NewsBlog

Friday, September 25, 2020

இந்த நல்லவரும், அந்த கெட்டவரும்



ஒரு அரிய நிகழ்வு அது. 12 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.

இருப்பினும் அந்நாட்டு அதிபர் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு அதிபருக்கு கடிதம் எழுதி மன்னிப்பும் கேட்கிறார். அவமானகரமான சம்பவம் அது. மக்களை ஏமாற்றமடைய செய்த சம்பவம் என்றெல்லாம் மனம் நொந்து வருந்துகிறார் ‘பெத்தண்ணா’ அமெரிக்காவுக்கே சவால் விடும் அந்த மனிதர்.

யார் அவர்? என்ன நடந்தது என்கிறீர்களா?

இப்படி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னிடம் கடிதம் மூலம் சொல்லி மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.  

அவர் மன்னிப்பு கேட்குமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன தங்கள் நாட்டு அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.

வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

தென் கொரியாவின் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வட கொரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ரோந்து கப்பலில் இருந்து கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வட கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.

அவர் கப்பலில் தனது ஷூக்களை விட்டுவிட்டு, உயிர் கவசத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வட கொரிய ரோந்து கப்பல் அவரை அவர்களது நாட்டு எல்லைக்குள் மிதக்கும் சாதனத்தை பிடித்தவாறு, கண்டெடுத்தனர்.

வட கொரிய அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவரை சுட்டுத் தள்ளுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முகக்கவசம் அணிந்த சில வட கொரிய வீரர்கள், அந்த அதிகாரியை எரித்ததாக தென் கொரியா கூறுகிறது. ஆனால், அந்த நபர் வந்த மிதக்கும் சாதனத்தை மட்டுமே எரித்ததாக வட கொரிய தரப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக வட கொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தென் கொரியா வலியுறுத்தி இருந்த நிலையில், கிம் ஜாங்-உன் எழுதிய இந்த கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இத்தனைக்கும் கிம் ஜாங் உன் முதலாளித்துவ நாடுகளால் பெரும் வில்லனாக சித்தரிக்கப்படுபவர். உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக சொல்லப்பட்டவர். அத்தகைய கெட்டவர்தான் நடந்த செயல்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஆனால், இந்த சம்பவத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி சர்க்காருடன் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள்.

குஜராத் கலவரங்களில் ஆயிரக்கணக்கில் சிறுபான்மை இன மக்கள் தீயிட்டும், கற்பழித்தும் கொல்லப்பட்ட போதும் மனம் கலங்காதிருந்தவர். ஒரு வருத்தமும் தெரிவிக்காதவர். சுற்றிலும் தனது குடிமக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, இனம், மொழி, சமயம் என்று பாகுபாடுகளால் மௌனம் சாதிப்பவர். அந்த பிரிவினையை ஒன்றையே அரசியல் வழிமுறையாக்கியுள்ள சங்பரிவார் திட்டத்திற்கொப்ப மொத்த நாட்டையும் பின்னோக்கி செலுத்தி கொண்டிருப்பவர். இவரைதான் நல்லவர் என்கிறார்கள் சிலர்.

என்னத்த சொல்ல? கேட்டால் 'ஆன்டி-இண்டியன்' என்பார்கள். 
 
(செய்தி ஆதாரம்: பிபிசி)

0 comments:

Post a Comment