NewsBlog

Tuesday, August 27, 2013

இளைய சக்தி:"புத்துலகு சமைக்கும் சிற்பிகள் எங்கே?"

இளமை நாட்டின் முதுகெலும்பு போன்றது. நாட்டுப்பற்று, நல்லொழுக்கம், அறிவாற்றல், நேரந்தவறாமை, கடும் உழைப்பு போன்ற அருங்குணங்கள் கொண்ட இளைஞர்கள் நிரம்பிய நாடு முன்னேற்றத்தின் வானம் தொடும். உற்சாகம், உத்வேகம், ஆவேசம் கலந்த கூட்டுக் கலவைதான் இளமை. விண்ணையும், மண்ணையும் அளந்திடத் துடிக்கும் பருவமிது. வாழ்வின் வசந்தம்கூட. இதை சீராய் அமைத்துக் கொண்டால் ஆனந்தம். இல்லையென்றால்.. வாழ்க்கை நரகம்தான்!

இன்றைய கல்லூரி நிலவரங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவையாய் இல்லை. நினைத்தாலே சோகம் கப்பிக் கொள்கிறது. நாட்டில் 120-க்கும், மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இக்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் தரம் படு மோசமாக இருப்பதற்கு ஜான் டேவிட் போன்ற மாணவர்கள் இறந்தகால உதாரணங்கள். அடிதடிகளும், மூர்க்கத்தனங்களும் கொண்ட இளைய தலைமுறை இங்கு உருவாக்கப்படுகிறது.

இந்திய விடுதலைப் போருக்கு களப்பலியாகிப் போனோரின் பட்டியலில் எண்ணற்ற இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். அன்றைய பெருந்தலைவர்களின் வழிகாட்டுதலில் தங்களின் இன்னுயிரை இவர்கள் அர்ப்பணித்தார்கள். ஆனால், இன்றோ சரியான தலைமையும் இல்லாமல், சீரிய வழிகாட்டுதலும் இல்லாமல் இளைய சமூகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

1982 – இல், 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும்' 1983 – இல், 'அலிகர் பல்கலைக்கழகத்திலும்' நடந்த வன்முறைகள், கலவரங்கள் காரணமாய் அந்த கல்விச்சாலைகளையே மூட வேண்டி வந்தது. திரையரங்கில் சலுகைக் கட்டணம் ரத்துச் செய்யப்பட்டதற்காக லக்னோ மாணவர்களும், காண்டீனில் ‘சமோஸா’ அளவு சிறுத்துவிட்டதற்காக ஜெய்பூர் மாணவர்களும் போராட்டங்கள் நடத்தினர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மகளிர் ஹாஸ்டல் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டதற்காகவும் ஒரு போராட்டம் வெடித்தது. மைசூர் மாநிலத்து கல்லூரி ஒன்றில் இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ஒரு மாணவர் அதன் முதல்வரை கத்தியால் குத்தியதுவரை மாணவர்களின் இலக்கில்லாத பயணங்கள் நீளுகின்றன. இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, "நம் கல்வி நிலையங்களில் ‘கல்வி’ என்பதன் மதிப்பு சரிந்து போய் மலிவான விஷயங்களுக்கான முக்கியத்துவம் உயர்ந்து போனதே!” – என்று திட்டவட்டமாய் சொல்லலாம்.


மாணவர்கள் இனம், மதம், அரசியல் கட்சிகள் என்று பாகுபட்டுப் போய் பல குழுக்களாய் பிளவுண்டு கிடக்கிறார்கள். கல்லூரி தேர்தல்கள்கூட இந்த பிரிவினைக்கு பிரதான காரணமாய் விளங்கின்றன. அரசியல் கட்சிகளை மிஞ்சிவிடத் துடிக்கும் விளம்பர, பிரச்சார யுத்திகள் அசர வைப்பவை. காட்டுப்புரவிகளாய் திசை கெட்டு ஓடும் மாணவர்கள். அந்த ஓட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள் சீர்கெட்டுப் போகும் பரிதாபநிலை. 

துரதிஷ்டவசமாக நமது கல்வி அமைப்பும் லோகாயதவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கற்ற கல்வி வாழ்க்கைக்கு உதவாதது.. வேலை வாய்ப்புகளில் விலை போவது.. இவைகூட கல்வியின் மீதுள்ள ஆர்வத்தை பெருமளவில் குறைத்துவிடுகின்றன.


அரசியல்வாதிகள் சுய லாபங்களுக்காக ஏவிவிடும் அம்புகளாய் மாணவர் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். வாக்குரிமை 18 வயதாக, குறைக்கப்பட்டதும் இதற்காகத்தான். அரசியல் சுற்றுச் சூழலில் வளர்ந்த மாணவர்கள் சுயமாய் சிந்திக்கவும், முடிவெடுக்கவும் இயலாதவர்களாய் உள்ளனர். 

