NewsBlog

Saturday, February 22, 2014

சிறப்புக் கட்டுரை:'விண்ணைத் தொட்ட அந்தப் பிரார்த்தனை பலனளிக்காதது ஏன்?'




பன்முக சமூக அமைப்பான இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். இதில் பிளவு பட்டிருக்கும் நிலையில் இன்னும் மிக.. மிக சிறுபான்மையினர்.

அதனால், பலம் பெறுவது என்பது,
சாதாரணமான இஸ்லாமிய சட்டயியல் மற்றும் வழிமுறைகள் சம்பந்தமான கருத்து வேறுபாடுகளை 'கட்டாய கடமையாக' கருதுவதைவிட்டு வெளிவருவதில்தான் இருக்கிறது. இந்த வேறுபாடுகள் நபிகளார் காலத்திலிருந்தே இருப்பவை. இஸ்லாமிய ஜனநாயகத்தின் அடையாளங்களாக திகழ்பவை.

இவற்றை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதுதான் பிரிந்திருக்கும் இயக்கங்கள் இணையாமல் இருப்பதற்கு முக்கிய முதற்காரணம்; இன்னும் புதிது புதிதாக பிளவுப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் காரணம்.

அடுத்தது, தங்கள் நலன் ஒன்றே முக்கியமாக சுயநலமாக சிந்திப்பதும் முஸ்லிம்கள் செய்யும் மிக முக்கியத் தவறு.

இஸ்லாமிய சமூக அமைப்பின் இணையில்லா தலைவர் நபிகளாரின் வழிமுறையிலிருந்து விலகிய 'தனித்தன்மை' இது.

அண்ணலார் வாழும் சமூகத்தைக் குறித்து அக்கறை மற்றும் கவலையோடுதான் ஹீரா மலையில் விழித்திருந்தார்கள். பசித்திருந்தார்கள். தியானித்திருந்தார்கள். மக்களின் நலனுக்காக சதா உள்ளம் உருகி, "நேரான வழியைக் காட்டுவாய் இறைவா! நேரான வழியைக் காட்டுவாய் இறைவா!" - என்று பிரார்த்திருந்தார்கள்.

அந்த பிரார்த்தனையின் வெளிப்பாடுதான் இறைவழிகாட்டுதலான இறைவேதம், ‘திருக்குர்அன்’.

இதே பிரார்த்தனையைதான் முஸ்லிம்கள் தங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் ‘சூரத்துல் ஃபாத்திஹா’ வடிவில் முன்வைக்கிறார்கள். ஆனால், அதன் தாத்பர்யமும், வலிமையான வீச்சும் அவர்களுக்குப் புரியவில்லை. அதனால், விண்ணைத் தொட்ட நபிகளாரின் பிரார்த்தனை முஸ்லிம்களுக்கு பலனளிக்கவில்லை.

இன்னும் கொஞ்சம் முன்னுக்குச் சென்று வரலாற்றை புரட்டிப் பார்த்தால், இவர்களின் முன்னோர்கள் ஒரு சாதாரண கைத்தடியால் கடலைப் (மூஸா நபி) பிளந்திருக்கிறார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் (இப்ராஹீம் நபி) குளிர்ந்திருக்கிறார்கள்.

புரிதலின் விளைவாகத்தான் ஈயத்தால் வார்க்கப்பட்ட இறைநம்பியின் சுவர் இறுகி நிற்கும்.

ஆக, இந்திய முஸ்லிம்கள் எப்போது சுயநலமாய் சிந்திப்பதைவிட்டு பொதுநலமாய் சிந்திக்கிறார்களோ, தங்கள் கொள்கை, கோட்பாடுகளை மெத்த விளங்கிக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் கொண்டிருக்கும் இறைநம்பிக்கை ‘மக்கள் எழுச்சியாய்’ வலுப்பெறும். ஆட்சியாளர்களை.. நம்ரூதுகளை – பிர்அவ்ன்களை… கிடு கிடுக்க வைத்தது போல கிலி கொள்ளச் செய்யும்.

சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பது வெறும் முஸ்லிம்கள் மட்டும்தானா?
 
  • தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், அப்பாவிகள், தலைக்காஞ்சான்கள் என்று பல்லாயிரக் கணக்கில் இருப்பதை நாம் நமக்கு வசதியாய் மறந்து விடுவது ஏன்? 
  • இவர்களின் விடுதலைக்காக நாம் என்றாவது குரல் எழுப்பியிருக்கிறோமா?
  • அடுத்தவர்கள் பற்றி கவலையில்லாத நமக்கு நம்மைப் பற்றி அடுத்தவர் கவலைப்பட வேண்டும் என்று நினைப்பதும், நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதும் என்ன நியாயம்?

முஸ்லிம்களுக்கு குரல் எழுப்ப அருந்ததி ராய்களும், மார்க்ஸ்களும் மற்றும் இடதுசாரி இயகத்தினரும்தான் முன்வருகின்றனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

0 comments:

Post a Comment