NewsBlog

Friday, September 27, 2013

இளைய சக்தி:' தாய்லாந்து செல்வார்; தங்கம் வெல்வார்!'


தகுதியிருந்தும் பங்கு பெற இயலவில்லை! 

என்ன புதிராகத் தெரிகிறதா? எல்லாம் வறுமையின் நிறம் சிவப்புதான்! 

மேற்கு வங்கத்தின் கல்கத்தாவைச் சேர்ந்தவர் 17 வயதான ஆயிஷா நூர். கராத்தே வீராங்கனை. “தாய்லாந்தில் நடக்கவிருக்கும் `Thai Pitchai International Youth Karate Championship 2013’ - போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அதில் பங்கெடுக்க அனைத்து தகுதிகள் இருந்தும் இந்த துரதிஷ்டநிலை.

அக். 7, இல் துவங்கவிருக்கும் இப்போட்டிகளில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்று மனம் நிறைய நம்பிக்கையோடு இருக்கிறார் ஆயிஷா. ஆனால், எட்டு நாட்கள் நடக்க இருக்கும் அந்த போட்டிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டும். விமானப் பயணச் சீட்டு, உணவு மற்றும் தங்கும் இடவசதி போன்ற செலவுகள் அவை. இந்த சுமையைச் சுமக்க அவரது குடும்பத்தாரால் முடியவில்லை. 


ஆறு பேர் கொண்ட குடும்பத்தாருடன் வெறும் எட்டுக்கு எட்டு அடி கொண்ட கல்கத்தாவின் புகழ்பெற்ற சேரிப் பகுதியான ‘குலாஹ் பாரியில்’ வசிக்கிறார். அவரது தந்தை நூர் முஹம்மது வாகனமோட்டி. மூத்த சகோதரர் தன்வீர் தெருவோரத்து செருப்புக் கடையொன்றின் விற்பனையாளர். நாள்தோறும் ரூபாய் 125 பெறும் தினக்கூலி.

அவரது மற்றொரு சகோதரர் முஹம்மது பாரூக்கும் கராத்தே சாம்பியன்தான். பி.காம் மாணவரான இவர் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் இருமுறை தங்கப் பதக்கம்  வென்றவர். 2010 இல், 'தி டெலிகிராப்' இதழால் சிறப்புக்குரியவராக (எக்ஸெலென்ட் அவார்ட்) பட்டம் பெற்றவர் தாயார் ஷகீலா பேகம் வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தக்காக பாடுபட வேண்டிய நிர்பந்தம். மூத்த சகோதரி 12 ஆம் வகுப்பு மாணவி.

ஆயிஷா சர்வதேச அளவிலான போட்டிகளில் ஏற்கனவே இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றவர். 2011 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 15 ஆவது, சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் (15th International Karate Championship (young Group) தங்கம் வென்றவர். இந்தப் போட்டிகளில் உலகின் தலைச்சிறந்த 16 நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் என்பது முக்கியமானது. 


ஆயிஷாவின்  வெற்றிகளின் பின்னால் நிற்பது அவரது 'கோச்' பயிற்சியாளரான எம்.ஏ. அலி.

இவர் கராத்தேயில் 1985 ஆண்டின் 10 ஆவது தரத்திலான கருப்புப் பட்டையும் `10th Degree Black-belt’ (1985), 1985 ஆம் ஆண்டின் தாய்லாந்து ஆறாம் நிலை தங்கப் பட்டை மற்றும் 1988 ஆம் ஆண்டின் உலக கராத்தே சாம்பியனும் ஆவார். 

“ஆயிஷா மிகச் சிறந்த கராத்தே வீராங்கனை. அவரது ரத்த நாளமெங்கும் கராத்தே விளையாட்டின் வீரம் பாய்ந்திருக்கும் வீராங்கனை!"- என்கிறார் தமது சிஷ்யையின் திறமைகளை மெச்சியவாறு எம்.ஏ. அலி. 


தாய்லாந்தில் நடக்கவிருக்கும் 2013 ஆம் ஆண்டுக்கான கராத்தே சாம்பியன் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு வீரர் மற்றும் வீராங்கனைகளில் ஆயிஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கக்கது.

இந்த போட்டிகளுக்காக அக். 5 ஆம் தேதி புறப்பட வேண்டியிருக்கும். கிட்ட தட்ட ஒரு லட்சம் பெருந்தொகையை அந்த ஏழைப் பெண் செலவழிக்க வேண்டும். 

"பணம் கிடைக்காவிட்டால் எனது இரண்டு தங்கப் பதக்கங்களை விற்க வேண்டியதுதான்! அதுவும் போதவில்லை என்றால் எனது அன்புக்குரிய வளர்ப்புப் பிராணியான ஆட்டையும் விற்றுவிட வேண்டியிருக்கும்!"- என்கிறார் வருத்தம் தோய்ந்த குரலில் ஆயிஷா.

ஆயிஷாவின் ஏழ்மை நிலையை 'தி டெலிகிராப்' அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை விமானப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயணச் செலவை ஏற்றுக் கொண்டது. தற்போது தங்கும் வசதி மற்றும் இதர வசதிகளுக்கான ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறது. 

ஆயிஷா எப்படியும் தாய்லாந்து செல்வார்; தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் அவரது குடும்பம் காத்திருக்கிறது. ஆயிஷா நூருக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்க்கண்ட விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்.


M A Ali, email: alikarate2010@rediffmail.com (Mobile No: +919339738599, +919836134506)

Bank Account Information:

AYESHA NOOR
Savings Account No: 0088010250894
United Bank of India
Entallly Branch
156 A J C Bose Road, Kolkata-700014.
IFSC Code: UTBI0ENT131

Source: TwoCircles.net

0 comments:

Post a Comment