பிரிட்டீஷார் ஏற்படுத்திய கல்வி அமைப்பை இன்னும் நாம் சுமந்து கொண்டிருக்கின்றோம். ‘குமஸ்தாக்களை’ உருவாக்கும் இந்த கல்விமுறை சமூக பிரச்னைகளை தீர்க்க உதவாது. ஒருமுறை இந்திரா காந்தி அம்மையார் குறிப்பிடும்போது, “சுதந்திரத்திற்குப் பிறகு நாம் செய்த பெருந்தவறு, நம் கல்வி அமைப்பை மாற்றி அமைக்காததே!” – என்றார். இதனால் கல்வியும், வாழ்வும் அந்நியப்பட்டு விட்டன.

நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால்.. அதற்கு தக்க கல்விமுறையும் அமைய வேண்டும். இரண்டாம் உலகப் போரில் படுமோசமாய் பாதிக்கப்பட்ட ஜப்பான், உலகமே வியக்கும் வண்ணம் வளர்ச்சியடைந்ததற்கு பின்புலமாய் நிற்பவர்கள் அந்நாட்டு கல்வி அமைப்பினால் உருவான மாணவர்கள்தான்.

உச்சந்தலையிலிருந்து.. உள்ளங்கால்வரை மேற்கத்திய மோகம் இன்று நம் மாணவர் சமுதாயத்தை பிடித்தாட்டுகிறது. வெறும் ‘தலைவர்’ என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக.. சக மாணவர்களை ‘ராகிங்’ என்ற பெயரில் படாதபாடு படுத்துதல், ஆசிரியர்களை கிண்டலடித்தல், தேவையற்ற பிரச்னைகளில் கவனத்தை சிதறடித்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துகளை உட்கொள்ளல் போன்றவை நச்சுக் கொடிகளாய் கல்லூரி வளாகங்களில் பிண்ணிப் படர்ந்துள்ளன.

1990 ஆம், ஆண்டு உஸ்மானியா பல்கலைக கழகத்தில் டெக்னாலஜி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர் ‘நீலப்படம்’ பார்ப்பதில் தொடங்கி கடைசியில் பெண்களையும் அறைகளுக்கு அழைத்து வருமளவு விபரீதம் நடந்தது. ஆபாசமான புத்தகங்கள், நிர்வாணப்படங்கள் அதிகமானகிப் போனதே இதன் காரணம். இதற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனையளிக்க வேண்டும். அற்பத்தனமான அபராதங்களும், சிறிய அளவிலான தண்டனைகளும் போதாது.


மாணவர்களை வழி நடத்தும் பொறுப்பும், அவர்களுக்கு நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துத் தரும் பொறுப்பும் இன்றியமையாதது. அறிவுரைகளும், நல்ல தோழமையும் ஆரோக்கியச் சிந்தனையைத் திறக்கும் கதவுகளாகும்.
அதுபோலவே, ஆசிரியர் – மாணவரிடையே புனிதமான உறவு நிலவ வேண்டும். ஒழுக்கத்தில் தலை சிறந்த ஆசிரியர் மாணவர்களுக்கு கலங்கரை விளக்கு போன்றவர். மாணவர் உள்ளங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவர். 

நல்ல நூல்களை படிக்கும் பழக்கம் மாணவர்களை உயர்ந்த எண்ணங்களின் பக்கம் செலுத்த உதவும். அதுபோலவே, மாணவரிடையே எழும் வினாக்கள், ஐயங்களை தலைசிறந்த அறிஞர் பெருமக்கள், பல்வேறு துறைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் மனதில் எழும் நிராசைகளையும், அவநம்பிக்கைகளையும் போக்க முயல வேண்டும். இன்னும் சமூக நலப்பணிகள், விளையாட்டுகள், சொற்பொழிவுகள், எழுத்துப் பணிகள் என்று கவனம் செலுத்த ஊக்கமளிக்க வேண்டும். சக மாணவரிடையே நட்பு, ஆத்மாபிமானம், வாய்மை, நாட்டுப்பற்று ஆகியவை பெருகும் வண்ணம் சூழல்களை ஏற்படுத்தித் தர வேண்டும். 

உழவன் திட்டமிட்டு வேளாண் களத்தை நன்றாக உழுது, நாற்று நட்டு, நீர்ப் பாய்ச்சி, களையெடுத்து, உரமிட்டு, பாதுகாத்து, சாகுபடியின் பலா பலன்களை எடுப்பதைவிட மிக முக்கியமான .. மிகவும் அவசியமான… அதிலும் கட்டாயமான பணி இது. 

இப்படி வளரும் மாணவர்கள் நிச்சயம் புத்துலகு சமைக்கும் சிற்பிகளாய் பரிமளிப்பார்கள். இந்த தேசமும் உலக அரங்கில் கண்ணியத்துடனும், பெருமையுடனும் தலைநிமிர்ந்து நிற்கும்.

0 comments:

Post a Comment