NewsBlog

Wednesday, September 16, 2020

இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை வேவு பார்க்கும் சீனா: பிரபல நாளேடு தகவல்

 

இந்தியாவில்  குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப  நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ்  வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்திய  குடியரசு தலைவர், பிரதமர், இந்திய கேபினட் அமைச்சர்கள், மாநில  முதல்வர்கள், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், முப்படை  தலைமைத் தளபதி, முப்படை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,  நீதிபதிகள், பிரபல தொழிலதிபர்கள் என ஒரு பெரிய பட்டியலில் இருப்பவர்கள்,  சீன நிறுவனத்தால் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழின் புலனாய்வுச்  செய்தி விவரிக்கிறது.

இந்த பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கிராம தலைவர்கள் கூட இருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த  விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ்  முற்பட்டதாகவும் ஆனால், அந்த நிறுவனத்தின் இணையதளம் பிறகு  மூடப்பட்டதாகவும் அந்த நாளிதழ் கூறுகிறது.

ஆனால்,  வேவு பார்க்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்தியா மட்டுமின்றி பிரிட்டன்,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களும் உள்ளனர்.

இந்தியன்  எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி போலவே, லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி  மெயில் நாளிதழ்,  பிரிட்டனில் அரசி, பிரதமர் உள்பட 40 ஆயிரம் பிரபலங்கள்  வேவு பார்க்கப்பட்டதாகக் கூறி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில்,  பிரபல ஏபிசி ஊடக நிறுவனம், அதன் தளங்களில் அந்நாட்டின் அரசுத்துறைகளில்   முக்கிய பதவிகளை வகிக்கும் 35 ஆயிரம் பேர் வேவு பார்க்கப்படுவதாகக் கூறி  செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment