NewsBlog

Tuesday, July 16, 2013

காலப்பெட்டகம்: 'மோடியின் அரியணைக்காகத் தொடரும் நரபலிகள்!'


மும்பராவில் உள்ள இஸ்ரத் ஷேக்கின் வீடு இருட்டாக இருந்தது. பத்தொன்பதே வயதான அந்த அப்பாவிப் பெண் வகுப்புவாதிகளின் அரியணைகளுக்குப் பலியாகிப் போனவள். மின் தடை அந்த வீட்டாரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மனங்கள் உள்ளுக்குள் விம்மிக் கொண்டிருந்தன. “அழகான பெண்! தான் உண்டு; தன் வேலை உண்டு.. – என்று கல்லூரியும், வீடுமாய் வாழ்க்கையை ஓட்டியவள்! அப்படிப்பட்டவளுக்கு நரேந்திர மோடியின் குஜராத் போலீஸார் சூட்டியப் பெயர் ‘லஷ்கரே தொய்பா’ தீவிரவாதி! அதுவரை அந்தப் பெயரைக் கேட்டதும் இல்லை என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். இஸ்ரத்தும் அவளுடனிருந்த நான்கு பேரும் அதற்கு முந்தைய நாள்தான் நரேந்திர மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்று போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
வழக்கம் போலவே, போலீஸ் ஏ.கே.56 துப்பாக்கி, வெடிப்பொருள் என்று காருக்குள்ளிருந்து ஏதேதோ கண்டுபிடித்தது.
“என்னோட மகள் சராசரியான ஒரு கல்லூரி மாணவி. அவளுக்கு எந்த விதமான தீவிரவாத அமைப்போடும் தொடர்பில்லை!” – என்று புலம்புகிறார் ஷமீமா ஷேக். இஸ்ரத்தின் தாயாரான அவரை குடும்ப உறுப்பினர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். ஐந்து சகோதரிகள், இரண்டு சகோதரர்களும் பிரமைப் பிடித்தவாறு இருக்கிறார்கள்.
தங்களது அருமை மகள் கொலை செய்யப்பட்ட செய்தியை அவர்கள் பத்திரிகையைப் பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள்.
இஸ்ரத் மாதுங்காவிலுள்ள ‘குருநானக் கல்சாஹ் கல்லூரியின்’ பி.எஸ்.சி. இரண்டாமாண்டு மாணவி. நல்லவேளை, அவள் தன்னோடு தனது கல்லூரி அடையாள அட்டையை வைத்திருந்தாள். அது உடனே அவளை அடையாளம் காண உதவியது.
“எனது மகள் நன்றாகப் படித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். ‘லஷ்கரே தொய்பாவுடன்’ தொடர்புபடுத்தி போலீஸார் சுமத்தும் குற்றச்சாட்டை எங்களால் நம்பவே முடியவில்லை. இப்படி யாரை வேண்டுமானாலும் ‘தீவிரவாதி’ என்று முத்திரைக் குத்தி போலியான ‘என்கௌண்டர்’ – இல், கொல்வது எளிதானது!” – ஷமீமா அழுது புலம்புகிறார்.
குருநானக் கல்லூரியின் முதல்வர் அஜீத் சிங் சொல்லும்போது, “நடுத்தரக் குடும்பத்துப் பெண். மிகவும் எளியவள். அவள் நல்ல நடத்தைக் கொண்டவள்!” – என்கிறார் சோகமாக.
இஸ்ரத்தின் சகோதரர் ஷேக் அன்வர், பத்தாம் வகுப்பு படிக்கிறார். “நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழும் குடிமக்கள். எங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்போடும் தொடர்பில்லை. எதற்காக இவளோட உடலை சல்லடையாகத் துளைத்தெடுத்தார்கள்?” – என்று ஆவேசமாகக் கேட்கிறார்.
இஸ்ரத்தின் குடும்பத்தினருக்கு தற்போது நிழலாக ஆதரவு தருவது அண்டை – அயலார் மற்றும் சமூக ஆர்வலர்கள். அந்த புதன்கிழமை அவரது வீட்டைச் சுற்றியும் மக்கள் குழுமி விட்டனர்.
“எனக்கு இந்தக் குடும்பத்தைப் பற்றி பத்தாண்டுகளுக்கும் அதிகமாகத் தெரியும். இஸ்ரத்தின் தந்தையார் சிறியளவிலான வீட்டு கட்டுமானப் பணிகளை எடுத்து செய்து வந்தவர். அவருடைய மரணத்துக்குப் பிறகு சமூக நல அமைப்புகளின் உதவியுடன்தான் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் எங்களால் குஜராத் போலீஸாரின் இந்தக் ‘கதையை’ ஏற்றுக் கொள்ளவே முடியாது!” – என்கிறார் காங்கிரஸ் ஊழியரான ஷகிலா கான்.
அவர் தொடர்ந்து சொல்லும்போது, “…. இந்தப் படுகொலையைச் சும்மா விடப் போவதில்லை!” – என்றும், நீதிமன்றத்தை அணுக எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்!” – என்கிறார். “… ஓர் அப்பாவிப் பெண்ணை கொலை செய்த அதிகாரிகளின் தவறை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம்!”- என்கிறார் தொடர்நது.
“சனிக்கிழமை எனது மகள் சில நாள் வெளியூர் செல்ல விருப்பத்தைத் தெரிவித்தாள். அவள் பாதுகாப்புடனேயே திரும்பி வருவாள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். கடைசியில், அவள் பிணமாக திரும்பி வருவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை!”- என்கிறார் ஷமீமா அழும் கண்களோடு!
புனையைச் சேர்ந்த ஜாவித் காரை ஓட்டிவர, அவருடன் இஸ்ரத் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். காரில் பாகிஸ்தானின் பிரஜைகளான ‘ஜிஸ்ஹான் ஜோஹர், அம்ஜத் அலி அக்பர் அலி எனப்படும் இருவரும் இருந்ததாகத் தெரிய வந்ததாகவும், இவர்களை விரட்டி வந்த போலீஸார், அஹமதாபாத்தின் ‘வடல் வாட்டர் ஒர்க்ஸ்’ அருகில் காரை நிறுத்தும்படி சொன்னதாகவும், ஜிஸ்ஹான் ஜோஹர் உடனே காரிலிருந்து ஏ.கே.56 ரகத் துப்பாக்கியை எடுத்துச் சுட ஆரம்பித்ததாகவும், பதிலடியாக போலீஸாரும் சுட்டதாகவும் போலீஸ் தெரிவிக்கிறது. 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையம், இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணையைக் கோரியுள்ளது.
“குஜராத் முதல்வர் மோடி அவரது சகாக்களாலேயே கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், அவரை அரசியல் ரீதியாகக் காப்பாற்றவே இந்த ‘என்கௌண்டர்’ நடந்துள்ளது. சிறுபான்மையினருக்கும் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுக்கும் களங்கம் கற்பிக்கும் சதிச் செயலாகும் இது!” – என்கிறார் மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் முஹம்மது நஸீம் சித்தீகி.
“… சி.பி.ஐ விசாரணை ஒன்றே உண்மையை வெளிக்கொணரும். அப்பாவிகளைக் காப்பாற்றும்!” – என்கிறார் இவர்.
மும்பரா சென்று இஸ்ரத்தின் குடும்ப உறுப்பினர்கள், அண்டை – அயலார்கள், கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்த பின், “பாவம்..! இந்தப் பெண்! மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! எந்த கிரிமினல் பின்னணியும் இல்லாதவள்!” – என்கிறார் நஸீம் சித்தீகி.
தேசிய மனித உரிமை ஆணையமும், ‘நால்வர் படுகொலைச்’ சம்பந்தமான அறிக்கையை போலீஸிடம் கேட்டுள்ளது.
அதேபோல, தனது மகள் அப்பாவி என்று ஜாவித்தின் தந்தையும் கூறியுள்ளார். அஹமதாபாத்தில் தனது மகன் ‘ஜாவித் குலாம் முஹம்மது ஷேக் எனப்படும் பிரனேஷ் குமார் பிள்ளை’ கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் இவர். ‘மணலாடி’ – ‘தேக்கேதில் ஹவுஸ்’ ஆழப்புழையின் தாமரைக் குளத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கோபாலன் பிள்ளை. போலியான மோதலில் தனது மகன் கொல்லப்பட்டதாகவும், உண்மையில் அவர் அப்பாவி என்று சொல்கிறார்.
தனது மகன் புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர் என்றும், அவருக்கு எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கிறார். அவரது வீட்டில் திரண்டிருந்த அக்கம் பக்கத்தில் வசிப்போரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.
தற்போது பிள்ளை, ஜனாதிபதி அப்துல் கலாமுக்குக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சி.பி.ஐ. விசாரணை வேண்டி மனு தரவிருக்கிறார்.
என் மகன் உண்மையில் தீவிரவாதியாக இருந்தால் அவன் கொடுமையான தண்டனை அடைவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவன் அப்பாவி! உண்மைய வெளிக் கொணரத்தான் வேண்டும். அதனால், அநீதிக்கு எதிராகப் போராட தீர்மானித்துவிட்டேன்!” – என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார்.
பிள்ளையும் பத்திரிகைளைப் பார்த்துதான் தனது மகன் கொல்லப்பட்டதை அறிந்து கொண்டார். அதற்கேற்ப ‘டாடா இண்டிகா’ காரும் வீட்டுக்கு அருகில் உள்ள ‘ சாருமோடு’ என்ற இடத்திலுள்ள கடையில் வாங்கி அணிந்த உடைகளும் மகனின் உடலை அடையாளம் காண உதவின.
ஆக, மோடி என்ற வகுப்புவாதியின் பதவிக்கு ஆபத்து வரும் போதெல்லாம்.. தீவிரவாதிகள் என்ற பெயரில் குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது வழக்கம்.

