NewsBlog

Tuesday, March 18, 2014

விருந்தினர் பக்கம்: 'தேர்தல் கால சோதனைகள்: பறிமுதல் செய்யப்படும் பணம், நகைகள்'

 
தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

மற்றும்,கம்மல்,தோடு,புடவை,வேட்டி,குத்துவிளக்கு,குடம் போன்ற இதர பரிசுப் பொருட்களும் உண்டு. பரிசுப் பொருட்களின் போக்குவரத்தையும், பணப் பறிமாற்றத்தையும் முடக்குவதற்காக தேர்தல் ஆணையம் அதிரடி சோதனைகளை செய்து வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 108 அவசரவூர்தி மற்றும் அரசு வாகனங்களில் வாகாளர்களுக்கு  கொடுப்பதற்கு பணம் எடுத்துச் சென்ற போது பறக்கும் படையினர் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல்  தேதியை அறிவித்து விட்டால், நாடு முழுமைக்கும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஐ.ஏஎஸ் ,ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றுவது, வேட்பாளர்களை தகுதி நீக்குவது, வழக்கு தொடுப்பது என்று அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, மத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஒய்.எஸ்.எம் குரேஷி ஹீரோவாக வலம் வந்தார். அவரது பதிலியாக பிரவீண்குமார்  தமிழகத்தில் திறமையாக செயல்பட்டார். இப்போதும் பிரவீண்குமார் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

தேர்தலை முன்னிட்டு ரூ 1 லட்சத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டால் வங்கி மேலாளர் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, காவல்துறையினர் செய்து வரும் சோதனையில் இதுவரை 6 கோடியே 85 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 46 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளும் ஒரு கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
மார்ச் 12 ஆம் தேதி, சென்னையில், மையிலாப்பூர் லஸ்-கார்னரில் ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது, ஐந்து பொதிகளில் 22 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரியவரிடம் அதற்கான ஆவணம் இல்லாததால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி, அயம்பாக்கத்தில் ஒரு காரில் இருந்து 60 லட்சமும், வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர், சமிக்கை முனையத்தில் (Signal) ஒரு காரில் இருந்து 2 லட்சமும், மூலக்கடை சமீக்கை பகுதியில் ஒரு வாகனத்தில் 10 லட்ச ரூபாயும், கூடுவாஞ்சேரி –நெல்லிகுப்பம் சாலையில் ஒரு காரில் இருந்து 1.5 லட்சம் ரூபாயும், செங்குன்றம் சாலையில் சென்ற கார் ஒன்றில் இருந்து 500 கிராம் தங்கமும் என ஒரே நாளில் 23  கிலோ கிராம் தங்கமும், 78 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நகைகளையும் பணத்தையும் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி மீட்டுக் கொள்ளலாம் என்கிறது தேர்தல் ஆணையம். உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் பறிகொடுத்தவர்கள் கோரவில்லையென்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

2011, தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, திருச்சியில் ஒரு பேருந்தில் இருந்து 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மொத்தமாக 36 கோடி ரூபாய் பிடிபட்டது. பிடிபட்ட தொகையைக் கேட்டு யாரும் வராத காரணத்தால் வருமான வரிதுறையிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுவரையிலும் யாரும் பணத்தை கேட்டு வரவில்லை. ஆவணம் இல்லாத தொகை, தங்க கட்டிகள் மற்றும் நகைகளும் சட்டவிரோதமானவை என்றே கருதலாம்.

ஐந்து ஆண்டுகள் அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ ஒன்று அல்லது இரண்டு முறைகள் தேர்தல்கள் எதிர்படுகின்றன. இத்தகைய தேர்தல் சமயங்களில் மட்டும் இச்சோதனைகள் நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான கைப்பற்றப்படுகிறது. அதாவது அரசுக்கு கிடைக்க வேண்டிய பல லட்சக்கணக்கான வரி ஏய்ப்பு நடக்கிறது என்பதே இதன் பொருள். குறிப்பாக நடுத்தர வர்க்க வணிகர்கள் அரசுக்கு முறையாக கணக்கு காட்டுவதும் இல்லை; வரி கட்டுவதும் இல்லை.

 சில மாதங்களுக்கு முன்பாக பெல்லாரி வெங்காயம் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பதுக்கள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் வியாபாரிகளின் வீடுகளில் சோதனையிட்ட போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான தொகையைப் பறிமுதல் செய்தனர்.

அரசியல்வாதிகளை ஊழல் செய்வதாக லஞ்சம் வாங்குவதாக பணத்தை பதுக்குவதாக   பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், குற்றம் சாட்டப்படும் மக்களே பணம் மற்றும் அத்யாவசிய பொருட்களை பதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உண்டாகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சுனக்கமும் நிதிச்சுமையும் உண்டாகிறது.

பொதுமக்கள் பணம் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் வங்கிகள் மூலம் முறையான பண பறிமாற்றம் செய்தாலே அரசுக்கு அதிக லாபம் கிட்டும். இது மீண்டும் மக்கள் நலத்திட்டங்களுக் பயனாகி அதன் ஆதாயம் மக்களுக்கே வந்து சேரும். 
 
அதேபோல, இந்தத் தொகை அரசு உள்கட்டமைப்புகள் வலுப்படவும்,  விவசாயம் மற்றும் தொழில்துறைகள் செழிக்கவும் உதவும். நமது நாடும் வல்லரசாகும்.
 
ஆனால் மக்களே வரி ஏய்ப்பு செய்ய நினைத்தால் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் ஏன் ஊழல் செய்யமாட்டார்கள்.
 
ஆனால் நாள்தோறும் எவ்வித தடைகளும், கேட்பாறுமின்றி இந்திய சாலைகளில் கருப்பு பணமும், சட்டவிரோத ஆபரணங்களும் பல்லாயிரம் கோடிக்கு இடம்மாறிக் கொண்டிருக்கின்றன  என்பதையே தேர்தல் ஆணையத்தின் பறிமுதல்கள் உணர்த்துகின்றன. 
 
அதனால், தேர்தல் ஆணையத்தைப் போல அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு நித்தமும் சாலை சோதனைகளில் ஈடுபட்டால் கருப்பு பணம் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம். தங்கம், வெள்ளி கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களையும் கட்டுப்படுத்தலாம். வருவாய்துறைக்கும் நிதிதுறைக்கும் அதிகமான வருவாயையும் ஈட்டுத்தரலாம்.

- ஜி. அத்தேஷ்.

0 comments:

Post a Comment