NewsBlog

Wednesday, September 30, 2020

பாபரி மசூதி தீர்ப்பு: அடப்பாவமே! 28 ஆண்டுகளுக்கு பின்தான் உண்மை தெரிந்தது!

 

 
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''
 
உண்மைதான் நண்பர்களே, டிசம்பர் 6, 1992 –இல், பாபரி மசூதி யாராலும் இடிக்கப்படவில்லை. அது தானாகவே இடிந்துவிழுந்துவிட்டது என்ற உண்மையை இந்திய நீதிமன்றம் ஒன்றினால் தெரிந்து கொள்ள நமக்கெல்லாம் 28 ஆண்டுகள் ஆனது. எவ்வளவு முட்டாள்கள் பாருங்கள் நாம்! 
 
ஆக, தானாக இடிந்து விழுந்த பாபரி மசூதியை யாரும் இடிக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். யாருக்கும் தண்டனையே இல்லை. குற்றவாளிகளுக்குதானே தண்டனை தர முடியும்? 
 
மனதில் எழும் கேள்விகளும், வடிவேலு பாணி பதில்களும்தான் இனி போங்கள். 
 
சரி தானாக விழுந்துவிட்ட பாபரி மசூதியின் மீது ஒரு கும்பல் ஏறி நின்றதே.. என்று கேட்கிறீர்களா? 
 
ஆமாம்..! ஆமாம்.. அவர்கள் அனைவரும் சமூக விரோதிகள்! 
 
சரி… மசூதியின் மீது ஏறி நின்றவர்கள் சமூக விரோதிகள் என்றால் அவர்களை ஏற்றிவிட்டார்களே அவர்கள் யார்? அந்த சமூக விரோதிகளை நீதிமன்றம் கண்டுபிடித்துவிட்டதா? 
 
இதுவரையும் இல்லை. 
 
சரி.. அங்கே ஒரு குறிப்பிட்ட வகுப்புவாத கட்சியின் தலைவர்கள் எல்லாம் கூடியிருந்தார்களே அவர்கள் யார்? 
 
அட.. என்னய்யா? இதுகூடவா தெரியாது! அந்த மாமனிதர்கள் எல்லாம் அந்த மசூதியை யாரும் இடித்துவிடாமலிருக்க காவல் நின்றவர்கள். 
 
மசூதி இடிக்கப்போகிறார்கள் என்று இந்த தலைவர்களுக்கு எப்படி தெரியும்? 
 
அடிமுட்டாளா கேள்வி கேட்கிறீங்களே.. மசூதி இடிக்கப்படும் என்று யாரோ தலைவர்கள் கனவில் சொல்லியிருப்பார்கள். ஹி..ஹி.. அதனால்தான் அதை தடுக்க அவர்கள் அங்கே சென்றார்கள். 
 
சரி.. மசூதியின் மினராக்களின் மேலே இருந்தவர்கள் கையில் எல்லாம் கடப்பாறை, சுத்தியல் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததே! கூடவே கையில் காவி கொடியும் வைத்திருந்தார்களே? 
 
இப்பதாம்பா சரியா கேட்குறே.. கையிலிருந்த கடப்பாறை போன்ற ஆயுதங்களும், காவி கொடிகளும் மசூதி இடிந்துவிழாமலிருக்க முட்டுக் கொடுக்கதான் அவர்கள் வைத்திருந்தார்கள். சரியா? 
 
அப்படியா? ஒவ்வொரு ஊரிலிருந்தும், ஒரு செங்கல்லோடு புறப்பட்டு வரும்படி, அத்வானி ஜீ ரத யாத்திரை போனாரே.. அது..? 
 
ஆமாம்பா.. நய்யா.. நய்யா என்று கேள்வி கேட்டுட்டு. ஜீ.. நாடு முழுக்கவும் குண்டர்களை சாரிபா டங்க் சில்ப்பாயிடுச்சு.. தொண்டர்கள் திரண்டு வந்து பாபரி மசூதி இடிந்துவிழாமல் பாதுகாக்கும்படியும் கேட்டுக் கொண்டது மறந்து போச்சா..? 
 
காசி, மதுரா போன்ற முக்கிய இடங்களிலெல்லாம் மசூதிகள் இடிந்து விழப்போவதாக புரளி பரவிகிட்டிருக்கே.. இந்த தலைவர்கள் எல்லாம் மறுபடியும் மசூதிகள் இடிந்து விழாமலிருக்க தொண்டர்களோடு போய் நிற்பார்களோ? 
 
கடைசி கட்ட வஸ்திர பிரயோகமாக ‘ஆண்டி இண்டியன்’ என்ற சொல்லே காதில் விழுகிறது. 
 
ஆக, 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் நீதி, நியமங்கள் மிக மிக உயர்ந்தவை. நம் நாடு உலகின் பெரிய ஜனநாயக நாடு. 
 
ஆமாம்.. ஆமாம்.. உண்மைதான்.. நீங்களும் நம்புங்கள் நண்பர்களே!

0 comments:

Post a Comment