NewsBlog

Friday, September 25, 2020

வந்த இடம் சென்று சேர்ந்தாலும் எஸ்.பி.பி குரல் காற்றில் கரையாமலே ஒலிக்கும்!

 

 

இந்திய திரையுலகின் பின்னணி பாடக நட்சத்திர வரிசை நீளமானது. முஹம்மது ரஃபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்மிக்க அந்த வரிசையில் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம் அதாவது எஸ்.பி. பாலசுப்ரமணியம் முக்கிய இடத்தில் இருப்பவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டுதான் எஸ்.பி.பியின் சொந்த ஊர். தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர். 1946 ஜூன் 4ஆம் தேதி பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.
 
பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் ஆரம்பத்தில் சேர்ந்தவர், பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.

படிக்கும் நாட்களிலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் பாலசுப்ரமணியம். இந்நிலையில், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் முதல் பரிசை வென்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி மற்றும் பிரபல வெண்கல குரல் பாடகர் கண்டசாலா.

இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி. கோதண்டபாணி இசையமைத்த "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா" என்ற தெலுங்கு படத்தில் தன் முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பி. இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' என்ற பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

ஆனால், அந்தப் படம் கடைசிவரை வெளியாகவேயில்லை. இதனிடையே, கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி. தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' பாடல்தான்.

இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே 'இயற்கையெனும் இளைய கன்னி' பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது. ஆனால், "அடிமைப்பெண்" மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும், டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.

திரையுலகின் உச்சிவானிலிருந்த எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும் வேறு குரலை மாற்றி பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.

1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா - எஸ்.பி. பாலசுப்ரமணியம் - எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையது எனலாம். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பி.

1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.

தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்.பி.பி பாடியதுதான்.

எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

ஒரு சிறந்த பாடகராக அறியப்பட்டதாலோ என்னவோ, கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலரால் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து, இசைமைத்த "சிகரம்" திரைப்படம் முக்கியமானது.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால பாடக கலைஞருக்கான வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

எஸ்.பி.பி என்னும் அடையாள உடலிலிருந்து உயிர் பிரிந்து அது வந்த இடம் சென்று சேர்ந்துவிட்டாலும் அவரது இனிய குரல் காற்றில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

0 comments:

Post a Comment