுத்து உயிருடன் எரிக்க உதவியதாகவும் சுரேஷ் ரிசார்ட் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து முடிந்த குஜராத் கலவரங்களுக்கு இதுவரையும் நீதி கிடைக்கவில்லை. இது சட்டத்துறையும், நீதித்துறையும் வகுப்புமயமாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியே அன்றி வேறில்லை!

கொலைக்காரர்களுக்குத் துணை நின்றது.. செல்போன் உரையாடல்கள் போன்ற முக்கிய தடயங்களை அழித்தது.. போன்றவை சிறுபான்மை இனம், இந்திய அரசியலமைப்பு மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதறடித்தன.

குஜராத் கலவரங்களுக்குக் காரணமான நரேந்திர மோடிக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படும்வரை,

இத்தகைய இனத்துவேஷங்களை விதைத்துக் கொண்டிருக்கும் அத்வானி, உமாபாரதி போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை அளிக்கப்படும்வரை,

பாசிஸ நச்சு விதைகளை இந்திய நாட்டில் அனுதினமும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் சங்பரிவார் தீவிரவாதிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தரும் காலம்வரை,

இந்திய நாட்டின் இரத்த நாளங்களாக விளங்கும் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்படும் இனம் ஒவ்வொன்றும் கரம் கோர்த்துக் கொண்டு இடைவிடாமல் நீதி நிலைநாட்டலுக்காகப் போரட வேண்டிய தருணமிது.


0 comments:

Post a Comment