NewsBlog

Saturday, August 24, 2013

சிறப்புக் கட்டுரை: 'நெறிக்கப்படும் ஜனநாயகக் குரல்வலை!'



ஜனநாயக அமைப்பில் தேர்வு செய்யப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சி கவிழ்ப்பும் அதைத் தொடர்ந்து இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஆதரவாளர்களின் படுகொலைகளும் சர்வாதிகாரி முபாரக் அடக்குமுறையின் மறு மீட்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
"ராணுவத்தின் சதியினால் ஜுலை 3 இல், பிரதமர் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது ராணுவ ஆட்சி திரும்பவும் ஆட்சி கட்டிலில் ஏற்றப்படதான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!” - என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியரான சயிஃப் அப்துல் பதாஹ்.
".... சர்வாதிகாரி முபாராக்கின் கொடுங்கோலாட்சிக்கு மீண்டும் நாங்கள் திரும்பியிருக்கிறோம். இனி ஊர்வலங்கள், போராட்டங்கள் எல்லாம் இரும்பு கரம் கொண்டு நசுக்கப்படும். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள். அரசியல்வாதிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகள்.. கைதுகள் என்று தொடரும். நெருக்கடி நிலைமை என்ற பெயரால் ஒவ்வொரு தனிநபரும் இனி சோதனைக்குள்ளாக்கப்படுவார்!” – என்கிறார் அவர் தொடர்ந்து.
ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் உட்பட மோர்சியின் பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஆக.14 இல், கெய்ரோவின் 'ரபாஆ அல் அதாவிய்யா' சதுக்கத்தில் ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காக்கைக் குருவிகள் போல ராணுவத்தால் சுட்டு  வீழ்த்தப்பட்டது பழைய செய்தியானது.
இந்த படுகொலைகளைத் தொடர்ந்து ஒரு மாதம் தொடர்ந்து.. முபராக்கின் ஆட்சி நிலைக்கொள்ளும் விதமாக ராணுவம் அவசரநிலையைப் பிரகடனம் செய்தது. அத்தோடு நாள்தோறும் பதினொரு மணி நேர ஊரடங்கு உத்திரவும் அமல்படுத்தியுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் அமலில் உள்ள நிலையில் காவலர்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எந்த வீட்டிலும் வாரண்ட் இல்லாமல் நுழையலாம். இதனடிப்படையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சார்ந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் குறையாமல் இதன் முதல்நிலை அல்லது இரண்டாம் நிலை தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 'கமஆ' - போன்ற இஸ்லாமிய இயக்கத்தவர் சிறைபடுத்தப்பட்டனர். 


20, ஆகஸ்ட், செவ்வாய் கிழமை அன்று இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சார்ந்த முதல் நிலைத் தலைவர்களில் ஒருவரான முஹம்மது பாதிய் கெய்ரோவில் வன்முறையைத் தூண்டியதாக பொய்யான குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாத தீர்ப்பு வாசிக்கப்பட்டு.. அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
“எதேச்கதிகாரமான இந்த கும்பல் கும்பலான கைதுகள் மூலமாக எகிப்தின் அரசியலமைப்புச் சட்டம் எள்ளி நடையாடப்படுகிறது. அதுபோலவே அவசரநிலைப் பிரகடனமும், ஊடகங்களின் பொய்மையும் முபராக்கின் சர்வாதிகார ஆட்சிக் காலம் மீண்டும் தொடங்கிவிட்டதன் அறிகுறிகளாகும்!” – என்று கமஆ இஸ்லாமிய அமைப்பு அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முஸ்தபா ஹம்ஸா, எகிப்தின் பெனீய் சுஹைப் பகுதியிலிருந்து 'நடுஜாம' காவலர்களால் குடும்பத்தினரோடு எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் கைது செய்யப்பட்டார். 'நடு ஜாமக் காவலர்கள்' எனப்படுவது முபாரக் ஆட்சி அதிகாரத்தின் ராணுவ குழுக்களில் ஒன்றாகும். அதிகாலை நேரங்களில் அரசியல் ரீதியான எதிரிகளின் வீடுகளில் நுழைந்து கைது செய்யும் ராணுவ குழுவாகும் இது. 

ராணுவத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்குகள், படுகொலைகள், கைது  படலங்கள் 'பயங்கரவாதத்துக்கு  எதிரான போர்!' - (எஜமானர் அமெரிக்கா கையாளும் அதே சொல்லாட்சி) என்று ராணுவம் கூறுகிறது.
திங்களன்று 25 காவலர்கள் கொல்லப்பட்டதற்கும், சிறுபான்மை கிருத்துவர்களின் வழிபாட்டு தலங்கள் எரிக்கப்பட்டதற்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்த கையோடு துரதிஷ்டவசமான அந்த அசம்பாவிதங்களுக்கும், தங்களுக்கும்.. மற்றும் தங்களைப் போன்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும்.. எவ்வித சம்பந்தமில்லை. அதேபோல, தங்கள் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயகபூர்வமான அமைதி வழிகளில்தான் இருக்க வேண்டும் என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு கடுமையான கட்டளையிட்டிருப்பதாக  இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் வட சினாய்யின் ரபாஃஹ் நகரின் தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கா விட்டாலும், காவலர்கள் கொல்லப்பட்டதற்கு ராணுவம் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. 
ராணுவத்துக்கு சொந்தமான விலைபோன தனியார் ஊடகங்கள் மோர்சியின் ஆதரவாளர்களை வன்முறையாளர்களாகக் காட்ட கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறன.
அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்சியை பதவி நீக்கம் செய்த கையோடு அவரைக் கைது செய்த ராணுவம் அவர் இருக்கும் இடத்தை இதுவரையிலும் தெரிவிக்கவில்லை.
ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலான மனித படுகொலைகளுக்குக் காரணமானவரும், மனித உரிமைகளைப் பறித்தவரும், பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி சட்ட ரீதியாக கைது செய்யப்பட்டவருமான சர்வாதிகாரி முபாரக் கடந்த புதனன்று பல வழக்குகள் நிலைவையில் இருந்த நிலையிலும் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டார். 

1950 – களிலிருந்து இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தங்களின் போராட்ட முறைமைகளை மாற்றிக் கொண்டனர். ஜனநாயக வழிகளில் தேர்தல்களில் பங்கெடுத்து கடைசியாக பெரும்பான்மைப் பெற்று வெற்றிப் பெற்றனர். அந்நிலையிலும்  அவர்களை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க விடாமல் செய்வது ஜனநாயகத்தை இழிவுப்படுத்தும் செயலாகவே இருக்கும்.



0 comments:

Post a Comment