ஏற்கனவே மோடி ‘கவுரவ யாத்ராவில்’ கொலை முயற்சிக்கு தப்பியதாகச் சொல்லி போலீஸ், ‘லஷ்கரே தொய்பாவின்’ பெயரால் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்தது. அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் செயல்களாகும். ஐ.நா. மன்றத்தின் பிரகடனங்களை புறந்தள்ளும் கொடுமையாகும். கொல்லப்பட்டவர்களின் உண்மை நிலவரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். அப்பாவி உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் உடன் தண்டிக்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தகுந்த நஷ்ட ஈட்டைத் தர வேண்டும். இந்த கொலைகளுக்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்த வகுப்புவாதி நரேந்திர மோடியையும், அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்டோரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.
நடைபெற்ற ‘போலி மோதலை’ லேசாகக் கருதினால்… நாளை துப்பாக்கி குண்டுகள் சட்ட ரீதியாகவே நமது மார்புகளை நோக்கிப் பாயும். வாயில் நுழையாத தீவிரவாத இயக்கப் பெயர் சூட்டி மனித உயிர்கள் பறிபோகும்.
வகுப்புவாதிகளின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாலேயே காங்கிரஸீக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்கள் முஸ்லிம்கள். இந்த நம்பிக்கையை மத்திய அரசு வீணாக்கக் கூடாது!

இந்தக் கட்டுரை அப்பாவி இஸ்ரத் போலீஸாரின் போலி மோதலில் கொல்லப்பட்டபோது, மக்கள் உரிமை வார இதழில் (ஜுன் 25 - ஜுலை 01, 2004) எழுதப்பட்ட முகப்புக் கட்டுரையாகும்.


0 comments:

Post a Comment